செய்துபாருங்கள்வெந்தயக்கீரை பொரியல்  

கீரையை சுத்தம் செய்து வைக்கவும். துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து வேக விடவும்.  1/2 கப் தேங்காய்த் துருவல், ஒரு பெரிய  வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக அரியவும். ஒரு பச்சை மிளகாயைக் கீறிப் போடவும். கடலைப்பருப்பு+உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்,  ஒரு மிளகாய் கிள்ளியது. கொத்துமல்லித்தழை, உப்பு.வாணலியில் கடுகு தாளித்து, பருப்புகளை சிவக்க வறுத்து வெங்காயம், பச்சை  மிளகாய் சேர்க்கவும். நன்கு வதங்கிய பின் உப்பு சேர்த்து, வெந்தயக்கீரையை வதக்கவும். வெந்த பருப்பு, தேங்காய்த்துருவல்,  கொத்துமல்லித்தழை தூவி நன்கு கிளறி பாத்திரம் மாற்றவும். இப்பொரியல் சுவையாக இருக்கும்.

வெந்தயக்கீரை வடை

பாசிப்பருப்பு 1/2 கப் ஊற வைக்கவும். வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி இரண்டாக்கிக் கொள்ளவும். (1 டீஸ்பூன்) ஒரு பச்சை மிளகாய்,  ஒரு வெங்காயம், ஒரு கட்டு வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கவும். அனைத்தும் ஒரு அகலப் பாத்திரத்தில் போட்டு, பாசிப்பருப்பை  ஒன்றிரண்டாக அரைத்துக் கலந்து, செக்கு கடலெண்ணெயில் வடை செய்யவும்.

வெந்தயக்கீரை மசியல்

1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 கப் துவரம்பருப்பு, 1 வெங்காயம், 1 பச்சை மிளகாய், 1 தக்காளி அரிந்து போட்டு,  மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயத்துடன் வேக விடவும். நீர் வற்றியதும் பருப்புக் கலவையை மசிக்கவும். அதில் கீரையைப் போடவும்.  வாணலியில் கடுகு, உளுந்து, காம்புடன் கூடிய  உலர் மிளகாயை தாளிதம் செய்து பருப்புக் கலவையில் உள்ள கீரையைக் கொட்டி  இறக்கவும். மிளகுத்தூள் + ஒரு ஸ்பூன் நெய் விட்டு பாத்திரம் மாற்றி மூடவும். பின் பரிமாறவும்.

வெந்தயக்கீரை அடை

ஒரு டம்ளர்ல அரிசி மாவு (அ) சோள மாவு, வெந்தயக்கீரை, பல்லுப் பல்லாக அரிந்த தேங்காய், 1 வெங்காயம், 1 பச்சை மிளகாய், கிள்ளிய   உலர் மிளகாய் ஒன்று, 1 ஸ்பூன் கடுகு, உளுந்து+ கடலைப்பருப்பு= 1 ஸ்பூன், 1 ஸ்பூன் நிலக்கடலை, 1 கட்டு வெந்தயக்கீரை, உப்பு, கடுகு,  உளுந்து, கடலைப்பருப்பு, உலர் மிளகாய், நிலக்கடலை, தாளித்து வறுத்தபின் ஒரு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கி  மாவில் சேர்த்து உப்பு, தண்ணீருடன் பிசையவும். தோசைக்கல்லைக் காய வைத்து, பிசைந்த மாவில் நீரை சேர்த்து உருட்டி, கல்லில்  அடையாகத் தட்டி, சிறு தீயில் இருபுறமும் வேகவிட்டு திருப்பி எடுக்கவும்.

வெந்தயக்கீரை துவையல்


கடலைப்பருப்பு + உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன், 1 பச்சை மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி, தேங்காய் பத்தை (துண்டு) ஒன்று. உலர்  மிளகாய் 3, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கீரை 1 கட்டு, கடுகு 1 ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் வாணலியில் சிறிது எண்ணெயில்  பருப்புகள், உலர் மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் எண்ணெயில் கடுகு தாளிக்கவும். இதைத்தவிர மற்ற பொருட்களை (புளி,  மிளகாய், உப்பு, தேங்காய் அரைத்து கீரையைப் போடவும்.) பின் வறுத்த பருப்பு மிளகாய் (உலர் மிளகாய்)  போட்டு அரைத்து எடுத்து  வாணலியில் கடுகு, எண்ணெயில் புரட்டி எடுத்தால் சுவைக்கும்.

- சு.கெளரிபாய், பொன்னேரி.