தென்றலென மிதந்து வந்த தேவதை ஸ்ரீதேவி



அஞ்சலி

தென் தமிழகத்தில் மலர்ந்து இந்தியா முழுவதும் மணம் பரப்பிய புன்னகை மலர் உதிர்ந்து விட்டது. அந்த மலர் புன்னகைத்த போதெல்லாம் இந்தியாவே மலர்ந்தது; அந்த மலர் சுருங்கிய போதெல்லாம் இந்தியா முழுமையும் வாடியது. இதோ அந்த மலர் உதிர்ந்து கருகிய நிலையில் இந்திய சினிமாவின் ரசிகர்களும் சினிமா உலகமும் தழுதழுத்து திகைத்து நிற்கிறது. அவர் ஆண்களுக்குக் கனவுக் கன்னியாக இருந்திருக்கலாம்.

ஆனால் பெண்களுக்கோ தங்கள் வீட்டுப் பெண்ணாக தங்கள் பதிலியாக, தங்கள் நனவிலி மனதாக இருந்தார். அமெரிக்க வீதிகளில் அப்பாவியாக அலைந்த ‘இங்கிலிஷ்  விங்கிலிஷ்’ நாயகி சசியாக இருந்தாலும், ‘பதினாறு வயதினிலே’ சப்பாணிக்காகக் கால் கடுக்க ரயில் நிலையத்தில் காத்திருந்த மயிலு என்றாலும், காயத்ரியோ கோகிலாவோ ‘மூன்றாம் பிறை’ யில் பாக்ய லஷ்மியாகத் தோன்றி பின் விஜியாகப் பரிணமித்திருந்தாலும் அத்தனை அத்தனை பிம்பங்களும் பெண்களின் நனவிலிதான்.

சிவகாசியை அடுத்த மீனம்பட்டியில் ஓரளவு வசதியான வழக்கறிஞர் அய்யப்பனின் மகளாகப் பிறந்தவர், தாயார் ராஜேஸ்வரியின் விருப்பத்துக்காகவே பெற்று வளர்க்கப்பட்டவர் தேவி. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்கும்போது. ஸ்ரீதேவிக்கு சிறு வயதில் சொந்த ஆசைகள், அபிலாஷைகள் இருந்ததோ இல்லையோ, அவரின் தாயாருக்கு இருந்தது தன் மகள் நடிகையாக வேண்டும் என்று. ஊட்டி வளர்க்கப்பட்ட அந்த ஆசையின் மிகப் பிரமாண்டமானதோர் வடிவம்தான் ஸ்ரீதேவி என்னும் இந்திய சினிமாவின் கனவு தேவதை.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர், அடுத்து வரும் தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான விருதுநகர் பற்றி விவாதிப்பதற்காக காங்கிரஸ்காரர்கள் சிலரை அழைத்திருந்தார். விருதுநகருக்கு அருகிலிருந்த மீனம்பட்டியிலிருந்து அய்யப்பன் என்ற இளம் வழக்கறிஞர், தன்னுடன் தன் நான்கு வயது அழகு மகளையும் அழைத்துக் கொண்டு திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜரின் இல்லத்துக்குச் சென்றார்.

அனைவரும் அரசியல் எதிர்காலம் பற்றி பேசிக் கொண்டிருக்க, அங்கும் இங்கும் தனித்து ஓடியாடி விளையாடி சலிப்புற்று, குழந்தைக்கே உரிய இயல்புடன் சுவரில் கிறுக்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்த காமராஜர், ‘இது யார் குழந்தை?’ என வினவ, ‘என் குழந்தைதான்’ என அறிமுகப்படுத்தியிருக்கிறார். உப்பிய கன்னங்களும், அலைபாயும் மீன்களைப் போன்ற கண்களுமாய் நின்ற குழந்தையை காமராஜருக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. குழந்தையின் படிப்பு, எதிர்காலம் பற்றி பேச்சு திரும்ப, குழந்தையின் தாயாருக்குத் தன் மகள் நடனம் கற்றுக் கொள்வதிலும், சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் என்றும் அதற்கான முயற்சிகளில் இருப்பதாகவும் சொல்கிறார் அந்த இளம் வழக்கறிஞர்.

