இயற்கையோடு இணைந்த மலைவாழ்க்கை



நீலகிரி தோடர்கள்

நீலகிரி மாவட்டத்தின் மடிக்குள் புதைந்து கிடக்கும் இன்னொரு அதிசயம் தோடர் மலைவாழ் மக்கள் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியால், நகரங்களின் இயற்கை வளங்கள் அடையாளமின்றி அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாய் முளைத்து நிற்க, வானை முட்டும் உயரங்களில், சின்னச் சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்த தோற்றத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், மிகப் பெரிய பிரம்மாண்ட வீடுகளும், வீட்டின் உள்பகுதிகளை அலங்கரிக்கும் இன்டீரியர் டெக்ரேஷன்கள் என, கட்டிடக் கலை அசூர வளர்ச்சி கண்ட நிலையில்… நம் மண்ணில் தன் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வை இழக்க விரும்பாத ஒரு மனிதர் கூட்டம், இன்னும் தங்கள் பழமைகளோடு தங்கள் முழு உயரத்தையும் மடித்து, வளைத்து, தவழ்ந்து செல்லும் அளவிற்கு வீட்டின் வாசல்களைக் கொண்ட மூங்கில் குடில்களில்  வாழ்கிறார்கள். எஸ்கிமோக்களின் வீடுகளைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் அந்த வீடுகளுக்குள் சமவெளியில் வாழும் மனிதர்கள் உள்ளே நுழைந்து வெளிவருவதற்கு சிரமப்படுகிறார்கள். தோடர்களின் குடியிருப்புக்குப் பயணமானோம்.

கோத்தகிரியில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தோடர்கள் வசிக்கும் அவலாஞ்சி காடுகளை அடைந்தோம். சுற்றி மனித நடமாட்டமே இல்லாத, ஊரோடு தொடர்பற்ற நிலையில், கொடிய விலங்குகள் நடமாடும் அடர்த்தியான வனத்துக்குள், தங்களுக்கென சில வாழ்வாதாரங்களோடு, மூங்கில்கம்புகளால் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குடில்களுக்குள் வசிக்கிறார்கள் இவர்கள். தோடர் இனப் பெண்கள் சிலரிடம் நாம் பேசியபோது…

முஸ்குசின்
எனக்கு வயது 56. எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து இங்குதான் வசிக்கிறோம். நாங்கள் பேசும் மொழி தோடர் மொழி. தமிழும் எங்களுக்கு நன்றாகப் பேசத் தெரியும். இவை எல்லாம் எங்கள் மூதாதையர் வாழ்ந்த ஆதிகாலத்து வீடுகள். இவற்றை நாங்கள் இழக்க விரும்பவில்லை. எங்கள் வீடுகளின் அமைப்பு இப்படித்தான் இருக்கும். அவர்களின் நினைவாக நாங்கள் அப்படியே வைத்துள்ளோம். பிரம்பு, மூங்கில், புல், நாகமரப் பலகை இவைகளை வைத்து இந்த வீடுகளைக் கட்டுவோம். இப்போதைய தலைமுறை டெக்கு வீடுகளை கட்டிக் கொண்டாலும், எங்களுக்கு இந்த வீடுகளை இழக்க மனமில்லை. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அந்த குடிலுக்குள்தான் எங்கள் வாழ்க்கை. அத்தனைபேரும் அதுக்குள்ளேயே அடங்கிக் கொள்வோம். எங்கள் வாழ்வோ, சாவோ, எல்லாம் எங்களுக்கு இதற்குள்தான் நடக்கும்.

வித்யா
வயது 35. வெளியில் செல்லும்போது வெள்ளை நிற வேஷ்டி, துப்பட்டி அணிந்து தான் செல்வோம். கோயில் திருவிழா, சாவு, திருமணம் இவற்றிற்குச் செல்லும்போது எங்கள் முடிகளைச் சுருட்டிவிட்டுச் செல்வோம். வீட்டில் இருக்கும்போது சாதாரண உடைகளை அணிவோம். மேலே இந்த சால்வையைக் கொண்டு எங்கள் உருவத்தை மூடிக்கொள்வோம். இதில் உள்ள எம்ராய்டிங் வேலைப்பாடு களை நாங்களே செய்துவிடுவோம். எம்ராய்டிங் டிசைன் செய்வதுதான் எங்கள் பெண்களின் தொழில். இந்த சால்வைகளை, ஊட்டியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து இதில் கை தையல் போடுகிறோம். துப்பட்டா, மப்ளர், சால்வை போன்றவற்றை நாங்களே எம்ராய்டிங் டிசைன் செய்து விற்பனைக்கு கொண்டு செல்வோம்.

மற்ற நேரங்களில் தோட்ட வேலைகளுக்கும் செல்வோம். எங்கள் வீடுகளில் கேஸ் அடுப்பு, டி.வி. எல்லாம் உண்டு. சினிமா, சீரியல் எல்லாம் பார்ப்போம்.எல்லா நடிகர் நடிகைகளையும் தெரியும். நடிகை நயன்தாரா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்போது உள்ள பிள்ளைகள் படிப்பு, வேலை என சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். ஒரு சிலர் இன்ஜினியர், கலெக்டர், நர்ஸ், ஆசிரியர் என படித்து வேலைகளில் உள்ளனர்.

