செல்லுலாய்ட் பெண்கள்



நினைத்தாலே இனிக்கும் நகைச்சுவை அரசி டி.ஏ.மதுரம்

பா.ஜீவசுந்தரி-41

காதளவோடிய பெரிய கண்கள், அதே அளவு வாய் கொள்ளாத சிரிப்பு… வெடுக் வெடுக்கெனப் பேசும் பாங்கு, கலைவாணருடன் இணைந்து சமூக  சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தாலும் பெண்ணுக்கு ஆதரவான கருத்துகளைக் கூடுதல் வசனங்களாகப்  பேசி ஆச்சர்யமூட்டியவர்.

அதே நேரத்தில் குணச்சித்திரப் பாத்திரங்கள், வில்லி வேடங்களையும் கூட ஏற்கத் தயங்காதவர். கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் இருவரும் இணைந்து திரைப்படங்களில் சமூக சீர்திருத்த, சமகால அரசியல் கருத்துகளைப் பரவலாக்கியதில்  முதன்மையான இடம் பிடித்தவர்கள். பெரும்பாலான படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், ஒரு சில படங்களில் தனித்தனியாகவும்  நடித்திருக்கிறார்கள்.  

ஸ்ரீரங்கம் பெற்றெடுத்த சிரிப்பரசி

டி.ஏ.மதுரம் சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் (1918) பிறந்தவர். இந்த ஆண்டு அவருக்கு நூற்றாண்டு. தாய், தம்பி, தங்கைகள் என்று மிகப்  பெரிய குடும்ப பாரத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய தூணாக, குடும்பப் பொறுப்பு மிக்க மூத்த பெண்ணாகவும் அவர் இருந்தார். நாடக நடிகையாகத்  தன் கலை வாழ்க்கையைத்  துவங்கியவருக்கு 1935-ல் 17 வயதில் வெளியான ‘ரத்னாவளி’ முதல் படம். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு இது  இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரத்தின் அப்போதைய முதலெழுத்துக்கள் டி.ஆர்.ஏ. மதுரம். அவ்வாறே அவர் நாடக உலகிலும், ஆரம்பகாலத் திரைப்படங்களிலும் அறியப்பட்டார்.  அந்தப் படத்தைப் பார்த்த ‘திருப்பூர் டாக்கீஸ்’ படக் கம்பெனியினர் ‘எங்கள் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நடிக்கிறார்; நீங்களும் எங்கள் படத்தில் நடிக்க  வேண்டும்’ என்று மதுரத்துக்குக் கடிதம் எழுதியதுடன் வண்டிச் செலவுக்காகவும் சேர்த்து 20 ரூபாய்க்கான மணி ஆர்டரையும் சேர்த்தே அனுப்பி  வைத்திருந்தார்கள்.

‘திருப்பூர் டாக்கீஸ்’ படக் கம்பெனியில் நிர்வாகியாகப் பணியாற்றிய ராமய்யர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் இணைந்து மதுரத்தை நேரில்  சந்தித்து, இந்தப் படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிப்பதற்காக திருச்சியில் உள்ள அவருடைய வீட்டுக்கு  வந்திருந்தார்கள்.  படப்பிடிப்பு உடனடியாக பூனா நகரில் தொடங்க இருப்பதால் அடுத்த நாளே படப்பிடிப்புக்குக் கிளம்ப வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.

அந்தப் படத்தில் நடிக்க விருப்பம் இருந்தாலும் தன் அம்மாவிடம் கலந்து பேசிவிட்டுச் சொல் வதாக மதுரம் வீட்டுக்குள் சென்றார். ஆனால், இவர்கள்  பேசியதை எல்லாம் உள்ளேயிருந்து அம்மாவும், பாட்டியும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். மதுரம் வீட்டுக்குள் சென்றதுமே, “அவ்வளவு  தொலைவுக்கு எல்லாம் மதுரத்தைத் தனியா அனுப்பாதே…. அந்த மலையாளத்துக்காரன் மந்திரம் வச்சிடுவான்….’ என்று அம்மாவை முந்திக்கொண்டு  பாட்டியின் குரல் அசரீரி போல் ஒலித்தது.

