வானவில் சந்தை



இப்போதெல்லாம் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கினாலோ அல்லது கடைகளில் சென்று வாங்கினாலோ பேடிஎம் (Paytm) வழியாகப் பணம்  செலுத்தினால் பத்து சதவீதம் பணம் திரும்பித்தரப்படும் என்பது போன்ற விளம்பரங்களைக் காண முடியும். சில வங்கிகளின் கடனட்டையைப்  பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் போதும் சில சலுகைகள் (தள்ளுபடி, குறிப்பிட்ட சதவீதம் பணத்தைத் திரும்பத் தருதல் போன்றவை)  வழங்கப்படுவதைக் காணலாம். வங்கிகள் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால் பேடிஎம் போன்றவர்கள் யார்?

மரபான வங்கிகள் பொதுவாக, மக்களிடமிருந்து வைப்பு நிதியைப் பெற்று, பணம் தேவைப்படுவோருக்கு கடனாக வழங்கும். அதோடு, பணத்தை  கணக்கில் பாதுகாப்பாக வைத்திருத்தல், பிறருக்குப் பணம் அனுப்புதல், இணையவழிப் பரிவர்த்தனைகள், வங்கி அட்டை / கடனட்டை மூலம்  பொருட்களை வாங்குதல் போன்ற வழக்கமான சேவைகளையும் வழங்குகின்றன. ஒரு பேமென்ட் வங்கி மேற்சொன்ன அனைத்து வங்கிச்  சேவைகளையும் செய்யும்.

வாடிக்கையாளர் வைப்பு நிதியைக் (அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைதான் ஏற்றுக் கொள்ளும்) கொண்டு பிறருக்குக் கடன் வழங்குவதை மட்டும்  செய்யாது. ஏடிஎம் அட்டையை வழங்கும். ஆனால் கடனட்டையை வழங்காது. ஒரு வகையில் சிறிய வங்கி போன்றதுதான் பேமென்ட் வங்கி. ஆனால்,  இவற்றுக்குப் பெரும்பாலும் தனி அலுவலகங்களோ, கிளைகளோ இருக்காது. மாறாக, ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடைகள் மற்றும்  விற்பனையகங்கள் வழியாகவும் செயல்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி 2015 ஆகஸ்ட்டில் பதினோரு  நிறுவனங்களுக்கு  உரிமம் வழங்கியபோது, அதற்குத் தெளிவான நோக்கம் இருந்தது. சிறு சேமிப்பு  வங்கி வாடிக்கையாளர்கள், குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள், அமைப்புசாரா தொழில்துறையினர், இடம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் மற்றும்  சிறு தொழில் செய்பவர்கள் போன்றோரின் பணப் பரிவர்த்தனைகளுக்குத் தோதான, எளிமையான ஒரு வங்கிச் சேவையை இவை அளிக்கும் என்பதே  அது. பெரும்பாலான இந்தியர்கள் மொபைல் சேவையை பயன்படுத்துவது இதற்குத் தோதாக இருக்கிறது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மொபைல் சேவை நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் அமைப்புகள்,  பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிறரும் பேமென்ட் வங்கிச் சேவையை ஆரம்பிக்கலாம். அதற்குக் குறைந்தபட்சமாக நூறு கோடி ரூபாய் முதலீடு  செய்ய வேண்டும். பேமென்ட் வங்கிகள் கூடுதலாக காப்பீடுகள், பரஸ்பர நிதித் திட்டங்கள் ஆகியவற்றையும் விற்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி  இதுவரை பதினோரு விண்ணப்பதாரர்களுக்கு பேமென்ட் வங்கிச் சேவையை அளிக்க உரிமம் வழங்கியிருக்கிறது.

1.    ஆதித்யா பிர்லா நுவோ லிமிடெட் - Aditya Birla Nuvo Limited (Idea Cellular)
2.    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் -  Reliance Industries (Joint venture : 70% RIL, 30% SBI)
3.    ஏர்டெல் - Airtel M Commerce Services Limited
4.    பே டிஎம் - Vijay Sekhar Sharma (PayTM)
5.    சோழமண்டலம் -  Cholamandalam Distribution Services Limited
6.    இந்திய தபால்துறை - Department of Posts (India Post)
7.    ஃபினோ பேடெக் லிமிடெட்  - Fino Pay Tech Limited
8.    நேஷனல் செக்யூரிட்டீஸ் டெப்பாசிட்டரி லிமிடெட் - National Securities Depository Limited (NSDL)
9.    சன் ஃபார்மா - Dilip Shantilal Shanghvi (Sun Pharma)
10.    டெக் மஹிந்த்ரா - Tech Mahindra Limited
11.    வோடஃபோன் - Vodafone M-Pesa Limited.

