செல்லுலாய்ட் பெண்கள்



கட்டழகுப் பதுமை கம்பீரக் குரலழகி எஸ்.வரலட்சுமி

‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி’, ‘தென்றல் வந்து தீண்டாதோ தெம்மாங்கு பாடாதோ’, ‘ இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ என என்றென்றைக்கும் நினைவில் நிற்கும் மூன்று தாலாட்டுப் பாடல்கள். மூன்றும் வெவ்வேறு விதமான சூழலில் ஒலிக்கும் பாடல்கள். அப்பாடல்களில் ஒலிக்கும் எஸ். வரலட்சுமியின் கம்பீரக் குரல் என்றென்றைக்கும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை நடிகையர்களில் கடைக்குட்டி என்றே எஸ். வரலட்சுமியைக் குறிப்பிடலாம். தமிழ் சினிமாவில் எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி என பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும் தமிழ் சினிமாவுக்குப் புத்தொளி பாய்ச்சியவருமான முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தியவர் என அனைத்துப் பெருமைகளையும் கொண்டவர் எஸ். வரலட்சுமி.  நடிக்க வந்தது முதல் இறுதி வரை சொந்தக் குரலில் பாடி நடித்தவர்.

அதிலும் இவரது குரலுடன் எவர் குரலையும் ஒப்பிட முடியாத அளவுக்கு கணீர் குரலுக்குச் சொந்தக்காரர். அஷ்டாவதானி பி.பானுமதியும் இவரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியான ஒற்றுமை உள்ளவர்கள். வயது முதிர்ந்த காலத்தில் நடித்த கடைசிப்படம் வரை (குணா) வரலட்சுமி பாடி நடித்தார். ‘உன்னை நானறிவேன்; என்னையன்றி யாரறிவார்’ என்ற அந்தப் பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் அவர் பாடும்போது அவருக்கு வயது 64.

அந்த வயதிலும் அதிரும் அந்த வெண்கலக் குரலில் பெரிதும் மாற்றமில்லை. நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக வலம் வந்தாலும், நடுத்தர வயதில் அவர் ஏற்று நடித்த குணச்சித்திர, வில்லத்தனம் மிகுந்த (அம்மா, மாமியார்!?) கதாபாத்திரங்களுக்காக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவர் நாயகியாக நடித்த படங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நடுத்தர வயதில் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு என இரு மொழிகளிலும் தன் பாடல்களாலும் நடிப்பாலும் பரவலாக அறியப்பட்டவர். கோயில் சிற்பம் போல கட்டுக்குலையா உடலழகு கொண்டவர். ஐந்தாவதாகப் பிறந்த அதிர்ஷ்டக்காரப் பெண் ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர் வரலட்சுமி. சாவித்திரி அம்மாளுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் வரலட்சுமிதான் கடைக்குட்டி.

ஐந்து குழந்தைகளுமே பெண்ணாகப் பிறந்ததாலும் சாவித்திரி அம்மாளின் அக்காளுக்குக் குழந்தைகள் இல்லாததாலும் வரலட்சுமியை தத்து எடுத்துக் கொண்டார். வரலட்சுமியின் பெரியப்பா ரங்கப்பா நாயுடு ஒரு சங்கீத விற்பன்னர். சிறு வயதில் தன் வீட்டில் வளர்ந்த வரலட்சுமிக்கு சங்கீதப் பயிற்சியையும் அவரே அளித்து வந்துள்ளார். ஐந்து அல்லது ஆறு வயதுச் சிறுமியாக இருந்தாலும் குரல் எந்தக் கட்டைக்கும் பிசிறில்லாமல், கார்வையாக, கணீர் என்று ஒலிக்க வேண்டும் என்பதற்காக, அதிகாலை 5 மணிக்கே எழுப்பி விட்டு ஒரு சிறு மண் பானையில் தண்ணீரை நிரப்பி விட்டு, குளிர்ச்சிக்காகக் கூடுதலாக அதில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டு, அதை மார்போடு இறுக்கிப் பிடித்தபடி பயிற்சி செய்யச் சொல்வாராம்.

