செல்லுலாய்ட் பெண்கள்



அதான் எனக்குத் தெரியுமே... டி.பி. முத்து லட்சுமி

பா.ஜீவசுந்தரி - 33

அகன்ற முகம், சில நேரங்களில் மிரட்சியும் மருட்சியுமாய்ப் பார்க்கும் கண்கள், அதில் அலட்சியம் தொக்கி நிற்கும் பார்வை, கள்ளமற்ற வாய் கொள்ளாச் சிரிப்பு, நளினம் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அசட்டையான நடை, வில்லத்தனம் சில நேரங்களில் எட்டிப் பார்த்தாலும் பல நேரங்களில் அசட்டுத்தனமும் அறியாமையும் வெளிப்படும் விதமான பாத்திரங்களைத் தாங்கி அதை வெற்றிகரமாக வெளிப்படுத்தி ரசிகர்களை மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் நடிப்பு. இந்த ஒட்டுமொத்தக் கலவையின் மறுபெயராய் விளங்கியவர்தான் நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ரசிகர்களை எப்படி தன் இயல்பான நடிப்பால் வாய் விட்டுச் சிரிக்க வைத்தாரோ அப்படியே அவரும் சிரிப்பதுதான் அழகு. ஏறத்தாழ முன்னூறு படங்களுக்கு மேல் நடித்த பின்பும் அதே எளிமை மாறாத் தோற்றம். நகைச்சுவைப் பாத்திரங்களை அவர் ஏற்றபோது எவ்வாறு அதை ஏற்றுக் கொண்டாடினார்களோ அவ்வாறே அவர் வில்லத்தனம் செய்தபோதும் ரசித்தார்கள், கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்களும் ரசிகைகளும்.

தென் கோடியிலிருந்து துவங்கிய பயணம்
தமிழகத்தின் தென்கோடியாம் தூத்துக்குடியில் பொன்னையா பாண்டியர்  சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு ஒரே மகளாகப் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்டவர். எட்டாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. படிக்கும் காலத்திலேயே பள்ளியின் விழாக்களில் ஆட்டம் பாட்டம் போன்றவற்றில் நாட்டம் இயல்பாகவே அவருக்கு ஏற்பட்டது. அத்துடன் ஊர்த் திருவிழாக்களில் நடத்தப்பட்டு வந்த நாடகங்களும் கண்ணையும் கருத்தையும் ஒருசேர ஈர்த்தன. அது படிப்பை வெகுவாக பாதித்தது. வேளாண்மைக்குடியில் பிறந்த பெண் குழந்தை ஆடுவதையும் பாடுவதையும் உற்றார் உறவினர் மட்டுமல்ல, பெற்ற தாய் தகப்பனும் ரசிக்கவில்லை. ஆனால், முத்துலட்சுமியின் மனது அதையே நாடியது. அத்துடன் அவ்வப்போது பார்த்து ரசித்த திரைப்படக் காட்சிகளும் மனதுக்குள் நெருக்கமாக வந்து வந்து போயின.

ஆசை வெட்கமறியாது என்பது போல, அனுமதி கிடைக்காது என்று தெரிந்திருந்தும் படிக்கும்போதே ஆடல், பாடலைக் கற்றுக்கொண்டு சினிமாவில் சேர வேண்டும் என்ற தன் ஆசையைத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வீட்டில் சொன்னார். அவ்வளவுதான், வீடு அதிர்ச்சியில் உறைந்து போனது. ’எளிய விவசாயக் குடும்பத்துப் பெண்ணுக்கு இந்த ஆசையெல்லாம் வரலாமா? காலாகாலத்தில் கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள் என்று பெண்ணுக்கான கடமைகளை விடுத்து இப்படி சினிமாவில் கூத்தாடுவது பற்றியெல்லாம் யோசிக்கலாமா?’ என்று எடுத்துச் சொல்லி சினிமா ஆசைக்கு அணை போட முயற்சி செய்தனர் அப்பனும் ஆத்தாளும்.

முத்துலட்சுமியின் சினிமா ஆசையின் பின்னணியில் அவரது தாய் மாமன் தூத்துக்குடி எம். பெருமாள். (இவரது மகன்தான் பின்னாளில் இயக்குநர் டி.பி.கஜேந்திரன்) இருந்தார். தமிழ் சினிமா முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியின் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். அதுதான் முத்துலட்சுமியிடம் சினிமா ஆசையையும் விசிறிவிட்டு தீக்கங்கைப் பற்ற வைத்தது. தன் மாமனைப் போலவே தானும் சினிமாவில் நடனமாட முடியும், பொருளும் புகழும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் அவருள் விதைத்து வளர்த்து விட்டது. 17 வயது இளம்பெண் முத்துலட்சுமி, சினிமா ஆசை மனதில் கொழுந்து விட்டெரிய, வீட்டுக்குத் தெரியாமல், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் துணிச்சலுடன் சென்னைப் பட்டினத்துக்கு ரயிலேறி விட்டார்.