மலையாளத் துக்காரன் என்று பாட்டி குறிப்பிட்டது என்.எஸ். கிருஷ்ணனை. கட்டுக்குடுமியும் ஒடிந்து விழுவது போன்ற மெலிந்த அவரது தோற்றமும்  பாட்டியை அவ்வாறு நினைக்க வைத்து விட்டது.  தயாரிப்பாளர்  தரப்பிலிருந்து பேச வந்த ராமய்யர் உத்தரவாதம் கொடுக்க மதுரம் படப்பிடிப்புக்காக  உடனடியாக அவர்களுடன் பூனா புறப்பட்டார்.

இளகிய மனமும் இரக்க குணமும் கொண்ட இருவர் கூடுகை

மதராஸ்  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படக் கம்பெனியின் மானேஜர்கள் இருவரும் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருக்க, யாரையும்  எதிர்பார்த்து நிற்காமல் ரயில் கிளம்பி விட்டது. படப்பிடிப்புக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதற்கான பணம் அவர்கள் கையில்தான்  இருந்தது. சண்டையின் மும்முரத்தில் ரயில் புறப்பட்டதை அவர்கள் கவனிக்கவில்லை. மதராஸிலிருந்து பூனா போய்ச் சேருவதற்கு இரண்டு நாட்கள்  பிடிக்கும். யாரிடமும் கையில் பணம் கிடையாது. மதுரத்திடம் மட்டும் கொஞ்சம் பணம் இருந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன் உரிமையுடன் அதைக் கேட்டு வாங்கி, எல்லோருக்கும் டிபன், சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டார். மதுரத்தின் கைப்பணம்  அவ்வளவும் சாப்பாட்டுக்காகக் காலியானது. பூனா வந்து சேர்ந்த பிறகும், என்.எஸ்.கே விடவில்லை; மதுரம் தங்கி யிருந்த அறைக்கே வந்து மீண்டும்  பணம் கேட்டார். எல்லாவற்றையும் ரயிலிலேயே கொடுத்து விட்ட பிறகு மதுரத்திடம்  மட்டும் பணம் எங்கிருந்து வரும்? நிலைமையை எடுத்துச்  சொல்லி அவரும் கையை விரித்து விட்டார்.

“பணமில்லேன்னா என்னா? அதான் நகை போட்டிருக்கியே… அதைக் கழட்டிக் கொடு… எல்லாரும் பட்டினியா இருக்கும்போது நாமதானே உதவி  ஒத்தாசையா இருக்கணும்…” இது என்.எஸ்.கிருஷ்ணனின் இளகிய மனதையும் அடுத்தவருக்கு உதவும் பண்பையும் மதுரத்துக்கு வெளிச்சமிட்டுக்  காட்டியது. “இந்தாய்யா… வச்சுக்கோ, இனிமே என்னைத்  தொந்தரவு பண்ணாதே… இனிமே கொடுக்க எங்கிட்ட ஒண்ணுமில்ல…” என்று  சலித்துக்கொண்டே தான் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார் மதுரம்.

எரிந்து விழுந்தாலும் சிடுசிடுப்பாகப் பேசினாலும், இரக்க குணம் கொண்ட பெண் இவள் என்பதை கிருஷ்ணனும் உணர்ந்து கொண்டார். கிருஷ்ணன்-  –மதுரம் இருவருக்குள்ளும் இந்த நிகழ்ச்சி ஓர் ஆழ்ந்த புரிதலை ஏற் படுத்தியது. சங்கடத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தாராள மனம்  கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன், ஒருவித எரிச்சல், சலிப்பு மனோபாவம் இருந்தாலும் பிறரது துன்பம் துயரம் உணர்ந்து மறுக்காமல் உதவி செய்த மதுரம்  இருவரையும் இணைத்து வைப்பதற்கு இந்தச் சம்பவமே உதவியது எனலாம்.

