மில்லட் மைசூர் பாக்



வாசகர் பகுதி

கடாயில் கம்பு மாவு 1 கப்புடன் 100 கிராம் நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும். 1 கப் வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு பக்குவத்திற்கு வரும் வரை காய்ச்சவும். இத்துடன் வறுத்த கம்பு மாவைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும். இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் ஊற்றி, அதன் மீது பொடித்த முந்திரிப்பருப்பைத் தூவி அலங்கரிக்கவும். நன்கு ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

கப்பலுக்குள் கார் பந்தயம்
உலகிலேயே முதல் முறையாக ஓர் உல்லாச கப்பலில் கார் பந்தயத் தடம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த நார்விஜியன் க்ருஸ் லைன்ஸ் என்ற நிறுவனத்தின் 15வது உல்லாச கப்பலான ‘நார்விஜியன் ஜாய்’ என்ற உல்லாச கப்பலில்தான் இரண்டு அடுக்கு கார் பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை புகழ் பெற்ற ஃபெராரி நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பந்தயத் தடத்தில் ஒரே நேரத்தில் 10 பந்தய வாகனங்களை இயக்க முடியும். சீனப் பயணிகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 3,850 பயணிகள் வரை பயணிக்கலாம். இக்கப்பல் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் இருந்து புறப்படும். இக்கப்பல் விரைவில் தன் பயணத்தை துவங்கிட உள்ளது.

உலக ஹனி மேன்
உலகிலுள்ள நாடுகளில் பெரும்பாலும் சீனாவில் வாழ்பவர்கள் பல அரிய நிகழ்வுகளை செய்து காட்டி சாதனையாளர்களாக உள்ளனர் எனலாம். சீனாவைச் சேர்ந்த ‘வாங்டாலின்’ என்பவர் தேனீ வளர்ப்பவர். இவருக்கு 48 வயதாகிறது. இவர் தேனீக்களுடன் ரொம்பவே நெருக்கமானவர். எனவே இவர் ஒரு சமயம் தன் உடம்பில் தேனீக்களை கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோ எடை அளவில் தன் உச்சி முதல் உள்ளங்கால் வரை மொய்த்துக் கொள்ளும்படி செய்தார்.

இதைப் பார்த்த மற்றொரு தேனீ வளர்ப்பாளரான ‘லீகோங்ஜியாங்’ என் உடம்பில் அவரை விட அதிக எடையளவில் தேனீக்களை சுமந்து காட்டுகிறேன் என சவால் விட்டார். அவர் உடலிலும் தேனீக்கள் மொய்த்தன. ஆனால் முடிவில் அந்த போட்டியில் வெற்றி வாகை சூடியவர் வாங்டாலின்தான். சில மணி நேரங்கள் வரை அவர் தன் உடலில் தேனீக்களை சுமந்தபடி சாதனை படைத்தார்.

- கஸ்தூரி லோகநாதன், அம்பத்தூர்.

* வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் உண்டுவர நரம்புத்தளர்வு குணமாகும்.
* குளவி அல்லது தேனீ கொட்டிவிட்டால் அந்த இடத்தில் வெங்காயத்தை நறுக்கித் தடவினால் விஷம் நீங்கும்.
* வெங்காயப்பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
* நம் உணவில் தினசரி வெங்காயம் சேர்த்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
* பாலைவனத்தில் ஏற்படும் தாகத்திற்கு வெங்காயம் ஒரு அருமருந்தாகும்.
* பனையின் பதநீரில் இதன் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் மேக நோய்கள் குணமாகும்.
* தூங்குமிடத்தைச் சுற்றி வெங்காயத்தை நறுக்கிப்போட்டால் விஷப்பூச்சிகளின் தொல்லை நீங்கும்.
* பச்சை வெங்காயத்தைத் தின்று வெந்நீர் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

- எஸ்.ராஜகுமாரி

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)