முரசொலியின் பயணம்



- மகி

முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியால் தன் 18 வயதில், மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில், 1942ம் ஆண்டு திருவாரூரில் வெறும் துண்டறிக்கையாய் துவங்கப்பட்டது. தொடர்ந்து மாத இதழாய், வார ஏடாய் உருமாறி, 1960களில் “இன்றைய செய்தி, நாளைய வரலாறு” என்கிற அடைமொழியோடு, நாளிதழாய் தன் பயணத்தை தொடரும் முரசொலி, தன் 75 ஆண்டுகாலப் பயணத்தின் வெற்றியினை பவளவிழாவாக்கி, தன் பரிணாம வளர்ச்சியின் நடை பயணத்தை அரங்கம் முழுவதும் அள்ளித் தெளித்து காட்சிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும் எழுத்துக்களை பதிவு செய்யும் முரசொலி நாளேட்டின் வெற்றிப் பயணம் முரசொலி அறக்கட்டளை சார்பில் பவளவிழாவாகக் கோலாகலமாய் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் கோடம்பாக்கம் முரசொலி பத்திரிகை வளாகத்தில் இன்றைய தலைமுறையினரும் அச்சுத் துறையின் தொடர் வளர்ச்சியினை அறியும் வண்ணம் முரசொலி பவளவிழா காட்சி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கின் நுழைவு வாயிலில் சீறிப்பாயும் காளையின் கூரிய கொம்பைப் பிடித்து அடக்கும் இளைஞனின் பிரம்மாண்ட சிலை வரவேற்க, அரங்கத்தின் உள்ளே டிரெட்டில் இயந்திரத்தில் துவங்கிய அச்சு ஊடகத்தின் பணி இன்று கணினி யுகத்தில் கால்பதித்து பரிணமித்திருப்பதை விழிகள் விரிய வியப்புடன் காண முடிகிறது. திராவிடப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல்களான பெரியார், அண்ணா மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோரின் வாழ்த்துரைகளும் அங்கே நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

அதைத் தொடர்ந்து நிலமெங்கும் வலம் வந்த வரலாற்றுப் பதிவுகளும், அதன் ஆவணங்களும் திரும்பிய திசையெங்கும் நம் கண்முன்னே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அடக்குமுறையினை அப்படியே நம் கண்முன் விவரிக்கும்விதமாக ராஜீவ் காந்தியின் இறப்பின்போது எரிக்கப்பட்ட முரசொலி அலுவலகத்தின் மினியேச்சர் அமைப்பும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஆசிரியர் முரசொலி செல்வத்தின் கைது படலக் காட்சியும், நிகழ்வின் உணர்வை காண்போரின் கண்களுக்கு கடத்துகிறது. மேலும் தன் பேனா முனையால் பல வரலாற்று நிகழ்வுகளை படைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் மெழுகாலான உருவச்சிலை, அவரே அமர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. இப்படியொரு சிலையா என வியப்பில் நம்மை ஆழ்த்தி பரவசத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.

படங்கள்: ஆர்.கோபால்