பெண்கள் உருவாக்கும் ஆவணப்படம்



TO WHAT END?

வைஷ்ணவி சுந்தரைப் பார்த்தால் வங்கிப் பணியிலோ, ஐ.டி.யிலோ வேலை பார்ப்பவர் போலத் தெரிகிறார். ஆனால் முறைசார அமைப்புகளில் வேலை செய்யும் பெண்களான துப்புரவுத் தொழிலாளர்கள், தெருக்களில் பூ, பழம், காய், கீரை விற்கும் பெண்கள், கட்டிடத் தொழில் செய்யும் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றோருக்கு அவரவர் பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளதா என ஆராய்ந்து ‘To What End’ என்கிற தலைப்பில் ஆவணப்படம் எடுத்து வருகிறார்.

பல்வேறு தளத்தில் இயங்கும் பெண்களிடம், சட்டம் எந்த மாதிரியான பாதுகாப்பு வரைமுறைகளை பெண்களுக்கு அளித்துள்ளது என்பது குறித்த கேள்வி களுடன் அவர்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்களை, அவரவர் கோணத்தில் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேசி பதிவு செய்து ஆவணப்படம் எடுத்துள்ள வைஷ்ணவி பக்கா சென்னைப் பொண்ணு. ‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை ஆவடியில். எம்.பி.ஏ. படித்தேன். பள்ளியில் படிக்கும்போது, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து என்னை எழுதப், படிக்கச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. விருப்பம் இருந்தால் மட்டுமே எதையும் செய்வேன். பாட்டு, கலை, நடனம் என எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன்.

ஒரே இடத்தில் இருக்காமல், வெளியில் போகவே எப்போதும் விரும்புவேன். படித்து முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியில் இருந்தபோது, வேலை தொடர்பாக உலகம் முழுவதும் நிறைய சுற்றினேன். அடுத்தடுத்து பல நிறுவனங்களில் வேலை செய்தபோதும், எதுவும் எனக்கு திருப்தி தரவில்லை. எல்லாவற்றையும் தாண்டி கலைத்துறை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கலை மற்றும் சினிமாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆவணப் படத்துக்காக பல்வேறு துறை பெண்களிடம் பேசி பதிவு செய்துள்ளேன். இதில் பேசியிருக்கும் அனைவரும் பல தளங்களில் பணிபுரிபவர்கள். தாங்களாகவே முன் வந்து வெளிப்படையாக தயக்கமின்றி தைரியமாய் பேசினர். சட்டத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், திரைத் துறை சார்ந்தவர்கள், சுயமாக வேலை செய்யும் பெண்கள் எனப் பலரும் பேசியுள்ளனர். முக்கியமாக அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி, தொழிற் சங்கங்களின் பெண் தலைவர்கள், பெரு நிறுவனங்களின் பெண் தலைமை செயல் அதிகாரிகள், படத் தயாரிப்பாளர்கள், நடிகை பார்வதி என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இதில் யாருக்கும் பயமில்லை. பணியிடப் பாலியல் பாதுகாப்புச் சட்டம் 2013ல் உள்ள குறைகள் பற்றி இதில் பேசியுள்ளனர். வேலை செய்யும் இடம் எதுவாக இருப்பினும், அந்த இடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல், பிரச்சனைகளுக்கான பாதுகாப்புதான் சட்டம். ஆனால் அந்தச் சட்டம் எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைகள் என்னென்ன என்பதையும் பதிவு செய்துள்ளோம்.

சட்டம் இருக்கிறது. ஆனால் அந்தச் சட்டம் பல துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கும் ஏற்புடையதாக இல்லை. ஒரு பெண் தெருவில் வேலை செய்பவராக இருந்தால், தெருவில் செல்லும் ஒருவர் அவரை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்துகிறார் எனில் அதை அச்சட்டத்தின்கீழ் புகாரளிக்க வழியில்லை. உடன் வேலை செய்பவர்களால் பாலியல் தாக்குதல் நடந்தால் மட்டுமே இந்தச் சட்டம் பயன்படுகிறது. 2016ல் இருந்து இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு டாக்குமென்ட் செய்துள்ளேன்.

இதில் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களின் மனதில் இருக்கும் விசயங்கள், அப்படியே வெளியில் வந்தன. மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் பெண்கள், டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வருபவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனை பற்றியும் பேசியுள்ளனர். இந்த ஆவணப்படத்திலிருந்து 5 நிமிடம் டீசர் செய்துள்ளேன். இது நியூயார்க், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது. பெண்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ள இந்த முழுநீள ஆவணப் படத்தில், அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த வேலைகளையும் பெண்களே செய்துள்ளனர். இயக்கம், தயாரிப்பு, படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு என எல்லாவற்றையும் பெண்களைக் கொண்டே முடித்திருக்கிறோம்.