ஒரே ஒரு பொய்யால் இணைந்தவர்கள்

எப்போதும் தன்னுடன் அந்தப் பெண் இருக்க வேண்டுமென்ற சிந்தனை என்.எஸ்.கே.யிடம் தோன்றியது. தன் நண்பர் ஒருவர் மூலமாக மதுரத்துக்குத்  தூதனுப்பினார். முதலில் அதை ஏற்காவிட்டாலும் ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர் சம்மதம் தெரிவித்தார் மதுரம். படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே,  பூனாவில் இயக்குநர் ராஜா சாண்டோ வீட்டில் அவர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

இதற்கு முன்னதாகவே என்.எஸ்.கிருஷ்ணனுக்குத் திருமணமாகி இருந்தாலும், மதுரத்திடம் அழுத்தமாகப் பொய் சொல்லியே அவரை மணந்து  கொண்டார். இந்தச் சங்கதி பின்னர் வெளிப்பட்ட போது மதுரம் ஆத்திரமடைந்தார். “ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணலாம்னு  சொல்லியிருக்காங்க… நா ஒரு பொய்தானே உன்கிட்டே சொன்னேன்” என்று தன் சமயோசிதமான பேச்சு சாதுர்யத்தால் சமாளித்து மதுரத்தை சிரிக்க  வைத்து விட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.

மதுரத்தின் பாட்டி சொன்னது போல் ஒருவிதத்தில் மந்திரம் வைத்து விட்டார் கிருஷ்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். வேறென்ன செய்வது?  இந்தக் காலம் இல்லையே அது… பலதார மணம் என்பது அப்போது நடைமுறையில் இருந்தது. அத்துடன் என்.எஸ்.கே.யின் நடவடிக்கைகள்,  நம்பிக்கையூட்டும் அவரது செயல்பாடுகள், மனிதாபிமானம், அடுத்தவர் துன்பம் பொறுக்காத குணம் எல்லாம் சேர்ந்து மதுரத்தை அமைதி கொள்ளச்  செய்தன. இணை பிரியாத ஜோடியாக இருவரும் அன்று முதல் கலையுலகிலும் தொடர்ந்தனர்.

‘வஸந்தசேனா’வில் தொடங்கிய இணை நடிப்பு

டி.ஏ.மதுரத்தின் இரண்டாவது படம்; என்.எஸ்.கிருஷ்ணனுடன் அவர் இணைந்து நடித்த முதல் படம்; தமிழில் வெளிவந்த நூறாவது படம், இவர்கள்  இருவரையும் வாழ்க்கையில் ஒருங்கிணைத்த படம் இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்தப் படம் ‘வஸந்தசேனா’. இருவருக்குமே இதில்  நகைச்சுவை வேடம்தான். அன்று தொடங்கிய அவர்களின் இணை நடிப்பு இடையில் ஒரு சில படங்கள் நீங்கலாக இறுதி வரை தொடர்ந்தது. தான்  நடித்த படங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வீரியத்துடன் விதைத்தவர் கலைவாணர். அவருடன் ஒத்துழைத்தவர் மதுரம்.

தனித்த முத்திரை பெற்ற நகைச்சுவை

1939-ல் வெளியான ‘பக்த புண்டரீகன்’ அல்லது ‘பாண்டுரங்க மகிமை’ என்ற படத்தின் கதாநாயகியாகவும் மதுரம் நடித்திருக்கிறார். ஆனால், படம்  வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் என்ன ரோல் கிடைக்கிறதோ அதுவே இறுதி வரை என்று முத்திரை குத்தும் படலமும் அப்போதே துவங்கி  விட்டது போலிருக்கிறது. கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று மதுரம் பிடிவாதம் பிடித்திருந்தால் இந்த அளவு புகழை அவர் தமிழ்த் திரையுலகில்  எட்டிப் பிடித்திருக்கவும் முடியாது.

1940ல் பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இவர்கள் இருவரின் நகைச்சுவைப் பகுதி கதையோடு ஒட்டாமல் தனிப் பகுதியாகவே சேர்க்கப்  பட்டிருக்கும். உயர் சாதி மனோபாவம், தீண்டாமை இவற்றை வெளிப்படுத்தும் விதமாக நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் வடிவம் கொண்டது.  ‘அசோக்குமார்’, ‘நல்லதம்பி’, ‘ராஜா ராணி’, ‘முதல்தேதி’, ‘யார் பையன்?’, ‘பணம்’ இப்படி பல படங்களில் இந்த இணையின் நகைச்சுவை சிரிக்கவும்  சிந்திக்கவும் வைத்தது. இருவருமே சொந்தக் குரலிலும் பாடி நடித்தனர்.