பட்டினப் பிரவேசமும் ஜெமினி ஸ்டுடியோ அறிமுகமும்
நடனக் கலைஞரான மாமா பெருமாளைச் சந்தித்து தன் சினிமா மீதான காதலை வெளிப்படுத்த மாமா அசந்து போனார். முதலில் அவரது அசட்டுத் துணிச்சலைக் கடிந்து கொண்டாலும், அடுத்ததாக ஆதரவும் பராமரிப்பும் அளிக்கத் தவறவில்லை. நடனப் பயிற்சியையும் அவரே அளித்தார். ஓரளவு பயிற்சி பெற்ற பின் பெருமாளின் சிபாரிசில் ஜெமினி ஸ்டுடியோவில், மாதம் 65 ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்தது. அதே ஆண்டில் வெளியான ஜெமினியின் பிரமாண்டத் தயாரிப்பான ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் இடம்பெறும் பிரமாண்ட முரசு நடனக் காட்சியில் நடனமாடும் குழுவினரில் முகம் அறியாத ஒருவராக நடனமாடினார். அத்துடன் கதாநாயகியாக நடித்த டி.ஆர். ராஜகுமாரிக்கு டூப் ஆகவும் நடனமாடினார்.

பின்னாட்களில் முத்துலட்சுமி இதைப் பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார். இருக்காதா பின்னே ? ! அந்தக் கால கனவுக் கன்னி என்று கொண்டாடப்
பட்ட ஒருவருக்கு பதிலியாகத் திரையில் தோன்றுவதும் திரை வாய்ப்பை நோக்கிக் காத்திருக்கும் அறிமுக நடிகை ஒருவருக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்தானே… முதல் சினிமா வாய்ப்பு இப்படியாக ஜெமினி நிறுவனத்தால் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. கூட்டத்தில் ஒருவராக நிற்பதை முத்துலட்சுமியும் விரும்பவில்லை. விளைவு ஓராண்டுக்குள் அங்கிருந்து வெளியேறி பிற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பம் போல் தொடர்ச்சி இல்லை
கூட்டத்தில் ஒருவராக, நடனக்குழுவில் ஆடுபவராக மட்டுமே இருந்தவருக்குத் தனித்து நின்று தன் திறமையைக் காட்டும் வாய்ப்பு 1951ல் கிடைத்தது. சி.என்.அண்ணாதுரை எழுத்தில் உருவான ‘ஓர் இரவு’ படத்தில் ஜமீன்தார் கருணாகரத் தேவராக நடித்த டி.கே.சண்முகத்தின் மனைவி பவானி வேடம். பின்னாட்களில் நாம் நகைச்சுவை நடிகையாகப் பார்த்து ரசித்த முத்துலட்சுமி இல்லை அவர். மெலிந்த தேகத்துடன், சோகம் கப்பிய கண்களுடன் துயரம் உருக்கொண்ட பெண்ணாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றி, கொல்லப்படும் வேடம். ஆனால், அதன் பிறகு அவருக்குக் கிடைத்தவை அனைத்துமே நகைச்சுவை கொப்பளிக்கும் வேடம். வசனம் பேச வாய்ப்பில்லாத காட்சிகளில் கூட, தன் உருட்டி விழிக்கும் பார்வை, அலட்சியமான உடல்மொழி போன்றவற்றால் நடிப்பை நிறைவாக்கி நம்மை அசத்தி விடுவார்.

நகைச்சுவையால் மகிழ வைத்த பட்டாளங்கள்..
நகைச்சுவை வளம் தமிழ்ப்படங்களில் நிரம்பியிருந்த காலம். தமிழ்ப் படங்களைப் போல நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் வேறு எந்த மொழிப் படங்களிலும் இல்லை. அவ்வளவு நடிகர்கள், நடிகைகள் நம்மிடம் இருந்தார்கள். ஃபிரண்ட் ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன், குலதெய்வம் ராஜகோபால், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேலு, வி.கே.ராமசாமி, ஏழுமலை, சந்திரபாபு, நாகேஷ் என அத்தனை நகைச்சுவை நடிகர்களுடனும் நடித்தார்.

