ஆஸ்கார் பெண்கள்



90 வது ஆஸ்கர் விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவின் சிறப்பாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தோடு அவருக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்ட நிகழ்வு மறக்க முடியாத நினைவாக இந்தியர்களுக்கு மாறிப்போனது. மேலும் இந்த ஆஸ்கரில் பெண்களின் சக்தி குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் பலவிதமான அங்கலாய்ப்புகளை சந்தித்ததுதான் சிறப்பே. உதாரணத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் என சாண்ட்ரா புல்லக் அறிவித்த பட்டியல், எம்மா ஸ்டோனும் அதே பாணியில் ’ இந்த நான்கு ஆண்கள் மற்றும் கிரேட்டா கெர்விக்’ ஆகியோர் இணைந்து இந்த வருடத்திற்கான மாஸ்டர் படைப்புகளை உருவாக்கியுள்ளனர் என்றார்.

ஃப்ரேன்ஸஸ் மெக்டோர்மண்ட்
ட்ரிபிள் க்ரௌண்ட் நடிகை(Triple Crowned Actress), அதாவது மூன்று முறை முடிசூட்டப்பட்ட நடிகையாக இரண்டு முறை வலம் வந்தவர் இந்த மெக்டோர்மண்ட். ஒரே படத்திற்காக ஆஸ்கர், எம்மி விருது மற்றும் டோனி விருதை ஒரே ஆண்டில் பெற்ற நடிகர், நடிகைகளை ட்ரிபிள் க்ரௌண்ட் என அழைப்பதுண்டு. அப்படிதான் மெக்டோர்மண்ட் 1997ல் ‘ஃபர்கோ’, மற்றும் 2018ல் ’தி பில்லியன்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி’ படத்திற்காக பெற்றிருக்கிறார். மேலும் ஆஸ்கரை பெற்றுக்கொண்ட மெக்டோர்மண்ட், தன்னுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்ட மற்ற நடிகைகளையும் எழுந்து நிற்கச் சொல்லி அவர்களையும் பாராட்டு மழையில் நனைத்தார்.

மெக்டோர்மண்டின் சிறப்பே அவருடைய மேக்கப் அணியா முகம்தான். படங்களில்கூட அதிகம் மேக்கப் இல்லாமல் இயற்கையாக வரும் மெக்டோர்மண்ட் ஆஸ்கர் மேடையிலும் தன் உண்மையான முகத்தைக் காட்டத் தயங்காதது குறித்து பலரும் பாராட்டினர்.மேலும் மெக்டோர்மண்ட்  பெற்ற ஆஸ்கர் விருது, விழாவின்போது காணாமல் போய் அதுவும் ஒரு பெரிய ட்ரெண்டாகி மீண்டும் கிடைத்தது அடுத்த சுவாரஸ்மான மொமெண்ட் .

அல்லீசன் ஜேன்னி
‘ஐ, டோன்யா’ படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஆஸ்கர் பெற்றவர். வயது 58, சுமார் எழுபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். எனினும் இப்போதுதான் அவருக்கு ஆஸ்கரில் முதல் நாமினேஷனும் விருதும் கிடைத்திருக்கிறது. அல்லீஸனின் சிறப்பே அவருடைய காமெடி ஸ்பெஷல்தான். ஆஸ்கரைப் பெற்றுக்கொண்டு மைக்கிற்கு அருகில் வந்தவர் ‘ I did it all by myself’ (இது எல்லாவற்றையும் நானேதான் செய்தேன்) என்னும் இந்த வரிகள் இப்போது இணையத்தில் புது ட்ரெண்டாக மாறியிருக்கின்றன. டோன்யா ஹார்டிங்ஸ் என்னும் புகழ்பெற்ற ஸ்கேட்டிங் வீராங்கனையின் பையோபிக் படமே ‘ஐ, டோன்யா’. இதில் டோன்யாவின் அம்மா லவோனா ஃபே கோல்டன் பாத்திரத்தில்தான் அல்லீஸன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கிறிஸ்டென் ஆண்டர்ஸன் லோபஸ் 
அமெரிக்க பாடலாசிரியர். சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கள் மட்டும் இரண்டு முறை பெற்றிருக்கிறார் லோபஸ். 2013ல் வெளியான ‘Frozen’ படத்தின் ‘Let it Go’ பாடலுக்கும், இந்த வருடம்  சிறந்த அனிமேஷன் திரைப்படமாக விருது பெற்ற ‘Coco’ படத்தில் இடம்பிடித்த ‘Remember me’ பாடலுக்காகவும் என சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றிருந்தார்.  இந்தப் பாடல் கணவன்- மனைவி இருவருமாக பாடி சேர்ந்து விருது பெற்றதால் லோபஸின் ஆஸ்கர் பேச்சு இப்படி இருந்தது. ‘இந்த விருதை நாங்கள் இருவரும் இணைந்து பெற்றுக்கொள்வதிலேயே தெரிகிறது 50-50 பாலின சமன்பாடு.’ இதன் மூலம் பாலின சமன்பாட்டில் உலகம் எங்கிருக்கிறது என யூகிக்க முடிவதாகக் கூறினார் இந்த 45 வயது பாடலாசிரியர் லோபஸ்.

