வெற்று உருவங்கள்- சக்தி

புதுதில்லியில் நிர்பயாவுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு கொடூரம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக 2013ம் ஆண்டு சிறிய அளவிலான ப்ராஜெக்ட் (பைலட் ப்ராஜெக்ட்) ஒன்றிற்காக திஹார் ஜெயிலில் இருந்த வன்புணர்வு குற்றவாளிகள் சிலரிடம் பேட்டி எடுக்க இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்திருக்கிறார் 22 வயதான இந்தியப் பெண் மதுமிதா பாண்டே. 

இந்த நான்கு ஆண்டுகளில் 100 வன்புணர்வு குற்றவாளிகளை பேட்டி எடுத்து முடித்திருக்கிறார். இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள் அல்லது மூன்றாம், நான்காம் வகுப்பிலே பள்ளியை விட்டு நின்றவர்கள். ஒரு சிலர் மட்டுமே உயர் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்று கூறும் மதுமிதா இது குறித்து மேலும் கூறுகிறார்.

“நான் முதன்முதலில் இவர்களை சந்திக்கப் போகும்போது இவர்கள் மனிதர்களே அல்ல வெறும் உருவங்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்களிடம் பேசிய பின்னர்தான் தெரிந்தது அவர்கள் அசாதாரணமானவர்கள் அல்ல. அவர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்கள் இவ்வாறு நடக்க காரணம் அவர்களின் வளர்ப்பு முறை மற்றும் அவர்களின் சிந்திக்கும் முறைதான்.

அவர்களை பேட்டி எடுத்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்த விஷயம் அவர்களுக்கு, தான் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்களுக்கு புரியவே இல்லை. அதை அவர்கள் உணரவே இல்லை. ஒரு சிலர் மட்டும் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர். மற்றபடி எல்லாரும் அதற்கான நியாயங்களை கூறிக்கொண்டிருந்தார்கள். நான் சில நேரங்களில் குற்றவாளிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து விட்டேன்.

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம். அவர்களில் சிலரிடம் பேசும் போது அவர்கள் மீது ஒரு பரிதாபம் தோன்றியது உண்மை. ஒரு குற்றவாளிக்கு வயது 49. ஐந்து வயது பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறார். அவரிடம் பேசியபோது நான் செய்தது தப்புதான். அதற்காக வருந்துகிறேன். அந்தப் பெண்ணுக்கு கன்னித்தன்மை போய்விட்டது. இனி அவளை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அதனால் நானே அவளை ஏற்றுக்கொள்வேன். ஜெயிலில் இருந்து வந்த பிறகு நானே அவளை மணந்து கொள்வேன் என்றார்.

எனக்கு இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி. வன்புணர்வு செய்தவரே திருமணம் செய்வாராம். நல்ல கதை! இந்தியாவின் சமூக மனப்பான்மை
பழமைவாதம் கொண்டதாகவே இருக்கிறது. பாலியல் கல்வி நம் பள்ளிப் பாடத்திட்டத்தில் இல்லை. பெற்றோர்களும் இது குறித்து வெளிப்படையாக பேச முன்வருவதில்லை. உடலுறவு குறித்த விஷயங்களை மூடி மூடி வைக்கின்றனர். பின் எப்படி முறையான ஒரு பாலியல் கல்வியை பிள்ளைகள் கற்க முடியும்?” என்கிறார் மதுமிதா.