சபாஷ் போட வைக்கும் ஆன்லைன் பிரியாணி



சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ருதி திலக் வீட்டிலேயே பிரியாணி தயார் செய்து ஆன்லைன் ஆர்டர்கள் எடுத்து வியாபாரம் செய்கிறார்.   ‘சபாஷ் பிரியாணி' என்கிற பெயரிலான இவரது கடையில் முதலில் மதிய பிரியாணி மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இப்போது மூன்று  வேளைகளுக்குமான உணவு வகைகள் தயாராகி விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன. அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசியபோது,  பிரியாணி மணத்திற்கு நடுவே நம்மிடம் அவரின் தொழில் சார்ந்த வளர்ச்சியினை பகிர்ந்துகொண்டார்.

"என் கணவர் பிரபு திலக்கிற்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். எப்பவும் பிரியாணி பிரியாணி என்றே இருப்பார். எந்த  இடத்திற்குச்  சென்றாலும் அங்கிருக்கும் பிரியாணிகளை வாங்கி, முதலில் என்னை ருசி பார்க்கச் சொல்லி, நான் நன்றாக இருக்கு எனச் சொன்னால் பிறகு அவர்  சாப்பிடுவார். சில நேரம் புகழ்பெற்ற திண்டுக்கல்  பிரியாணியை மதுரை வழியாக விமானத்தில் வருபவர்களிடம் வாங்கிவர வைத்து சாப்பிடும்  அளவிற்கு அவர் ஒரு பிரியாணிப் பிரியர். சென்னையில் தயாராகும் அத்தனை பிரியாணிகளையும் நாங்கள் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறோம்.

சில கடைகளில் மீதமான பிரியாணியைச் சூடேற்றித் தருவார்கள். பிரியாணிக்கு புகழ் பெற்ற உணவகங்கள் கூட தரமற்ற பிரியாணிகளையே சில  நேரங்களில் தந்தனர். என் கணவரின் இந்த பிரியாணி மோகமே எனது பிரியாணி கடை உருவாகக் காரணமாக அமைந்தது. எனக்கு சொந்த ஊர் சேலம்.  கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில் திருமணம் முடிவானது. என்னைப் பெண் பார்த்து உறுதியான இருபதே நாளில் எங்கள் திருமணம்  முடிந்துவிட்டது. என் கணவர் மருத்துவர். என் மகள் பிறந்ததும், வக்கீலுக்கு படிக்க பெங்களுருவில் உள்ள சட்டக் கல்லூரியில் என்னை என் கணவர்  சேர்த்தார்.

குடும்பம், குழந்தையைப் பிரிந்து 3 ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தேன். சட்டம் முடித்து, முறை யான பயிற்சியை ஆரம்பிக்கும்போது அடுத்து  என் மகன் பிறந்து விட்டான். குடும்பம், கணவர், குழந்தைகள் என்றானதால் என்னால் சட்டம் தொடர்பான பணிகளில் முழுமையாக ஈடுபட  முடியவில்லை. அத்தையும் ரொம்பவும் பிஸியான வேலையில் இருந்ததால் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையதாக மாறிப் போனது"   என்கிறார் ஸ்ருதி திலக். தமிழகத்தின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் ஒரே மருமகள்.

"எனக்குன்னு ஒரு தனித்துவமும், பொருளாதாரத் தன்னிறைவும் வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்தது. குடும்பத்தின் முழுப்  பொறுப்பும் நான் என்ற நிலையில், சமையல் எனக்கு பிடித்தமான ஒன்றாக மாறி இருந்தது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்தமானவற்றை  விதவிதமாக செய்து கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்தை பேணுவது பிடித்தமானது. எனது குடும்பத்தினரும் எந்த உணவகத்திற்கு சாப்பிடச்  சென்றாலும், இதை ஸ்ருதி செய்தால் நன்றாக இருந்திருக்கும் எனச் சொல்லும் அளவிற்கு என் சமையல் ருசியால் குடும்பத்தாரைக் கட்டி  வைத்திருந்தேன்.

நான் சாப்பாட்டில் எதைச் செய்தாலும் ரசித்தனர். ‘எல்லோருக்கும் இவ்வளவு வெரைட்டி செய்யிறியே...  நீ ஏன் ரெஸ்டாரன்ட் ஒன்றைத் துவங்கக்  கூடாது’ என என் கணவர் என்னைக் கேட்டார். என்னால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் துவக்கத்தில் நிறைய இருந்தது. என்  மாமியார் சின்னத் தொழிலாக இருந்தாலும் அதை திறம்பட நேர்மையாக செய் என்றார். அவர் ஒரு அம்மாவாக என்னை வழிநடத்தியதோ, யாரையும்   ஏமாற்றாமல், உண்மையாக நேர்மை யாக உழைத்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாகக் கிடைக் கும் என ஊக்கப் படுத்தினார்.

