‘பெண்களுக்கு மன உறுதி அதிகம்!’



எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்

எண்பதுகளின்  பெண்   எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வித்யா சுப்ரமணியம். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும்  எழுதியவர். அந்தக்கால பெண்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். சென்னையில் வசிக்கிறார். உஷா என்பது இயற்பெயர். கணவர்  சுப்ரமணியம். ஆனால் ஏற்கனவே உஷா சுப்ரமணியம் என்ற எழுத்தாளர் இருந்ததால் இவர் வித்யா சுப்ரமணியம் என்ற பெயரில் எழுதுகிறார். இவரது  மகள் பெயர் வித்யா. அவர் நம்மோடு தன் எழுத்துலகம் பற்றிப் பகிர்ந்து கொண்டவை.

‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். சின்ன வயதில் இருந்தே வாசிப்பு இருந்தது. அம்புலிமாமாவில் துவங்கிய வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக  அதிகரித்தது. 13 வயதில் உமாச்சந்திரன் எழுதிய ‘முழுநிலா’ என்ற நாவல் வாசித்தேன். அதன் பின் 15 வயதிலேயே தி.ஜானகிராமன் அவர்களின்  ‘அம்மா வந்தாள்’ என்ற புத்தகத்தை வாசித்தேன். (முதலில் அந்த வயதில் எனக்கு அந்த புத்தகம்  புரியவில்லை.  குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மறு  வாசிப்பு செய்த பிறகு புரிந்தது.)  என் உறவினர் ஒருவர் நிறைய புத்தகங்களை சேகரித்து வைத்திருப்பார்.

இதழ்களில் வரும் தொடர்கதைகளை சேகரித்து பைண்டிங் செய்து வைத்திருப்பார். ‘பொன்னியின் செல்வன்’, ‘கடல்புறா’, ‘யவன ராணி’ என பல  தொடர்களையும் பைண்டிங் செய்து வைத்திருந்தார் ‘பொன்னியின் செல்வன்', 5 வால்யூம்களும் இருந்தன. ஓவியர் மணியத் தின் ஓவியத்தோடு  இருந்ததால் எனக்கு படிக்க ஆர்வமாக இருக்கும். இப்படியாக எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் நிறைய படித்தேன்.  நிறைய தி.ஜா.ராவின் புத்தகங்கள் தான் வாசித்தேன். அவர் தான் விருப்பமான எழுத்தாளர்.

அவரது எழுத்தின் பாதிப்பு தான் எழுதும் எண்ணத்தை ஊக்குவித்தது. சாண்டில்யன், சேவற்கொடியோன், சாவி, நா. பார்த்தசாரதி, லா.ச.ரா என அந்தக்  காலத்து எழுத்தாளர்கள் அனைவருடைய எழுத்தையும் வாசித்தேன். அப்பா சங்கர நாராயணன். முதலில் உட்லாண்ஸ் ஓட்டலில் சீப் செஃப்பாக  இருந்தார். நியூயார்க்கில் அதன் கிளை திறக்கப்பட்ட போது அங்கே அவரை அழைத்துப் போய் இருந்தார்கள். 2 வரு டங்கள் அங்கே பணிபுரிந்தார்.  பின்னர் சென்னை வந்து சீர் பட்சணங்கள் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார். அம்மா சரஸ்வதி. ஹோம் மேக்கர்.

எனக்கு இரு சகோதரிகள், ஒரு சகோதரன். அம்மாவும் சகோதரிகளும் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டதால் என்னால் நிறைய வாசிக்க முடிந்தது.  அப்பா சில நேரங்களில் நான் வேலை செய்வதில்லை என்று திட்டுவார். ஆனால் அதே அப்பா 17 வயதில் ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் நான் எழுதி  எங்கேயும் அனுப்பாமல் வைத்திருந்த என் முதல் நாவலை எனக்கு 19 வயது இருக்கும் போது ஆனந்த விகடனில் நடைபெற்ற நாவல் போட்டிக்காக   கொண்டு போய் பத்திரிகை  அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்தார். அப்போது பரிசு கிடைக்கவில்லை. பி.எஸ்ஸி தாவரவியல் படித்தேன்.

கதைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் பிரசுரத்திற்கு எல்லாம் அனுப்பவில்லை. 1981ம் வருடம் மார்ச் மாதம் எனது 23 வயதில் எனக்கு  திருமணம் நடைபெற்றது. கணவர் என் எழுத்துப் பணிக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார். அவருடைய ஆதரவு இல்லையென்றால் என்னால்  இந்த அளவுக்கு எழுதி இருக்க முடியாது. ஒரு சமயம் ‘மங்கை’ இதழில் நடைபெற்ற நாவல் போட்டிக்காக என் கணவர் நான் எழுதிய ‘மூன்று முடிச்சு’  என்ற அந்த நாவலை அனுப்பினார். அந்த பத்திரிகையில் அதற்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் நாவல் பிரசுரமாகிய பிறகு எனது நாவலைப்  பிரசுரித்தார்கள்.

இதற்கிடையில் எனது சிறுகதைகள் ‘சாவி’, ‘குங்குமம்’, ‘இதயம் பேசுகிறது’ போன்ற இதழ்களில் வெளிவந்தன. அப்பா ‘அமுதசுரபி’, ‘கலைமகள்’ போன்ற  பத்திரிகையில் தொடர்கள் எழுதணும் என்று சொல்வார். அப்பா, அம்மா இருவருக்கும் நான் எழுதுவது குறித்து பெரிய கொண்டாட்டம் எல்லாம்  இருக்காது. ஆனால் உள்ளுக்குள் சந்தோஷம் இருக்கும். என்னிடம் சொல்ல மாட்டார்கள். ‘என் பொண்ணு கூட எழுதுவா’ என மற்றவர்களிடம்  சொல்லும் போது அவர்கள் கண்ணில் மின்னல் போல் ஒரு   சந்தோஷம் வெளிப்படும். மென்மையாக சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். இரண்டு,  மூன்று சிறுகதைகள் வெளிவரும் வரையில்தான் அப்பா உயிரோடு இருந்தார்.

நான் நிறைய எழுத ஆரம்பித்தபோது அப்பா இல்லை என்பது ஒரு வருத்தம். ‘மங்கையர் மலரில்’ முதல் கோணல் என்ற எனது முதல் நெடுங்கதை  வெளியானது. ‘மங்கையர் மலரில்’ துன்பம் நேர்கையில் என்ற எனது முதல் தொடர் வெளியானது. அதன் பின் ‘மங்கையர் மலரில்’ மூன்று தொடர்கள்  வெளிவந்தன. அதன் பிறகு ‘கண்மணி’, ‘தேவி’ என நிறைய பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். கல்யாணமாகி கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.  பின்னர் தனிக்குடுத்தனம் வந்தோம்.  நாங்கள் நடுத்தரவர்க்கக் குடும்பம்தான்.

பொருளாதார ரீதியாக சிரமம் ஏற்பட்டபோது பொருளாதாரப் பிரச்னையை சமாளிக்க வேலைக்குப் போக ஆரம்பித்தேன். வேலைக்குப் போய்க்கொண்டே  எழுதுவது சிரமமாக இருந்தது. ஆர்வத்தின் காரணமாக தான் எழுதிக்கொண்டிருந்தேன். அவரும் எழுதச்சொல்லி என்னை வற்புறுத்துவார். தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என்னை டிஎன்பிஎஸ்.சி தேர்வு எழுதச் சொல்லி வற்புறுத்தினார். எனக்கு  விருப்பமில்லாமல்  இருந்தது.  ஆனால் அவர் சொன்னதால் எழுதினேன்.  முதல் முயற்சியிலே வெற்றிப்பெற்றேன். அப்பாதான் அந்த செய்தியைப் பார்த்துச் சொன்னார்.

அப்பாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ரெவின்யூ பிரிவில் எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ஒன்றரை  வருடம் கடலூரில் வேலை செய்தேன். குடும்பத்தை பிரிந்திருக்க நேர்ந்தது. கணவருக்கு சென்ட்ரல் கவர்மென்ட்டில் வேலை. சிபிசிஐடியில்  அதிகாரியாக இருந்தார். எனக்கு இரண்டு மகள்கள். அவருக்கும் அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகும். இரண்டு பேருக்குமே டிரான்ஸ்பரானால் பிள்ளைகளை  சரியாகப் பார்க்க முடியாது, பிள்ளைகள் படிப்பு கெடும் என்பதால் புெராமோஷனோடு வரும் டிரான்ஸ்பர்களை நான் தவிர்க்க வேண்டி இருந்தது.

அதனால் ரிடையர்டு ஆகும் போது சூப்ரிடென்ட்டாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். வேலைக்குப் போகும் போது வேலைக்குப் போய்விட்டு வந்து  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் 9 மணி முதல் 12.30 மணி வரை கதைகள் எழுதுவேன். மறுபடி அதிகாலையில் எழுந்து வீட்டு  வேலைகளை முடித்துவிட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மறுபடி ஒரு மணிநேரம் எழுதுவேன். பிறகு அலுவலகம் கிளம்பிப் போவேன். சில  நேரங்களில் நான் எழுதும் போது அவர் விடுமுறையில் இருந்தால் வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் அவரே பார்த்துக்கொள்வார்.

