செல்லுலாய்ட் பெண்கள்



தெலுங்குத் திரையின் சிண்ட்ரெல்லா - கிருஷ்ணகுமாரி

அழகான ஒயிலான தோற்றம், ஆளை விழுங்கும் அகன்ற பெரிய கண்கள், சுருள் சுருளாக அலைபாயும் கேசம், இனிமையான குரல், பார்ப்பதற்கு ஓர் இளவரசி போல் தோன்றினாலும் ஆந்திரத்துப் பெண்ணுக்கே உரிய உயரமான கம்பீரத் தோற்றம். இவரைத் தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் காண முடியாவிட்டாலும் தெலுங்குத் திரையுலகம் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்போதைய பெரும்பான்மையான நடிகைகளைப் போல் நாடக மேடை அனுபவமோ, நாடகப் பின்புலமோ ஏதுமற்றவர். சினிமாவின் மீதான ஆர்வமே அவரைத் திரைத்துறையை நோக்கி நகர்த்தி வந்தது. 1950 களின் தமிழ்த் திரைப்பட நாயகியர் வரிசையில் இவரை தாராளமாகக் குறிப்பிடலாம். 1953 முதல் 1962 வரையிலும், நீண்ட இடைவெளிக்குப் பின் 1968ல் ஒரு படத்திலும் என தமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சமீபத்தில் காற்றில் கரைந்து போன நடிகை கிருஷ்ண குமாரி.

சாவித்திரிக்கு இணையான திறமைசாலி
நாடகப் பின்புலம் இல்லாவிட்டாலும், வாரிசு நடிகையா என்றால், ஒருவிதத்தில் ஆம் எனலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி நடிகையாக அறியப்பட்ட பிரபல நடிகை சௌகார் ஜானகியின் தங்கை. அவருக்குப் பின் திரையில் தோன்றினாலும் அவரையும் கடந்து தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறியவர். நடிகையர் திலகம் சாவித்திரியின் காலத்தில் அவருக்கு இணையாகப் பார்க்கப்பட்டவர். கிளாமர் கதாநாயகியாக அறியப்பட்டாலும் அவரின் பல படங்கள் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியவை. தன் கதாபாத்திரங்களுக்கு நேர்மையான பங்களிப்பை வழங்கியவர்.

கிழக்கில் தொடங்கி தென் பகுதி வரை…
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பிறந்து தென் பகுதியில் தன் பெரும்பான்மையான நாட்களை வாழ்ந்து கடத்தியவர் கிருஷ்ணகுமாரி. ஆம்! பால்யம் முதல் இந்தியாவெங்கும் வாழ்ந்து பயணித்து அதை ரசிக்கும் மனோபாவம் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படித்தான் தன் தந்தையின் பணியின் பொருட்டு வங்காளம், அஸ்ஸாம், சென்னை (அன்றைய மதராஸ்), ராஜமுந்திரி என இளம் வயதிலேயே படிப்புடன், பல மொழிகள் கற்கும் வாய்ப்பும் கிருஷ்ண குமாரிக்கு அமைந்தது.

தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் 1933 மார்ச் 6 ல் கல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நைஹாதியில் பிறந்தவர் கிருஷ்ணகுமாரி. தந்தையார் வெங்கோஜி ராவ், தாயார் சச்சி தேவி. சிறு வயதில் நடிகை அஷ்டாவதானி பானுமதியின் தீவிர ரசிகை. திரைப்படங்கள் பார்ப்பதில் இருந்த ஆர்வம் நடிப்பதில் அவருக்கு இருந்ததில்லை என்று அவரே தன்னுடைய பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆர்வத்தை அவருக்குள் ஏற்படுத்தியவர்களில் அவரது மூத்த சகோதரியும் நடிகையுமான சௌகார் ஜானகிக்கும் பங்கு இருந்திருக்கிறது. நடனத்தில் ஆர்வம் இருந்ததால் குச்சுப்புடி நடனத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்.