ஜேசுமல்லி,
எனக்கு வயது 60. எங்கள் குடியிருப்பின் பெயர் மந்த். எங்கள் மந்த் பெயர் முள்ளி மந்த். புலி, சிறுத்தை, யானை போன்ற விலங்குகளை அவ்வப்போது நாங்கள் பார்ப்பதுண்டு. புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, வரைமான், நரி, ஓணாய், பஃபூன் குரங்கு போன்ற விலங்குகள் அவலாஞ்சியின் காட்டில் உள்ளது. விலங்குகள் சோலைக்குள்தான் இருக்கும். எங்கள் குடியிருப்புக்கெல்லாம் வராது. நீலகிரி முழுவதும் நிறைய மந்த்கள் உண்டு. ஒரு மந்த்தில் இருந்து வேறு மந்திற்கு பெண் எடுப்பு, கொடுப்பு என எங்கள் திருமணம் நடக்கும்.

எங்களுக்கு வேற்று இனத்தோடு காதல் மணம் கிடையாது. செய்தால் தள்ளி வைத்து விடுவார்கள். வரதட்சணைப் பழக்கம் எங்களுக்கு இல்லை. பத்து வயதிலே இதுதான் பெண் மாப்பிள்ளை என நிச்சயம் செய்துவிடுவோம். பிடித்து இருந்தால் அவர்களுக்குள் திருமணம். பிடிக்கவில்லை என்றால் வேறு ஒருவருக்கு திருமணம். திருமணத்தையும் இளம் வயதில் செய்துவைப்போம். எங்கள் திருமணம் நாக‌மரத்துக்கு அடியில் நடக்கும். கல்யாணம், கோயில் விழாக்களில் நாங்களே பாட்டுப்பாடி நடனம் ஆடுவோம். எங்கள் மந்துகளில் முத்து நாடு மந்து தான் பெரியது.

அங்குதான் திருவிழா நடக்கும். எங்கள் திருமணத்தில் பச்சை இலையை வில் மாதிரி வளைத்து மணமகன் கொண்டு வந்து கல்யாணப் பெண்ணிடம் தருவார். வில்தான் எங்களின் திருமண அடையாளம். நேதாஜிவனத்தில் ஜீப் ஓட்டுநர் பூர்வகுடிகளான எங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில்,  இ.டி.எம்.சி எனப்படும் எக்கோ டூரிஸம் மேனேஜ்மென்ட் கமிட்டி அமைத்து அரசும், வனத்துறையும் இணைந்து எங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

நான் அவலாஞ்சி காட்டில் சுற்றுலா வாகனத்தை ஓட்டும் டிரைவராக பணியில் உள்ளேன். அவலாஞ்சி வனம் சுற்றுலாத் தளமாக இருப்பதால், செக்போஸ்ட், வாகனம் இயக்குவது, சுற்றுப்புறத் தூய்மை, டிக்கெட் கொடுப்பது போன்ற பணிகளில் எங்கள் இனத்து மக்கள்தான் உள்ளோம். எங்கள் தோடர் இனப் பெண்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வருகிறார்களா என்று சோதிப்பது, சுற்றுலாவாசிகளை கவனிப்பது, உள்ளே இயங்கும் கேன்டீன், டீக் கடை போன்றவற்றில் உள்ள‌ வேலைகள் என பலவிதமான வேலைகள் தரப்பட்டுள்ளன‌.

சுற்றுலா மூலம் வரும் வருமானம் எங்களின் முன்னேற்றத்திற்கே செலவாகிறது. அவலாஞ்சி வனப் பகுதியில் 25 நபர்கள் வரை பணியில் உள்ளோம். காட்டு விலங்குகள் வேட்டையாடுதலை தடுப்பது, மரம் வெட்டுதலை தடுத்தல், இயற்கையினை பாதுகாத்தல், காடுகளை தீப்பற்றிக் கொள்ளாமல் கவனிப்பது போன்ற வேலைகளையும் நாங்கள் கவனிக்கிறோம். எங்களின் தினக் கூலி 400 ரூபாய்.

எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலமும் உண்டு. ஆனால் பட்டா இல்லை. இருக்கும்வரை பரம்பரையாக அனுபவிக்கலாம் ஆனால் விற்க முடியாது. தோட்டங்களில் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை பயிரிட்டு சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். தேயிலைகளைப் பறித்து, அருகில் உள்ள டீ ஃபேக்டரிகளில் கொடுப்போம். எங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக தினமும் பத்து முதல் 15 கிலோ மீட்டர் பயணிக்கிறார்கள். இங்கிருந்து 4 பேர் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள்.