நான் எழுதிக்கொண்டிருந்தால் எனக்கு காபி முதற் கொண்டு போட்டுக்கொண்டுவந்து கொடுப்பார். அவருடைய அன்பு தந்த அந்த  உற்சாகத்தில் தான்  என்னால் நிறைய எழுத முடிந்தது. கதைக் கருவுக்காக நான் ஒருபோதும் பெரிதாக கஷ்டப்பட்டதில்லை. நேரிடையாக பார்க்கும் அல்லது கேட்கும்  சம்பவங்கள் என்னை பாதிக்கும் பட்சத்தில் அவற்றை கதைகளாக எழுதுவேன். தங்கத்தில் கொஞ்சமாக செப்பு கலப்பது போல கொஞ்சமாகத்தான்  கற்பனை கலந்து எழுதுவேனே தவிர அதிகபட்சமாக கற்பனை கலந்து கதைகளை எழுதுவதில்லை.

பெரிய பணக்காரன் ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்வது போல கதை எழுதுவது படிப்பவர்களுக்கு கற்பனை சுகத்தைக் கொடுக்கும். அது  யதார்த்தத்தில் பொதுவாக யாரோ ஒருத்தருக்குத்தான் நடக்கும். நிஜ வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பது அரிதுதானே? அது மாதிரி எழுதுவதால்  வெற்றுக் கற்பனைகளால் வாசக, வாசகியர்கள் ஏமாறக்கூடாது. அதனால் வாசகர்களுக்கு கற்பனை சுகம் கொடுக்க நான் விரும்பவில்லை. எனவே  உண்மைச் சம்பவங்களைத்தான் எழுதினேன்... எழுதுகிறேன்.

ரியல் லைஃபில் நடக்காத ஒரு விஷயத்தை நடக்கிற மாதிரி காட்டுறது படிப்பதற்கு ஒருவித போதை கொடுக்கும், ஆனால் போதை நல்லதில்லை  இல்லையா? ஒருநாள் என் வீட்டு எதிரில் இருந்த சாக்கடையை ஒரு மனிதர் கஷ்டப்பட்டு சுத்தப்படுத்தியதைப் பார்த் தேன். அந்த தாக்கத்தில்  எழுதியதுதான் ‘அடைப்பு’ சிறுகதை. சில நேரங்களில் மனதை பாதிக்கும் சம்பவங்களை எழுத நேரமில்லையென்றால் ஒரு குறிப்பு போல எடுத்து  வைத்துக்கொள்வேன். பிறகு அதனை கதையாகவோ நாவலாகவோ எழுதுவேன். ஆனால் யாராக இருந்தாலும் ஒரு எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில்  நிறைய வாசிப்பு இருக்க வேண்டும்.

வாசிக்க வாசிக்கத்தான் எழுத்தில் செறிவு வரும். எழுத்து சுவாரஸ்யமாக இருக்கும். 20 புத்தகங்கள் படித்தால்தான் 10 வரிகள் எழுத வேண்டும் என்று  என் எழுத்தாள நண்பர்கள் சொல்வதுண்டு. நிறைய பேரை வாசிக்க வாசிக்க ஒவ்வொருவரும் எந்த பாணியில் எழுதுகிறார்கள் என்று தெரிய வரும்.  பி.வி.ஆர் எப்போதும் வசனங்களை முன்னிறுத்தித்தான் கதை எழுதுவார். ஒரு களத்தை எடுத்துக்கொள்வார். விமான நிலையம், ரயில் நிலையம்  இப்படி ஏதாவது களத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார். வர்ணனைகள் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் வசனங்கள் வழியாக கதையை நகர்த்துவார். அந்த களத்திற்குரிய டெக்னிக்கல் வார்த்தைகள் நிறைந்திருக்கும். சுஜாதாவை  எடுத்துக்கொண்டால் ஒரு கதை எப்படி ஆரம்பிக்க வேண்டும். எப்படி முடிய வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். கதையின் இறுதியில் ஒரு  வெடிகுண்டை ஒளித்து வைத்திருப்பார். இப்படி நிறைய எழுத்தாளர்களை வாசிக்கும்போது நமக்கென ஒரு பாணி உருவாகும். அதனால்  எழுத்தாளர்களுக்கு வாசிப்பு என்பது அவசியமான ஒன்று. இதுவரை 150 நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 சிறுகதைத் தொகுப்புகள்  வெளி வந்திருக்கின்றன.  