* ‘விஞ்ஞானத்த   வளர்க்கப் போறன்டி, மேனாட்டார விருந்துக்கழைச்சிக் காட்டப் போறன்டி’ பாடல் தீர்க்கதரிசனமாக எதிர்காலம் பற்றிய  சிந்தனையையும் அதைச் செயல்படுத்தும் விதத்தையும் முன்னோட்டமாகச் சொல்லிச் செல்லும்.
* ‘சிரிப்பு…. அதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு’ -‘ராஜாராணி’ படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் காட்சியில், பாடல் முடிந்த  பின்னும் சில நொடிகளுக்கு விடாமல் தொடரும் மதுரத்தின் சிரிப்பு பார்வையாளர்களாகிய நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
* ‘மனுசன மனுசன் ஏய்ச்சுப் பிழைப்பது அந்தக் காலம்… அது அந்தக் காலம்’, பொண்ணைத் தொட்டுப் பார்த்தா சுட்டுப்புடுவான் இந்தக் காலம்’ என  மதுரம் சொல்லும் பதில் அமர்க்களம்.
* ‘ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்’... ‘முதல் தேதி’ படப் பாடல் மாதச் சம்பளக் காரர்களின் பட்ஜெட்டுக்குள்  அடங்காத பற்றாக்குறை வாழ்க்கையைப் பிட்டுப் பிட்டு வைக்கும்.
* ‘நல்லதம்பி’ படத்தின் ‘கிந்தனார் காலட்சேபம்’, கல்வியின் அவசியம், குடியின் கேடு போன்றவற்றுக்கான தேர்ந்ததோர் பிரச்சார வடிவம்.
* ‘மணமகள்’ படத்தின் ‘அம்பதும் அறுபதும்’ நாடகம் அடுத்தவரைப் பற்றி அவதூறாகப் பேசாதே என்ற சிந்தனையைத் தூண்டக்கூடியது.

இப்படி இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்களைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அனைத்துமே காலத்தால் அழியாத பாடல்கள்….  பெரும்பான்மையான பாடல்கள் இவர்கள் இருவருக்காகவும் உடுமலை நாராயண கவியால் எழுதப்பட்டவை. ‘யார் பையன்?’ படத்தின் ஆரம்பக் காட்சியே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும்.

நாயகிகளுடன் நட்பு கொண்ட தோழி  

அவர் காலத்துக் கதாநாயகிகள் அனைவருடனும் தோழியாகப் பல படங்களில் இணைந்து நடித்தவர். ‘அம்பிகாபதி’ - சந்தானலட்சுமி, ‘அசோக்குமார்’ -  கண்ணாம்பா, ‘சகுந்தலை’ -எம்.எஸ்.சுப்புலட்சுமி, ‘சிவகவி’- ஜெயலட்சுமி, ‘திருநீலகண்டர்’ – ராஜாமணி, ‘சந்திரலேகா’ - டி.ஆர்.ராஜகுமாரி இப்படி 30களில்  நாயகியின் தோழியாய் நடிக்கத் துவங்கியவர் 50களின் அஞ்சலிதேவி, பானுமதி, பத்மினி வரை மாறாத அதே நிலை. 1937-ல் எம்.கே.தியாகராஜ பாக  வதர் நடித்த ‘அம்பிகாபதி’யில் மதுரம் கலைவாணருடன் இணைந்து நடிக்க வில்லை.

இருபதாண்டுகளுக்குப் பின் 1957ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த ‘அம்பிகாபதி’யில் இருவரும் இணையாக நடித்தனர். ஒரே கதையமைப்பைக்  கொண்டு மீண்டும் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில், இப்படி மீண்டும் நடித்தவர்கள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. “கண்ணே உன்னால்  நானடையும் கவலை கொஞ்சமா… உன்னைக் கண்டு சும்மா இருக்க எனக்குக் கல்லு நெஞ்சமா?” என்று ஒரு நகைச்சுவைப் பாடலையும்  பாடியிருக்கிறார்கள்.

இது கலைவாணரின் இறுதிப் படமும் கூட. திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் திரையுலகில் ஓடிக்கொண்டிருந்த இந்த ஜோடிக்கு ஒரு தடைக்கல்  ‘மஞ்சள் பத்திரிகையாளர்’ லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வடிவில் வந்தது. 1944ல் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கதை விவாதத்தில்  ஈடுபட்டிருந்தபோது, என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப் பட்டார். வழக்கு நீண்டுகொண்டே போனது. சதியில் ஈடுபட்டுக் கொலை செய்ததாகத்  தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேல் முறையீடு என்று வழக்கு இழுத்துக்கொண்டே போய், லண்டன் பிரி கவுன்சிலுக்கு அப்பீல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. 1946-ல் பிரிவி  கவுன்சில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கை மறு விசாரணை செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு லண்டன் பிரிவி  கவுன்சில் சிபாரிசு செய்தது. மீண்டும் விசாரணை நடைபெற்று 1947- ஏப்ரலில் கிருஷ்ணனும் பாகவதரும் விடுதலையானார்கள்.