- மகேஸ்வரி
படங்கள்: கவின் மலர்


தோடர்கள் தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர். இவர்கள் எருமை மாடுகளையே பெரிதும் வளர்க்கின்றனர். இவர்களது வாழ்க்கையும் எருமை மாடுகளைச் சுற்றியே இருக்கின்றது. இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர். இவர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி டிசம்பர் மாதம் மொற் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதற்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் உள்ள அவர்களின் கோயிலில் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இவர்கள் ஆட்டம், பாட்டங்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தோடர் இனப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர்கள். பருவ வயதுப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டும் வழக்கம் உள்ளது.

தோடர்களில் வயதில் இளையவர்கள் முதியவர்களைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டுமாம். முதியவர்கள் இளையவர்களின் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்களாம். இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். அவர்களின் இனத்துக்குள் திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

ரஞ்சித், தூரிகை அமைப்பு
தூரிகை என்பது ஓவியம் சார்ந்த வார்த்தை. வாழ்க்கை எல்லாவித வர்ணங்களும் கலந்த கலவையான, வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள் இணைந்து துவங்கிய அமைப்பு இது. நீலகிரி மலைவாழ் மக்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பூர்வ குடிகளான ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் கல்விக்காக அவர்களை முன்னேற்றி, விழிப்புணர்வு தர குழந்தைகள் மத்தியில் எங்கள் அமைப்பு நிறைய வேலைகள் செய்கிறது.

குழந்தைகளின் வெளிப்பாட்டுத் திறனை வளர்க்கிறோம். மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலும், அவர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் நூலக வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில், இவர்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்து தருகிறோம். எங்களின் பணி தோடர், கோத்தர், குரும்பர் இன மக்களிடையே நடைபெறுகிறது. இம்மக்களின் குழந்தைகள் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களை இன்னும் மோட்டிவேட் செய்தால் மிகவும் நன்றாக வருவார்கள்.

ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்த நான் பொறியியல் பட்டதாரி. என் விருப்பம் இது. எனவே சாஃப்ட் ஸ்கில் டிரெயினராக பெங்களூருவில் டிரெயினிங் எடுத்துவிட்டு, அதைத் தொடர்ந்து மலைவாழ் குழந்தைகள் மத்தியில் வேலை செய்கிறேன். அவலாஞ்சியில் ETMC (Echo Tourisum Management Committee). 2012ல் ஆரம்பிக்கப்பட்டது. அரசுடன், வனத்துறையினர் இணைந்து ஆரம்பித்த இந்த ETMC திட்டத்தை தோடர் இன மக்களே முழுக்க முழுக்க நிர்வகிக்கிறார்கள். இந்த வனப்பகுதிதான் அருகில் உள்ள தெப்பக்கோடு மந்த், முள்ளி மந்த் தோடர் மக்களின் வாழ்வாதாரம் இந்த அவலாஞ்சி வனம். ஈ,டிஎம்.சி வெல்ஃபேர் மூலமாக இங்குள்ள 12 குழந்தைகளுக்கு வருடம் முழுவதற்கும்  படிப்புச் செலவு, போக்குவரத்து செலவு போன்றவை வழங்கப்படுகின்றன‌.

மேலும் தோடர் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது, அவர்களின் பணத் தேவைக்கு 30000 வரை வட்டியின்றி கடன் தருவது. பெண்களுக்குள் சுய உதவிக் குழுவும் அமைத்துள்ளனர். அவலாஞ்சி வனத்தை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பாக, ஆண்கள் வேன், ஜீப் போன்றவற்றை இயக்குகின்றனர். வனத்துக்குள் பெண்கள் இயக்கும் கேன்டீன் ஒன்றும் செயல்படுகிறது. சுற்றுப்புற தூய்மை இவர்களால் கண்காணிக்கப்படுகிறது. சுற்றுலா வருபவர்களை கண்காணிப்பதுடன், நுழைவுச் சீட்டு வழங்கும் பணிகளையும் பெண்கள் செய்கின்றனர்.

காலிஃபிளவரை அடுக்கி வைத்ததுபோன்ற வடிவில் காட்சி தரும் இந்த அடர்ந்த சோலைக்காடுகளின் மொத்த நிலப்பரப்பு 2400 செக்டார். மொத்தம் 5930 ஏக்கர் பரப்பில் அகன்று விரிந்து காட்சி தரும் இந்த அவலாஞ்சி வனம் பார்க்க கண்கொள்ளா அழகு. இங்குள்ள நீர் ஆதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோலைக்காடுகளுக்கு கீழ் உள்ள நிலம், ஸ்பான்ஜி கிராஸ் ஃபாரஸ்ட் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள புல் மழை நீரை பஞ்சு மாதிரி உறிஞ்சி தனக்குள் சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக, துளித் துளியாக வெளியேற்றும். வருடம் முழுவதும் நீர் வற்றாமல், அணைகளில் தண்ணீர் தேங்கி இருப்பது இதன் சிறப்பம்சம். அப்பர் பவானி அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் ஐந்து மின் நிலையங்களில் மின்சாரம் எடுக்க பயன்படுகிறது.