இது மணிமேகலையின் கதை
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே மணிமேகலை. தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொலைக்காட்சி மட்டுமல்லாமல் நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போதிலிருந்தே தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய அனுபவம் குறித்தும், தன் காதல் திருமணம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
“நான் பிறந்தது கோயம்பத்தூர், படித்தது எல்லாம் சென்னைதான். நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விளையாட்டாக சன் மியூசிக் சேனலில் வேலைக்கு விண்ணப்பித்தோம். இதுபோன்று வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன் என்று வீட்டிற்குக்கூட நான் சொல்லவில்லை. சில நாட்கள் காத்திருந்தோம். எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒரு நாள் எனக்கு இன்டர்வியூக்கு வரச்சொல்லி போன் வந்தது. ஆச்சர்யமாக இருந்தது. அதன் பின் இன்டர்வியூ சென்றேன். பகுதி நேர வேலையாக சேர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது.
எனக்கு படிப்பு சுமார்தான். அதனால் வேலையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தொலைக்காட்சியில் வேலை கிடைத்திருக்கிறது என்று வீட்டில் சொன்னேன், முதலில் பயந்தார்கள். படிப்பும் ஒழுங்கா வராது, இந்த வேலை வேறயா என்று ‘வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா படிக்கின்ற வேலையை மட்டும் பாரு’ என்றார்கள். அதன் பிறகு ‘பகுதி நேர வேலை மட்டும்தான், இதனால் எந்த விதத்திலும் என்னுடைய படிப்பு தடைபடாது’ என்று அம்மா, அப்பாவை சமாதானப்படுத்தினேன். நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதன் மூலம் எனக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன வயதிலே சினிமா பிரபலங்களை எல்லாம் சந்தித்து பேட்டி எடுக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குறுகிய காலத்தில் நான் பிரபலம் ஆனதற்கு காரணம் நான் வேலை பார்க்கும் நிறுவனம்தான். 25 வயதிலே சீனியர் விஜே என்கிற பட்டத்தை எனக்கு அளித்தது.
நான் எதிர்பார்க்காமல் கிடைத்த என்னுடைய வேலையை போலவே எனக்கு கணவரும் கிடைத்தார். நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலே என் கணவரை நான் சந்தித்தேன். சன் டிவியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு உசைன் ஆடினார். அப்போதுதான் அவரை முதல் முறையாக பார்த்தேன். துருதுருவென்று இருந்தார். ‘நீங்க நல்லா பெர்ஃபார்ம் பண்றீங்க’ என்று அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவருடைய போன் நம்பரை நண்பர்களிடம் வாங்கினேன். அதுவரை அவர் மீது காதல் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
அவர் சாதாரணமாக ‘அப்படியா நன்றி’னு ஒரு வார்த்தையில் சொல்லிட்டு கெத்தா என்னை கடந்து சென்றார். ‘என்னடா ஒரு பொண்ணே வந்து பேசுது’ன்னு கூடுதலா பேசாம ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிட்டு போனது எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இவரை விடக்கூடாது என்று அவரிடம் போனில் பேசத் தொடங்கினேன். அப்படி பேசத் தொடங்கி இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக காதலிக்க தொடங்கினோம்.
என்னுடைய காதல் விவகாரம் எங்கள் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் எங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுடைய சூழ்நிலை எனக்கு புரிந்தது. அது போலவே அவர்களும் என்னை விரைவாக புரிந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. நண்பர்கள் சூழ எங்களுடைய பதிவுத் திருமணம் நடைபெற்றது. தற்போது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
திருமண வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருக்கிறது. வீட்டு செலவுகள் என்னென்ன, விலைவாசி என்ன என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது. வீட்டை எப்படி நிர்வாகம் செய்வது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் செல்லமாக வளர்ந்ததால் அதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என் கணவருடைய வீட்டிலும் நான் அப்படிதான் செல்லமாக இருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய சந்தோஷத்திற்காக நானே இந்த வேலைகளை முன்னெடுத்து செய்ய விரும்புகிறேன்.
இந்த மாதம் மகளிர் தினம் வருகிறது. உண்மையாகவே குடும்பத்தை நிர்வாகம் செய்யும் பெண்களுக்கான ஒரு நாளாக இதை நான் பார்க்கிறேன். வீதிகளில் கூலி வேலை செய்யும் பெண்களையும், சிறு வியாபாரம் பார்க்கும் பெண்களையும் அன்றாட வாழ்க்கையில் நான் கடந்து வந்திருக்கிறேன். வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் தொடர்ந்து உழைக்கும் அவர்களுடைய பணி எனக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. உழைக்கும் பெண்களுக்காகவே இந்த மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்’’ என்கிறார் மணிமேகலை,
-ஜெ.சதீஷ்
|