மலையேற்றமே லட்சியம்



சமீபத்தில் மும்பை வந்தி ருந்தார் ஜெர்லிண்டே கால்டன் பிரன்னர். மலையேறும் வீராங்கனையான இவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஜெர்லிண்டே ஒரு நர்ஸ். வயது 47.  பூர்வீகம் ஆஸ்திரியா. அவருக்கு மலை ஏறுவதில் அபரிமிதமான விருப்பம். ஜெர்மனி யின் ப்ளேக் பாரெஸ்ட் என்ற இடத்தில் வசித்து வரும் இவர், தன் சம்பாத்தியம் முழுவதையும் மலை ஏறுவதிலேயே செலவழிக்கிறார். உலகில் 8000 மீட்டர் உயரத்தில் மொத்தம் 14 மலைகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய பெண்மணி இவர்தான்!

அது மட்டுமல்ல... அந்த 14 மலைகளையும் ஆக்சிஜன் போர்ட்டர்கள் உதவியில்லாமல் ஏறி இருப்பது இவர் தனிச்சிறப்பு. இந்த 8000 மீட்டர் உயர மலைகளில் மிகவும் கஷ்டமானது கே2 மலை. இதில் ஏறுவது மிக மிக கஷ்டம். அசந்தால் சறுக்கி விடும். கடும் காற்று, கடும் பனிப்பொழிவு இருக்கும். இதனை மீறி ஏற வேண்டும். இந்த மலையில் ஏற 6 முறை முயன்று தோற்றுள்ளார். ஜெர்லிண்டே கடைசி முறை முயற்சித்தபோது உச்சியை நெருங்கி விட்டார். 400 மீட்டர்தான் மீதமிருந்தது உச்சியைத் தொட.

அப்போது அவருடன் ஸ்வீடிஷ் ஆல்ப்ஸ் மலை சார்ந்த பிரெடிரிக் எரிக்‌ஷன் என்பவரும் ஏறிக்கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கால் வழுக்கி, அவர் காணாமலே போய்விட்டார். இதனால் ஜெர்லிண்டே தொடர்ந்து ஏறாமல் திரும்பி விட்டார். ஆனால் அடுத்த வருடமே மீண்டும் முயன்று 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி உச்சியை தொட்டு விட்டார்.

அவருடன் மேலும் நான்கு மலை ஏறுபவர்களும் ஏறி வெற்றி கண்டனர். இந்த கே2 மலையில் இந்தியாவின் எவரெஸ்ட்டுக்கு அடுத்து இரண்டாவது உயரமான சிகரம் உண்டு. இந்தப் பயணத்திற்கு மொத்தம் 45 நாட்கள் ஆயின. இவர்கள் உச்சியை தொட்டபோது வெப்பம் 400 டிகிரி. கடும் பனிப்பொழிவு. நெஞ்சளவு பனிப்பொழிவில், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உச்சியை தொட்டனர். 23 வயதில், பாகிஸ்தானில் இருந்த ப்ரொட் பீக் என்ற மலையில் (8027 மீட்டர்) ஏறினார்.  5-வது மலையாக நங்கபர்வதத்தில் ஏறியபோது, வியாபார நோக்கில் மலை ஏறுபவராக தன்னை மாற்றிக்கொண்டார். இன்றுவரை எல்லா செலவும் அவருடையதுதான்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-102.

சபாஷ் சுவிட்சர்லாந்து!!

வாசகர் பகுதி

‘‘நீங்கள் சும்மா இருந்தா போதும். மாதம் 1,75,000 ரூபாய் உங்கள் வீடு தேடி வரும் என்ற ஓர் அதிசய அறிவிப்பை சுவிஸ் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததில் உலகமே ஆச்சரியத்தில் வியந்து போனது.

(1) ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் ‘அடிப்படை’ ஊதியமாக ரூ.1,75,000 (சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 ஃப்ராங்க்) வழங்கப்படும்.
(2) ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் அடிப்படை ஊதியமாக 45,000 ரூபாய் (சுவிஸ் மதிப்பில் சுமார் 625 ஃப்ராங்க் வழங்கப்படும் என்று.
(3) சுவிஸ் நாட்டில் ஐந்து ஆண்டுகளாகக் குடியிருக்கும் வெளிநாட்டவருக்கு இந்த சட்டம் செல்லுபடியாகும். அதாவது ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி மற்றும் குழந்தை இருந்தால் அந்த குடும்பத்திற்கு அடிப்படை மானியமாக மாதம் ரூ.3,95,000 அரசாங்கம் வழங்கும். இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்களிப்பை அரசாங்கம் நடத்தியது.

அந்த வாக்களிப்பின் முடிவு உலகையே மற்றொருமுறை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஐந்தில் நான்கு பேர் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். 78 சதவீதம் பேர் சுவிஸ் அரசின் அடிப்படை மானியம் வேண்டாம் என்று தங்கள் முடிவைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வியப்பு.

1) இந்த அறிவிப்பைக் கேட்டு, இன்னும் சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் சுவிஸ் நாட்டில் சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.
2) இந்த சட்டம் எங்களையும், எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றிவிடும்.
3) அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்களும் இழக்க நேரிடும்.

சுவிஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்.. நம்மைப்போல் சுவிஸ் நாட்டிற்கென்று பல பழம்பெருமைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர், காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்கால பெருமையை!

- சுகந்தாராம்,
கிழக்கு தாம்பரம்.


(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)