நீராலானது இவ்வுலகு



- மு.வெற்றிச்செல்வன்

நீர் மேலாண்மையும் உள்ளாட்சி அமைப்புகளும்
ஜனநாயகத்தில்  முழு அதிகாரம் பெற்றவர்கள் யார்? மக்கள்தான்! நாடாளுமன்றமும், மாநில சட்டசபைகளும் மக்களின் விருப்பத்தின் பெயரிலேயே இயங்க வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. (வேதத்தின் மூலம் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இந்தியாவை தங்கள் விருப்பத்திற்கு மாற்ற முயலுகிறார்கள் என்பது தனி கதை). மேலும் அரசமைப்புச் சட்டம் இந்தியாவை சோசலிச குடியரசாக பிரகடனம் செய்கிறது. அதோடு நில்லாமல், வல்லரசாக அல்ல நல்லரசாக (Welfare State) இருக்க வேண்டும் எனவும் கூறுகிறது.

சோசலிச ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாக கூட்டுறவு உற்பத்தி முறையும், ஓரிடத்தில் அதிகாரம் குவிந்துவிடாமல் அதை பரவலாக்குதல் ஆகியவற்றை கூறலாம். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது அடிநிலையில் இருந்து மேல் நோக்கி செல்ல வேண்டும். அதாவது ஜனநாயகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? கிராமம் முதல் பெருநகரம் வரை அனைத்தையும் அதிகார மையங்களாக மாற்ற வேண்டும்.

அது எப்படி சாத்தியமாகும் என்னும் அடுத்த கேள்வி எழலாம். கிராமம் முதல் பெருநகரம் வரை மக்கள் மன்றங்களை ஏற்படுத்த வேண்டும். இப்படி உருவாக்கப்பட்டவையே கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள். சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுபோன்ற உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியது முதன்மையானது. எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் அத்திட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் அனுமதி பெயரில் மட்டுமே நடைமுறைப்படுத்த பட வேண்டும் என்பதே ஜனநாயகமாக இருக்க முடியும்.

கூடங்குளம் முதல் ஹைட்ரோகார்பன் திட்டம் வரை அனைத்தும் இங்கு மேல் இருந்து திணிக்கப்படுகின்ற திட்டமாகவே உள்ளன. அடிநிலை மக்களையும் வாழ்வுரிமையையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற திட்டங்கள் குறித்தான முடிவு களை மேற்கொள்ளும் அதிகாரத்தையும் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே கொடுக்க முடியும். ஜரோப்பிய நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் அதிகாரம் பெற்றவையாக உள்ளன. ஒரு மரத்தை வெட்டுவதாக இருந்தாலும் சரி, அணுக்கழிவு சேமிப்பு கிடங்கானாலும் சரி உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்ற பின்பே செயல்படுத்த முடியும் என்னும் நிலை உள்ளது. 

பொதுவாக பஞ்சாயத்து என்னும்போது நமக்கு தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமை கதாபாத்திரங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆண்டான் அடிமை முறையிலான பழைய நிலப்பிரபுத்துவ நிர்வாக முறையின் தொடர்ச்சியாக தற்போதைய பஞ்சாயத்துகளை நாம் கருத முடியுமா என்னும் கேள்வி இங்கு எழுகிறது. முற்றிலும் இல்லை என்னும் பதிலை இக்கேள்விக்கு நாம் கூறிவிட முடியாது. முழுவதுமாக நமது கிராமங்கள் பழைய நிலப்பிரபுத்துவ தொடர்பில் இருந்து விடுபடவில்லை என்னும் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் கிராமங்கள் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும் என்று காந்தி கோரிக்கை வைத்தபோது அதற்கு எதிர்நிலையில் அம்பேத்கர் இருந்தார். கிராமங்களுக்கு முழு அதிகாரம் கொடுப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகம் மேலும் ஒடுக்கப்படும் என்று அவர் பயந்தார். அவரின் பயம் நியாயமானதும் கூட. சாதிய கட்டுமானங்களின் அடிப்படையில்தான் இந்திய கிராமங்கள் இயங்கி வருகின்றன. எனவேதான் பெரியார் கிராமம் என்னும் கட்டுமானத்தை  உடைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உணவு உற்பத்திக்கும் கிராமங்களில் இருத்தல் தேவையானதாக இருக்கிறது. சூழலியல் மற்றும் சமூகவியல் பார்வையோடு இந்த முரணை நாம் அணுக வேண்டியுள்ளது. கிராமங்களை ஜனநாயகப்படுத்துவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களையும் அதிகாரம் பெற்ற மக்களாக சமூகநீதி காப்பாற்ற வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.

அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் இடம்பெறுகின்ற வகையில் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க 1992ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியா அரசமைப்பு சட்டத்தில்  74வது அரச மைப்பு திருத்தச் சட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலமாக நாடெங்கும் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்தது.

மேலும் இந்த அமைப்புகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கின்ற வகையில் திட்டங்களைத் தீட்டுவது இந்த அமைப்புகளின் வேலையாக இருக்க வேண்டும் என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. மேலும் கிராமத்திற்கு தேவையான மின்சார உற்பத்தி, குடிநீர் விநியோகம், நில மேம்பாடு, சமூகக் காடு பாதுகாப்பு என தன்னளவில் சுயாட்சி பெற்றவை இருக்க வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை விளக்கும் சுமார் 17 பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மேலும் கிராமப் பஞ்சாயத்துகள் நிர்வகிக்க வேண்டிய பட்டியல் அரசமைப்புச் சட்டத்தில் 11வது அட்டவணையாகவும், நகராட்சி அமைப்புகள் நிர்வகிக்க வேண்டிய பட்டியல் 12வது அட்டவணையாகவும் சேர்க்கப்பட்டன. விவசாயம், நில மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, நீர்ப் பாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு, மீன்வளம், சமூகக் காடுகள், குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம் மற்றும் மாற்று எரிசக்தி போன்றவை கிராமப் பஞ்சாயத்துகள் நிர்வகிக்க வேண்டியவை என 11ம் அட்டவணை கூறுகிறது. இந்த அதிகாரங்களை மாநில அரசுகள் பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கூறிய அரசமைப்புச் சட்ட திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பாகவே உள்ளாட்சி அமைப்புகள் இருந்தன. இருந்தபோதிலும் புதிய திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு 1994ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி பெற்றனவா? இல்லை. இச்சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்ட போதிலும் முழு அதிகாரம் பெற்ற சுயாட்சி அமைப்புகளாக இவை உருவாக்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி மன்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றங்கள் எடுக்கும் முடிவுகளை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது.

குடிமராமத்து தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் நீர், நிலம் மேலாண்மை கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களின் நீர் மேலாண்மை என்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான். வீடுதோறும் ஒரு நபர் நீர்நிலைகளை தூர்வாரும் வேலையில் ஈடுபட வேண்டும் என்னும் நடைமுறை ‘திருவிளையாடல்’ காலம் முதலே இருந்து வருகிறது. இப்படி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நீர்நிலைகளை பராமரிப்பதே குடிமராமத்து என்று அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் பராமரிப்பு வேலைகள் தொடரப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கட்டாய வேலை சட்டத்தை (Madras Compulsory Labour Act, 1858) இயற்றினர். தற்போதைய தமிழ் நாடு பஞ்சாயத்து சட்டப்படி இந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கிராமப் பஞ்சாயத்துகளிடம் உள்ளன.

மேலும் சாதி உள்ளிட்ட எவ்வித  வேற்றுமையும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பஞ்சாயத்து சட்டம் கூறுகிறது. தமிழக நீர்நிலைகள் பல வருடங்களாக சரியாக தூர்வாரப்படாமலும், பராமரிக்கப் படாமலும் இருந்து வருகின்றன. நூறு நாள் வேலை திட்டத்தோடு இணைக்கப்பட்டு சில இடங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்படுகின்றன. தமிழக அரசு அனைத்து நீர்நிலைகளும் குடிமராமத்து திட்டப்படி தூர்வாரப்படும் என்று அறிவித்துள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத தற்போதைய நிலையில் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.

உள்ளாட்சி தேர்தலே பல மாதங்களாக நடைபெறாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தேர்தல் நடைபெற தற்போது சூழல் எழுந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் என்று நம்புவோம். அதோடு நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும் என்றும் நம்பிக்கை கொள்வோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தே பெருவாரியாக பெறுகின்றன. சுயமாக வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்த போதிலும் இவை போதுமானதாக இருப்பதில்லை. நீர்நிலை பாதுகாப்பு, மேலாண்மை, நீர் பாசனம், குடிநீர் விநியோகம் என பல முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளை மேலும் அதிகாரம் பெற்றவையாக, ஜனநாயகத்தன்மை உடையவையாக மாற்றுவது காலத்தின் தேவை.

(நீரோடு செல்வோம்!)