உரிமம் பெற்ற பதினொன்றில் இதுவரை சேவையை ஆரம்பித்துள்ள வங்கிகளைப் பார்க்கலாம்..

ஏர்டெல் பேமென்ட் வங்கி

இவற்றில் ஏர்டெல் இந்தியாவின் முதல் பேமென்ட் வங்கிச் சேவையை ஆரம்பித்தது. ஏர்டெல் தற்போது நான்கு லட்சம் பேமென்ட் வங்கிச் சேவை  மையங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு, அதன் மொபைல் சேவையை விற்கும் பதினைந்து லட்சம் சில்லறை வணிகச் சேவை மையங்களின்  வழியாகவும் தனது பேமென்ட் வங்கிச் சேவையை அளிக்கிறது. சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5.5% வட்டி கொடுக்கிறது.

மரபான வங்கிகள் இதற்கு 3.5-4% வரைதான் வட்டி தரும். வருடாந்திரக் கட்டணம் ஏதுமில்லாத டெபிட் அட்டையை வழங்குகிறது. ஒரு சேமிப்புக்  கணக்கை ஆரம்பிக்க எந்த ஆதாரங்களும் தேவையில்லை. உங்கள் ஆதார் அட்டை போதும். உடனே ஆரம்பித்து விடலாம். உங்கள் ஏர்டெல் மொபைல்  எண் தான் வங்கிக் கணக்கு எண். கூடுதலாக ஒரு லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டையும் இலவசமாக அளிக்கிறது.

பேடிஎம் பேமென்ட் வங்கி –

 2017 டிசம்பரில் தொடங்கப்பட்ட பேடிஎம், பணத்தை பெற்றுக்கொள்ளவும், வழங்குவதற்குமான ஒரு லட்சம் மையங்களைக் கொண்டிருக்கிறது.  சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்திற்கு 4% வட்டி தருகிறது. கணக்கில் பணம் இல்லாவிட்டால் கட்டணம் இல்லை (ஸீரோ பேலன்ஸ்). இண்டஸ்  இண்ட் வங்கியுடன் சேர்ந்து நிரந்தர வைப்பு நிதிச் சேவையையும் வழங்குகிறது.

இந்திய தபால் துறை –

தபால் துறையின் நாடு முழுவதுமுள்ள வலைப்பின்னல் நாம் அறிந்ததே. தபால் துறை அளவிற்கு கடைக்கோடிக் குடிமகனையும் அடையும் சாத்தியம்  வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லை. அதனாலேயே வேறு எவரையும் விட பேமென்ட் வங்கிச் சேவையை தபால்துறை சிறப்பாகச் செய்ய முடியும்.  இங்கேயும் ஸீரோ பேலன்ஸ் கணக்கை ஆரம்பிக்கலாம். ஏற்கனவே இருக்கும் தபால் துறை கணக்குகள் அப்படியே பேமென்ட் வங்கிக் கணக்குகளாக  மாற்றப்படும். தபால்காரர் மூலம் பணத்தைக் கொடுத்து வாங்கும் முறையையும் ஏற்படுத்த திட்டமிடுகிறது அரசாங்கம். ரூ.25000 வரை 4.5%, ரூ.50000  வரை 5%, ரூ.100000 வரை 5.5% வட்டியை வழங்குகிறது.

ஃபினோ பேமென்ட் வங்கி –   

ஃபினோ 410 சொந்தக் கிளைகள் மற்றும் 25000 வணிக மையங்கள் வழியாக வங்கிச் சேவையை அளிக்கிறது. சேமிப்புக் கணக்கிற்கு 4% வட்டி  கொடுக்கிறது. குறைந்தபட்சம் ரூ.1000 கணக்கில் இல்லையென்றால் அபராதம் உண்டு (ஸீரோ பேலன்ஸ் இல்லை). ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து  வைப்பு நிதிச் சேவை, வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றையும் விற்கிறது. பிற நிறுவனங்களின் தங்க நகைக் கடன், காப்பீடுத்  திட்டங்கள் போன்றவற்றையும் விற்கிறது. இவற்றுடன் ஆதியா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கியும், ஜியோ பேமென்ட் வங்கியும் விரைவிலேயே  தங்களது செயல்பாட்டைத் தொடங்கவிருக்கின்றன.


(வண்ணங்கள் தொடரும்!)
அபூபக்கர் சித்திக் செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்
abu@wealthtraits.com