சாக்லெட்…ஐஸ்க்ரீம்…கேக் வீட்டிலேயே செய்யலாம்!



கடைகளுக்குச் சென்றால் கலர் கலராய் சாக்லெட்... விதவிதமாய் ஐஸ்க்ரீம்...மனதைக் கொள்ளை கொள்ளும் கேக் மற்றும் பேக்கரி அயிட்டங்கள்.  இவற்றை ஒட்டுமொத்தமாய் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறாதவர்கள் இருக்க முடியுமா? பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு?  சொல்லவே வேண்டாம். அடம் பிடித்து அந்த இடத்தைவிட்டு நகர மறுப்பார்கள்.

பற்றாக்குறைக்கு நம் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்து, குழந்தைகளின் மனதை விளம்பர வடிவில் கொள்ளை கொள்கிறது தொலைக் காட்சிப்  பெட்டி. நம்வீட்டு வாண்டுகளையும் சமாளிக்க வேண்டும். அதே நேரம் அவர்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே  இவற்றைத் தயாரித்தால் செலவும் மிச்சம். ஆரோக்கியம் குறித்து கவலைப்படவும் தேவையில்லை. இவற்றை மட்டுமே விற்பனை செய்யும்  கடைகளுக்குச் சென்றால் நமக்குத் தெரியும். அங்கே சாக்லெட்டில் ப்ளெயின், டார்க், ஒயிட், மில்க் என வகைப்படுத்தி வைத்திருப்பார்கள்.

இவை தவிர்த்து அல்மோன்ட்ஸ், பீ நட்ஸ்பட்டர், சாக்கோ சிப்ஸ், வெரைட்டி ஆஃப் பட்ஜ், ரெய்சின்ஸ், கேரமல், டர்ஃபில் என விதவிதமான  சாக்லெட்டுகள். ஐஸ்க்ரீம் வகைகளைப் பார்த்தால் பெல்ஜியம், கேஃப்சினோ, காட்டன் கேன்டி, ராஸ்பரி கிரேஸியா, சாய்லேட்டி, கேரமல், டிராப்பிக்கல்  காக்டெய்ல், ரோஸ் குல்கந்த், பான் மசாலா, லிட்ச்சி, இட்டாலியன், ப்ளாக் கரண்ட் என விதவிதமாய் கண்ணைக் கவரும். மனசும் ஏங்கும்.

கேக் வகைகளை எடுத்துக் கொண்டால் ப்ளாக் பாரஸ்ட், வொயிட் பாரஸ்ட், யும்மி பைனாப்பிள், ஜீப்ரா கேக், மக் கேக், ப்ரெவ்னி, ரெயின்போ, ஃபட்ஜ்   ப்ரெவ்னி, கப் கேக், ஓரியா, ஐஸ்ஸிங் கேக், ஸ்பான்ஞ் கேக் என விதவிதமாய் நமது வாய்க்குள் வர மறுக்கும் வார்த்தைகள் எல்லாம் அங்கே இடம்  பெற்றிருக்கும். கடைகளில் பார்த்ததும் காசு கொடுத்து வாங்கும் இந்த உணவு பொருட்களில் எந்த அளவிற்கு குடும்பத்தின் ஆரோக்கியமும் தரமும்  இருக்கிறது என்று என்றாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?

பெரும்பாலும் அவற்றில் சேர்க்கப்படும வண்ணம், மணம் மற்றும் அதனுடைய மிருதுத்தன்மைக்காக ஆரோக்கியத்தை பாதிக்கும் வேதியல்  பொருட்களே அதிகம் இடம் பெற்றிருக்கும். விலை கொடுத்து வாங்கி உடல் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டுமா? இவற்றை நாமே  வீட்டில் தயாரித்தால் எத்தனை மகிழ்ச்சி? “அது ஒன்றும் அந்த அளவிற்கு மிகப் பெரிய கஷ்டம் இல்லை. தயாரிப்பிற்கான பேஸ் எப்போதும்  ஒன்றுதான். அதில் இடம் பெற்றிருக்கும் கலர் மற்றும் ஃப்ளேவர் மட்டுமே  வித்தியாசப்படும்.

தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள், விதவிதமான மோல்ட், அழகுபடுத்துவதற்கும், ரேப்பர் பண்ணுவதற்குமான பொருட்கள் என அத்தனையும்  சந்தைகளில் கிடைக்கின்றன. முழு ஆர்வத்தோடு முயற்சித்தால் ஒரே வாரத்தில் இவற்றைக் கற்றுக்கொண்டு, நம் வீட்டு வாண்டுகளை மட்டுமல்ல  கொஞ்சம் கூடுதலாக முயற்சியையும் உழைப்பையும் செலுத்தினால், நம் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினரின் சின்னச் சின்ன  நிகழ்ச்சிகள், பார்ட்டி ஆர்டர்கள், கடைகளுக்கு சப்ளை என வீட்டில் இருந்தே ஒரு மினி பிஸினஸ் ஒன்றை வருமானத்திற்காக உருவாக்கிக் கொள்ள  முடியும்.

நமது குடும்பத்தினர் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும்” என்கிறார் சென்னை வாசியான சங்கீதா. “கல்லூரி படிப்பை முடித்து திருமணம், குழந்தை  என்றான பிறகு என்னால் வேலைக்குச் செல்வது என்பது முடியாத காரியமாக இருந்தது. ஆனால் எனக்கு ஹோம் மேட் சாக்லெட், ஐஸ் க்ரீம், கேக்  தயாரிப்புகளை கற்றுக்கொள்ள ஆர்வம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. முயற்சித்துத்தான் பார்ப்போமே என அவற்றைத் தேடி அலைந்து முறை  யாகக் கற்றுக் கொண்டேன். இதோ இப்போது நானே வீட்டில் விதவிதமாக எல்லாவற்றையும் செய்யத் துவங்கி விட்டேன்.

நண்பர்கள் வீட்டு சின்னச் சின்ன பார்ட்டி ஆர்டர்களை எல்லாம் பிடிக்கத் துவங்கி இருக்கிறேன். இன்னும் முயற்சி செய்தால் கடைகளிலும் ஆர்டர்  எடுத்து சப்ளை செய்ய முடியும்” என்கிறார். ‘மெஹக்’ என்கிற பெயரில் ஹோம் மேட் ப்ராடக்டுகளை தயாரிக்கும் சங்கீதா, “வீட்டில் இருந்தே  சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு. விரும்பி என்னை அணுகுவோருக்கு செய்முறையை கற்றுத் தருகிறேன்” என்கிறார்.

மகேஸ்வரி