நாங்கள் வெல்வோம்



முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம்

பெண்கள் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் முக்கிய ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜெய்ப்பூர், காந்தி நகர் ரயில் நிலையம். பெண்களால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும். ஆனால் அவர்களுக்கான உரிமைகளும், வாய்ப்புகளும் முறையாக கிடைக்க வழிவிடுகிறதா என்பதே கேள்வி. கலாசாரம், சாதி, மதம் என எல்லாவற்றிலும் ஒடுக்கப்படும் சமூகமாக பெண்சமூகம் இருக்கிறது. இப்படியான சூழலில்தான் பெண்கள் சிலர் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

அந்தப் பட்டியலில் ரயில்வே துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தில் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் துப்புரவு தொழிலாளர்களாக பெண்கள் இருந்து வருகின்றனர். இங்கு கண்காணிப்பாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைத்து பணிகளிலும் பெண்களே பணியாற்றுவதுதான் சிறப்பு. மும்பையில் உள்ள மாதுங்கா ரயில் நிலையத்திலும் பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர். ஆனால் அது முக்கிய வழித்தடம் அல்ல. இந்தியாவில் முதல் முறையாக நாளொன்றுக்கு 50 ரயில்கள் வீதம் 7000த்துக்கும் மேலாக பயணிகள் வந்து போகும் முக்கிய ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

ரயில் டிக்கெட் விற்பனை, முன்பதிவுப் பணி, ரயில்களின் இயக்கம், பராமரிப்பு, நிர்வாகம், ரயில் டிக்கெட் பரிசோதனை மற்றும் ரயில்வே காவலர் பணி என அனைத்தும் சேர்த்து 28 பெண் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் கண்காணிப்பாளர் வந்தனா கூறுகையில் “பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து அனைத்து வேலைகளையும் செம்மையாக செய்வோம். இந்த ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அதோடு, வேலை செய்யும் பணியாளர்களுக்கு தேவைப்படும் சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தானியங்கி இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வேலைபார்க்கும் அனைவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்” என்கிறார்.

- ஜெ. சதீஷ்