இந்த ஆவணப் படத்தின் எடிட்டர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். மியூஸிக் கம்போசர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் ஹாலிவுட் அளவில் மியூஸிக் கம்போஸ் செய்பவர். எடிட்டர் பெர்லின் நாட்டைச் சேர்ந்தவர். கிராஃபிக் டிசைனர் அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்தியர் என இது ஒரு இன்டர்நேஷனல் ஆல் வுமன் குரூப். இந்த விஷயம் பிடித்து, பணத்தை எதிர்பார்க்காமல் தானாகவே முன் வந்து வேலை செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பாலியல் சுரண்டல் களைப் பேசினாலும், உலக அளவில் உள்ள பெண்களின் பிரச்னை இது. அவர்களும் அது புரிந்தே பணியாற்றினார்கள். பணம் சம்பாதிப்பது அல்ல எங்களின் நோக்கம்.

‘லைம் சோடா பிலிம்ஸ்’ என்ற சின்ன தயாரிப்பு நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறேன். அதன் வழியாக இது என் ஐந்தாவது படைப்பு. இதற்கு முன் 2 ஆவணப்படங்கள், 2 குறும்படங்கள், ஒரு சில விளம்பரங்கள் என செய்துள்ளேன். 9 ஆண்டுகளாக நாடகமும் பண்றேன். லண்டன் எடின்ப்ரோவில் தியேட்டர் பெர்ஃபார்ம் செய்தேன். எழுதுவது, நடிப்பது, இயக்கம், தயாரிப்பு என எல்லா தளத்திலும் பயணிக்கிறேன். ஒரு சில திரைப்படங்களில் சின்னச் சின்ன வேடங்களும் செய்துள்ளேன்.

இதற்கு முன் ‘பாவா’ என ஒரு குறும்படம் எடுத்தேன். இதுவரை 12 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. சிக்கிமில் பெண் காவலர் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினார். ஒருவரை அவர் பணியிடத்தில் அவரது ஸ்டைலை, ஈகிள் வியூவில் படப்பதிவு செய்து, 5 நிமிடம் டாக்குமென்ட் செய்துள்ளேன். எல்லாத் துறைகளிலும் பாய்ஸ் கேங் இருக்கும்.

ஆனால் கேர்ள்ஸ் கேங் இருக்காது. பெண்கள் ஒன்றாக சேர முடியாத நிலையே இங்குள்ளது. எனவே அதை மாற்றி பெண்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். WMF (women making film) என்ற இணையத்தளத்தையும் உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கிறேன். இதில் உலகத்தில் உள்ள பல பெண் தொழில்நுட்பக் கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களைப் பற்றிய சுய பதிவுகளை அவர்கள் அதில் பதியலாம். இதுவரை, உலகம் முழுவதிலும் இருந்து 166 பெண் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். 18 நாடுகளின் பெண் டெக்னீஷியன்கள் தங்களைப் பற்றிய முழு விபரங்களை, தங்கள் படைப்புகளையும் பதிவேற்றிஉள்ளனர்.

இதில் பதிவிட எந்தக் கட்டணமும் இல்லை. எந்த மொழி பேசுபவராக இருப்பினும், வுமன் பிலிம் மேக்கர்ஸை நேர்முகம் செய்து இதில் பதிவேற்றி உள்ளேன். எனக்கு என் வீட்டில் நிறைய தடை இருந்தது. அதை நினைத்தாலே எனக்கு எப்போதும் கோபம் வரும். பசங்க வெளியில் போய் பொருட்கள் வாங்கி வருவாங்க. பிறகு அலுங்காமல் குலுங்காமல் வீட்டில் இருப்பார்கள். ஆனால் பெண் பிள்ளைகள்தான் வீட்டு வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

ஏன் அந்த வேலையை பெண்கள் மட்டும் செய்யனும்? என் கேள்வியும், சிந்தனையும் அங்கிருந்தே துவங்கியது. வீட்டிலிருந்தே என் போராட்டத்தை ஆரம்பித்தேன். நிறைய யோசித்தேன். என்னை மாதிரி சிந்திக்கும் பெண்கள் குழுவை நோக்கி நகர்ந்தேன். அது தொடர்பான புத்தகங்களைப் படித்தேன். போராட்டக் களத்தில் இருக்கும் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை தேடிச் சென்று, பேசிப் பழகி என்னை வடிவமைத்துக் கொண்டேன். என் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது நம் குரலுக்கு யாரோ டப்பிங் குடுத்த மாதிரியான ஓர் உணர்வு கட்டாயம் அனைவருக்குள்ளும் வரும். எனக்கும் அது வந்தது. அதுவே இந்த ஆவணப் படத்தின் வெற்றி.

- மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்

பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம்-2013ல் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த 2012 செப்டம்பர் 3ம் தேதியும், மாநிலங்களவையில் 2013 பிப்ரவரி 26ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. 2013 ஏப்ரல் 22ம் தேதி குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு தனது ஒப்புதலை அளித்தார். அன்று முதல் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டது.
 
10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இச்சட்டம் கறாராக அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50000 வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி வகை செய்துள்ளது.