புத்துணர்ச்சி தரும் மசாஜ்



சில ஜிம்களில் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு விஷயம் மசாஜ். உடல் புத்துணர்வு பெற, சோர்வு நீங்க மசாஜ் எடுத்துக்கொள்வது மிகவும்  அவசியம்.

நினைத்தால் நினைத்த உடன் நம் விருப்பத்திற்கு மசாஜ் எடுக்க முடியாது. அதற்கு என்று சில வரையறைகள் உண்டு. அது மட்டுமல்லாமல் மசாஜ்  எதற்காக எடுக்கிறோம் என்பதற்கும் காரணம் இருக்கிறது. அதன் வழிமுறைகள் குறித்தும் அவசியம் குறித்தும் தகவல்களை தருகிறார் ஜிம்  பயிற்சியாளர் புஷ்பா. ‘‘இன்றைய சூழலில் அதிகப் படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை முறை மற்றும் உறவு களினால் ஏற்படும் பிரச்சனை  போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம் என்னும் நோய்தான்.

இத்தகைய மன அழுத்தத்தை ஆரம் பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலை இன்னும்  மோசமாகிவிடும். குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக்  குறைப்பதற்கு சிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ். மசாஜ் செய்தால் உடலில் உள்ள வலிகள் மற்றும் மன அழுத்தம் நீங்கும் என்பது  அனைவருக்கும் தெரியும். அத்தகைய மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன.

மேலும் ஒவ்வோர் இடத்திலும் மசாஜ் வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.  அதில் பெரும்பாலானோருக்கு தெரிந்தது ஆயில் மசாஜ்தான். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது ஜிம் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும்  மிஷின் மசாஜ். மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று மசாஜ் தெரபி.  ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும்போது,  நம் டென்ஷன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது.  

மன அழுத்தம் குறைகிறது. உடலில் ரத்த ஓட்டம் தூண்டப்படும். தூக்கப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும். செரிமான பிரச்சனைகள் விலகும்  மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும். சருமம் பொலிவு பெறும். அதாவது மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது.  மசாஜ் சிகிச்சை என்பது, உடலின் பாகங்களை கையாளுதல், தாங்குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறைகளை பயன்படுத்தும்  சிகிச்சை.  வைப்ரேஷன், நீடிங், ஷேக்கிங் போன்று பல வகையில் செயல்பட்டு மசாஜ் மிஷின் நமது சோர்வை நீக்கும்.

மசாஜ் சிகிச்சை, ஒரு பகுதியில் ரத்த அளவை அதிகரித்து, திசு நெகிழ்ச்சியை மேம்படுத்தி, உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை  உங்களுக்குச் செய்கிறது. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தசைகளை பிடித்து  விடும்போது தூக்கம் கூட வந்து விடும். காரணம் தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு மட்டுமல்லாமல்   ஆரோக்கியமாகவும் ஆகிறது.  மசாஜ் மூலம்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும்  புத்துணர்ச்சியூட்ட முடியும். அதனால் தான் வெளிநாடுகளில் பல இடங்களில் மசாஜ்  சென்டர்கள் பிரபலமாக உள்ளன. ஸ்பெஷல் மசாஜ்களுக்காகவே சிலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்’’ என்கிறார்.               

மசாஜ் யாரெல்லாம் செய்யக்கூடாது?

* கர்ப்பிணிப் பெண்கள் மசாஜ் எடுக்கக்கூடாது.

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* மாதவிலக்கின்போது எடுக்கக்கூடாது.

* எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், திறந்த காயம் உள்ளவர்கள், சிவந்து போதல் மற்றும் வீக்கம் போன்ற சரும அலர்ஜி உள்ளவர்கள், ஏற்கனவே தசைப்  பிரச்னை உள்ளவர்கள்( சுளுக்கு, தசைகளில் அதீத வலி), ஏற்கனவே சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமீபத்தில் விபத்துக்குள்ளாகி காயத்துடன்  இருப்பவர்கள் போன்றோர் மசாஜ் செய்யக்கூடாது.

மசாஜ் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டியவை

* மசாஜ் செய்யும் முன் சாப்பிடக்கூடாது.
* நிறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் அருந்தக்கூடாது. அளவாகக் குடிக்கலாம். சாப்பிட்டுவிட்டோ, நிறைய திரவப்பொருட்கள் அருந்திவிட்டோ மசாஜ்  செய்யும் போது வாந்தி வருவதற்கான சாத்தியங்கள் உண்டு.
* மசாஜ் எடுப்பதற்கு முன்பே உடற்பயிற்சிகளை முடித்துவிட வேண்டும். உடற்பயிற்சி எடுத்த பின் மசாஜ் எடுத்தால் ரிலாக்ஸாக இருக்கும் தசைகள்  மறுபடி ஸ்ட்ரெயின் ஆகும். மசாஜ் எடுத்ததின் பலன் இல்லாமல் போகும்.
* மசாஜ் செய்யும்போது  ட்ராக் சூட் போன்ற வசதியான உடைகளை அணிந்திருக்க வேண்டும். அல்லது ஓரளவு தளர்வான ஆடைகளை அணிய  வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு மசாஜ் எடுத்தால் அசௌகரியமாக உணர்வீர்கள். புடவை போன்ற ஆடைகளை மசாஜ்  எடுக்கும்போது உடுத்த வேண்டாம்.
* ஸ்டீம் எடுத்த பிறகு மசாஜ் எடுக்கலாம்.
* ஓய்வெடுக்கப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன் மசாஜ் எடுக்கலாம்.
* காலை நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. மாலை நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. மென்மையான வெளிச்சத்தில் மசாஜ் எடுக்கலாம்.
* மிஷின் மசாஜ் முகத்துக்குக் கிடையாது.

மிஷின் மசாஜ் எடுக்க

10 முதல் 15  நிமிடங்கள் வரை ஆகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப்  பிடித்துள்ள   மனதிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அளிக்கும் மசாஜை  மாதத்திற்கு ஒரு முறையாவது எடுக்கலாம்.


ஸ்ரீதேவி  மோகன்