உடலில் உதறல் ஏற்படுத்தும் சில்லிப்புடன் அப்போது பயிற்சி எடுத்ததால் குரல் உலோக அதிர்வுகளுடன் பழகிப் போனது. பின்னர் அந்தக் குரலுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல், கதாநாயக நடிகர்களும் கூட கிறங்கிப் போய் பித்துப் பிடித்து அலைந்துள்ளனர்.

குழந்தைகளால் நிரம்பிய ‘பாலயோகினி' 1937ல் கே.சுப்பிரமணியம் ‘பாலயோகினி’ என்ற படத்தைத் தமிழில் எடுத்தார். இப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலோர் குழந்தை நட்சத்திரங்கள் என்பது இதன் சிறப்பு. அதில் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் பேபி சரோஜா. (இவர் கே.சுப்பிரமணியத்தின் அண்ணன் விஸ்வநாதனின் மகள்) இந்தப் படத்தில் நடித்து ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றவர் குழந்தை நட்சத்திரமான பேபி சரோஜா.

தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் குழந்தைகள் சினிமா இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அமோக வெற்றி பெற்ற ‘பாலயோகினி’யைத் தெலுங்கிலும் எடுக்கத் திட்டம் தீட்டினார். அதில் பேபி சரோஜாவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டவர்தான் எஸ்.வரலட்சுமி.

‘பாலயோகினி’ தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் படம். புராணக் கதைகளே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்த காலத்தில் சமூகக் கதையை அதிலும் பார்ப்பன சமூகத்தில் புரையோடிப் போயிருந்த பால்ய கால விதவைகளின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய கதையைப் படமாக்கினார் கே.சுப்பிரமணியம்.

இந்தப் படத்தை அதன் கதை அம்சத்துக்காகவும், குழந்தைகளின் நடிப்புக்காகவும் ‘மணிக்கொடி’ போன்ற அக்கால இலக்கியப் பத்திரிகைகளும் வெகுவாகப் பாராட்டின. தெலுங்கிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் அறிமுகம் ‘சேவாசதனம்’ எஸ்.வரலட்சுமியின் துறுதுறு நடிப்பு மற்றும் இனிமையான குரலால் கவரப்பட்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் அடுத்த படமான ‘சேவாசதனம்’ படத்திலும் வரலட்சுமியைப் பயன்படுத்திக் கொண்டார். 

பால்ய பருவத்தில் திருமணம் செய்விக்கப்படும் ஒரு குழந்தை, வயது முதிர்ந்த கணவனாலும் அவனது குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்படும் கதை. விதவை மறுமணம் தொடர்பான கதைதான் இதுவும். இதில் அந்தப் பரிதாபத்துக்குரிய பால்ய விதவையாக எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானார். அவரது தங்கையாக எஸ். வரலட்சுமி தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். இப்படமும் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு தெலுங்குப் படங்களில் வெற்றிகரமாக வலம் வந்தார்.

அடுத்து  1947ல் தமிழின் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’. ஆண்களின் வாசனையே பிடிக்காத இளவரசி அபூர்வ சிந்தாமணியாக வி.என். ஜானகி நடித்தார். சிந்தாமணியின் தோழியாக எஸ். வரலட்சுமி நடித்தார். சிறு பெண்ணாக நடித்த ‘சேவாசதனம்’ படத்துக்குப் பின்னர் அழகிய யுவதியாக அவரை அறிமுகப்படுத்திய படம் இது. இதில் தனது இனிய குரலால் ஒரு பாடலும் பாடி அசத்தினார். தமிழகம் முழுவதும் ரசிகர்களை  கொள்ளை கொண்டார். தமிழ் சினிமாவின் கதாநாயகர்களும், இயக்குநர்களும்கூட எஸ். வரலட்சுமியை மொய்க்கத் தொடங்கினர்.

ஜோடி சேர்ந்த இணைக் குரல்கள்
அப்போது வளர்ந்து வந்த நாயகன் டி.ஆர். மகாலிங்கம். அவரது அழகுக்காக மட்டுமல்லாமல் அவரது கணீர்க் குரலுக்காகவும் ரசிக்கப்பட்டவர். அதனால் தனக்கு ஜோடியாக நடிக்கத்தக்க அழகும் குரல் வளமும் கொண்ட நாயகிக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் சிந்தாமணியில் வரலட்சுமியைக் கண்டதும் சிந்தாமணியை விட வரலட்சுமியின் அழகையும் குரலையும் ரசித்தார்.