அதிலும் குறிப்பாக இணையாக நகைச்சுவையை வாரி வழங்கியவர்கள் காளி என். ரத்தினம்- சி.டி. ராஜகாந்தம், என்.எஸ். கிருஷ்ணன்- டி.ஏ. மதுரம், கே.ஏ.தங்கவேலு- எம்.சரோஜா மறக்க முடியாதவர்கள். அதே வரிசையில் ஏ.கருணாநிதி - டி.பி.முத்துலட்சுமியையும் சேர்க்கலாம். அந்த அளவுக்கு மந்திரிகுமாரி, சர்வாதிகாரி, நான் பெற்ற செல்வம் என ஏராளமான படங்களில் இருவரும் இணைந்து நகைச்சுவை விருந்து படைத்திருக்கிறார்கள். அத்துடன் அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரின் படங்களிலும் முத்துலட்சுமியின் பங்களிப்பு இருந்தது.

கதாநாயகியாகும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைக்கவேயில்லை. ஒரு விதத்தில் அது நல்ல விஷயம் என்றே தோன்றுகிறது. கதாநாயகியாக அவர் மாறியிருந்தால், என்றைக்கோ அவர் காணாமல் போயிருப்பார். நகைச்சுவை நடிகையாக அவர் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியதாலேயே நீடித்து நிலைத்து நிற்க முடிந்தது. சிறிய வேடங்கள் என்று எதையும் ஒதுக்கி விடாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நிறைவாகவும் அவர் செய்திருக்கிறார்.

நடிப்புக்கு பெரிதென்றும் சிறிதென்றும் அளவு உண்டா?
‘நவராத்திரி’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் விடுதியில் கதாநாயகி சாவித்திரி ஓர் இரவில் தங்க வைக்கப்படுவார். அந்தக் காட்சி மறக்க முடியாத எப்போதும் நினைவில் நிலைத்திருக்கும் காட்சியாக அமைந்தது. படத்தில் சில மணித் துளிகளே வந்து போகும் காட்சி என்றாலும், அதில் நடித்த நடிகையர் அனைவரும்  சாவித்திரியையும் தவிர்த்து  அந்தக் காட்சியை நிறைவாக்கித் தந்திருக்கிறார்கள் தங்கள் உன்னதமான நடிப்பால். பல படங்களில் இடம்பெற்ற பாடல்களின் கலவையாக ஒரு பாடலும் இடம் பெற்றது.

அதிலும் இறுதியில் மேற்கத்திய இசைக்கு அவர்கள் அனைவரும் இணைந்து ஆடும் ஆட்டமும் மறக்க முடியாதது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்தப் பலரில் ஒருவராக, அரசியல் பைத்தியமாக அந்தக் காட்சியில் தோன்றி நடித்தார் முத்துலட்சுமி. நெருப்பில் குஞ்சென்ன மூப்பென்ன? நடிப்பும் அப்படியே. அல்லி ராஜ்யத்தை நினைவுபடுத்தும் ‘ஆரவல்லி’ திரைப்படத்திலும் அரண்மனைக் காவலர்களில் ஒருவராக சிங்காரவல்லி என்ற பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பார்.

காக்கா ராதாகிருஷ்ணன்  ஏ.கருணாநிதி இடையில் இவரைத் திருமணம் செய்து கொள்ள நடக்கும் போட்டியும் அதில் வித்தியாசமானது. ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் அத்தை மகள் எம்.என்.ராஜமும் மாமன் மகன் எம்.என்.நம்பியாரும் படிக்கப் போன இடத்தில் காதல் கொள்ள விரோதிகளான இரு குடும்பமும் அவர்கள் இருவர் காதலையும் ஏற்க மறுக்கும். இந்த இரண்டு வீட்டின் வேலைக்காரர்களான ஏழுமலையும் முத்துலட்சுமியும் அதே விரோதத்தைத் தங்களுக்குள் தொடர்வதும் சண்டை போட்டுக் கொள்வதும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இரு வருக்கும் ‘தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம்’ என்று ஒரு டூயட் பாடலும் படத்தில் இடம்பெறும். சண்டைக்காரர்கள் பின்னர் சமாதானமாகி காதலர்களும் ஆவார்கள்.

