இருமனம் கொண்ட திருமண வாழ்வில்



ஹனிமூன்

திருமணத்தின் வெற்றி என்பது மிகப்பெரும் புரிதலோடு, ஒருவரை ஒருவர் உள்வாங்கி, விட்டுக்கொடுத்து, அவரவர் பாதையில் சுதந்திரத்தோடு நகர்வதில்தான் உள்ளது. இணையருக்குள் புரிதலை வளர்க்க உருவான தேனிலவு, இன்று ஹனிமூன் பேக்கேஜ்களாக உருமாறி, புதுமணத் தம்பதிகளுக்கு மறக்க முடியாத சில இன்ப நினைவுகளை அள்ளி வழங்குகின்றன. வீட்டில் பார்த்துப் பேசி முடித்த திருமணமாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகி, காதலித்து செய்த திருமணமாக இருந்தாலும் சரி, திருமணம் செய்யப்போகும் இணை, தேதி முடிவானதுமே கனவு காண்பது எங்கே ஹனிமூன் போகலாம் என்பதாகத்தான் இருக்கும்.

திருமணமான புதிதில், தம்பதிகளுக்கிடையே புரிதலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஹனிமூன். புதிதாக திருமணமாகி ஹனிமூன் செல்ல விரும்புவோர் பெரும்பாலும் தனிமையும், அமைதியுமான சூழலையும், அது தரும் பேரின்பத்தையும் அனுபவிக்கவே விரும்புவார்கள். மிகப் பெரும்பாலானவர்களின் தேர்வு இயற்கை கொஞ்சி விளையாடும் குளுகுளு பிரதேசங்களாகத்தான் இருக்கும். தேனிலவு செல்வதற்கென சில மலைவாசஸ்தலங்கள் இங்குண்டு… அந்த நாட்கள் அந்த இளம் ஜோடிகளின் நினைவில் எப்போதும் நிற்கும்…

அவர்களின் கனவுகளுக்கேற்ப பட்ஜெட்டில் கைகொடுக்கின்றன திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள். அதற்கென சில டிராவல்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்து இணையர்களின் இன்பக் கனவுகளை பொக்கிஷ நினைவாக்கித் தருகின்றனர் இவர்கள். இது குறித்து ஹைபவர் பேக்கேஜ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளராகப் பணியில் இருக்கும் ஜெயஸ்ரீ அவர்களிடம் பேசியபோது, "பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஹனிமூன் என்றால் பெரும்பாலும் இந்தியாவிற்குள் இருக்கும் குளிர் பிரதேசங்களான காஷ்மீர், சிம்லா, குலுமனாலி, டார்ஜிலிங், அஸ்ஸாம், சிலாங், கூர்க், கோவா, ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போன்ற இடங்கள்தான் ஹனிமூனுக்கான இடங்களின் தேர்வாக இருக்கும்.

ஆனால் இப்போது இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதும் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதும் கிட்டதட்ட ஒரே செலவுதான் என்றாகிவிட்டது. இந்தியாவில் செலவு செய்யும் அந்தப் பணத்தில், வெளிநாட்டிற்கு விமானத்தில் பறந்து ஹனிமூன் கனவை நிறைவேற்றி வரவே பெரும்பாலான ஜோடிகள் விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் புதுமணக் கல்யாண ஜோடியுடன், நண்பர்கள் குழுவும் ஜோடியாக இணைய குழுவாக ஹனிமூன் டிரிப்பை அனுபவித்து குதூகலிக்கும் புது டிரெண்ட் ஒன்று இளைஞர்களிடம் பெருகுகிறது.

உங்கள் ஹனிமூன் டிரிப் இந்தியாவுக்குள் என்றால் 5 நாட்கள் வரை எடுக்கலாம். வெளிநாடு என்றால் குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தேவைப்படும். இதில் ஏ டூ இசட் அதாவது பாஸ்போர்ட்டில் துவங்கி, விசா, போகவர விமானச்செலவு, தங்க ஹோட்டல், உணவு, பிக்கப், டிராப் என எல்லாமும் அடக்கம். இவை அனைத்தையும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புடன் முழு உத்திரவாதத்தோடு செய்து கொடுக்கிறோம்.

சிலர் விமான டிக்கெட்டை ஆன்லைன் வழியாக அவர்களே முன்பதிவு செய்து விடுவார்கள். மற்ற விசயங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதற்கான தேவைகளை மட்டும் நாங்கள் செய்து கொடுப்போம். சிலருக்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற நாடுகளில் உறவினர் இருப்பார்கள். அவர்களுக்கு வெளியில் சென்று சுற்றிப் பார்க்க போக்குவரத்து வசதி மட்டும் வேண்டும் என்றால் அதையும் செய்கிறோம்.

ஒரு வாரம் முதல் பத்து நாட்கள்வரை தங்கள் ஹனிமூனை வெளிநாட்டில் தங்கிக் கொண்டாட, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு 50 ஆயிரமும் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றுவர 1 லட்சம் வரையும் ஆகும். இந்த ஹனிமூன் பேக்கேஜ் என்பது அவர்கள் தேர்வு செய்யும் ஃப்ளைட், ஹோட்டல், தங்கும் நாட்கள், உணவு, சுற்றிப்பார்க்க பயன்படுத்தும் போக்குவரத்து வசதி இவற்றைப் பொருத்து மாறுபடும். ஹனிமூன் ஜோடிகளின் பட்ஜெட்டை அறிந்து, அவர்கள் தேவைக்கேற்ப நாங்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.

அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத சில தருணங்களையும், அவர்கள் தங்கும் இடங்களில் உருவாக்கித் தருவோம். அவர்கள் தங்கும் அறையினை பெரும்பாலும் மலர்களால் கொஞ்சம் விசேஷமாக அலங்காரம் செய்து வைப்போம். ஸ்பெஷல் இன்வைட், ஒரு சில ஸ்பெஷல் தருணங்கள் என இல்வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அவர்களை இட்டுச் செல்வோம். ஒருசில இடங்களில் அவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்பது மாதிரியான சின்னச் சின்ன விளையாட்டுக்களிலும் விரும்பினால் ஈடுபட வைப்போம்.

50 ஆயிரம் ரூபாய் இருந்தால் உணவு, தங்குமிடம் சேர்த்து ஒரு ஜோடி 4 இரவுகள் 5 பகல்கள் தாராளமாகத் தங்கலாம். 1 லட்சம் இருந்தால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நன்றாகவே தங்கள் ஹனிமூனை அவர்கள் மறக்க முடியாத நினைவாக கொண்டாடி மகிழலாம். ஹனிமூன் தம்பதி எங்களை அணுகும்போதே, அவர்களிடம் எந்த மாதிரியான இடம் அவர்களின் தேர்வு, அங்கே அவர்களுக்கு என்ன தேவை என்பவற்றை அறிந்து, அவர்கள் பட்ஜெட்டையும் கேட்டு, எங்கள் கைவசம் உள்ள டூர் பேக்கேஜ் மற்றும் இடங்களைப் பற்றியும் அவர்களிடம் விவரிப்போம்.

அதில் ஒருசில மாற்றங்களை அவர்கள் விரும்பினால் அதற்கேற்ப அவர்கள் பயணத்தை வடிவமைத்துத் தருவோம். அவர்களின் ஹனிமூன் பயணம் எந்த மாதிரியாக இருந்தால் சிறக்கும் என்ற எங்கள் ஆலோசனைகளையும் வழங்குவோம். எங்கள் டிராவல் நிறுவனம் வெளிநாடுகளின் சுற்றுலா நபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் நாங்கள் செய்து தருவோம். இதில் போலியான ஒருசில இணையதள ஏமாற்றுப் பேர்வழிகளும் உண்டு.

உண்மையான இணையதளம் தானா? நம்பிக்கையானவர்களா என்பதை அறிந்து அவர்களை அணுக வேண்டும். ஆன்லைனில் எல்லாம் புக் ஆகி இருக்கும். ஆனால் அங்கே போய் பார்த்தால் அவர்களுக்கு புக்கிங் வந்திருக்காது. முக்கியமாக வெளிநாட்டுப் பயணங்களில் இடைத்தரகர்களால் ஏமாறாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் ஹனிமூன் பயணம் சிறப்பாய் அமைய எங்களிடம் நூறு சதவிகிதம் நம்பிக்கையும், பாதுகாப்பும் உண்டு" என்ற உத்திரவாதத்துடன் முடித்தார்.

(கனவுகள் தொடரும்!)

திருமணமான புதுமண ஜோடிகள் இருவர் மட்டும் தனியாக எங்காவது சென்று வருவதை நாம் தேனிலவு என்கிறோம். தேனிலவைக் கண்டுபிடித்த பெருமை ஜெர்மானியர்களுக்கானது. அதேபோல் பாபிலோனியர்களின் காலண்டர் கணக்கிடும் முறை சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. எனவே திருமணமான முதல் மாதத்தை இவர்கள் ஹனிமூன் மாதம் என்கிறார்கள். பாபிலோனியர்களில் மணமகளின்  தந்தை, திருமணத்திற்குப் பிறகு தன் பெண்ணிற்கு ஆல்கஹாலுடன் தேன் சேர்த்து அருந்தத் தருவது வழக்கமாக இருந்துள்ளது. திருமணமான தம்பதிகளுக்கும் திராட்சையுடன் தேன் கலந்து தரும் பழக்கமும் பாபிலோனியர்களிடையே இருந்துள்ளது.

ஹனிமூனுக்கு ஏற்ற வெளிநாடுகள்…

* வெனிஸ் காதலர்களின் கனவு தேசமான இத்தாலியில் உள்ளது. வெனிஸ் நகரின் வாய்க்கால்களின் உங்கள் துணையின் கரம் பிடித்து நீண்ட படகில் சவாரி செய்வது மனதுக்கு குதூகலமான அனுபவம்.

* நீங்கள் சாகசப் பயணத்தை விரும்பும் காதலர்களா? இருக்கவே இருக்கிறது ஃபுளோரிடா. அட்வென்ச்சர் சவாரி மற்றும் வால்ட் டிஸ்னிலேண்ட் காதலர்களின் சொர்க்கமாக இங்குள்ளது.

* இயற்கையாக அமைந்த ஒரு சில தீவுகளும் ஹனிமூன் ஜோடிகளுக்கு கைகொடுக்கின்றன. ஹவாய். பசுபிக் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள அழகிய தீவு. காதலர்களுக்கு அருமையான மூடை உருவாக்கி அவர்களை இயற்கையோடு இணைத்து, இன்ப நினைவுகளை அவர்களுக்குள் உருவாக்கும் அழகான தீவு இது.

* அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவே 700 குட்டித் தீவுகளை உள்ளடக்கிய பஹாமாஸ் தீவு ஒன்று உள்ளது. பல வண்ண நிறங்களில் பல விதமான அழகிய கடல் மணல்களை கொண்ட இத்தீவு காதலர்கள் கால் பதிக்கும்போதே பேரின்பத்தை உருவாக்கித் தந்துவிடும்.

-மகேஸ்வரி