சொந்தத் தயாரிப்பில் உருவான ‘மணமகள்’

என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலையான பின் இவர்கள் நடித்து வெளியான படம் ‘பைத்தியக்காரன்’. இந்தப் படத்தின் கதை கிருஷ்ணன் சிறையில்  இருக்கும் போதே நண்பர்களால் நாடகமாக நடிக்கப்பட்டது. பின் திரைப்படமாக எடுக்க ஆரம்பித்ததும் என்.எஸ்.கே. நிச்சயம் விடுதலையாகி விடுவார்  என்ற நம்பிக்கையுடன் அவருக்காக ஒரு வேடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் என்.எஸ்.கே. விடுதலையான பின்,  இப்போது மதுரத்துக்கும் சேர்த்து ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

1951ல் வெளியான ‘மணமகள்’ இவர்களின் சொந்தத் திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். வசனம் மு.கருணாநிதி.  மூலக் கதை: முன்ஷி பரமுப்பிள்ளை எழுதிய மலையாள நாடகம் ‘சுப்ரபா’. அதுவரை படங்களில் நடனம் மட்டுமே ஆடி வந்த திருவாங்கூர்  சகோதரிகள் என அறியப்பட்ட லலிதா - பத்மினி இருவரும் கதாநாயகிகளாக நடித்தனர். பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகையாகவே  அறியப்பட்ட மதுரத்துக்கு இப்படத்தில் கொஞ்சம் சீரியஸான வேடம்.

அதுவும் விதவையாக… ‘விபசாரத்தைச் சாகுபடி செய்யும் சண்டாளர்களின் சதி வேலைகளைக் கூட, ஒரே ஒரு பெண் சந்திக்கு இழுத்துச் சரித்து விட  முடியும் என்னும் பெண் வலிமையைக் கூறும் பெருமை நிறைந்த கதை – ‘மணமகள்’. இப்படி இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.  வில்லனை சந்திக்கு இழுத்து சரித்த பெண்ணாக நடித்தவர் மதுரம். அடுத்தும் ஒரு சொந்தப் படம் ‘பணம்’. இயக்கம் என்.எஸ்.கே. இதிலும்  பஞ்சமில்லாமல் நகைச்சுவைக் காட்சிகள்.

‘சக்கரவர்த்தித் திருமகள்’, ‘காவேரி’, ‘மதுரை வீரன்’ என்று இவர்களின் பயணம் தொடர்ந்தது. ஓடாத படங்களைக் கூட இவர்கள் நடித்த நகைச்சுவைப்  பகுதி ஓட வைத்தது. 1951ல் சோவியத் அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அகில இந்திய அளவில் பிரபல திரை நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு  கலைக்குழு ரஷ்ய நாட்டுக்குச் சென்று வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், இயக்குநர் கே.சுப்பிரமணியம், இந்தித் திரைப்பட நட்சத்திரங்களான  அசோக்குமார், துர்கா கோட்டே, ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ் உட்பட பலரும் சென்றிருந்தனர்.

சொந்த வாழ்க்கையிலும் சோடை போகாதவர்கள்
 
தமிழ்த் திரையின் முன்னணி நகைச்சுவை ஜோடி என்று அறியப்பட்ட காலகட்டத்தில், கிருஷ்ணன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் ‘மதுர  பவனம்' என்ற நவீன மாளிகை ஒன்றைக் கட்டினார். மதுரத்தின் சொந்த  ஊரான ஸ்ரீரங்கத்தில், அம்மா மண்டபம் அருகில் மதுரத் துக்கும் ஒரு வீடு  கட்டிக் கொடுத்து, அதற்கு ‘கிருஷ்ண பவனம்' என்று பெயரிட்டார். இருவரும் படிப்படியாகப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டே வந்தனர்.