உச்சபட்ச நகைச்சுவை ‘அதான் எனக்குத் தெரியுமே’
முத்துலட்சுமியின் நகைச்சுவைக் காட்சிகளில் உச்சம் ‘அறிவாளி’ படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து செய்யும் பூரி சுடும் காட்சி. எது ஒன்றைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், அரை வேக்காட்டுத் தனமாக எல்லாம் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ளும் அரைகுறைகளைப் பிரதிபலித்திருப்பார். பூரி செய்யச் சொல்லும் தங்கவேலுவுக்கு அவர் அளிக்கும் பதிலான, அதான் எனக்குத் தெரியுமே’ என்பதும், அதற்கு தங்கவேலு பதிலடியாக அப்புறம் என்ன என்று கேட்கும்போது, ‘அதுதாங்க தெரியாது’ என்று அப்பாவித்தனமாக பதிலளிப்பதும் இன்றைக்கும் ரசித்துச் சிரிக்கும் காட்சிகள். அந்தக் காலத்தில் இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் கூட, வானொலி மூலம் இந்தக் காட்சியைக் கேட்டு ரசித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தக் காட்சியின் வசனங்கள் பரவலாக மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. 

கல்வியறிவற்ற ஒரு பெண், படித்த தங்கவேலுவை மணந்துகொண்டு அவருக்குப் பணிவிடை செய்ய முயலும் ஒவ்வொரு காட்சியும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் ரகம்தான். ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ குறளுக்கு தங்கவேலு கொடுக்கும் விளக்கமும், அதற்கு முத்துலட்சுமி தன் பாணியில் முதுகுக்குப் பின் தூங்கி முகத்துக்கு முன் எழுவது பற்றி சொல்வதெல்லாம் கிளாசிக் வகை நகைச்சுவை. ‘இருவர் உள்ளம்’ படத்தில் குடும்பத்தின் மூத்த மருமகளாக, எம்.ஆர்.ராதாவின் மனைவியாகத் தோன்றுவார். இவர்கள் இருவருக்குமான ‘புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை’ பாடலும் கலகலப்பூட்டும் ரகம்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலும் வெள்ளையம்மா (பத்மினி) வளர்க்கும் அடங்காத காளையை அடக்க வரும் வீரனான வெள்ளையத்தேவனைப் (ஜெமினி கணேசன்) பார்த்ததும் “வெள்ளையம்மா, வந்துதுடியம்மா உன் காளைக்கு ஆபத்து’ என்று அவர் உதிர்க்கும், வசனமும் வெகு பிரபலம். ‘ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஆசையாகத் தண்ணி மொண்டு’ என்று ஒரு பாடலும் உண்டு. இவருடன் ஏ.கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், தாம்பரம் லலிதா ஆகியோர் இப்பாடல் காட்சியில் இடம் பெற்றார்கள். பல படங்களில் அப்போதைய கதாநாயகிகளான சாவித்திரி, அஞ்சலிதேவி, மைனாவதி, பத்மினி, வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, சரோஜா தேவி, எம்.என்.ராஜம் என அனைவருக்கும் உற்ற தோழியாக நடித்திருக்கிறார். ’மனோகரா’ படத்தில் நகைச்சுவையுடன் வில்லியாகவும் நடித்திருக்கிறார். 50களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் 70களில் நிறைவுற்றது.