அந்த ஒற்றைப் பெண்கள்
ஒரு பரிந்துரைப் பட்டியலில் நான்கு ஆணுக்கு ஒரே பெண்ணாக எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த ஒற்றைப் பெண்கள் இதோ இவர்கள் இருவர்தான்.

கிரேட்டா கெர்விக்
சிறந்த இயக்குநர் பரிந்துரையில் ஐந்தில் ஒரே பெண்ணாக ‘லேடி பேர்ட்’  படத்திற்காக இடம்பிடித்திருந்தார். சிறந்த இயக்கம் மட்டுமின்றி சிறந்த ஒரிஜினல் திரைக்கதை பரிந்துரைப் பட்டியலிலும் கிரேட்டா கெர்விக் இடம்பிடித்ததுதான் அடுத்த சிறப்பு. 34 வயதில் சிறந்த இயக்கம், திரைக்கதை என இரண்டு பரிந்துரைகளில் இடம்பிடித்த கிரேட்டாவை பலரும் எடுத்துக்காட்டான பெண்ணாகவே பாராட்டி வருகிறார்கள்.

ரேச்சல் மோர்ரிஸன்
39 வயது கேமரா பறவை. இந்த ஆஸ்கர் விருதில் சிறந்த ஒளிப்பதிவு பரிந்துரைப் பட்டியலில் ஒரே பெண்ணாக இடம்பிடித்திருந்தார். ‘மட்பௌண்ட்’ படத்தில் இவருடைய ஒளிப்பதிவு வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. மேலும் சமபாலீர்ப்பாளரான மோரிஸன், ரேச்சல் என்னும் பெண்ணை திருமணம் செய்தவர். சுமாராக 45 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பரிந்துரைப் பட்டியல் வரை வந்திருக்கும் ரேச்சலுக்கு ஆஸ்கர் விருது அவ்வளவு தூரமில்லை.  

இதுமட்டுமா? முதல்முறையாக ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த எட்டு பேரில் ஐந்து பேர் பெண்கள். சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் அல்லீஸன் ஜேன்னி (ஐ, டோன்யா), லெஸ்லி மேன்வில்லே(தி ஃபேண்டம் த்ரட்),  லாவுரி மெட்கால்ஃப் ( லேடி பேர்ட்) இடம்பிடித்திருந்தனர். அதே போல் சிறந்த ஒரிஜினல் பாடல் பரிந்துரை பட்டியலில் மேரி ஜே(மட்பவுண்ட்), சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் மார்கட் ரோப்பி (ஐ,டோன்யா) என ஐந்து பெண்களும் முதல் முறையாக ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ரேச்சல் ஷெண்டான்
லைவ் ஆக் ஷன் குறும்பட பட்டியலில் விருதை தட்டிச் சென்றது  ‘தி சைலன்ட் சைல்டு’. காது கேளாத அப்பாவிற்காக சைகை மொழி கற்றுக்கொண்ட சிறுமியான ரேச்சல், தன் சொந்த அனுபவத்தைக் கொண்டே இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.  இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு காது கேளாத சிறுமி மெய்சி ஸ்லை நடிகையாக நடித்திருந்தார். இயக்குநர் கிறிஸ் ஓவர்டனுடன் மேடையேறிய ரேச்சல் சைகை மொழியிலேயே நன்றி சொல்லி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தினார். காது கேளாத குழந்தைகளுக்காக பல சமூக சேவைகளை செய்து வருகிறார் ரேச்சல்.

- ஷாலினி நியூட்டன்