பெண்களுக்கு சாதகமா? பாதகமா?
தகர்க்கப்பட்ட 497 சட்டப் பிரிவு
ஒரு பெண்ணின் எஜமானராக கணவர் ஒரு போதும் இருக்க முடியாது என்று இந்திய குற்றப்பிரிவு சட்டம் 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், திருமண பந்தத்திற்கு அப்பாலான உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தன்பாலீர்ப்பு தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் சர்ச்சைகளும் தொடர்கின்றன. அதே போலவே பிரிவு 497 நீ்க்கப்பட்டதும் பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் அஜிதா கூறுகையில்...
 “குற்றப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் இந்தத் தீர்ப்பு மூலம் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்க்கலாம். இந்தியாவில் அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த கூலி வேலை பார்க்கும் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் ஆணாதிக்க சமூகத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது ஆண்களுக்கு எளிமையானதாக இருக்கிறது. இப்படியான உறவு குற்றச்செயல் என்கிற பார்வை இருந்தது.
சமூக அளவில் குறைந்தபட்சம் பெண்ணுடைய பெற்றோர்கள், சகோதரர்கள், தவறு என்று தட்டிக்கேட்பதற்கு வாய்ப்பு இருந்தது. அந்தக் கேள்வியை இப்போது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பில் மண வாழ்க்கைக்கு அப்பாலான உறவு ஒரு குற்றவியல் தவறு இல்லை என்றுதான் கூறியிருக்கிறார்கள். மணவாழ்க்கையில் செய்யும் தவறு என்பது அப்படியேதான் இருக்கிறது. அதற்கு என்ன தீர்வு என்றால் தவறு செய்தவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து என்கிற நிவாரணத்தை கோரலாம்.இந்தச் சமூகம் முழுவதும், நுகர்வு கலாசாரம் மிகுந்த சமூகமாகவும், பெண்ணை உடலாக பார்க்கும் பார்வை இருப்பதால் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த விதமான கவலையும் ஆணுக்கு இல்லாமல் போகும்போது சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஆணவம் அதிகமாகிவிடும்.
இதனால் பாதிக்கப்படும் பெண் திருமண வாழ்க்கையை விட்டு வெளியே வரும்போது சமூகத்தில் என்ன பாதுகாப்பு இருக்கும்? அந்தப் பெண்ணின் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் போகும் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நகர்ப்புற வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும், கருத்தியல்ரீதியாக வளர்ச்சி பெற்ற பெண்களுக்கும் இந்தத் தீர்ப்பு நல்ல விஷயம். சமத்துவத்தை நோக்கிய முதல் படியாக இருக்கலாம். ஆனால் 80 சதவிகிதம் பெண்களுக்கு இந்த தீர்ப்பு சமத்துவத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் கூட வேறொரு ஆணோடு பழகுவதற்கு வாய்ப்பு இல்லாத பெண்களுக்கு இத்தீர்ப்பினால் பயனில்லை. அவர்களுக்கு எதிராக தவறு செய்த ஆண்களுக்கு வசதியாக இத்தீர்ப்பு ஆகிவிடும் சூழலும் இருக்கிறது.
இப்படியொரு சட்டம் வந்திருக்கிறதே என்று சொல்லாமல், குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அவ்வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். தீர்ப்பு நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இத்தகைய தீர்ப்புகள் நடை முறைப்படுத்தப்படுவது மோசமாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை யதார்த்தம். இத்தனை காலம் மனைவி பார்க்கக்கூடாது என்று தன்னுடைய கைபேசியை பாஸ்வேர்டு போட்டு வைத்திருக்கும் ஆண்கள், இப்போது பார்ஸ்வேர்டு போடாமல் வெளிப்படையாக வேறொரு உறவு வைத்துக்கொள்வார்கள். ‘உனக்கு வேண்டாம் என்றால் என்னை விட்டுவிடு’ என்று சொல்லுவதற்கு வசதியாக போய்விடுமோ என்கிற அச்சம் இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக பெண்களை போதைப்பொருளாகப் பார்த்துவந்த, பெண் என்பவள் தனக்கான சொத்து என்பது போல பாவித்துவந்த சட்டம் இன்று இல்லை என்பது வரவேற்கத்தக்க ஒன்று.மேம்போக்காகவும், போலித்தனமாகவும்,ஆண்களுக்கு இருந்த அச்சம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது மற்ற கட்டமைப்புகளை நாம் வலுவாக்க வேண்டும். சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஏற்கனவே குற்றத்தை எளிமையாக செய்ய பழக்கப்பட்ட ஆண்களிடத்தில் குற்றத்திற்கான தீர்வை விரைவாகவும், வலிமையானதாகவும் வைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இப்போது வழங்கப்பட்டிருக்கக்கூடிய தீர்ப்பு கருத்தியல்ரீதியாக வரவேற்கத்தக்க ஒன்று. இதில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய நீதித்துறையும், அரசும் வேகமாக செயல்பட வேண்டும்” என்கிறார்.
-ஜெ.சதீஷ்
|