எதுவானாலும் படிப்பையும் கவனமாகக் கற்பிக்கச் சொல்லிய காமராஜர், கவிஞர் கண்ணதாசனிடம் சிபாரிசும் செய்கிறார். அந்த சிபாரிசு வெகுவாக வேலை செய்தது. பெருந்தலைவரின் சிபாரிசை ஏற்று கவிஞர் கண்ணதாசன், தன் செல்லக் குழந்தையை அழைத்துச் சென்றது இயக்குநர் எம்.ஏ. திருமுகத்திடம். சாண்டோ சின்னப்பா தேவரின் சகோதரர் அவர். அப்போது அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த ‘துணைவன்’ படத்தின் க்ளைமாக்ஸில் பாலமுருகன் வருகையால் பரவசமானார்கள் ரசிகர்கள்.

மயிலுடன் நடித்த மயிலு !
‘தண்டாயுதபாணி பிலிம்ஸ்’ என்று தன் நிறுவனத்துக்குப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தேவர், முருகனையே தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டவர், பால முருகனாக ஸ்ரீதேவியைத் தன் படத்தில் அறிமுகப்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. அப்படி பாலமுருகனாகத் திரையில் தோன்றி பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் தயாரிப்பாளரான தேவரையும் பரவசப்படுத்தினார் பேபி ஸ்ரீதேவி. 

அவரின் அறிமுகம் ஸ்ரீதேவியை இன்று வரை கொண்டாடக்கூடிய நபராக மாற்றியிருக்கிறது. கதாநாயகியாக உச்சம் பெற்ற பின்னும் தேவரின் ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் நாயகியாகவும் நடித்தார், கதாநாயகன் கமலை விட மயில் மிக நெருக்கமாய் நடித்தது முருகனின் வாகனம் மயிலுடன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ‘நம் நாடு’ படத்தில் ட்ரவுசர், சட்டையுடன் பையனாக நடித்தார். துணைவன், நம்நாடு இரண்டு படங்களுமே ஸ்ரீதேவியின் திறமையை அடையாளம் காட்டின.

அன்றே உருவானார் பன்மொழி நடிகை
காமராஜர் கேட்டுக் கொண்டபடி பள்ளிப் படிப்பைத் தொடர முடியாவிட்டாலும், அம்மா ராஜேஸ்வரியின் ஆசை நிறைவேறி பரபரப்பான நட்சத்திரமாக பேபி ஸ்ரீதேவி உருமாறிக் கொண்டிருந்தார். தமிழில் குல விளக்கு, கனிமுத்துப் பாப்பா, ஆதி பராசக்தி, அகத்தியர், பெண் தெய்வம், பாபு, வசந்த மாளிகை, பாரத விலாஸ், தெய்வக் குழந்தைகள், திருமாங்கல்யம், திருடி என தொடர்ச்சியாகப் படங்கள் மூன்று மொழிகளிலும் வெளி வந்தன.

‘நம் நாடு’ படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் மூலம் பரவலாகத் தெலுங்குப் படங்களுக்கும் அறிமுகமானார். என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா என்று தெலுங்கு படவுலகின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தார். அங்கிருந்து மலையாளத் திரையுலகமும் இரு கரம் நீட்டி வரவேற்று அணைத்துக் கொண்டது. அடுத்து ‘ஜூலி’ படத்தின் மூலமாக இந்திக்கும் சென்று சேர்ந்தார். ஆங்கிலோ  இந்தியக் குடும்பத்துக் குழந்தைகளில் ஒருவராக, ஜூலியின் (லட்சுமி) தங்கையாக நடித்தார்.