விளைவு  தொடர்ந்து ‘மச்சரேகை’ (1950), ‘மோகனசுந்தரம்’ (1951), ‘சின்னத்துரை’ (1952), ‘வேலைக்காரன்’ (1952) ஆகிய படங்களில் அவரது இணையாக எஸ். வரலட்சுமி நடித்தார். இருவரும் இணைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. மகாலிங்கம்- வரலட்சுமி இணை பற்றி அக்காலப் பத்திரிகைகளில் கிசுகிசுக்களும் பஞ்சமில்லாமல் வெளியாகின. அதன் பிறகு பல ஆண்டுகள் இருவரும் இணைந்து நடித்தது ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில்தான்.

பாகவதரின் நாயகியாக…
இக்காலகட்டத்தில் இவரது புகழ் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு உதாரணமாக ‘சியாமளா’ படத்தைக் கூறலாம். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு காரணமாகத் தண்டனை பெற்ற எம்.கே.தியாகராஜ பாகவதர், சிறையிலிருந்து விடுதலையான பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். முதலில் அவர் நடித்த படம் ‘சியாமளா’. பாகவதருக்கு மறு பிரவேசப் படமான சியாமளா அவருக்கு ஓர் அக்னிப்பரீட்சை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமது பெயரை நிலை நிறுத்தும் கட்டாயத்தில் இருந்த பாகவதருக்கு, அப்போது தமக்கு இணையாகப் பாடி நடிக்கக் கூடியவராகக் கண்ணில் தென்பட்டவர் எஸ். வரலட்சுமிதான்.

அழகான, இளமையான வரலட்சுமி, அதுவரை மீசையில்லாமல் நடித்து வந்த பாகவதர் கம்பீரமான மீசையுடன் தோன்றி னார். இவர்கள் இருவரின் நெருக்கமான காதல் காட்சிகள், கதையம்சம் அனைத்தும் இருந்தபோதிலும் ‘சியாமளா’ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பாகவதர் படங்களின் தலைப்பு பெரும்பாலும் கதாநாயகனை முன்னிறுத்தியே வைக்கப்படுவது வழக்கம்.

‘சிந்தாமணி’ படம் மட்டும் இதில் விதிவிலக்கு. இதில் ஒரு அழகிய நாயகியாக அஸ்வத்தம்மா நடித்தார். அதன் பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் நாயகியின் பெயரால் மீண்டும் ஒரு படம்; இந்தப் படத்திலும் ஒரு அழகிய நாயகியாக வரலட்சுமி இருந்தார். ஆனால், படம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் வரலட்சுமி அல்ல. 

பல்வேறுபட்ட பாத்திரங்கள் தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை அளித்துக் கொண்டிருந்தார். என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் கதாநாயகியாக இணைந்து நடித்தார். பல்னதி யுத்தம், பால ராஜு, போஜன், சக்ரதாரி, ஜீவிதம், வாலி சுக்ரீவா, சத்தியவான் சாவித்திரி ஆகிய படங்கள் இதே காலகட்டத்தில் தெலுங்கில் வெளிவந்தன. மீண்டும் 1954ல் ‘எதிர்பாராதது’ தமிழ்ப்படத்தில் சிவாஜி கணேசனுடனும், 1957ல் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் ஏறக்குறைய எதிர்மறை நாயகியாக எம்.ஜி.ஆருடனும் நடித்தார். 

தமிழில் நடித்த படங்களில் குறிப்பிடப்பட வேண்டியவை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் கட்டபொம்முவின் மனைவி ஜக்கம்மாவாக ஒரு மாவீரனின் மனைவி என்பதற்குரிய கம்பீரத்தோடு நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி….’ பாடல் என்றும் நிலைத்து நிற்கும் பாடல். அதே காலகட்டத்தில் வெளியான ‘சிவகங்கைச் சீமை’ யில் பெரிய மருதுவின் மனைவி பெரிய ராணியாக நடித்தார். இப்படத்திலும் சற்றும் குறையாத கம்பீரத்துடன் நடித்தார். இதிலும் ஓர் தாலாட்டுப் பாடல், ‘தென்றல் வந்து தீண்டாதோ தெம்மாங்கு பாடாதோ’. அவர் பாடிய பாடல்கள் அப் பாத்திரத்துக்குத் தனித்துவம் தந்து உயிரூட்டின.

