நீராலானது இவ்வுலகுஅரசுகளின் செயலற்ற தன்மையை விளக்கும் வெள்ள பாதிப்புகள் குறித்தான அறிக்கைகள்

2015ம் ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பெரும்  வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது மத்திய, மாநில அரசுகள் என்ன  செய்தன? அதற்கு முன்பும் பின்பும் நாடு முழுவதும் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகளை அரசுகள் எப்படி மேலாண்மை செய்து வருகின்றன?  இக்கேள்விகளுக்கு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் இரண்டு அறிக்கைகள் நமக்கு பதில் அளிக்கக் கூடும்.

சென்னை வெள்ளம் குறித்த அறிக்கை


டிசம்பர் 2015ல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 289 நபர்கள் இறந்துள்ளனர்.  சுமார் 23.25 லட்சம்  வீடுகள் நீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தின் தாக்கம், பேரிடரை மேலாண்மை செய்வதில் பல்வேறு அரசு அமைப்புகள் ஆற்றி இருக்க  வேண்டிய பங்கில் ஏற்பட்ட தோல்வியை, பொதுப் பார்வைக்கு கொண்டு வந்தது என்று கூறுகிறது தணிக்கை துறை.வெள்ளத்தின் காரணமாக  ஏற்பட்ட இழப்பின் தீவிரத்தை குறைப்பதில் தமிழ்நாடு அரசின் தயார் நிலையை அறிவது மற்றும் இந்த பேரிடர்  தவிர்த்திருக்கக்கூடியதா என்பதை மதிப்பிடுதல் என்ற நோக்கத்துடன், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ள மேலாண்மை  மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளுதல்” பற்றி, ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரையிலான காலகட்டத்தை  உள்ளடக்கிய ஒரு செயலாக்க  தணிக்கையை, ஜூன் முதல் நவம்பர் 2016 வரை நடத்தியது தணிக்கை துறை.ஆய்வின் முடிவில் சில  முக்கிய பரிந்துரைகள் தரப்பட்டன.  அவை...

(1) நீர்நிலைகளின் மீது கட்டுமானத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக, இந்திய அரசு குறிப்பிட்ட வகையில், வெள்ள சமவெளி மண்டலம்  பற்றிய சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(2)நீர்நிலைகளை ஒட்டிய மேம்பாடு களின் பாதிப்பை தடுக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவோர் எடுப்பதை  உறுதி செய்யாமல், நீர்நிலைகளை ஒட்டிய மேம்பாடுகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதிக்கக் கூடாது. நிபந்தனையின்  அடிப்படையிலான அனுமதி வழங்கும் முறை இனி நிறுத்தப்பட வேண்டும்.

(3)நீர் வழிகளை ஒட்டியும் நீர் நிலை களுக்கு உள்ளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அனைத்து செயல்படுத்தும் துறைகள் இடையே  ஒருங்கிணைப்பை
அரசு உறுதி செய்ய வேண்டும்.

(4) மழைநீர் வடிகால்களின் நீர் கொண்டு செல்லும் கொள்ளளவின் வடிவமைப்புக்கும் ஆண்டு பராமரிப்புக்கும் உரிய முக்கியத் துவம்  அளித்து, மழைநீர் வடிகால் பிணையமைப்பின் விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

(5) அணைகளுக்கான அவசரகால செயல் திட்டம் பணி முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட வேண்டும்.

(6) பேரிடர் மேலாண்மைக்கான ஒரு செயல்படும் நிறுவன கட்டமைப்பு இந்திய அரசு கூறியபடி நிதி தன்னாட்சியுடன் கூடிய வகையில்,  அரசு உருவாக்க வேண்டும்.
மேற் கூறிய பரிந்துரைகளை இன்று வரை தமிழக அரசு நிறைவேற்றவே இல்லை.

தமிழக நீர் கொள்கை


1987ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய நீர் கொள்கை  அடிப்படையில் 1994ம் ஆண்டு தமிழ்நாடு மாநில நீர் கொள்கை கொண்டு  வரப்பட்டது. தேசிய நீர் கொள்கை 2002 மற்றும் 2012ம் ஆண்டுகளில் திருத்தி அமைக்கப்பட்ட போதும், தமிழக நீர் கொள்கை  மாற்றப்படாமல் உள்ளது.  தமிழக நீர் கொள்கையை திருத்தி அமைக்க 2013ம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு தனது  வரைவு கொள்கையை ஆகஸ்ட் 2014ல் அளித்தது. தற்போதைய நிலை வரை இந்த வரைவுக் கொள்கைகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்  அளிக்கவில்லை என்று தணிக்கை ஆய்வு கூறுகிறது.

மத்திய நீர்வள ஆணையம்

வெள்ளப்பெருக்குக்கு உள்ளா கும் நிலப்பரப்பின் வரைபடங்கள், அணைகளுக்கான அவசரகால செயல் திட்டம், வடிநிலவாரியான  பெருந்திட்டங்கள் போன்றவற்றை தயாரித்தல் போன்ற செயல்பாடுகளை மத்திய நீர்வள ஆணையம் மேற்கொள்கிறது. இந்த ஆணையத்தின்  விதிகள், ஆய்வுகள் அடிப்படையில் தமிழக  அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

தமிழக அரசின் இத்தகைய வருந்தத்தக்க அணுகுமுறை, மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பை உருவாக்கிய 2015ம்  ஆண்டின் அழிவுக்குரிய வெள்ள நிகழ்விலிருந்து பாடங்கள் பெறப்படவில்லை என்பதை காட்டுகிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.வெள்ளத்தின் பாதிப்பை குறைப்பதற்கு, வெள்ளத்தை முன்கூட்டி கணித்தல் என்பது ஒரு முக்கியச் செயல்பாடாகும். அறிவியல்  அடிப்படையில் வெள்ளத்தை முன்கூட்டி கணிப்பதில் மத்திய நீர்வள ஆணையம் ஈடுபட்டுள்ளது.

