மேற்குலகின் மையம்



அமெரிக்கப் பயணக் கட்டுரை

சரஸ்வதி சீனிவாசன்


வசதி கொண்ட பெரிய இடங்களுக்கு எவ்வளவுதான் சென்றாலும், எளிமையான சில இடங்களின் அமைப்போ, அங்கு வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களோ நம்மை நிறையவே கவர்ந்திழுக்கும். அப்படி இங்கே நம்மை கவரும் பொதுவான அமைப்பு என யோசித்தால், பிளவர்  அரேஞ்ச்மென்ட்(Flower Arragement) என்று சொல்லலாம். அவ்வளவு முக்கியத்துவம் பூக்களுக்குத் தருகிறார்கள். வீடுகள் சிறியதாக  இருந்தாலும், தோட்டங்கள் பசுமையுடன் காணப்பட்டன. வண்ண வண்ண மலர்க்கொத்துக்கள் ஒவ்வொரு தோட்டத்தையும் அலங்கரித்தன.  பலவிதமான பூச்செடிகள் உள்ளதால், வருடம் முழுவதும் ஏதாவது சில செடிகளில் பூக்கள் இருந்து கொண்டேயிருக்கும். நிறைய ரோஸ்  தோட்டங்கள் உண்டு. செடியை விட பூக்கள்தான் அதிகமாக கொத்துக் கொத்தாக காணப்படும். நம் பருத்திப் பூக்கள் போன்ற சாயலில்  வெள்ளை, ரோஸ், சிவப்பு போன்ற நிறங்களில் நிறைய பூக்கள் காணப்பட்டன.

ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், இரண்டு பக்கங்களிலும் அத்தகைய பூச்செடிகள் வரவேற்கும். நாங்கள் அதை காலிஃப்ளவர் என்று  எங்களுக்குள் பேசிக் கொள்வோம். காரணம், அவ்வளவும் காலிஃப்ளவர் சைஸில்தான் இருக்கும். அதே போல் கொடியில் படரும் பட்டன்  ரோஜாக்கள் நிறைய உண்டு. சில வீடுகளில் ‘வெளி லேனில்’ பலவித வண்ணங்களில் காணப்படும். நாங்கள் இதையெல்லாம்  பார்க்கும்பொழுது சிறு பிள்ளைகள் போல் மாறி விடுவோம். தினமும் நடைப்பயிற்சி சென்று வரும்பொழுதெல்லாம், அந்த வீடுகளை உற்று  நோக்க ஆவலாய்ப் பார்ப்போம். இருபுறமும் சுற்றிமுற்றிப் பார்த்து செல்ஃபி எடுப்போம்.

சில அடுக்குமாடிக் கட்டடங்களில் சுவர் முழுவதும் கொடிகள் படர்ந்திருக்கும். பார்ப்பதற்கு நாம் இங்கே பார்க்கும் மணிபிளாண்ட் போன்று  காணப்படும். கட்டடச் சுவர் முழுவதும் இப்படிப் படர்ந்தால் பில்டிங் பாதிக்காதோ என்று நினைத்தேன். ஆனால் அந்தக் கொடி அப்படி வேர்  விடுவதில்லை. அழகாக அடர்த்தியாக வளர்ந்தாலும், சீதோஷ்ண மாற்றம் வரும்பொழுது தானே உதிர்ந்து முற்றிலும் கீழே விழுந்து  விடுகிறது. திரும்பவும் சிறிய கொடியை போட்டு விட்டால், அது மீண்டும் மளமளவென்று படர்ந்து விழும். பொதுவாக வீட்டின்  வெளிப்புறங்களில்தான் நிறைய தோட்டம். பூக்கொத்துக்கள் வாங்கி வரவேற்பறையில் செட் செய்வது ஒரு பழக்கம் போல் இங்கே  காணப்படுகிறது. எங்கு சென்றாலும் முன்புறம் பூந்தொட்டி, பூக்குடுவைகள் இல்லாமல் இருக்காது. அதனால் நிறைய வண்ணப் பூக்கள்  எல்லா இடங்களிலும் கிடைக்கும். சிலர் தோட்டத்துப் பூக்களை கண்ணாடிக் குடுவைகளில், அழகுற செட் செய்து வைப்பர். நாங்கள் நடந்து  செல்லும் பகுதியில் மிகப்பெரிய அழகான கட்டடம், வெகு நீள காம்பவுண்டு கொண்டது, வெளிப்புறம் முழுவதும் பல்வேறு  வண்ணப்பூக்களைக் கொண்ட செடிகள் சுவரை ஒட்டி அவ்வளவு அழகாக காணப்பட்டன.