நமக்குத் தெரிந்த துறை அல்லது எது நமக்கு சுலபமாக வருகிறதோ அதையே ஏன் முயற்சிக்கக் கூடாது என யோசிக்கத் துவங்கினேன்.  பிரி யாணி  தயாரிக்கும் தொழிலையே செய்வதென முடிவு செய்தேன். மற்ற பிரியாணிகளில் இருந்து தனித்துவமாக, கூடுதலாக என்ன செய்யலாம் என  யோசித்தபோது என் குடும்பத்தினர் ஆரோக்கியத்தைப் போலவே என்னை நாடி வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமும் எத்தனை முக்கியம்  என்ற எண்ணம் முதலில் வந்தது. எங்கள் குடும்பத்தில் அத்தை  துவக்கத்தில் இருந்தே வீட்டில் மரச்செக்கு எண்ணெய்தான் பயன்படுத்துவார்.

கருப்பு உளுந்து, வரகு அரிசி, தினை அரிசி போட்டுத்தான் தோசை மாவு அரைப்போம். கல் உப்புதான் பயன்படுத்துவோம். பிரியாணி தயாரிப்பு என  முடிவானதும், உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ரீபைண்ட் ஆயில்,  டால்டா பயன்படுத்தாமல் மரச்செக்கு எண்ணெய், கல் உப்பு, வீட்டில் அரைத்த  மிளகாய் தூள் இவற்றை வைத்தே பிரியாணியை தயார் செய்யலாம் என முடிவு செய்தோம். வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு சரியில்லை என்றால்  நமக்கு எப்படி கோபம் வரும்! அதேபோல்தான், ஒருவர் நம்மை நம்பி வந்து காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறார் என்றால் அவர் கொடுக்கும்  விலைக்கு ஏற்ற தரத்தையும், ருசியையும் எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

அதை நம்பிக்கையோடு கொடுப்பதுதானே நம் வேலை?அதற்குத்தானே இந்தத் தொழிலில் கால் பதித்திருக்கிறோம்.  மற்றவர்களுக்காக உணவு  தயாரிக்கும் வேலையில் இறங்கினால் தரமானதாகவும், சுத்தமானதாகவும் செய்துதர வேண்டும். இல்லை என்றால் இந்த வேலையில் இறங்கக்   கூடாது என முடிவு செய்தேன்.  வீட்டைப் போலவே என்  நிறுவனத்தின் கிச்சனும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எப்போதும் இருக்கும். வீட்டை  சுத்தம் செய்வது போலவே உணவு தயாரிப்புக் கூடத்தை ஊழியர்களிடத்தில் எப்போதும் சுத்தம் செய்யச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

சுத்தம்தானே சோறு போடும்? ஒரு நாளைக்கு 4 முறை துடைத்து சுத்தம் செய்கிறோம். பிரியாணிக்காக பயன்படுத்தும் சிக்கன், ஆன்டிபயோடிக் ஃப்ரீ  சிக்கன். அதாவது மூலிகையை மட்டுமே உணவாக எடுத்து வளர்க்கிற கோழிகளையே பயன்படுத்துகிறோம். இந்த வகை கோழிகளுக்கு ஹார்மோன்  வளர்ச்சி செயற்கையாக இருக்காது. பிரியாணிக்காக வெள்ளாடுகளைத்தான் பயன்படுத்துகிறோம். காய்கறிகளையும் பெரும்பாலும் ஆர்கானிக்  காய்களாகப் பயன்படுத்துகிறோம்.

பிரியாணி தவிர்த்து செட்டிநாடு உணவு வகைகளான மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, பூண்டு குழம்பு, இறால் தொக்கு,  இதெல்லாம் செய்யத் துவங்கினேன். செட்டி நாடு உணவு தனி, சைனீஸ் உணவு தனி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எல்லாம்  இங்கு உண்டு. இரவு உணவில் சப்பாத்தி, தோசை, இட்லி, பரோட்டா, பிரியாணி அனைத்தும் இடம் பெறும். வெஜ் மீல்ஸ், வெஜ் பிரியாணி, இட்லி,  சாம்பார், சட்னி, டிபன் அயிட்டம் போன்ற வெஜிடேரியன் உணவுகளும் உண்டு.

சைனீஸ் உணவில் வெஜ் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ்களும் கிடைக்கும். வார இறுதியில் லிவர் ஃப்ரை, மூளை  ஃப்ரை, கோலா உருண்டை போன்றவைகளும் கிடைக்கும். உணவில் ஆரோக்கியத்தை சேர்க்க முதலில் மண் பானையில் உணவுகளை தயார்  செய்தோம். இப்போது உணவுக்கான ஆர்டர்கள் அதிகமாக வருவதால் அவற்றைச் செய்யும் அளவிற்கு மிகப் பெரிய மண் பாத்திரங்கள்  கிடைப்பதில்லை. உணவு தயாரான பிறகு மண் பாத்திரங்களில் ஸ்டோர் பண்ணுகிறோம். தண்டவாளக் கல்லில் இரும்புச் சட்டி வருகிறது.

