மழைக்கால மருந்துமழைக்காலத்தை  நெருங்கிவிட்டோம். தட்பவெப்ப நிலை காலையில் அனலாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ச்சியாகவும்  உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக சளித் தொல்லை, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.  குறிப்பாக குழந்தைகளை மேற்கண்ட பிரச்சனைகள் எளிமையாக தாக்கும். இந்தப் பிரச்சனைகளால் அவதியுறுபவர்கள்,  வீட்டில்  பயன்படுத்தப்படும் மூலிகை களைக் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.“மழைக்காலம்  என்றாலே, சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தலைவலி, தலைபாரம் போன்ற தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். மழை பூமியையும், நம்  உடலையும் குளிரச் செய்கிறது. ஆனாலும் பூமியில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் மேற்கண்ட சிறு தொந்தரவுகளால் பாதிப்புகள்  ஏற்படும்.

மழைக்காலங்களில் குளிர்ச்சியான காற்று நம் மூக்கின் வழியே உட்செல்லும்போது மூக்கடைப்பு, தலைவலி, தும்மல், மூக்கு ஒழுகுதல்  போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இவற்றைத் தவிர்க்க,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்களை கொண்டு நம்மை  பாதுகாத்துக்கொள்ள முடியும்.ஓமம், சீரகம், கருஞ்சீரகம், அன்னாசிப்பூ, புதினா, துளசி,  இஞ்சி, பூண்டு, திப்பிலி, சுக்கு, மிளகு, லவங்கம்,  லவங்கப்பட்டை, லவங்க இலை, வெற்றிலை போன்ற வற்றை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் மூலிகைத்  தன்மை கொண்டது. குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக்கூடியவை.மூக்கடைப்பு, சளி போன்ற   தொல்லைகள் இருந்தால், இயற்கையான இன்ஹேலர் எப்படி தயாரித்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

அன்னாசிப் பூ, ஓமம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து ஓர் வெள்ளைத் துணியில்  சிறிய மூட்டைபோல் கட்டி அவ்வப்போது முகர்ந்தால் போதும்.இதேபோல் கருஞ்சீரகம், ஓமம், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து  கட்டிவைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவேண்டும். அதுபோலவே சீரகம், ஓமம், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றையும்  சேர்த்து கட்டிவைத்து பயன்படுத்தலாம். குழந்தைகள் பள்ளி செல்லும்போது கைக்குட்டையில் முடிந்து வைத்துக்கொள்ளலாம். இந்த  முறையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றலாம். இவ்வாறு பயன்படுத்தும்போது தொண்டைக்கட்டு, மூக்கடைப்பு, சளி  போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சுவாசம் சீரடையும்.”

-ஜெ.சதீஷ்