லட்சுமிக்கும் இந்தியில் அதுதான் முதல் படம் என்பது குறிப் பிடத்தக்கது. ‘ஜூலி’ படத்தில் நடித்ததன் மூலம் ஸ்ரீதேவி அப்போதே உருவாகிவிட் டார் பன்மொழி நடிகையாக. தமிழும் தெலுங்கும் தவிர பிற மொழிகளுக்காக வீட்டிலேயே ஆசிரியர்களின் மூலம் பயிற்று விக்கப்பட்டது. தன்னை வளர்த்துக் கொள்வதில் அவர் கொஞ்சமும் தயக்கம் காட்டியதில்லை. குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே அனைத்து மொழிகளிலும் அப்போதைய பிரபல நடிகர்கள் அனைவருடனும் நடித்தார்.

அறிமுகமே அசத்தலாக….
‘மூன்று முடிச்சு’ படத்தில் பதின்மூன்று வயதில் கதாநாயகியாக, கே.பாலசந்தர் மூலமாக வந்த வாய்ப்பு அதிலும் தன்னைக் காட்டிலும் வயதில் மூத்த ரஜினிகாந்த்க்கு மாற்றாந்தாயாக. கமலஹாசனுக்கு நாயகியாக என்று பொய்த்தோற்றம் காட்டி, அந்த நாயகனும் தண்ணீரில் மூழ்கி இறந்து போக அதிரடித் திருப்பங்களுடன் சொல்லப்பட்ட கதை. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் அறிமுகமாகி ஒன்பதே ஆண்டுகளில் கதாநாயகி வாய்ப்பு. முதல் படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பை எந்த அறிமுக நடிகையும் ஏற்க மாட்டார், எவ்வளவு பெரிய இயக்குநரின் படமாக இருந்தாலும். அந்த சோதனை முயற்சியும் கூட அவருக்கு வெற்றியைத்தான் தேடிக் கொடுத்தது.

பதினாறு வயசு பருவ மயிலு
பதினாறு வயதினிலே மயிலு, ஸ்ரீதேவியின் திரை வாழ்க்கையில் ஒரு மணிமகுடம். இதற்கு முன்னரும் கிராமத்துப் பெண்ணாக வேடமேற்று நடித்திருந்தாலும் மண்ணின் மணத்துடன் வெளியான இப்படம் சம்திங் ஸ்பெஷல். பருவ வயதுக்கே உரிய ஆசைகள், அபிலாஷைகள், குறுகுறுப்பு, கள்ளம் கபடமற்ற தன்மை அத்தனையும் அந்த மயிலிடம் தென்பட்டது.

பல்வேறு படங்கள், பல்வேறு நாயகர்கள்
தொடர்ந்து சிவப்பு ரோஜாக்கள், ப்ரியா, பகலில் ஒரு இரவு, வறுமையின் நிறம் சிவப்பு என ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போதைய கதாநாயகர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ், அம்பரீஷ், முரளி மோகன் என அனைவருடனும் நடித்தபோதும் கமல், ரஜினியுடன் அவர் நடித்த படங்களில் தனித்துத் தெரிந்தார். குறிப்பாக, கல்யாணராமன், குரு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, ஜானி, தர்மயுத்தம், அடுத்த வாரிசு போன்ற படங்களைச் சொல்லலாம்.தேவி இரட்டைவேடத்தில் நடித்த ஒரே படம் . ‘வணக்கத்துக்குரிய காதலியே’.

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் மாறுபட்ட வேடம் வாய்த்தது. வாழ்க்கையில் சலித்துப்போன ஒருத்தி வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாற வேண்டிய சூழலுக்கு ஆளாகிறாள். அந்தப் பாலியல் தொழிலாளி வேடம் ஏற்றார். கமல் இப்படத்தில் நடித்திருந்தபோதும் ஸ்ரீதேவிக்கு ஜோடி யில்லை, ஒரு கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தும் அவருக்கு ஜோடியாக சத்யப்ரியா நடித்தார். ஸ்ரீதேவி கமலுக்கு ஜோடியில்லை என்பதாலேயே இப்படம் புறக்கணிக்கப்பட்டது. அந்த அளவு ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட இணை இருவரும்.  சிவாஜி கணேசனுடன் கூட இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இங்கு இவை எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. 