தெலுங்கு ‘பாதாள பைரவி’ படத்தில் ஒரு சிறு வேடம் ஏற்றதன் மூலம் திரையில் கால் பதித்தவர். பெயர் சொல்லும் விதமாய் 1951ல் ‘நவ்விதெ நவரத்னாலு’ தெலுங்குப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அழுத்தமாகக் கால் பதித்தார். தெலுங்கில் ஏறக்குறைய 150 படங்களுக்கு மேல் நடித்தவர். இவை தவிர கன்னடம், இந்தி, தமிழ் என பல மொழிகளிலும் பங்காற்றியவர். தெலுங்கும் கன்னடமும் ஒத்திசைவான மொழிகள் என்பதால் அவை இரண்டில் மட்டும் கவனம் செலுத்தியவர். தமிழில் வாய்ப்புகள் ஏராளமாக அவரைத் தேடி வந்தபோதிலும், மொழிப் பிரச்சனை காரணமாகவே அதைத் தவிர்த்திருக்கிறார். இந்தியிலும் கூட நல்ல வாய்ப்புகள் வந்தபோதும் அதையும் தவிர்த்திருக்கிறார். தாய்மொழி தெலுங்கு மற்றும் கன்னடம் இரண்டில் நடிப்பது மட்டுமே அவருக்கு விருப்பமாக இருந்திருக்கிறது.

தமிழின் வாய்ப்புகளைத் தவற விட்டவர்
கன்னடத்தில் ‘‘குணசாகரி’ படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. இதில் பெயரும் புகழும் பெற்ற நடிகர்களான குப்பி வீரண்ணா, ஹொன்னப்ப பாகவதர், டி.எஸ்.பாலையா, பண்டரிபாய் என பலரும் நடித்திருக்கிறார்கள். நடிகை ராஜ சுலோசனாவுக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தயாரிப்பாளர்கள் மூவரில் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் ஒருவர். அவர் கிருஷ்ணகுமாரியைத் தங்கள் ஏ.வி.எம். தயாரிப்புப் படங்களில் நடிக்க வருமாறு விரும்பி அழைத்துள்ளார்.

ஆனால், வழக்கமாக அவரது படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு படம் மட்டுமல்லாமல் குறைந்தது மூன்று படங்களிலாவது ஒப்பந்தம் செய்துகொண்டு விடுவார் என்பதை சக நடிகைகள் மூலம் அறிந்திருந்ததால் கிருஷ்ணகுமாரி அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். காரணம் பெரிதாக வேறொன்றுமில்லை. தமிழ் மொழி உச்சரிப்பு அவருக்கு அச்சமூட்டுவதாக இருந்திருக்கிறது. அதிலும் தமிழில் உள்ள சிறப்பு எழுத்தான ‘ழ’ உச்சரிப்பு அவரைக் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. ஒரு படம் என்றாலும் பரவாயில்லை. மூன்று படங்கள் என்பது மிகப் பெரிய வாய்ப்பு. அதை நழுவ விட்டு விட்டார். ஆனாலும் பிறர் தயாரிப்புப் படங்களில் நடிக்க அவர் தவறவில்லை.

திரும்பிப் பார் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர்
தமிழில் அவர் நடித்து முதலில் வெளியான படம் ‘திரும்பிப் பார்’. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த புகழ் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் சமூக அவலங்களைத் தோலுரித்துக் காண்பித்த படமும் கூட. தன் முதல் படத்தில் எந்த அவலங்களைக் குத்திக் காட்டி, அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகளில் களமிறங்கிய கதாநாயகனாக கருணாநிதியின் வசனங்களைப் பேசி அறிமுகமான சிவாஜி கணேசன், அதே அவலங்களைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் அயோக்கியனாக நடித்தார்.

இப்படத்தின் இரு நாயகிகளில் ஒருவர் கிருஷ்ணகுமாரி. காதலனைக் கைப்பிடிக்கும் ஆவலில் மணமேடை ஏறி, தாலி கட்ட வராமல் அவன் ஓடிப் போக திருமணம் நின்றுபோய்க் கண்ணீரில் கரையும் பாத்திரம். அன்பும், காதலும் ஒருங்கே அமைய காதலனை மறக்க முடியாமல் திணறுபவள். ஒரு நள்ளிரவில் காதலன் வந்து கதவைத் தட்ட, முதலில் கோபம் கொண்டாலும் நாவில் கற்கண்டு தடவிக்கொண்டு பேசும் அவன் பேச்சின் இனிமையில் மயங்கி, வீட்டுக்குத் தெரியாமல் அவனுடன் சென்னைக்குப் பயணமாகிறாள்.

மெரீனா கடற்கரை, மிருகக் காட்சிசாலை என்று ஊரைச் சுற்றிக் காண்பித்து, கடைசியில் நாடகக் கொட்டகை ஒன்றில் இசைச் சொற்பொழிவு பார்த்துக் கொண்டிருக்குபோது அவளை அங்கேயே கைகழுவிச் செல்கிறான். பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியில் நடுக்காட்டில் தமயந்தியை நளன் பரிதவிக்க விட்டுச் செல்வதாய் காட்சியமைப்பு அமையும். மீண்டும் அவளைப் பாலியல் தொழிலாளியாய் சந்திக்கிறான். முன்பு பார்த்த மென்மையான, அமைதியே வடிவானவளாக இல்லாமல், கோபத்தில் கொந்தளிப்பவளாக, அவனிடம் நியாயம் கேட்பவளாக அங்கு அவள் மாறி நிற்கிறாள்.