இவையல்லாமல் ‘பணமா பாசமா’, ‘பூவா தலையா’, ‘சவாலே சமாளி’, ‘நத்தையில் முத்து’, ‘உயிரா மானமா’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘தாய்’, ‘நீதிக்குத் தலை வணங்கு’, ‘கவரிமான்’ போன்ற படங்களில் ஸ்டீரியோ டைப் வேடங்களில் நடித்தார். வயதானாலும் கட்டுக்கோப்பான தோற்றம், பிசிறில்லாத வெண்கலக் குரல் ஆகியவற்றால் ஆணவமும், அகங்காரமும் கொண்ட மாமியாராக நடிக்க அவர் விரும்பி அழைக்கப்பட்டார் போலும்.

‘பணமா பாசமா’ படத்தில் ஜெமினி கணேசனின் மாமியாராக இவர் நடிப்பதில் ஜெமினிக்கு விருப்பமில்லையாம். அதனால் சாவித்திரியைக் கேட்கும்படி இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் கூறினாராம். அதை நம்பி சாவித்திரியிடம் சென்ற இயக்குநர், ‘மாமியார் பாத்திரத்தில் நான் நடிப்பதற்கு ரெடி. ஆனால், கதாநாயக வேடத்திலிருந்து ஜெமினியை மாற்றுங்கள்’ என்ற சாவித்திரியின் பதிலடி தாங்காமல் ஓடி வந்ததாக அக்காலத்தில் பத்திரிகைகள் கெக்கலி கொட்டிச் சிரித்தன.

தெலுங்கு தாய்மொழி என்றாலும் அட்சர சுத்தமான இவரது தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில், அவர் எழுதிய தஞ்சை வட்டார வழக்கில் அமைந்த நீள நீள வசனங்களையும் அற்புதமாகப் பேசி நடித்தவர். அதனாலேயே அவருடைய பல படங்களிலும் வரலட்சுமிக்குத் தவறாமல் முக்கிய வேடங்கள் அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ‘அடி, மகமாயி’ என்ற வசனமும் அழுத்தம் திருத்தமாக அதனை வரலட்சுமி உச்சரிக்கும் பாங்கும் மிக இயல்பான ஒன்று. 

அதே போல, ஒரு படத்தில் எம்.ஜி.ஆரின் அம்மாவாக நடிக்க வைக்கலாம் என இயக்குநர் விரும்பியதாகவும், ஆனால் வரலட்சுமியின் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதால் தனது அம்மாவாக அவர் நடித்தால் பொருத்தமாக இருக்காது என எம்.ஜி.ஆர் நிராகரித்ததாகவும் அக்கால சினிமா பத்திரிகைகள் கூறுகின்றன. பின்னர் அதே எம்.ஜி.ஆர் ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் எஸ். வரலட்சுமியை தனக்கு தாயாக நடிக்க வைத்தார்.

ஆனால், வரலட்சுமி இப்படத்தில் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ பாடல் என்றைக்கும் கேட்கும் பாடலாய் நிலைத்து நிற்கிறது. ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘காரைக்கால் அம்மையார்’ ஆகிய படங்களில் தேவியராக நடித்தார். ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ராஜராஜனின் அக்காள் குந்தவை பாத்திரத்தில் நடித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்த இப்படத்திலும் இவரின் குரலில் பாடல் இடம் பெற்றது. அவர் நடித்த கடைசிப் படம் ‘குணா’. மிக முதிர்ந்த தோற்றத்தில் நடித்த இதுவே அவரின் இறுதிப்படமும் ஆகும்.

தனித்தன்மை வாய்ந்த குரலுக்குச் சொந்தக்காரர் 
இவரது இசைத்திறன் அவரது பாடல்களில் எல்லாம் நன்கு வெளிப்பட்டது. இவரின் பாடல்கள் பற்றி இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ‘கந்தன் கருணை’ படத்தில் வரும் “வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா” பாடலை பக்தி ரசம் சொட்டச் சொட்டக் கொடுத்திருக்கும் அதே வரலட்சுமி நீண்ட நாட்களுக்குப் பின் “குணா” படத்தில் “உன்னை நானறிவேன்” என்ற 36 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் பாடலிலும் தன் தனித்துவமான குரலினிமையை அழகுற வெளிப்படுத்தியவர்.