அதில் நான் வெஜ்  அயிட்டங்களை ஃப்ரை பண்ணும்போது இரும்புச் சத்து அதிகமாக உணவில் கிடைக்கிறது. எனவே அதை ஆர்டர் செய்து வாங்கி  அதில்தான் ஃப்ரை அயிட்டங்களை செய்கிறோம். அஜினோமோட்டோவை உணவில் சேர்ப்பதே கிடையாது. கல் உப்பை மட்டுமே உணவில்  சேர்க்கிறோம். சைனீஸ் உணவுகளை தயார் செய்யும்போதும் கல் உப்பை பொடி செய்தே இணைக்கிறோம். உணவு தயாரிக்கும் கூடத்தை இயற்கை  சார்ந்தே அமைத்துள்ளேன். உணவைத் தயாரிக்க கேஸ் தவிர்த்து, மர விறகுகளையே அதிகம் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு மரத்தின் விறகும் உணவிற்கு ஒரு தனிச் சுவையினைத் தரும். எங்கள் உணவை சுவைத்தவர்கள் வீட்டில் சாப்பிடும் உணர்வு இருப்பதாகத்  தெரிவிப்பர். பிளாஸ்டிக்  ஒரு  தீய பொருள். முடிந்தவரை அதன் பயன்பாட்டைக் குறைத் திருக்கிறோம் மண்ணில் மக்கக்கூடிய ஸ்டோரேஜ்களை  தேடித் தேடி வாங்கி அதில் உணவுகளை பேக் செய்து தரும் முறையை கொண்டு வந்திருக்கிறோம். பெரும்பாலும் உணவுகளை வாழை இலைகளைப்  பயன்படுத்தியும் கட்டித் தருகிறோம். வீட்டில் இருந்து பாத்திரம் எடுத்து வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக  அவர்களுக்கு விலைக் குறைப்பும்  செய்து தருகிறோம்.

ஸ்விக்கி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா என அனைத்து டெலிவரி பாயிண்டுகளுடனும் எங்களுக்கு டை அப் உண்டு. அவர்கள் நிறுவன ஆப்  வழியாக ஆர்டர் பெறப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது. தவிர ஆன் லைன் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் ஆர்டர் பெறப்பட்டு நாங்களும்  நேரில் டோர் டெலிவரி செய்கிறோம். இந்தப் பகுதிகளில் இரவு நேரத்தில் வருபவர்கள்  சிலர் உணவை இங்கேயே வாங்கி நின்ற நிலையில்  சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். பார்ட்டி ஆர்டர்களையும் எடுத்துக் கொள்வோம். டோர் டெலிவரிக்கு டாட்டா ஏஸ் வாகனம் உள்ளது.

என்னுடைய இந்த ஆர்வத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவு தருகிறார்கள். என்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் 8 பேர். நாங்கள் ஒரு  குடும்பமாகப் பழகுகிறோம். அவர்கள் இங்கேயே தங்கிக் கொள்ள அவர்களுக்கு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்துள்ளேன். வார இறுதியில் ஆர்டர் அதிகம்  இருந்தால் அன்று டெலிவரி பாய்ஸ்களை அதிகமாக நியமித்துக்கொள்வேன். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை இதன்மூலம் வருமானம் வருகிறது"  என முடித்தார். ஸ்ருதியின் மாமியாரான எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ். இடம் மருமகள் குறித்து கேட்டபோது, "பெண் கள் துணிந்து தொழில்  முனைவோராக வருவது ஒரு நல்ல முயற்சி.

இது அவர்களின் சமூகம் சார்ந்த ஒரு செயல்பாட்டிற்கான துவக்கம். அதற்கு நிறைய தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். பெண்கள் தொழில்  தொடங்குவதை நான் பாராட்டி வரவேற்கிறேன். நிறைய பெண்கள் துணிந்து தொழில் தொடங்க முன் வரவேண்டும். எந்த ஒரு தொழிலை எடுத்து  பெண்கள் செய்தாலும் எனக்குப் பிடிக்கும். ஒரு சில பெண்களை நானே அழைத்து பாராட்டி இருக்கிறேன். பெண்கள் சொந்தக்காலில் துணிந்து நிற்க  வேண்டும்.  மாதச் சம்பளத்தை பெற்று சவுகரியமாக வாழும் மனநிலையில் இருந்து பெண்கள் வெளிவர வேண்டும். எப்போதும் பொருளாதாரத்  தன்னிறைவோடு இருக்க வேண்டும்" என்றார்.

மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்