கல்லூரி முதல்வரான திருநங்கை
வாசகர் பகுதி
மனாபி பன்டோ பத்யாயா- மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகர் அரசுக் கல்லூரியின் முதல்வர். மனாபி என்றால் வங்காளத்தில் மனிதாபிமானமிக்கவர் எனப்பொருள். ஆனால் மற்றவர்களிடம் இவரை ஏற்கும் மனிதாபிமானம் இல்லாததால் வாழ்க்கைப் பயணத்தை தொடர திணறுகிறார். ஆனாலும் இன்றுவரை போராடி வருகிறார். கல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள நைகாட்டி என்ற ஊரில், ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பட்டம் பெற்று ஜார் கிராம் ராஜ்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது, தன் மன எண்ணங்களுக்கு ஏற்ப 2003ல் பால் மாற்று சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
இதனை பொறுக்காதவர்கள், ’முதலில் ஆணாக நடக்க முயற்சி செய்’ என அட்வைஸ் செய்தனர்! பிறகு ஹாஸ்டலில் இருந்தே வெளியேற்றி விட்டனர். ‘‘என் உடலும் உள்ளமும் பெண்பாலாக இயங்கும்போது, என்னால் எப்படி ஆணாக செயல்பட முடியும்?’’ என துணிந்து தன் புதுநிலையைத் தொடர்ந்தார் மனாபி! வங்காள இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
2015ல் மேலே குறிப்பிட்ட கிருஷ்ணா நகர் அரசுக் கல்லூரியில் முதல்வராக சேர்ந்தார். ஆனால் அதற்குமுன் அவரை அங்கீகரிக்க அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது! அரசு அவரை ஏற்க மறுத்தது. அடுத்து மம்தா பானர்ஜியிடம் மனு கொடுத்தார். அவர்தான் அவரை ஏற்று அங்கீகரித்து வேலை அளிக்கும்படி அரசுக்கு கட்டளை யிட்டார். ‘அவருக்கு என் போராட்டம் புரிந்தது’ என இன்றைய முதல்வரை புகழ்கிறார் மனாபி!
புதிதாக கல்லூரி முதல்வரான இடத்திலும் சிக்கல்! அங்கு நிலவிய ஊழலையும் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வராததையும் கண்டு கடும் நடவடிக்கை எடுத்தார். பலன், அவருக்கும் அவருடைய இளம் தத்து மகனுக்கும் தகாத உறவு என வதந்தி பரப்பப்பட்டார். ‘நூற்றுக்கணக்கான பெண் கள் தூண்டப்பட்டு, என்னை வெளியேற்ற போராட்டம் நடத்தினர்’ என்கிறார்.
‘நானும் ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல் என் வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் பிறகு மாநில கல்வி அமைச்சருக்கு விஷயம் தெரிந்து, என்னை பதவியில் தொடரும்படி வேண்ட, இன்று பல எதிர்ப்புகளுக்கு இடையிலும் என் பணியை தொடருகிறேன்’என்கிறார் மனாபி. அரசு, இன்று இவரை அரசு டிரான்ஸ்ஜென்டர் போர்டின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. ‘மக்களிடம் மாற்றம் வராதபோது, அந்த பதவியினால் என்ன செய்ய இயலும்?’ என கேள்வி எழுப்பும் மனாபி, ‘விடமாட்டேன்... என் உரிமைக்காக போராட்டத்தை தொடருவேன்’ என்கிறார். மம்தா பானர்ஜி போன்றே மனாபியும் துணிச்சல் பெண்!
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்.
|