தோசக்கல்



வித்தியாசமான பல உணவகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. அந்த உணவகங்களுக்கென்று சிறப்பான சில உணவு வகைகள் மூலம் அவை  மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் உணவு மட்டுமல்லாமல் சில கடைகளின் பெயர்களும் சற்று வித்தியாசமாகவே  இருக்கின்றன.  சென்னையில் இயங்கி வரும் தோசக்கல் உணவகம் அவற்றுள் ஒன்று. இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பது கூடுதல்  சிறப்பு.

பாரம்பரியமிக்க வாழை இலை, தொன்னை, பாக்கு மட்டை போன்றவற்றின் மூலம் இங்கு உணவு பரிமாறப்படுகிறது. நவீன சமூக மாற்றத்தில் நாம்  மறந்த கிராமப்புற உணவுகளை மக்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துகிறது தோசக்கல் உணவகம்.  தோசக்கல் உணவகத்தின் நிறுவனர் சுரேஷ்  சின்னசாமியிடம் பேசினேன். “அப்பாவுக்கு சொந்த ஊர் பழனி. பிழைப்புத் தேடி 1970களில் சென்னை வந்தார் அப்பா. நடிகர்கள் நம்பியார்,  அசோகன்  வீடுகளில்  வேலை செய்து வந்தார்.  எழுத்தாளர் எஸ்.டி.பாஸ்கர் வீட்டிலும் வேலை செய்தார்.

எஸ்.டி பாஸ்கரும் அவருடைய மனைவி திலகா அம்மாவும்தான் அப்பாவிற்கு சமையல் சொல்லிக்கொடுத்தனர். அப்பாவுக்கு திருமணம் முடிந்த பிறகு,  ‘உங்களுக்கென்று தனி குடும்பம் ஆகிவிட்டது. ஒரு வாழ்வாதாரம் தேவை’ என்று கடை வைக்கச்சொல்லி தோசைக்கல் ஒன்றை அப்பாவிற்கு  வாங்கிக்கொடுத்தனர். சென்னை மெரினாவில் திறந்தவெளியில் சின்ன  கடையாக  ‘சாமி தோசக்கல்’ என்ற பெயரில் நடத்தினார். சில நாட்களில்  அசைவ உணவு வகைகளையும் வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டார். நானும், அண்ணனும் படித்து வந்தோம்.

நான்  6ஆம் வகுப்பு படிக்கும்போது, போதிய வருமானம் இல்லாததால் இரண்டு பேரையும் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  படிப்பை  நிறுத்திவிட்டு  நான் அப்பா, அம்மாவோடு கடையில் வேலை செய்து வந்தேன். சில ஆண்டுகளில் இரண்டு தள்ளு வண்டிகள் வாங்கினோம். ஒரு  கடையை அப்பாவும், ஒரு வண்டிக் கடையை நானும் பார்த்து வந்தோம். 1993 ஆம் ஆண்டு வண்டிக்கடையிலிருந்து மாறி சின்னக் கடையாக  வைக்கலாம் என்று முடிவு செய்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்தோம்.  

எங்களுடைய கடைக்கு டீ குடிக்க வரும் கிருஷ்ணமூர்த்தி என்கிற தாத்தா ஒருவர் “நீ படிப்பதற்கு நான் உதவுகிறேன். படிக்கிறியா?” என்று கேட்டார்.   அவர் மூலம்தான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஒரு டுடோரியலில் என்னை பணம் கட்டி சேர்த்து விட்டார். அதில் 10ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றேன். எங்க அப்பாவுக்கு ஒரே சந்தோஷம். என்னை தொடர்ந்து படிக்க சொன்னார். அதே தாத்தாதான் பெசன்ட் நகர் அண்ணா  அரசினர் உயர்நிலைப் பள்ளியில் என்னை சேர்த்தார். வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்தேன்.

‘உனக்கு என்ன படிக்க விருப்பம்’ என்று தாத்தா கேட்டார்.  ‘எனக்கு இந்த பரோட்டா, டீ தான் நல்லா வருது. வேற எதுவும் எனக்கு செட் ஆகுற மாதிரி  தெரியலை தாத்தா’ என்றேன். அவர் யோசித்து காலையில் ‘கேட்டரிங் வகுப்பும் மாலையில் பி.ஏவும் படித்துக்கொண்டே அப்பாவிற்கு உதவியாக இரு’  என்றார்.  எங்க அப்பாவும் ‘ரெண்டு பேரும் நல்லா படிக்கிறீங்க. நான் கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறேன்’ என்றார். படித்துக்கொண்டே இரவு   சவேரா ஹோட்டலில் வேலை பார்த்தேன். கேட்டரிங் கல்லூரியில் முதல் மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றேன்.