திரையுலக நகைச்சுவையும் அசல் கணவரும்
எம்.ஜி.ஆரின் சொந்தத் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான ‘நாடோடி மன்னன்’ படத்தில் ஆதிவாசிப் பெண்ணாக நடித்திருப்பார். நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுமென்று ‘புருஷன்… புருஷன்… ' என்று மந் திரம் போல் உச்சரித்தவாறே பூசை செய்வார். இதைக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். கேலி செய்ததுடன், உனக்கு நிஜமாகவே நல்ல புருஷன் அமைய வேண்டுமென்றும் வேண்டிக்கோ’ என்று குறிப்பிடுவாராம்.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் முயற்சியால் முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம், ஒரு வகையில் எஸ்.எஸ்.ஆரின் உறவினர். அரசுப் பணியில் இருந்தவர். பின்னர் ‘தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம்’ நிறுவி அதன் தலைவராகவும் இருந்தவர். இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை. முத்துலட்சுமி திரையுலகில் நுழைவதற்குக் காரணமாக இருந்த நடனக்கலைஞரான மாமா தூத்துக்குடி பெருமாள் அவர்களின் மகன் டி.பி.கஜேந்திரனை தங்கள் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள். முத்துலட்சுமியின் கலையுலக வாரிசாகவும் திகழும் கஜேந்திரன் இயக்குராகப் படங்களை இயக்கியவர். தன் ஏழு வயதிலிருந்தே வளர்ப்புத் தாயார் முத்துலட்சுமியுடன் ஸ்டுடியோக்களை வலம் வந்ததாக கஜேந்திரன் குறிப்பிட்டிருப்பது கவனம் கொள்ளத்தக்கது. முத்துலட்சுமியின் கலையுலகச் சேவையைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது, கலைவாணர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தொடர்ச்சியாக வந்த நகைச்சுவை நடிப்பின் கண்ணி
70களுக்குப் பின் நடிக்கவில்லை என்றாலும் அனைவரும் அவரை நினைவில் வைத்திருக்க அவருடைய படங்கள் உதவியாக இருக்கின்றன. கலைஞர்கள் சிரஞ்சீவியானவர்கள். முதுமை மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக 2008 ஆம் ஆண்டில் தன் 77ஆவது வயதில் மறைந்தார். அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம், டி.ஏ.மதுரம், மங்களம், கே.ஆர்.செல்லம், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எம்.எஸ். சுந்தரிபாய், ஜி.சகுந்தலா என பல நகைச்சுவை நடிகைகள் தமிழில் தொடர்ச்சியாக வந்த மரபின் நீட்சியாக, அடுத்ததோர் கண்ணியாகத் திரையுலகில் வலம் வந்த முத்துலட்சுமிக்குப் பின்னரும், மனோரமா, அம்முக்குட்டி புஷ்பமாலா, காந்திமதி, குமாரி சச்சு, ரமாபிரபா, வனிதா, எஸ்.ஆர்.விஜயா, பிந்து கோஷ், கோவை சரளா, ஷர்மிலி, ஆர்த்தி என எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்ணி மேலும் தொடர வேண்டும்.

இப்போதும் வள்ளுவர் கோட்டத்தைக் கடந்து தியாகராய நகர் செல்லும் சாலையில், வித்யோதயா பள்ளிக்கு எதிரில் வாகனங்களில் கடந்து செல்லும்போது ‘டி.பி.முத்துலட்சுமி இல்லம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட வீடு கண்களில் தென்படும்போதெல்லாம் முத்துலட்சுமியின் நினைவும் ‘அதான் எனக்குத் தெரியுமே…’ என்ற அவரது அப்பாவிக் குரலில் தொனிக்கும் வசனமும் காதுகளிலும் மனதிலும் நிழலாடுகிறது.

(ரசிப்போம்!)

முத்துலட்சுமியின் திரைப் பயணத்தில் விளைந்த படங்கள்

சந்திரலேகா, மகாபலி சக்கரவர்த்தி, மின்மினி, தேவ மனோகரி, பாரிஜாதம், பொன்முடி, ஓர் இரவு, ராஜாம்பாள், வளையாபதி, தாய் உள்ளம், பராசக்தி, மனோகரா, பொன்வயல், ராஜி என் கண்மணி, சுகம் எங்கே, துளி விஷம், கணவனே கண்கண்ட தெய்வம், பாசவலை, நான் பெற்ற செல்வம், மக்களைப் பெற்ற மகராசி, மாயா பஜார், சக்கரவர்த்தித் திருமகள், முதலாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், வண்ணக்கிளி, மகேஸ்வரி, தங்கப்பதுமை, அடுத்த வீட்டுப் பெண், படிக்காத மேதை, அன்னையின் ஆணை, ஹரிச்சந்திரா, இருவர் உள்ளம், ஏழை உழவன், கடன் வாங்கிக் கல்யாணம், குணசுந்தரி, கொஞ்சும் சலங்கை, டவுன் பஸ், திரும்பிப்பார், திருவருட்செல்வர், பத்மினி, பிரேம பாசம், போர்ட்டர் கந்தன், சர்வாதிகாரி, நாடோடி மன்னன், மரகதம், மகாதேவி, வடிவுக்கு வளைகாப்பு, நீலாவுக்கு நெறைஞ்ச மனசு, வல்லவனுக்கு வல்லவன், அறிவாளி, ஆரவல்லி, அடுத்த வீட்டுப்பெண், கோமதியின் காதலன், சௌபாக்கியவதி, வாழ்க்கை ஒப்பந்தம், வாழவைத்த தெய்வம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜமீன்தார், நவராத்திரி, செங்கமலத் தீவு, அன்பே வா, அனுபவி ராஜா அனுபவி, தெய்வீக உறவு, பூவா தலையா, நான், ஒளிவிளக்கு, குலகௌரவம்.