பூர்ணிமா - ஒரு புதிய சகாப்தம்...



அந்தச் சிறுமி பிறக்கும் போதே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டாள். வளர வளர கைக்குழந்தையாகவே தன் தாயால் பராமரிக்கப்பட்டாள். ஓடி விளையாட வேண்டிய கால்கள் நகர மறுத்தன. சக்கர‌ நாற்காலியோடு சங்கமித்தது வாழ்க்கை. சாப்பிட, குளிக்க என சின்னச் சின்ன வேலைகளுக்கும் மற்றவரையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. தொலைக்காட்சியின் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்களுக்கு வானம் பார்க்கும் ஆவல், துள்ளி ஓட வேண்டும் என்ற ஏக்கம். ஆனாலும் வீடே கூடென 18 ஆண்டுகள் அடைந்திருந்த அந்தப் பெண்ணுக்கு புது அடையாளம் தந்துள்ளது சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியில் செயல்படும் அப்பேரல் டிரெயினிங் அண்டு டிசைன் சென்டர். எழுந்து நடக்கவே முடியாத பூர்ணிமா இன்று தையற் கலைஞர் பயிற்சியை முடித்துள்ளார். அவருக்காக வேலை கொடுக்க காத்திருக்கிறது கார்மென்ட்ஸ் நிர்வாகம்.

எப்படி நடந்தது இந்த மாற்றம்? அப்பேரல் டிரெயினிங் அண்டு டிசைன் சென்டர் பொறுப்பாளர் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நாகராஜன் இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இனி நாகராஜன், “ பிறக்கும் போதே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பூர்ணிமா ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கார். எழுந்து நடக்க முடியாத அவரை வளர்ப்பதே அந்தக் குடும்பத்துக்கு சவாலாக இருந்திருக்கு. பூர்ணிமாவின் தாய் வளர்மதி  ஹவுஸ் வொய்ஃப், தந்தை அருள்மணி எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்தார். ஒரு விபத்தில் அவரும் படுத்த படுக்கையானார்.

இவரது சகோதரர் பாலக்கண்ணன் உழைப்பில் குடும்பம் ஓடுது. அடுத்தடுத்து துயரங்கள் பூர்ணிமாவுக்கு ஏதாவது பயிற்சி கொடுக்க முடியுமான்னு அந்தக் குடும்பத்தைத்  தேட வைத்தது. ஆனா எந்தப் பயிற்சி மையமும் முன் வரலை. எழுந்து நடக்க முடியாத பூர்ணிமாவால எதுவும் பண்ண முடியாதுன்னு ஒதுக்கினாங்க. எதேச்சையா விஷயம் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க நேர்ல போனேன். பூர்ணி மாவின் கண்களில் தெரிந்த நம்பிக்கை அவருக்கு டெய்லரிங் பயிற்சி கொடுக்க முடியும்னு தோணுச்சு. நான் பயிற்சி கொடுக்கிறேன்னு சொன்னப்போ அந்தக் குடும்பம் அன்போட முன் வந்தது. பூர்ணிமாவின் அண்ணன் பாலக்கண்ணன் அவரை தூக்கி வந்து பயிற்சி மையத்தில் விட்டுப் போனார். அதன் பின் பூர்ணிமாவின் வாழ்க்கையே மாறிப்போனது’’ என்கிறார் நாகராஜன்.

எது கேட்பினும் புன்னகையே பதிலாக்கும் பூர்ணிமாவின் மென்குரல் உரையாடல் இதோ, “கொஞ்சம் நம்பிக்கையோடவும், நிறைய பயத்தோடவும் பயிற்சிக்குப் போனேன். வழக்கமானவங்களுக்கு போட்டிருந்த ஸ்டூல்ல என்னால உட்கார முடியல. என்னோட வீல்சேர்ல இருந்தபடி  மெஷின்ல தைக்க முடியல. ஹைட் பிரச்னை. எனக்காகவே சரியான ஹைட்ல சர்க்கரம் வெச்ச சேர் பண்ணிக் கொடுத்தாங்க. என்னோட கால்ல பெடல் பண்ற அளவுக்கு பலம் இல்ல. மெதுவா அழுத்தினாலே மெஷின் வேலை செய்யுற மாதிரி மாத்திட்டாங்க. எனக்காக எல்லாரும் உதவறாங்க. என்னை யாரும் பாரமா நினைக்கல. இங்க வந்த பின்னாலதான் நான் சந்தோஷமா இருக்கேன்.

நான் கத்துக்க அனிதாக்கா, கவிதாக்கா ரெண்டு பேரும் பயிற்சியாளரா மட்டும் இல்லாம சகோதரிகள் மாதிரிப் பழகறாங்க. என்னோட தனிப்பட்ட வேலைகளுக்கும் உதவறாங்க. இவ்வளவு அன்பு இல்லைன்னா என்னால டெய்லரிங் கத்திருக்க முடியாது. பிறக்கும்போதே நடக்க முடியாமப் போனதால என் வாழ்க்கையே அவ்ளோதான்னு நினைச்சேன். நம்மால எதுவுமே முடியாதான்னு தோணும். கால்லதான் எதுவும் செய்ய முடியாது.

கைலயாவது எம்ராய்டரி கத்துக்க ஆசைப்பட்டேன். ஆனா என்னாலயும் டெய்லரிங் கத்துக்க முடியும்னு நாகராஜ் சார் நிரூபிச்சிட்டார். என்னோட வாழ்க்கை அர்த்தமுள்ளதாய்டுச்சு. நான் இப்போ டெய்லர்” என்று உற்சாகமான பூர்ணிமா அன்று அணிந்திருந்தது அவரே தைத்த சுடிதார்.

பூர்ணிமா எப்படி இவ்வளவு சீக்கிரம் டெய்லரிங் கற்றுக் கொண்டார் என பயிற்சியாளர்கள் அனிதா, கவிதாவிடம் கேட்டோம், “பூர்ணிமா வந்தப்போ அவளால எவ்ளோ பிக்கப் பண்ண முடியும்ன்ற சந்தேகம் இருந்தது. மெஷின்ல உட்கார்ந்து தையல் மெஷின இயக்கிற வரைக்கும்தான் அவள் கொஞ்சம் மெதுவா இருந்தாள். தைக்க ஆரம்பிச்சதும் ரொம்ப வேகமா புரிஞ்சிக்கிட்டாள். நடக்கனும்ற ஆசை பூர்ணிமாவுக்குள்ள இருக்கு.

அதுக்கும் நாங்க ஊக்கம் கொடுக்கறோம். யாரும் தன்னைக் குறை சொல்லிடக் கூடாதுன்னு நினைக்கிற பூர்ணிமா ரொம்ப சென்சிட்டிவ். ஆனா தன்னம்பிக்கைல அவளை யாரும் அடிச்சிக்க முடியாது. முழு நாளும்  எங்களோடவே இருந்து கத்துக்கிறா. இங்க வேலை பார்க்கிற பல பெண்கள் அவங்க குழந்தைகள கூட்டிட்டு வந்து பூர்ணிமாவுக்கு அறிமுகப்படுத்தினாங்க. அவங்களுக்கும் இவதான் ரோல்மாடல். எங்களுக்கும் நம்பிக்கை தந்த பொண்ணு பூர்ணிமா’’ என்று நெகிழ்ந்தனர். ஆம்,  பூர்ணிமா தன் வாழ்வில் புது சகாப்தத்தை துவங்க இருக்கிறார்.

- யாழ் ஸ்ரீதேவி
படங்கள்: ஜெகன்