கல்லூரியின் பேராசிரியர் கனிராஜன் சார் “நல்ல மார்க் எடுத்து இருக்கே.  நீ கப்பலுக்கு  வேலைக்குப் போகலாம்’ என்றார். அதற்கு சில நேர்முக  தேர்வுகள் நடைபெற்றன. அதற்குக் கொஞ்சம் செலவானது. மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழல் வந்தது. முதல் தேர்வில் தோல்வி. மூன்றாவது  தேர்வு பம்பாயில் நடந்தது.  அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டியது இருந்தது.  கையில் பணம் இல்லை.  ரயில்வே ஸ்டேஷனில் தங்கி அருகில்  இருந்த தள்ளுவண்டிக் கடையில் பரோட்டா அடிக்கும்  வேலை பார்த்தேன்.  

அந்தக் கடை உரிமையாளரிடம் நான் தேர்வுக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லவில்லை.  சொன்னால் வேலை கிடைக்காது என்ற பயம் எனக்கு  இருந்தது. 10வது நாள் தேர்வில் நான் தேர்வானேன். அதிலிருந்து வாழ்க்கையே மாறியது. அமெரிக்கா சென்றேன். சமையலறை வேலை  மட்டுமில்லாமல் பகுதிநேர வேலையும் பார்த்து இரண்டு மாதங்களில் வீட்டுக் கடனை முடித்தேன். 5 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தேன்.   இதற்கிடையில் காதலும் ஒருபக்கம்.  கல்லூரிக் காலத் திலிருந்து காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் முடிந்து இருவரும் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று விட்டோம்.  திருமணத்திற்கு முன்பே வெளிநாடு செல்ல வேண்டிய தேர்வை முடித்  திருந்தார்  என் மனைவி.  மீண்டும் 6 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தோம்.  ஒரு கட்டத்தில் சென்னைக்கு சென்று  விடலாம் என்று தோன்றியது. 6 மாத தீவிர யோசனைக்குப் பிறகு நம்முடைய கடையை நவீனப்படுத்துவோம் என்று முடிவு செய்தேன். அப்பா  நடத்திய அதே பெயரில் ‘தோசக்கல்’ கடையை திறந்தோம். எங்களுடைய ஹோட்டலுக்கு வருகிறவர்கள் மன நிறைவாக செல்ல வேண்டும் என்று  உணவு மீது மிக கவனமாக இருக்கிறோம்.

மக்களுக்கு எங்களுடைய சமையல் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்படியே சமையல் அறை  அமைத்திருக்கிறோம். பணியாளர்களுக்கு சம்பளம் போக லாபத்தில் 25 சதவீதத்தை அவர்களுக்கு பிரித்துக்கொடுக்கிறோம்.  அவர்களுடைய மன  நிறைவும் எங்களுக்கு மிக முக்கியமானது.  ஒரு கேட்டரிங் கல்லூரியை தொடங்கினேன். நான் படித்த கல்லூரியில் பேராசிரியராக இருந்த கனிராஜன்  சார்தான் அதை இப்போது கவனித்துக்கொள்கிறார். அதில் படிக்க முடியாத 200 ஏழை எளிய மாணவர்களுக்கு கேட்டரிங் படிப்பதற்கு ஆண்டுதோறும்  உதவி வருகிறோம்.

முடிந்தவரை 500 பேருக்கு உதவ வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் பள்ளியில் மதிய உணவு  கொடுக்கிறார்கள் என்பதாலேயே நான் பள்ளிக்கு சென்றது நினைவிருக்கிறது. சில பள்ளிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுக்  கொண்டிருக்கிறோம். அதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம்.   ஏழை எளிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நல்ல உணவு வழங்கி  வருகிறோம். முடிந்தவரை கல்விக்கும் உணவிற்கும் உதவ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.  

சென்னையில் தற்போது 6 கடைகள் இயங்கி வருகின்றன. எங்கள் கடைகளில் பெரும்பாலான உணவுகள் தோசைக்கல்லில் உருவாக்கப் படுபவை.   பிச்சிப்போட்ட கோழி, கோழிக்கறி தோசை, காடை பெரட்டல் ஆகியவையும், இனிப்புகளாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய் போன்றவையும்   கொடுக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முழுக்க முழுக்க பாரம்பரிய உணவுகளை மட்டுமே கொடுத்து வருகிறோம்.  பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று கொள்கையாகவே வைத்திருக்கிறோம்.  

என்னுடைய அத்தனை முயற்சிக்கும் எனது குடும்பத்தார் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.  என்னுடைய மனைவி கொடுக்கும் ஊக்கம்  என்னை அடுத்த தளத்திற்கு நகர்த்திக்கொண்டிருக்கிறது. என் அப்பா பயன்படுத்திய அந்த தோசைக்கல்லை நினைவுகூறும் விதத்தில்  தொடங்கப்பட்டதுதான் ‘சாமிஸ் தோசக்கல்’. அதுதான் எங்களின் அடையாளமாக இருந்து வருகிறது.  இனிமேலும் பெரிய அளவில் சம்பாதிக்க  வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை.  முடிந்த அளவிற்கு உணவில்லா தவர்களுக்கு உணவும், கல்வியையும் கொடுக்க வேண்டும் என்பதே  நோக்கம்” என்கிறார் சுரேஷ் சின்னசாமி.


ஜெ.சதீஷ்