இறுதியில் உச்சக்கட்டக் காட்சியில் துப்பாக்கியைக் கையிலேந்தி அவனைச் சுட்டுக் கொல்லவும் தயாரானவளாக விஸ்வரூபம் எடுக்கிறாள். அந்தக் காதலி பாமா வேடம் ஏற்றவர் கிருஷ்ண குமாரி. காதலில் கசிந்துருகும்போது மென்மையே வடிவெடுத்தவராக, கோபத்தில் உதடுகள் துடிக்க, விழிகள் விரிய ஆவேசமாகப் பொங்கி எழுபவராக என இரு வேறுபட்ட நடிப்பையும் மிகச் சிறப்பாக வழங்கியிருப்பார். கருணாநிதியின், ‘ஓடினாள்… ஓடினாள்…’ வசனம் இப்படத்திலும் வேறு பாணியில் இடம்பெற்றது. 

’மனிதன்’ மகத்தானவன்
தமிழில் கிருஷ்ண குமாரி நடித்த படங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமானதொரு படம் 1953ல் வெளியான ‘மனிதன்’ (இதே தலைப்பில் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இரு வேறு படங்கள் 1987, 2016 காலகட்டங்களில் வெளியாகி விட்டன). ராணுவத்தில் பணியாற்றும் டாக்டர் மற்றும் அவரின் இளம் மனைவி இருவரையும் பற்றிய கதை. தன் பணியின் காரணமாக ராணுவத்தில் பணியாற்றுகிறார் டாக்டர். அவருடைய மனைவி கூட்டுக் குடும்பத்தில் தனித்திருக்கிறாள். அந்த வீட்டுக்கு ஓவியன் ஒருவன் அகதியாக அடைக்கலம் தேடி வந்து சேர்கிறான்.

அந்த இளம் மனைவியின் தனிமையையும் இளமையையும் ஓவியன் பயன்படுத்திக் கொள்கிறான். அதன் பலனாக அவள் கருவுறுகிறாள். தவறிழைத்து விட்ட குற்ற உணர்வில், மன அமைதியை நாடி அந்த வீட்டை விட்டு வெளியேறி பம்பாய் சென்று சேர்கிறான் ஓவியன். மனக் குழப்பத்துடன் அங்கு ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறான். அந்தக் காரில் ராணுவ டாக்டரும் பயணிக்கிறார். விபத்தில் சிக்கிய ஓவியனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி அவனை மருத்துவ மனையில் சேர்க்கிறார்.

அவன் மறுவாழ்வு பெறவும் உதவுகிறார். அவரின் தன்னலமற்ற மருத்துவ சேவையில் மனம் நெகிழும் ஓவியன் தன் உள்ளக் குமுறல்களை அவரிடம் கொட்டித் தீர்க்கிறான். அந்த இளம் பெண்ணுக்கு தன்னால் நேர்ந்த அவமானம், பழி பற்றியும் ஒளிவு மறைவின்றிக் கூறுகிறான். அவன் சொல்லிய நிகழ்வில் சம்பந்தப்பட்டவள் தன் மனைவி என்பதை அறிந்து துணுக்குறுகிறார் டாக்டர். ஆனால், மனைவியையும் அந்த ஓவியனையும் மன்னிக்கிறார். அடுத்தடுத்து அதிர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய இந்தக் கதை அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அவ்வை டி.கே.சண்முகம் குழுவினரால் நாடகமாகவும் நடத்தப்பட்டு வந்த இக்கதை மிகப் பிரபலமானது. கே. ராம்நாத் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. புராண, இதிகாசப் படங்கள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் இம்மாதிரியான படங்கள் பெரிதாக ரசிக்கப்படும் என்றோ, வசூலை வாரிக் குவிக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதானே… டாக்டராக டி.கே.பகவதியும், ஓவியனாக டி.கே.சண்முகமும் இளம் மனைவியாக கிருஷ்ண குமாரியும் நடித்தார்கள். தான் நடித்த தமிழ்ப்படங்கள் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் ‘டி.கே.எஸ்.பிரதர்ஸ் படம்’ என்றே இப்படம் பற்றி மிகவும் பெருமையுடன் பேசியிருக்கிறார் கிருஷ்ண குமாரி. ‘துளி விஷம்’ படத்தில் கே.ஆர். ராமசாமியின் காதலி நாகவல்லியாக, மன்னன் மகளாக ஆடல் பாடல் இசையில் வல்லவளாக பாத்திரம் ஏற்றார். வசனங்களால் நிரம்பியிருந்த இப்படமும் பெரிதாக ஓடவில்லை.