எஸ்.வரலட்சுமி என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது அவரது ஸ்டீரியோஃபோனிக் குரல்தான். அதிர்வலைகளை ஏற்படுத்தும் வெண்கலக்குரல் அது என்றாலும் மிகையில்லை. இன்றைக்கு டீ.டி.எஸ்., ஊஃபர் என எல்லாவிதமான ஒலி வசதிகளும் இருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே இல்லாத கால கட்டத்திலும் அந்த எஃபெக்டை அந்நாளிலேயே கொடுத்தது வரலட்சுமியின் குரல்.

அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே அந்த ரகம்தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே...’ ‘மங்கலம் காப்பாள் சிவசக்தி...’ ‘நீல நிற மேகமெல்லாம் நீயே கண்ணா’ என எல்லாமே நம்முள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பாடல்கள்தான். கே.பி.சுந்தராம்பாள், பி.பானுமதி போலவே தனக்கென தனித்தன்மை மிக்க குரல் வளம் கொண்டவர் வரலட்சுமி. மெட்டாலிக் வாய்ஸ் என்று பலராலும் பாராட்டப்பட்ட குரலழகி. இசைஞானி இளையராஜா, ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் வழங்கிய கேள்வி - பதில் பகுதியில் வரலட்சுமியின் குரல் தனித்தன்மை வாய்ந்த குரல் என்று குறிப்பிட்டுள்ளதும் கூட கவனிக்கத்தக்கது.

வித்தைக்கு ஏற்ற விருதுகள் 
கலைமாமணி, கலை வித்தகர், கவிஞர் கண்ணதாசன் விருது (2004), சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (2007ல் சிவாஜி கணேசன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது) என பல விருதுகளையும் பெற்றவர். ‘திருடாதே’, ‘கந்தன் கருணை’, ‘சினிமா பைத்தியம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி. ஒரு மகனும், மகளும் இந்தத் தம்பதிகளுக்கு உண்டு. மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது 82ம் வயதில் காலமானார்.

நீண்ட நெடிய திரை அனுபவம்
1930களில் நடிக்கத் துவங்கி தொடந்து 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடிப்புத் துறையில் இயங்கியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இவருடன் நடிக்கத் தொடங்கிய நடிகைகளில் பலரும் 60, 70 களில் திரையுலகை விட்டே விலகிப் போனார்கள். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் ஒரே காலகட்டத்தில் கோலோச்சியவர் என்ற பெருமையையும் அவருக்கு அளிக்கலாம். மேலும் தான் நடித்த படங்களில் சொந்தக் குரலில் பாடி நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் வரலட்சுமியின் சாயலில் வெண்ணிற ஆடை நிர்மலா, ரேவதி, மீனா என்று பல நடிகைகள் நடிக்க வந்திருந்தாலும் நீண்டகாலம் திரையை ஆக்கிரமித்த நடிகை, பாடகி என்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.

ஸ்டில்ஸ்: ஞானம்

எஸ்.வரலட்சுமி நடித்த படங்கள்
சேவாசதனம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஜகதலப்பிரதாபன், சியாமளா, ஸ்வப்பன சுந்தரி, எதிர்பாராதது, மோகனசுந்தரம், மச்சரேகை, சின்னத்துரை, வேலைக்காரன், சதி சக்குபாய், சக்கரவர்த்தித் திருமகள், சதி வன சுந்தரி, சாவித்திரி, மாங்கல்ய பலம், லவகுசா, சத்ய அரிச்சந்திரா, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கைச் சீமை, பாமா விஜயம், பூவாதலையா, பணமா பாசமா, உயிரா மானமா, அபூர்வ பிறவிகள், திருமகள், தாய், மாலதி, கந்தன் கருணை, சினிமா பைத்தியம், ஆதி பராசக்தி, மாட்டுக்கார வேலன், சவாலே சமாளி, ராஜராஜ சோழன், தங்கச் சுரங்கம், காரைக்காலம்மையார், திருமலை தெய்வம், நத்தையில் முத்து, நினைத்ததை முடிப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, கவரிமான், அடுத்த வாரிசு, குணா.