1957ல் என்.எஸ்.கிருஷ்ணன் காலமானார். அவரது மறைவுக்குப் பின் சில ஆண்டுகள் வரை படங்களில் மதுரம் நடித்தார். அதன் பின் நடிப்பதைக்  குறைத்துக் கொண்டார். என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை வாழ்ந்து, பின் மறைந்து போனது. அதன்  பின் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் உடன் பிறந்த தங்கை வேம்புவை மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார், மதுரம். என்.எஸ். கிருஷ்ணன்-வேம்பு தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர்.

அவர்களைத் தான் பெற்ற குழந்தைகளாகவே நினைத்து வளர்த்தார் மதுரம். அவர்களின் சந்ததியினரில் சிலர் இன்று திரையுலகில் பணியாற்றி  வருகிறார்கள். ‘காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்து…’ என்ற பாரதியின் வரிகளுக்கு உயிரூட்டிய மதுரம்  1974-ல் மறைந்தார். ஆனால், மறைந்தும் மறையாத இணையாகத் தங்கள் படங்கள், பாடல்கள் வழியாக முற்போக்குக் கருத்துகளை மக்கள்  மனங்களில் எல்லாம் இப்போதும் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

டி.ஏ.மதுரம் நடித்த திரைப்படங்கள்

ரத்னாவளி, வசந்தசேனா, கிழட்டு மாப்பிள்ளை, பக்த துளசிதாஸ், அம்பிகாபதி (எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்தது), ராஜமோகன், தட்ச யக்ஞம்,  ஆனந்த ஆஸ்ரமம், சிரிக்காதே ( 5 கதைகள் கொண்ட படம் – இதில் போலி சாமியார் என்ற வேடத்தில் மதுரம் நடித்துள்ளார்.) திருநீலகண்டர்,  பாண்டுரங்கன், பிரஹலாதா, மாணிக்கவாசகர், மாயா மச்சீந்திரா, ரம்பையின் காதல், ஜோதி (ராமலிங்க ஸ்வாமிகள்), உத்தமபுத்திரன், காளமேகம், சதி  முரளி, சகுந்தலை, நவீன விக்கிரமாதித்தன், பரசுராமர், பூலோக ரம்பை, மணிமேகலை, அசோக்குமார், அலிபாபாவும் 40 திருடர்களும் (1941),  ஆர்யமாலா, இழந்த காதல், சந்திரஹரி, இரு நண்பர்கள், வேதவதி அல்லது சீதா ஜனனம், கண்ணகி, பிருத்விராஜன், மனோன்மணி, அருந்ததி, குபேர  குசேலா, சிவகவி, மங்கம்மா சபதம், ஜோதிமலர் (அ) தாசிப்பெண், பர்த்ரு ஹரி, பிரபாவதி, பூம்பாவை, மஹாமாயா, ராஜ ராஜேஸ்வரி, ஜகதலப்  பிரதாபன், ஹரிச்சந்திரா, ஹரிதாஸ், சாலிவாஹனன், சௌசௌ, பக்த காளத்தி, பரஞ்ஜோதி, பர்மாராணி, ஸ்ரீவள்ளி, அர்த்தநாரி, கன்னிகா,  பைத்தியக்காரன், சந்திரலேகா, தேவதாஸி, பிரம்மரிஷி விஸ்வாமித்ரா, இன்பவல்லி, கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், நல்லதம்பி, பவளக்கொடி,  மங்கையர்க்கரசி, பாரிஜாதம், லைலா மஜ்னு, மணமகள், வனசுந்தரி, அமரகவி, பணம், நல்ல காலம், காவேரி, டாக்டர் சாவித்திரி, நம் குழந்தை,  முதல்தேதி, ஆசை, கண்ணின் மணிகள், குடும்ப விளக்கு, நன்னம்பிக்கை, மதுரைவீரன், ரங்கோன் ராதா, ராஜாராணி, சக்கரவர்த்தித் திருமகள், புது  வாழ்வு, யார் பையன்?, அம்பிகாபதி (சிவாஜி கணேசன் நடித்தது), அபலை அஞ்சுகம், கண் திறந்தது, சொல்லு தம்பி சொல்லு, பாண்டித்தேவன், தோழன்,  பெற்றவள் கண்ட பெருவாழ்வு, ராஜா தேசிங்கு,

(ரசிப்போம்!)