தமிழில் நடித்த அளவுக்குத் தெலுங்கிலும் தொடர்ச்சியாகப் படங்கள் செய்தார். பெரும்பாலும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படங்களிலும் நடித்தார். ஓராண்டில் அப்போதைய இவரின் சமகால நடிகைகள் நடித்ததை விடவும் தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்தார். அதைப் பிற மொழிப் படங்களில் நடித்ததன் மூலம் ஈடு செய்தார். ‘பதினாறு வயதினிலே’ இந்தியில் ‘சோல்வா சாவன்’ ஆக மாறியபோதும், அதுவே ‘பதஹாறு வயசு’ என தெலுங்குக்குப் போனபோதும் கதாநாயகர்கள் மாறினாலும் ஸ்ரீதேவியின் இடம் அவருக்கே அளிக்கப்பட்டது. அவர் கடைசியாகத் தமிழிலும் மலையாளத்திலும் நடித்த ‘தேவராகம்’ முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம். கலகத்தை நிறுவும் ஒரு பாத்திரமும் கூட. 

ஜானியின் அர்ச்சனாவும் மூன்றாம் பிறையின் விஜியும் உச்சம் தொட்டு மக்கள் மனங்களில் நிலையாக நின்றார்கள். இந்திக்கும் தெலுங்குக்கும் மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் என்று மாறி மாறிப் பயணித்தவர் ஒரு கட்டத்தில் தேர் நிலைக்கு வந்தது போல இந்தியில் மட்டுமே நிலைத்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேல் கோலோச்சினார்.

இந்தியின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்
இந்தியில் கதாநாயகியாக மீண்டும் 1979ல் அறிமுகமான ‘சோல்வா சாவன்’ தோல்வியடைந்தாலும் அடுத்து நான்காண்டுகள் இடைவெளியில் 1983ல் வெளிவந்த ‘ஹிம்மத்வாலா’ சூப்பர் ஹிட் ஆனது. அறிமுகப்படம் தோல்வியானால் அடுத்தடுத்து படங்கள் அமைவதே கேள்விக்குறி என்ற நிலையில் சென்ட்டிமென்ட் தடைகளை எல்லாம் தாண்டிக் குதித்து அசைக்க முடியாத இடத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டார். இப்படத்தின் மூலமாக. ஹிம்மத்வாலா என்றாலே துணிச்சல்காரன் என்று பொருள். இந்தியில் பெண்பாலுக்கு இச்சொல் பொருந்தாது என்றாலும் ஸ்ரீதேவிக்குப் பொருந்திப் போனது ஆச்சரியம்.

தொடர்ச்சியாக சத்மா (மூன்றாம் பிறையின் இந்தி வடிவம்), தோஃபா, நயா கதம், மஃக்சட், மாஸ்டர்ஜி, நஸ்ரானா, மிஸ்டர் இந்தியா, வஃக்த் கி ஆவாஸ், சாந்தினி, ஹீர் அவுர் ராஞ்சா என்று அதன் பின் வெளியான பல படங்களில் பல்வேறு விதமான பாத்திரங்கள். தமிழ்ப்படங்களில் நடித்ததைக் காட்டிலும் பெரும் பாய்ச்சலாகவும் அவற்றில் பல படங்களில் பல்வேறு மாறுபட்ட வேடங்கள் அவருக்கு வாய்த்தன. மிஸ்டர் இந்தியாவில் அவர் ஏற்ற அந்த சார்லி சாப்ளின் வேடத்தையும் சூதாட்ட விடுதியில் அவர் அடிக்கும் காமெடிக் கூத்துகளையும் மறக்க முடியுமா? அதேபோல, பலரும் மறந்த ‘ஹீர் அவுர் ராஞ்சா’ இந்திய பாகிஸ்தானிய பஞ்சாப் எல்லைப்புறங்களின் நாடோடிக்கதை.

பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்டது என்பதாலேயே அதைப்பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை. அற்புதமானதோர் காதல் கதை. இதற்கு முன்னரும் பலமுறை படமாக்கப்பட்ட அக்கதையின் முடிவு ‘தேவதாஸ்’ போல துன்பியல் சார்ந்தது என்றாலும் சுவாரசியமானது. தென்னிந்தியாவிலிருந்து இந்திக்குப் போய் ஜெயித்த பல நடிகைகளிடம் இருந்தும் அவர் மாறுபடுகிறார். வைஜெயந்திமாலா, வஹிதா ரெஹ்மான், ஹேமமாலினி போன்றவர்கள் இந்தியில் மட்டுமே ஜெயித்தார்கள். ஜெயப்ரதா தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் மட்டும் அறியப்பட்டார். ஆனால், ஸ்ரீதேவியோ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் எல்லாம் கொடி நாட்டி விட்டு, தனக்கான இடம் இங்கிருந்தபோதும், அதைத் தானாகவே விட்டு விட்டு தன்னம்பிக்கையுடன் இந்திக்குச் சென்று வென்று காட்டியவர். அவருக்கான இடம் இங்கு அப்படியேதான் இருந்தது. பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பின் வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ மூலம் மீண்டும் அதை நிரூபித்தார்.

குழந்தைத்தனம் மிளிரும் தோற்றம்
ஸ்ரீதேவியைப் பார்க் கும்போதெல்லாம் ஒரு வளர்ந்த குழந்தையைப் பார்ப்பது போல்தான் தோன்றும். அவருடைய முகம், பேச்சு, சிரிப்பு, என அத்தனையிலும் குழந்தைத்தனம் மிளிரும். ஸ்ரீதேவிக்கு முன்னரும் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரத்திலிருந்து குமரியான பின் கதாநாயகியாக நடித்திருந்தாலும், இவரைப் போல் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்றவர்கள் யாருமில்லை. அதிலும் பன்மொழி நடிகையாக மாறவும் இல்லை. இந்திய அளவில் புகழ் பெற்றதுடன் இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்றதற்குப் பின் இருந்த அவருடைய உழைப்பு கடினமானது.

உதிர்ந்து போன மென்மலர்
ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சித் தகவலால் அதிர்ந்து, அழுது கதறி அவர் அழகை ஆராதனை செய்து கனவுக்கன்னி எனக் கொண்டாடித் தீர்த்த அந்த மாய உலகம் சில மணி நேரங்களிலேயே தனது சுருதியை மாற்றிக்கொண்டு அபஸ்வரத்தை எழுப்பியது. ஆணாதிக்க சமுதாயமும் அவர்களால் தலைமை தாங்கப்படும் ஊடக உலகமும் எவ்வாறு பார்த்தது என்பதையும், பெண்ணுக்கானஒழுக்க நியதிகள்வலிந்து போதிக் கப்பட்டதும் அதன் உச்சமான வக்கிரத்தையும் வெறும் ஆறு மணி நேர இடைவெளியில் இந்தியா நன்கு உணர்ந்தது.

சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு மசூதியை அடுத்து சர்ச் பார்க் கான்வென்ட் சுற்றுச்சுவருக்கு மேலாக வரிசையாக வித்தி யாசமான பல சினிமா பேனர்கள் வைக்கப் படுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது முன்பு. அண்ணா சாலையில் பயணிப் பவர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது வேகத்தைக் குறைத்து அண்ணாந்து பார்த்தவாறே செல்வதுதான் வழக்கம். பின்னர் விபத்துகள் நடப்பதைக் காரணம் காட்டி பேனர் வைக்கும் வழக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டது. சஃபையர் தியேட்டர் எதிரிலிருந்து மிகத் தெளிவாக அதைப் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி நடித்து 70களில் மலையாளத்தில் வெளிவந்த ‘ஆ நிமிஷம்’ திரைப்படத்துக்கு அப்படி ஒரு பேனர் வைக்கப்பட்டது. முழங்காலுக்கு மேல் ஸ்கர்ட் அணிந்த ஸ்ரீதேவியின் பிரமாண்டமான பேனருக்கு, அணிவிக்கப்பட்டஸ்கர்ட், துணியில் தைத்து அணிவிக் கப்பட்டிருந்தது. அந்த பேனர் தயாரிப்பே ஆழ்மன வக்கிரத்தின் வெளிப்பாடுதான். காற்றில் அந்த ஸ்கர்ட் பறக்கும்போதெல்லாம் கூட்டம் ஆரவாரத்துடன் கீழிருந்து ஸ்ரீதேவியின் பிம்பத்தை அசலென்று மனதில் உருவகித்து ரசித்துக் களித்தது. இந்த வக்கிரம் பிடித்த மன நோயாளிகளின் வாரிசுகள்தான் இன்று ஸ்ரீதேவியின் ஒழுக்கம் பற்றி விலாவாரியாக எழுதியும் பேசியும் களிக்கிறார்கள். அது அவர்களின் பூர்வீக சொத்து, என்றைக்கும் மாறாதது.

