தாயுமானவள்



வாசகர் பகுதி

சாந்தி விஸ்வநாதன், அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள ஸ்டோன்மென் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியை. துப்பாக்கிச்சூட்டிலிருந்து தன் வகுப்பு மாணவர்களை அவர் சமயோசிதமாக காப்பாற்றியதால், மாணவர்களின் பெற்றோர் அவரை பெரிதும் பாராட்டியுள்ளனர். இவர் ஓர் இந்தியர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஒருவன், துப்பாக்கியுடன் வந்து  கண்ணில் தென்பட்ட வகுப்பறைகளில் இருந்த மாணவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினான். 17 மாணவர்கள் இச்சம்பவத்தில் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அந்த முன்னாள் மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்த போது பள்ளிக்கூட நிர்வாகம் ஆபத்து மணியை அடிக்க, வேறொரு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சாந்தி விஸ்வநாதன், அதிர்ந்து உடனே வகுப்பு கதவை சாத்தியதுடன், ஜன்னல் கதவுகளையும் மூடி, மாணவர்களை தரையில் படுத்த நிலையில் இருக்கும்படி கட்டளையிட்டார்.  துப்பாக்கியுடன் திரிந்த மாணவன் கண்களில் வகுப்பு மாணவர்கள் படாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு!

பிறகு விஷயம் அறிந்து காவல்துறை வந்து கையில் துப்பாக்கியுடன் திரிந்த மாணவனை பிடித்த பின்னும் சாந்தி விஸ்வநாதன் கதவைத் திறக்கவில்லை. காவலர்கள் தட்டிய போதும், துப்பாக்கியுடன் திரியும் மாணவனாக இருக்கக்கூடும்  என எச்சரிக்கையோடு கதவைத் திறக்க மறுத்தார். பிறகு காவலர்கள் ஒரு ஜன்னலை உடைத்து உண்மையை கூறி ஆசிரியையும் மாணவர்களையும் பத்திரமாக வெளியேற்றினர். ஆபத்தான சமயத்தில் மாணவர்களை அவர்களுடைய தாயார் போல் பாதுகாத்த ஆசிரியையின் புகழ் அந்நாடு எங்கும் பரவியுள்ளது.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

முகத்தில் முகம் பார்க்கலாம்

முகம்: ஆவாரம் பூ பொடி - 2 டீஸ்பூன், பயத்தம் மாவு - 1 டீஸ்பூன், சந்தனம் - 1 டீஸ்பூன், தேன், பாலாடை, ரோஸ் வாட்டர் - தலா 1/2 டீஸ்பூன். அனைத்தையும் ஒன்றாக கலந்து முகம், கழுத்தில் பேக்காக போட்டு நன்கு ஊறி வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகம் பளிச்சிடும்.

புருவம்: கறிவேப்பிலை சிறிது, ஊறவைத்த வெந்தயம் 1 டீஸ்பூன். இரண்டையும் நன்கு மை போல் அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து புருவத்தில் நன்கு தடவி ஊறிய பின் கழுவ புருவ முடிகள் அடர்த்தியாகும்.

கண்: கேரட் ஜூஸ், உருளைக்கிழங்கு ஜூஸ், வெள்ளரிக்காய் தலா 1 டீஸ்பூன் எடுத்து நன்கு கலந்து கண்களை சுற்றி வட்டமாக தேய்த்து, கண்களின் மேல் வட்டமாக அரிந்த வெள்ளரித்துண்டுகளை வைத்து அரை மணி நேரம் கண்களை மூடி ரிலாக்ஸாக இருக்கவும். அதன் பின் கண்களை கழுவினால் கண்கள் புத்துணர்வுடன் இருக்கும். கருமை நீங்கும்.

மூக்கு:  கோதுமை மாவுடன் காய்ச்சி பாலை கலந்து மூக்கின் மேல் நன்கு தடவி ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ ப்ளாக் ஹெட் மறையும்.
உதடு: சர்க்கரையில் தேனை பிசறவும். எலுமிச்சம் பழத்தை வட்டமாக அரிந்து பிசறிய சர்க்கரையில் தொட்டு வட்டமான முறையில் மிருதுவாக உதட்டின் மேல் சுழற்றி ஸ்கிரப் செய்தால் உதட்டின் கருமை நீங்கும்.

- அர்ச்சனா, கும்பகோணம்.