சோவியத்தின் பெருமை மிகு மகளாக…
தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக மாறி மிக நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் அவர் நடித்த படம் ‘உயிரா மானமா’. காட்சிப்படுத்தலுக்கு மாறாக நீள நீள வசனங்களால் தன் படங்களைப் பேச வைத்த இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் படம். முத்துராமனுக்கு ஜோடியாக ஒரு ரஷ்யப் பெண்ணாக இப்படத்தில் தோன்றினார். சோவியத் ஒன்றியத்துக்குப் படிக்கச் செல்லும் நாயகன், அங்கு கீழை மொழிகள் கற்கும் மாணவியாக, தனக்கு உதவி செய்பவளான தமிழ் பேசும் ரஷ்யப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டு இந்தியா வருகிறான்.

இங்குள்ள சொத்துரிமை, அதனால் குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள், விரோதம், சொத்துடைமை முறைக்கு முற்றிலும் எதிரான சோவியத்தின் கொள்கைகள் போன்றவை வசனத்தின் வாயிலாகப் படத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கதோர் அம்சம். அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார் கிருஷ்ண குமாரி. முத்துராமன் கிருஷ்ண குமாரிக்கு ஒரு ‘குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே’ என்று டூயட் பாடலும் உண்டு. தேன் நிலவுக்காக அவர்கள் செல்லும் இடங்களில் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கமும் இடம் பிடிக்கிறது.

அங்கு 1964ல் நிறுவப்பட்ட நினைவுத்தூணில், ‘நெய்வேலி அனல் மின் விசை நிலையம் வெற்றியாக நிறைவு பெறுவதற்கான இந்திய  சோவியத் நட்பையும் கூட்டுறவையும் இந்தத் தூபி நினைவு கூர்கிறது’ என்ற வாசகங்களும் படத்தில் காட்சிப்படுத்தப்படும். ‘நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு நாங்கள் உமக்களித்த நன்றியே  என்னை நானே  உனக்களித்தேன் செல்வமே’ என்று நாயகன் சோவியத் பெண்ணைப் பார்த்துப் பாடுவதாகக் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் சுட்டும். சற்றே அயல் நாட்டுப் பெண்ணின் தோற்றம் பொருந்திய முகம் என்பதாலோ என்னவோ, இப்பாத்திரத்துக்கு கிருஷ்ண குமாரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் அவர் தமிழ்த் திரைப்படங்களின் பக்கம் திரும்பவேயில்லை.

பல்வேறு திறமைகளின் சொந்தக்காரர்
கவர்ச்சிகரமான நடிகை, குடும்பப்பாங்கான பாத்திரங்கள் என இரு தளங்களிலும் வெற்றி பெற்றவர். சமூக, புராணப் படங்கள் பாத்திரங்கள், மாயாஜாலப் படங்கள் என அனைத்து வகைப் படங்களிலும் நடித்தவர். தெலுங்கின் முன்னணி நாயகர்களான என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், காந்தாராவ், ஜக்கையா போன்றவர்களுடன் கதாநாயகியாகவும், பின்னர் கிருஷ்ணம் ராஜுவுடன் குணச்சித்திர நாயகியாகவும் நடித்தவர். அவர் நடித்த ‘பார்யா பர்த்தாலு’, குல கோத்ராலு’ இரு படங்களும் தேசிய விருது பெற்றவை. அதிகப் படங்களில் இணைந்து நடித்தவர் என்.டி.ராமாராவ், அடுத்து நாகேஸ்வர ராவ்.