ஒரு மலர் எப்படி உதிர்ந்தால் உங்களுக்கு என்ன? அது உதிர்ந்து போனதென்னவோ உண்மை; இனி அது மலரப் போவதில்லை; இனி அது மண்ணுக்குச் சொந்தம்; ஸ்ரீதேவி என்ற மென்மையான மலர் இன்னும் சில காலம் தென்றலில் ஆடி வசந்தத்தை அனுபவித்திருக்கலாம். சற்றே தன் ஆயுளை நீட்டித்திருக்கலாம்; தன் வாரிசுகளான அரும்புகளுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம் என்ற ஆற்றாமை மட்டும் மனதை இறுக்கிப் பிசைகிறது. ஆனால் பருவம் தவறி முன்னதாகவே அது உதிர்ந்து போய்விட்டது. அதிலென்ன உங்களுக்கு சுருதி பேதம்? இதுபோல் இனி ஒரு மலர் எப்போது மலரும்?

பா.ஜீவசுந்தரி
ஸ்டில்ஸ் ஞானம்


ஸ்ரீதேவி நடித்த படங்கள்
துணைவன், நம்நாடு, அகத்தியர், பெண் தெய்வம், பாபு, யானை வளர்த்த வானம்பாடி மகன், குல விளக்கு, கனிமுத்துப் பாப்பா, மலைநாட்டு மங்கை, வசந்த மாளிகை, நண்பன், தெய்வக் குழந்தைகள், பிரார்த்தனை, பாரத விலாஸ், திருமாங்கல்யம், திருடி, எங்கள் குலதெய்வம், அவளுக்கு நிகர் அவளே, திருவேற்காடு கருமாரியம்மன், தசாவதாரம், மூன்று முடிச்சு, கவிக்குயில், பதினாறு வயதினிலே, காயத்ரி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, இளையராணி ராஜலட்சுமி, கங்கா யமுனா காவேரி, டாக்ஸி டிரைவர், ப்ரியா, வணக்கத்துக்குரிய காதலியே, இது எப்படி இருக்கு?, மச்சானைப் பார்த்தீங்களா?, மனிதரில் இத்தனை நிறங்களா?, முடிசூடா மன்னன், பைலட் பிரேம்நாத், சிவப்பு ரோஜாக்கள், ஆண்கள், கன்ணன் ஒரு கைக்குழந்தை, ராஜாவுக்கேத்த ராணி, சக்கப்போடு போடு ராஜா, அரும்புகள், தர்மயுத்தம், பகலில் ஒரு இரவு, கல்யாணராமன், லட்சுமி, தாயில்லாமல் நானில்லை, கவரிமான், நீலமலர்கள், நான் ஒரு கை பார்க்கிறேன், பட்டாக்கத்தி பைரவன், சிவப்புக்கல் மூக்குத்தி, ஜானி, குரு, வறுமையின் நிறம் சிவப்பு, விஸ்வரூபம், பால நாகம்மா, தெய்வத் திருமணங்கள், சங்கர்லால், மீண்டும் கோகிலா, ராணுவ வீரன், மூன்றாம் பிறை, தேவியின் திருவிளையாடல், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, வாழ்வே மாயம், வஞ்சம், அடுத்த வாரிசு, சந்திப்பு, மீனாட்சியின் திருவிளையாடல், நான் அடிமை இல்லை, இங்கிலீஷ் விங்கிலிஷ், புலி.