வெற்றிப் பாதையில்தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள பெண்கள்  ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாநிலந்தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  கேரள மாநிலத்தில் 28வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த 14 வயதான சபிதா இரண்டு தங்கப்பதக்கம் பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் வெற்றிபெற்று தன்னுடன் போட்டியிட்ட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார் சபிதா. இரண்டாவது நாள் நடைபெற்ற 100 மீட்டர் தடை ஓட்டத்தில் 14.8 வினாடியில் கடந்து இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் தன்வசமாக்கினார்.

சிறு வயது முதல் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட சபிதா கடந்த 5 ஆண்டுகளாக சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இது குறித்து சபிதாவின் பயிற்சியாளர் பி. நாகராஜனிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
 
“விளையாட்டு போட்டிகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர் சபிதா. இவர் எங்களது அகாடமிக்கு வரும்போது 10 வயது இருக்கும். இவருடைய அப்பா ஆட்டோ ஓட்டுநர். சிறு வயதிலே துறுதுறுவென இருப்பார். சபிதாவின் பெற்றோர்களும் அவர்களுக்கு நல்ல ஊக்கம் அளித்து வந்தனர். சரியான நேரத்திற்கு பயிற்சிக்கு வந்து  முழு ஈடுபாட்டோடு கலந்துகொள்வார். அவருடைய ஆர்வமும் ஈடுபாடும்தான் அவரை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

திறமை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நாங்கள் தேர்ந்தெடுத்து சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகிறோம், அவ்வாறே சபிதாவுக்கு காலை, மாலை என இரு வேலையும் பயிற்சி அளித்து வந்தோம். இந்த சின்ன வயதில் அவர் பல போட்டிகளில் கலந்து வெற்றிபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது தென்மண்டல அளவில் கேரளாவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறுவார்” என்றார் நாகராஜன்.

- ஜெ.சதீஷ்