தமிழில் கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, முத்துராமன்; கன்னடத்தில் ராஜ்குமார் என அனைவருடனும் நடித்தவர். திரையுலகினர் நன் மதிப்பைப் பெற்றவர். தமிழ் போன்றே இந்திப் படங்களில் நடிப்பதையும் தவிர்த்தார். நடிகை நூதன் இவருக்காக ஒரு படத்தில் பாடியிருக்கிறார். கிருஷ்ண குமாரி குறித்து சக திரையுலகப் பயணிகள் பலரும் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ஜெயசுதா, தான் நடிக்க வந்த காலத்தில் அவருடன் இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதன் பின் பலமுறை பல நிகழ்ச்சிகளில் சந்தித்திருப்பதாகவும் பழகுவதற்கு மிக இனிமையானவர், மென்மையானவர் என்றும் பலரும் தன்னை கிருஷ்ண குமாரியின் குணநலன்களை ஒத்திருப்பதாகக் குறிப்பிட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த காலகட்டத்தில், கிருஷ்ண குமாரி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைவதே ஒரு இளவரசியின் வருகையை ஒத்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜெயலலிதா நடிக்க வருவதற்கு முன், அவரது நடன அரங்கேற்றம் கிருஷ்ண குமாரியின் வீட்டிலேயே நிகழ்ந்திருக்கிறது.

திரையுலகிலிருந்து எதிர்பாராத விலகுதல்
திரையுலகின் உச்சத்தில் இருந்தவர் புகழ், பரபரப்பு என அனைத்தையும் விடுத்து சட்டென்று 1969ல் விலகினார். அப்போதைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இது குறித்து வெளியான ஒரு செய்தி முக்கியமானது. என்.டி.ராமாராவுடன் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இருவரும் விரும்பியபோது, அந்த முயற்சி தடை பட்டதால் கிருஷ்ண குமாரி திரையுலகை விட்டே விலகியதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. கிருஷ்ண குமாரியின் மரணத்துக்குப் பின் ஒரு தெலுங்கு செய்தி சானலும் இந்தச் செய்தியை ஒளிபரப்பியது.

1951 முதல் 17 ஆண்டுகள் உச்சத்திலிருந்த ஒரு நாயகிக்கு இது பேரிழப்பு. அவரது நேர்காணலில் அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது கவர்ச்சிகரமான திரையுலக வாழ்வை விட்டு நீங்கி, இல்லற வாழ்க்கையை ஏற்ற ஓராண்டு வரை காதுகளில் ‘லைட்ஸ் ஆன், லைட்ஸ் ஆஃப்’ போன்ற சத்தங்களே ஒலித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். நிச்சயம் அது வலி மிகுந்த ஒன்றுதான். ஆனாலும் பெருந்தன்மையுடன் இந்த வாழ்க்கையும் நன்றாகவே இருந்தது என்றே அவர் குறிப்பிடுகிறார். மீண்டும் நண்பர்களின் அழைப்பை ஏற்று 72 முதல் சில படங்களில் நடித்தார். 1976ல் ‘ஜோதி;’ படத்துடன் அவரது வெள்ளித்திரை பங்களிப்பு நிறைவடைந்தது.

மண வாழ்க்கையும் பெங்களூரு வாசமும்
திரைப்பட எடிட்டரும் ‘ஸ்க்ரீன்’ பத்திரிகையை ஆரம்பித்தவர்களில் ஒருவருமான தொழிலதிபர் அஜய் மோகன் கைதான் அவர்களை மணந்து கொண்டு ஆந்திராவை விட்டு வெளியேறி, பெங்களூரில் குடியேறினார். அஜய் மோகன் கைதான் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதன் பின் கிருஷ்ண குமாரியின் வாழ்க்கை வீடு, எஸ்டேட் பராமரிப்பு, தோட்டக்கலை, சமையற்கலை என வேறு ஒரு தளத்தில் பயணித்தது.

இவர்களுக்குக் குழந்தையில்லாததால் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் தீபிகா கைதான், ‘My Mother, T Krishna Kumari’ என்று தன் தாயார் கிருஷ்ண குமாரி பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அஜய் மோகன் கைதான் 2012ஆம் ஆண்டில் காலமான பின், மகள், மருமகன், பேரக் குழந்தையுடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளாகப் புற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தவர், ஜனவரி 24 அன்று தன் 85 ஆம் வயதில் பெங்களூருவில் காலமானார். 25 ஆண்டுகள் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாகக் கோலோச்சியவர், திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டு காலத்துக்குப் பிறகும் ரசிக மனங்களில் நினைவில் நிற்கிறார். எரி நட்சத்திரமாக வீழ்ந்து போகாமல் நிலைத்து நிற்கும் திரை நட்சத்திரத்தின் மாபெரும் வெற்றி அது.

(ரசிப்போம்!)

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

தமிழில் கிருஷ்ண குமாரியின் படங்கள்
திரும்பிப் பார், அழகி (1953), மனிதன் (1953), புதுயுகம், விடுதலை (1954), துளி விஷம், கற்கோட்டை, தென்றல் வீசும் (1954), உயிரா மானமா (1968).