வெள்ளத்தை முன்கூட்டி கணிப்பதில் நீர்வள ஆணையத்திற்கு உதவும் வகையில், வெள்ளத்திற்கு உட்படக்கூடிய பகுதிகள், வெள்ளம்  ஏற்பட்ட பகுதிகள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, வரைபடங்களுடன் மத்திய நீர்வள  ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என தேசிய வெள்ள ஆணையம் 1982ம் ஆண்டு பரிந்துரைத்தது. இப்படியான ஆய்வுகள் இதுவரை  மேற்கொள்ளப்படவில்லை.

வெள்ளத்தை சமாளிக்கும் செயல் அணுகுமுறைகளை உருவாக்கும் பொருட்டு, வெள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் வெள்ளப்பெருக்குக்கு  உள்ளாகும் நிலப் பரப்பின் வரைபடங்களை ஒவ்வொரு மாநிலமும் உருவாக்க வேண்டும் என்று தேசிய நீர் கொள்கை கூறுகிறது. மேலும்,  ஆறுகள் மற்றும் அதன் அணைச்சுவர்கள், பக்கச்சுவர்கள், கரைகள் போன்றவற்றை சேதப்படுத்துவதால் நிலத்தை நிரந்தரமாக இழக்கிறோம்.  இதனை தவிர்க்க அமைப் பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய நீர் கொள்கை கூறுகிறது. இவை எதையும் தமிழக  அரசு செய்யவில்லை.  வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகும் நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கும் பொறுப்பு நீர்வள ஆதார துறையிடம்  உள்ளது. தமிழகத்தில் வெள்ளப் பெருக்குக் காரணமாக பாதிப்படையக் கூடிய நிலப்பரப்பு வரைபடம் இதுவரை தயாரிக்கப்படாமல் உள்ளது.  

வெள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை


இந்தியாவில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்கள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன (Schemes for Flood Control and  Flood Forecasting) என்பதை, கடந்த வருடம், இந்திய தணிக்கைக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட 17  மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள்...


1.இந்தியாவில் சுமார் 45.64 மில்லியன் ஹெக்டர் நிலம் வெள்ள ஆபத்து உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

2. பல மாநிலங்களில் வெள்ளத் தடுப்பு குறித்த திட்டங்கள் தயாரிக்கப்படாமலே உள்ளன. திட்டங்கள் உள்ள போதிலும் அவை  அமல்படுத்தப்படாத நிலையும் உள்ளது. மேலும் மத்திய அரசு, வெள்ள பாதிப்பு தடுப்பு திட்டங்கள் மற்றும் வெள்ள கண்காணிப்பு  போன்றவற்றுக்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு  அளிக்காமல்  உள்ளது.  பல மாநில திட்டங் கள் குறைபாடு உடையதாக  உள்ளன.

3. மத்திய நீர் ஆணையம், வெள்ள வடி கால் பகுதிகளை கண்டறியாமல் உள்ளது. வெள்ளம் வழிந்தோட தேவையான கால்வாய்களை  சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.

4. தமிழகத்தை பொறுத்தளவில், ஒரு வெள்ள கண்காணிப்பு மையம்கூட இதுவரை அமைக்கப்படவில்லை.

5. இந்தியாவில் உள்ள 4,862 அணைகளில் 349 அணைகளுக்கு மட்டுமே பேரிடர் மேலாண்மை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதிலும்  குறிப்பாக கேரளத்தில் உள்ள எந்த அணைக்கும் பேரிடர் மேலாண்மை திட்டம் இல்லை என்பது தற்போது நிகழ்ந்துள்ள பேரழிவுக்கு முக்கிய  காரணம்.

6. மழை வெள்ளத்தை கண்காணிக்கும் அமைப்புகள் போதிய அளவில் இல்லை. மேலும், தற்போது உள்ள கண்காணிப்பு அமைப்புகள் பழைய  தொழில்நுட்ப அடிப்படையிலேயே இயங்குகின்றன. இதனை மேம்படுத்துவது மிகவும் தேவையானது.

மேற்கூறிய ஆய்வு முடிவு நமக்கு தெரிவிப்பது  என்னவென்றால், இந்தியாவில் வெள்ள பேரிடர் மேலாண்மை என்பது மிக பெரிய  பேரிடராக உள்ளது என்பதே. வெள்ளத் தடுப்பு என்பது, அது உருவாகும் பகுதியில் இருந்து செயல்படுத்த வேண்டியது. காடுகளை காப்பது  மூலம் வெள்ள பாதிப்புகளை குறைக்கலாம். பிரமாண்டமான அணைகளை விடுத்து சிறியளவிலான தடுப்பணைகளை கட்டுமானம் செய்ய  வேண்டும். வெள்ள வடிகால் பகுதிகள் முறையாக பராமரிக்க வேண்டும். நகர கட்டமைப்பு இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ளும்  வகையில் கட்டமைக்க வேண்டும். இத்தகைய திட்டங்களை இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த அரசுகளை நிர்பந்திக்க வேண்டிய  நிலையில நாம் உள்ளோம். இதுவே நம்மை நாம் காக்கச் செய்ய வேண்டியதாகும்.

(நீரோடு செல்வோம்!)