அந்த கட்டடத்தின் உள்ளும் பல வண்ணப்பூக்கள் கொண்ட செடிகள், குறுகிய இடைவெளிகளில் நடப்பட்டிருந்தன. வெளியிலிருந்து  பார்த்தால் கொள்ளை அழகு. எப்படியாவது அந்த கட்டடத்திற்குள் நுழைந்து பார்த்து விட வேண்டுமென்ற ஆசை. உள்ளே செல்ல அனுமதி  வேண்டுமென என் மகனிடம் கேட்கச் சொன்னேன். அப்பொழுதுதான் எனக்குப் புரிய வந்தது, அந்த இடம் அமரர்கள் வாழும் இடம், அதாவது  கல்லறை என்று புரிய வந்தது.ஒரு கல்லறையே இப்படிக் காணப்பட்டால், மற்ற இடங்களின் அழகு எப்படியிருக்கும் என்று யோசித்துக்  கொள்ளலாம். கல்லறையின் அடையாளம் போல், அந்தந்த இடத்தில் அழகான மலர்ச்செடியை நட்டு வைத்துள்ளார்கள். அழகுக்காக  மட்டுமே பூக்கள் உள்ளன போல் தெரிகிறது. குழந்தை பிறந்ததும் பார்க்க வந்தாலும், திருமணம் முடிந்து வந்தாலும், மற்றொருவர்  வீட்டிற்குச் சென்றாலும் அன்பின் அடையாளம் அவர்களுக்கு பூங்கொத்துக்கள்தான்.

அதனால் இறந்தாலும் பூச்செடிகள் மூலம் அன்பு காட்டுகிறார்களோ என்று நினைத்தேன். பெரிய மால் போன்ற இடங்களில் நீர்வீழ்ச்சி,  நீச்சல் குளம் போன்றவை காணப்படும். அதில் முழுவதும் பூக்களை மிதக்க விட்டிருப்பது பார்க்க என்ன ஒரு அழகு. இங்கு நாம்  பாத்திரங்களில் நீர் வைத்து, பூவிதழ்களை போட்டு வைப்பது போன்று நீச்சல் குளங்கள்  அமைத்து அதில் பூக்களை மிதக்க  விட்டிருப்பார்கள். நம் ஊரில் டாலியா Dhalia என்று சொல்லுவோம். அது போன்ற வண்ணப்பூக்கள் சீக்கிரம் கெடாமல் தண்ணீரில்  மிதக்கும்.அடுத்து அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் செல்லப் பிராணிகள். அமெரிக்கர்கள் ஏதாவது ஒரு பெட் (pet) இல்லாமல்  இருக்க மாட்டார்கள். வீட்டுக் குழந்தைகள் போலவே ஒரு நாய்க்குட்டி அல்லது பூனையை பெரும்பாலானவர்கள் வைத்துக் கொள்வார்கள்.

வீட்டு உறுப்பினர்கள் நிறைய பேர் இருந்தாலோ அல்லது யாராவது பார்த்துக் கொள்ளும்படி இருந்தாலோ நாய் இருக்கும். நாய் தனியாக  இருப்பதை விரும்பாது என்பதால், சிலர் பூனைக் குட்டிகளை வளர்க்கிறார்கள். சமீப காலமாக, ஒரு கணக்கெடுப்பில் பூனைகள் அதிகம்  வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளியியல் ஆராய்ச்சி சொல்வதாகக் கேள்விப்பட்டேன். பூனைகள் யாருமே வீட்டில் இல்லாவிடில் கூட தனியே  இருக்கும். தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ளும் என்பதால், நிறையப் பேர் பூனையும் வளர்க்கிறார்கள். தன்னுடைய பிரிய நாயோ,  பூனையோ எதுவாகயிருந்தாலும் வெளியே செல்லும் போது உடன் எடுத்து வருவார்கள். பெரும்பாலும் நாய்கள் தங்கள் மாஸ்டருடன்  நடைப்பயிற்சிக்குக் கூட வரத் தவறுவதில்லை. அதற்காக அழகழகாக டிரெஸ் தயாரித்துப் போட்டிருப்பார்கள். கழுத்தில் மணி, காலில்  சாக்ஸ், ரிப்பன் கட்டுதல் போன்று அலங்கரித்திருப்பார்கள்.

காரில் எஜமானருடன் வந்து இறங்கி கம்பீரமாக நடக்கும். இடுப்பில் பெல்ட் போன்று அதன் செயினும் சேர்த்து கட்டியிருப்பார்கள். அவர்கள்  நடக்க நடக்க அதுவும் வேகமாக நடக்கும். சிலர் கையில் செயினுடன் அழைத்து வருவர். பந்து விளையாடி, ஏரியில் குதித்து, தூக்கிப்  போடும் பொருளை எடுத்து வந்து தருதல் போன்ற அனைத்தும் செய்து நம்மை மிகவும் மகிழ்விக்கும். இது போன்ற பலப்பலக் காட்சிகளை  தினம் தினம் கண்டு ரசிப்பது எங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காகவும் அமைந்தது.அமெரிக்காவில் எங்கள் மகன் வீட்டிலும் இரண்டு  அழகழகான பூனைகள் இருந்தன. எனக்கும், என் கணவருக்கும் முதலில் அந்த பூனைகள் மீது அவ்வளவு இஷ்டம் கிடையாது. ஆனால்  பிற்பாடு ரொம்ப பிடித்துப்போய்விட்டது.  இன்றும் அவை எங்கள் கண்களில் நிற்கின்றன.