எழுத ஆரம்பித்த புதிதில் சுஜாதாப்ரியா என்ற புனைப் பெயரில் எழுதினேன். பிறகு உஷா என்ற எனது இயற்பெயரில் எழுதினேன். கணவர் பெயர்  சுப்ரமணியம். ஏற்கனவே உஷா சுப்ரமணியம் என்ற எழுத்தாளர் இருந்ததால் என் மகள் பெயரில் எழுத ஆரம்பித்தேன். என் கணவரை எனது 45  வயதில் இழந்தேன். மனைவியை இழந்த ஆண்கள் சீக்கிரத்தில் தளர்ந்து போய்விடுவார்கள். அவர்கள் வீட்டில் எல்லா விஷயத்திலும் பெண்களை  சார்ந்திருப்பதால் அவர் களால் மனைவியை இழந்த பின் தனித் திருக்க முடிவதில்லை.

பெண்களுக்கு சக்தி அதிகம். மன உறுதி அதிகம். அதனால் தான் கணவனை இழந்த பெண்களால் உறுதியோடு வாழ முடிகிறது. அதை என் நிஜ  வாழ்விலும் உணர்ந்தேன். என் கணவர் இருந்த வரை நான் பெரிதாக எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதில்லை. வீட்டிற்குத் தேவையான சாமான்கள்  அனைத்தையும் அவர்தான் வாங்கி வருவார். அவரே எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டார். அவரை இழந்தது பெரும் துக்கமளித்தாலும்  எல்லா பொறுப்புகளையும் நான் ஏற்க வேண்டி வந்தது. குழந்தை மாதிரி  இருந்த என்னை என் சூழ்நிலை வலுப்படுத்தி முதிர்ச்சியை ஊட்டியது.

அலுவலகப்பணி, வீட்டு வேலை, எழுத்து இவற்றையும் பார்த்துக்கொண்டு என் இரண்டு மகள்களையும் நல்ல முறையில் வளர்த்திருக்கிறேன். அவர்கள்  இப்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள். பெண்களைப் பொறுத்த வரையில், பெண்ணியம் என்பது தேவைப்படும் போது கட்டாயம் பேசப்பட  வேண்டிய விஷயம். ஒடுக்கப்படும் போது மேலே எழுந்துதானே ஆக வேண்டும்? ஆனால் வாழ்க்கை என்பது அன்பால் தான் கட்டுப்பட வேண்டும்.  வாழ்க்கை என்பது புரிந்து கொள்ளல் தான். வாழ்க்கைப் பிரச்னைக்குள்ளாகும் போது ஒரு எமர்ஜென்சி வழியாக விவாகரத்தை நோக்கி நகர்வதில்  தவறில்லை.

ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்

தேங்காய் சர்க்கரை தெரியுமா?

நாட்டுச் சர்க்கரை, கரும்புச் சர்க்கரை...இப்படி எத்தனையோ உண்டு. தேங்காய் சர்க்கரை தெரியுமா உங்களுக்கு?    தேங்காய் சமையலுக்கு மட்டுமல்ல,  மருத்துவத்துக்கும் பயன்படும். இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதனால் என்ன பயன்? அறியலாம் வாருங்கள். தேங்காய் தண்ணீரை  சூடாக்கிக் காய்ச்சி  இச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் தண்ணீரை கீழே சிந்தாமல் குடிப்பர். சில ஆலயங்களில் தேங்காய் உடைத்து  அந்நீரை தீர்த்தமாகக் கொடுப்பதுண்டு. தேங்காய் சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தாதுக்களும் இதில் உண்டு.

வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்தும் அடக்கம். ரத்த அழுத்தம்,  உடல் பருமன், கெட்டக் கொழுப்புக்களை அகற்றும் ஆற்றல் பெற்றது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மை கொண்டது. ரத்த ஓட்டம்,  உடலில் சிவப்பணுக்கள் கூடச் செய்யும். சாதா சர்க்கரையை விட இனிப்பு இதில் கூடுதலானது. தலைவலி, உடல் அசதி, அனீமியா, தசை பலவீனம்  போக்கும். இதை ஜூஸ் போன்றவற்றில் சேர்க்கத் தடையில்லை. காபி, டீயிலும் கலக்கலாம். களைப்பு நீங்கிடும். அதிகம் பயன் தரும்.

- சு.கெளரிபாய், பொன்னேரி.