கண்ணே கலைமானே..!



திரைக்கலைஞர்கள் சிலருக்கு மரணம் என்பதே கிடையாது என்று நம் மனம் நினைத்துக்கொண்டிருக்கும். அவர்களின் மரணச் செய்தி கிடைக்கையில் திடுக்கிட்டு செயலற்று அதிர்ச்சியில் உறைந்து போவோம். அப்படித்தான் ஸ்ரீதேவியின் மரணமும். ஒரு ஞாயிறு அதிகாலையில் அந்த செய்தியறிந்தபோது மீண்டும் இருள் சூழ்ந்தது. என் மனம் பால்யத்துக்குச் சென்றது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில் எங்கள் ஊருக்கு அருகேயிருக்கும் மேல உளூர் என்கிற‌ குக்கிராமத்தில் உள்ள‌ டூரிங் கொட்டகை ஒன்றில் ‘மூன்றாம் பிறை’ ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் ஊருக்கு வந்தபோது படத்தைத் தவற‌விட்ட  அப்பா அங்கேயாவது பார்த்துவிடவேண்டும் என்று குடும்பத்தோடு அழைத்துச் சென்றார். நான் பார்த்து அழுத முதல் படம் அதுதான். விஜி என்னோடு வாழ்ந்தாள்... அதன்பின் விஜியை மற‌க்கவே முடியவில்லை.

கமலுக்கு விருது கிடைத்ததுபோலவே அப்படத்துக்காக ஸ்ரீதேவிக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும் நியாயமாக. அந்தக் குழந்தைத்தனமும் வெகுளித்தனமும், ஆண்-பெண் உற‌வுக்குள் நிகழும் அற்புதச் சம்பவங்களுமாக நிறைந்திருக்கும் அப்படத்தில் வரும் விஜியின் உருவம் எனக்குள் நீங்காத சித்திரமாக உறைந்துவிட்டது. தொண்ணூறுகளில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வந்தபின்தான் ‘வாழ்வே மாயம்’, ‘பகலில் ஓர் இரவு’, ‘காயத்ரி’, ‘ஜானி’, பதினாறு வயதினிலே’, ‘மீண்டும் கோகிலா’, ‘மூன்று முடிச்சு’, ப்ரியா’, ‘நான் அடிமை இல்லை’ போன்ற‌ திரைப்படங்களைக் காண‌ வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீதேவி என்பது விஜி மட்டுமல்ல என புலப்பட்டது. அவர் மயிலாக  இருக்கிறார். அர்ச்சனாவாக இருக்கிறார். இந்தியில் ‘சாந்தினியாக’, ‘நாகினாவாக’ என அவர் எடுத்த அவதாரங்கள் கண‌க்கிலடங்காதவை. ஸ்ரீதேவி எனும் நாயகி குறித்த பிம்பம் விஸ்வ‌ரூபமெடுத்தது. பானுமதியின் பெயரை கண்ணதாசன் ‘கண்ணிலே இருப்பதென்ன?’ பாடலில் சரணத்தில் எழுதி இருப்பார். அதன்பின் ‘தேவி...ஸ்ரீதேவி’ என‌ ஒரு கதாநாயகின் பெயரில் பாடல் தொடங்கியது ஸ்ரீதேவிக்குத்தான்.

‘ஜானி’யில் அர்ச்சனா நாயகனிடம் தன் காதலைச் சொல்லும் காட்சியில் ‘பாட்டுப் பாடுறவ‌தானே? இவகிட்ட  எங்கே கேரக்டர் இருக்கப்போகுதுன்னு நினைச்சிட்டீங்களா?’ என்று கேட்டபின் ரஜினி பதட்டமாகி ‘அப்படியில்ல’ என்று சமாதானப்படுத்தியபின் ‘அதுக்குள்ளே படபடான்னு பேசிட்டீங்களே’ எனக் கேட்கையில் ‘அப்படித்தான் பேசுவேன்’ என்று ஒரு சிரிப்புடன் சொல்வார். அந்தச் சிரிப்பில், காதலில் வெற்றி பெற்ற‌ பெருமிதத்தோடு ஒரு குழந்தைத்தனமும் இருக்கும். அர்ச்சனாவின் அந்தச் சிரிப்பு ஆழமாக மனதில் தங்கியிருந்த விஜியின் பிம்பத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஆனால் அர்ச்சனாவிடம் விஜி தோற்க‌வில்லை.

‘பதினாறு வயதினிலே’ பார்த்தபோது, காதல் உண‌ர்வு தோன்றும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே முகத்தில் கொண்டு வந்து அந்தப் பரவசத்தை கண்களில் காட்டி நடித்த ‘செந்தூரப்பூவே’யும் ‘எப்படி அறைஞ்சே’ என திரும்பத்  திரும்பக் கேட்டு சிரிக்கும் மயிலுவுக்கும் விஜிக்கும் கடுமையான போட்டி. மயிலு பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவள். ஆனாலும் விஜிக்கு நிகராகுமா? எத்தனையோ படங்களைப் பார்த்தாயிற்று இந்தியிலும் தமிழிலுமாக. ஆனாலும் விஜியை ஹதேவியின் பிற‌ பிம்பங்கள் நெருங்கவில்லை. மனதில் அத்தனை வேரூன்றி இருந்தாள் விஜி. எங்கோ என் பால்யத்தின் பிணைப்பு அவளிடத்தில் இருப்பதாக ம‌னம் நம்புகிற‌து.

‘பூங்காற்று புதிதானது’ பாடலில் இடையிசையில் விஜியும் சீனுவும் தண்டவாளத்தில் காது வைத்து தூரத்து ரயிலோசையைக் கேட்க, அருகில் ரயில் நெருங்கிவிட விஜியின் பாவாடை தண்டவாள‌த்தில் மாட்டிக்கொள்ளும். விஜி மீது ரயில் மோதக்கூடாதே என பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்ப்பது போல் பதறி இருக்கிறேன். சீனு, விஜியை ரயில் மோதாமல் காப்பாற்றிவிடுவான். ஆனால் நிஜத்தில் விஜியை காப்பாற்ற‌ யாருமில்லாமல் அந்த மரண‌ ரயில் அவள் மீது மோதியே விட்டது.

அண்மையில் நீலகிரிக்குச் சென்றிருந்தபோது கேத்தி பள்ளத்தாக்கை கடக்கையில் ‘கேத்தி’ ரயில் நிலையத்தில் நடக்கும் ‘மூன்றாம் பிறை’  உச்சக்கட்டக் காட்சி நினைவில் வந்துபோனது. ஸ்ரீதேவியை விஜி என நம்பும் என் போன்றவர்களைப் பார்த்து ஸ்ரீதேவி ‘யாரோ பைத்தியம் போலிருக்குமா?’ என்று ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அவரை மோதிய அந்த மரண‌ ரயிலிலேயே ஏறிச் சென்றுவிட்டார். ‘சீனு விஜி... சீனு விஜி’ என்று கமல் கதறுவது போல இன்று நாம் கண்ணீர் விடுகிறோம்.

- கவின் மலர்
ஓவியம்: ஷயாம்