அழகான கிரே கலரில் பிரிட்டன் பூனை, மற்றொன்று கறுப்பு வெல்வெட் போன்ற அமெரிக்கன் பூனை. அவற்றுக்கு வெஜிடேரியன் உணவு  பிரான்ஸிலிருந்து வரவழைக்கப்பட்டு தரப்படுகிறது. பிரிட்டன் பூனை புலிக்குட்டி போன்று இருக்கும். பார்க்க கம்பீரமாக இருந்தாலும் சிறிது  சப்தம் கேட்டாலும் ஓடி ஒளியும். கறுப்பு என்றாலே பூனையில் பயமாக இருந்தாலும் அவ்வளவுப் பாசமானது. தங்கள் உணவைத் தவிர  எதையும் தொடாது. நாம் பயப்படவே வேண்டாம். சிறு எறும்பு, பூச்சியைப் பார்த்தால் கூட இரண்டும் துரத்தித் துரத்தி அடிக்கும். நாம்  படுத்தால், தலையின் அருகில் அமர்ந்து நம்மை பாதுகாக்கும். நாங்கள் அங்கு இருக்கும் வரை நான் தான் அதற்கு உணவளிப்பேன்.  காலையில் 5 மணிக்கு வந்து என்னை எழுப்பி விடும். துவரை போன்ற விதைகள் அமைப்புதான் அதன் சாப்பாடு. அந்த டப்பாவை எடுத்துக்  குலுக்கினால் போதும், இரண்டும் ஓடி வந்து விடும்.

கறுப்பு என்னைச் சுற்றி மூன்று முறை வலம் வரும். இரண்டு ஸ்பூன்கள் சாப்பாடு தனித்தனியாக வைத்த பின் இரண்டும் தங்கள் உணவை  சாப்பிடும். தண்ணீர் கப் அலம்பி புதிய தண்ணீர் வைத்த பின் தான் குடிக்கும். எனக்கு ஒரே ஆச்சரியம். விநாயகர் தாய், தந்தையை மூன்று  முறை வலம் வந்து பழத்தைப் பெற்றது போல், இது எதற்கு மூன்று முறை வலம் வருகிறது என்று நினைப்பேன். அவற்றின்  விளையாட்டுக்களில் சில சமயம் எங்கள் வயதைக் கூட மறப்போம். அதுவும் நாங்கள் இந்தியா புறப்படும் நாள். அப்படியொருக் காட்சி  நினைவை விட்டு நீங்கவேயில்லை. கிரே கலர் பெயர் பூபூ (Booboo). அது எங்கள் பெட்டிகள் மேல் வந்து படுத்துக் கொண்டு எடுக்க  விடாமல் தடுத்தது. கறுப்பின் பெயர் சிதாரா. அது என் கணவர் அருகில் படுத்துக் கொண்டு அவரை எழ விடாமல் செய்தது. என்ன ஒரு  கடவுளின் படைப்பு. ஒவ்வொரு ஜீவனுக்கும் அறிவைத் தந்திருக்கிறார்கள். குழந்தைகளை விட்டுப் பிரிவது போன்றே கண்ணீர் மல்க  பார்த்து விட்டுக் கிளம்பினோம்.

அடுத்து நம் பண்டிகைகள். வெளிநாட்டில் எப்படி நம் பண்டிகைகளை கொண்டாடுவது என யோசிக்கலாம். கவலையே வேண்டாம்.  தீபாவளியென்றால் அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து பட்டாசுகள் வெடிப்பது ஒரு தனி மகிழ்ச்சி இங்கே. புத்தாண்டா? கோவிலுக்குச்  சென்றால் போதும், நாள் முழுவதும் கொண்டாட்டம் தான். இந்தியர்கள் அனைவரையும் காண முடியும். நாங்களும் அங்குள்ள சிவா  விஷ்ணு கோயிலுக்குச் சென்றிருந்தோம். என்ன ஒரு கூட்டம். எவ்வளவு கார்கள்! கோவிலே ஜொலித்தது. ஒவ்வொரு விக்கிரஹமும்  கண்ணைப் பறிக்கும் அழகு. தரிசனம் முடிந்து நம் இந்திய பாரம்பரிய உணவைப் பார்த்ததும் மெய்சிலிர்த்தோம். அன்று யுகாதி என்று  நினைக்கிறேன். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், குலோப்ஜாமூன் என்று விதவிதமான நம் நாட்டுப் பண்டங்களை வயிறாற  அனைவரும் உண்டோம். பல விதமான உணவுப்பண்டங்களால் அந்த டைனிங் ஹால் நிரம்பி வழிந்தது. இப்பொழுது அங்கு அனைத்து  நகரங்களிலும் நிறைய இந்தியக் கோயில்கள் உள்ளன. இந்திய உணவுப் பண்டங்களும் கிடைக்கின்றன. வேறென்ன வேண்டும் நமக்கு?

(பயணம் தொடரும்!)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்