ஆரோக்கிய வாழ்வுக்கு…அன்றாட பழக்கவழக்கங்கள்!



நின்று நிதானித்துப் பேசக்கூட நேர மில்லாமல் இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில், நம் வாழ்வியல் முறையை மறந்துபோனதாலேயே இன்று அதிகப்படியான நோய்களுக்கும் உள்ளாகி அவதிப் படுகிறோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என நம் முன்னோர்கள்  சொல்லியுள்ளனர். அந்தச் செல்வத்தைச் சம்பாதிக்க நாம் அடிப்படையாக என்னென்ன பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டுமென கூறுகிறார்  புதுடெல்லி ராஷ்ட்ரபதி பவனில் ஆயு அமைப்பின் சித்த மருத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர் எல்.ஜனனி.

“சித்த மருத்துவத்தில் ஒழுக்கத்தை நித்திய ஒழுக்கம், கால ஒழுக்கம் எனக் கூறுவர். நாம் உடல் நலனும் மனநலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இந்த  ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் சால சிறந்தது. நித்திய ஒழுக்கம் என்பது முதல் நாள் காலையிலிருந்து மறுநாள் காலை வரையில் நாள் தோறும் நாம்  செய்யும் அன்றாட செயல்கள். இன்றைய நாள் ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக் கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில்  காலையில் 4 மணி முதல் 5 மணிக்குள் எழ வேண்டும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் ஆவதில்லை. அதிகாலையில் எழுந்து கொள்ள  என்னதான் செய்யலாம்? சின்னச் சின்ன வழிமுறைகள் இங்கே கூறப்பட்டுள்ளது. கடைப்பிடித்து பயன்பெறலாம்.

1. இரவு உறங்கப்போகும்போது உங்கள் ஆழ்மனத்துக்குள்ளேயே இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று பல முறை சொல்லிக்கொள்ளுங்கள்.  நிச்சயமாக நமது பயாலஜிக்கல் கிளாக் எனும் உடலியல் கடிகாரம் நம்மை எழுப்பிவிடும்.
2. குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழும்புவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் பத்து மணி வரை உறங்கினால், வேலை நாட்களிலும்  அதே நிலைமைதான் உண்டாகும்.
3. சூரிய வெளிச்சம் படும் இடத்தில் உறங்குங்கள். சூரிய ஒளியே உங்களை எழுப்பிவிடும்.

காலைக்கடன்கள் தினமும் இரு வேளை மலமும், நான்கு முறை சிறுநீரையும் கழித்தல் நலம். மலம் தடைப்பட்டால் இடது பக்கம் சற்றே படுத்து  பிறகு மலத்தை கழிக்க வேண்டும். சிறுநீர் தடைப்பட்டால், வலது பக்கம்  சற்றே  படுத்து பிறகு கழிக்க வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தமது  அன்றாட உணவில் கீரைவகைகள், காய்கறிகள், வெண்ணெய், நெய் முதலியவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இரவு தூங்கும் முன்  உலர்திராட்சை, பேயன் பழம், சூடான பால் அல்லது நீர் அருந்தினால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

4 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கின்றது. விளக்கெண்ணெய் ஒரு  சிறந்த பேதி மருந்து. இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவும், பெரியவர்களுக்கு 10-15 மில்லி அளவும் எடுத்துக்கொண்டால்  வயிறு சுத்தமாகும். பல் துலக்கல் பற்பசைகள் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் பல் மருத்துவர்களிடம் கூட்டம்  அலை மோதுகிறது. உண்மையில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு செலவு மிக குறைவுதான்.

அதற்கு எடுத்துக்காட்டு வேப்பங்குச்சியில் பல் துலக்குதல்.  மிருதுவான ஈறுகளையும், வாய்ப்புண்ணையும் உடையவர்கள் வேப்பக் கொழுந்தால்  அல்லது திரிபலா சூரணத்தால் பல் தேய்க்க வேண்டும். அஜீரணம், நாவறட்சி, கண்நோய், வாந்தி உள்ளவர்கள் லவங்கம், சீரகம் ஆகியவற்றை சிறிது  எடுத்து வறுத்து இடித்து சிறிது உப்பு சேர்த்து பொடித்து பல் தேய்க்க உபயோகிக்கலாம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கின்றது. தினமும்  செல்போனில் வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பிசியாக விரல்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து கொண்டிருக்கும் காலத்தில் ஏது நேரம்   உடற்பயிற்சிக்கு.

சிலர் இல்லை இல்லை நான் ஜிம்முக்கு தினமும் செல்கிறேன் என்று சொல்வது கேட்கிறது, உடற்பயிற்சி என்பது உடலுக்கு வன்மை அளிப்பது  மட்டுமில்லாமல் மனதுக்கு வன்மையை உண்டாக்கும். தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன் குளிக்க வேண்டும். மஞ்சள் தேய்த்து குளிப்பதினால்  வியர்வை நாற்றம், கப நோய்கள் நீங்கும். மேலும் உடலுக்கு எந்த நோயும் வராது. நல்லெண்ணெயை பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் தேய்க்கும்போது எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் முன்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு  துளிகளும், பின் கண்களிரண்டிலும்  இரண்டு துளிகளும் விட்டு, பின் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக தேய்க்கவும்.  நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையிலே (6.30 மணிக்குள்)  குளித்து முடித்து விட வேண்டும். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது  சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய் குளியலன்று செய்யக்கூடாதவை

* பகல் தூக்கம் கூடாது
* வெயிலில்  அலைதல் கூடாது
* உடலுறவு  கூடாது
* அதிக உழைப்பு கூடாது
* குளிர்ந்த உணவுகள், பானங்கள்  எடுத்துக் கொள்ளக்கூடாது
* அசைவ உணவுகளை தவிர்த்தல் நலம்.
  எண்ணெய் குளியலின் பயன்
* சரும பிரச்னைகளை வராமல் பாதுகாக்கும்
* நல்ல பொலிவு உண்டாகும்
* உறக்கம், மன அமைதி உண்டாகும்
* முடி நன்றாக வளரும்
* மன அழுத்தத்தை குறைக்கும்
* சருமத்தில் எண்ணெய் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும்.
* உடல் எடை குறையும்.

“உணவே மருந்து மருந்தே உணவு” என்பது நம் சித்த மருத்துவத்தின் சிறப்பு. சிற்சில பொருட்கள் ஒன்றோடொன்று சேரும்போது, குணம் மாறுபட்டு  விஷத் தன்மையை உண்டாக்கும், தயிருடன் மாமிசத்தை சேர்த்து உண்ணக்கூடாது, கரும்பு தின்றவுடன் நீரை அருந்தக் கூடாது. பாலும் மீனும்  சேர்ந்தால் நஞ்சாகும். பாலையும் கீரையையும் சேர்த்து உண்டாலும் அல்லது கீரை தின்றவுடன் பாலருந்தினாலும் விஷமாகும்.

ஏலம், மஞ்சள், சீரகம், காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் வராமல் தடுக்கலாம். உணவு  உண்ணும் போது  கொஞ்சம் நீரருந்தி, நெஞ்சை நனைத்தபிறகு  இனிப்பு பொருளையும், மத்தியில் புளிப்பு, உப்பு, கார உணவுகளையும், முடிவில் தயிர்  சேர்த்துக் கொண்டு உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக நீராகாரம்   அருந்தினால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு காலை உணவுதான் மிகவும் முக்கியம்.

“காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...”

சித்தர்கள் இதுபோன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும். மதியம் உணவிற்கு  முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும். இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு  டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

வாழை இலையில் உண்ணுவதால் சருமத்தில் பளபளப்பு உண்டாகும். அஜீரணம், பசியின்மை, கோழை நீங்கும் என சித்த மருத்துவத்தில்  கூறப்பட்டிக்கிறது.இன்று பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்பூன் என பிளாஸ்டிக் பயன்பாடு பெருகிக் கொண்டே இருக்கிறது. இதனால் புற்றுநோய் போன்ற  நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஒருவர் ஆரோக்கியமாக வாழ உணவு, ஒழுக்கம், தூக்கம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். “தூக்கம்  தானே அது ஒன்றும் பிரச்னை இல்லை. நான் நன்றாக தூங்கி தினமும் 8 மணிக்கு தான் எழுந்திருப்பேன்” என்பது அல்ல, அதற்கும் சில  விதிமுறைகள் உள்ளன.

கிழக்கு திசையில் தலையை வைத்து படுப்பதினால் ஆரோக்கியமும், மேற்கு திசையில் தலையை வைத்து படுப்பதினால் அற்ப தூக்கமும், வடக்கு  திசையில் தலையை வைத்து படுப்பதினால் நோயும் உண்டாகும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இரவில் சாதாரணமாய் ஒன்பது மணிக்குள்  உண்டு, பத்து மணிக்குள் உறங்குவதுதான் முறை. உண்ட உடனே உறங்காமல், உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உட்கார்ந்திருந்து, பின்பு சிறிது தூரம்  நடந்து, பின் உறங்க வேண்டும். படுக்கைக்கு போகும் முன் உடல் களைக்கும்படியும் மனசாந்திக்கு பங்கமுறும் படியும் ஒருவித காரியமும் செய்யக்  கூடாது. பகல் நித்திரை அறவே கூடாது.

அதிக வளர்ச்சி ஏற்படக்கூடிய பருவத் தில் அதிக நேரமும், வளர்ச்சியில்லாத பருவத்தில் குறைந்த நேரமும் தூங்க வேண்டும். அதிகமாக  வளரக்கூடியது குழந்தை பருவமாகையால், அக்காலத்தில் 12 மணி நேரம் நித்திரை வேண்டும். 5 முதல் 15 வயது வரையில் எட்டு மணி முதல் பத்து  மணி நேரம் வரையும், 16 முதல் 30 வயது வரையில்,  ஏழு மணி நேரமும், 31 முதல் 50 வயது வரை ஆறு மணி நேரமும், அதற்கு மேற்பட்ட  வயதுடையவர் எட்டுமணி நேரமும் உறங்க வேண்டும். சித்த மருத்துவத்தில் கூறப்பெற்றுள்ள இந்த நாள்-ஒழுக்கத்தை நாம் கடைப் பிடித்தால் இன்று  பெரும்பாலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நோய்களான புற்றுநோய், நீரிழிவு, ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் வராமல் நலமாக  வாழலாம்’’ என்றார்.

 தோ.திருத்துவராஜ்