ஷைனியின் பயணக் குறிப்புகள்நாடு முழுவதும் பயணம் செய்வது சாகசம் மட்டுமின்றி, நாம் யார் என்று நமக்கே புரியவைக்கும் ஒன்றும் கூட.  அப்படியாக கன்னியாகுமரி முதல் லே லடாக் வரை சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர்கள் ராயல் என்பீல்டு பைக்கில் பயணித்த ஷைனி ராஜ்குமாருக்கு வயது 35.  கேரளாவில் தொடங்கி ஹிமாலய மலை வரை தனி ஒரு பெண்ணாக பயணித்த பெருமை இவரையே சேரும். மேலும் இப்படியான பயணம் மேற்கொண்ட முதல் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 42 நாள் பயணத்தில் இவர் பாதையில் மழை மற்றும் வெள்ளம் குறுக்கிட்டபோதும் சிறிதும் மனம் தளராத மங்கையாக பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பி உள்ளார் ஷைனி.  பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த நெடுந்தூர பயணத்தின் நோக்கம்.

பயணத்தின்போது அதிகப்படியான நாட்கள் மழை பெய்தபோதும், இயற்கையை ரசித்தபடியே தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறார் ஷைனி.  உறங்கும் நேரம் தவிர ஒரு நாள் கூட தன் பைக்கிற்கு ஓய்வு கொடுக்காத ஷைனி பயணத்தின் முதல் பாதியில் ஒரு நாளுக்கு 300 கிலோமீட்டர் போயிருந்தால் திரும்பும்போது 500 கிலோமீட்டராக பயண நேரம் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். 

தன் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை மாதம் 16 ஆம் தேதி தன் ராயல் என்பீல்டு ஹிமாலயனை எடுத்து புறப்பட்ட இவர்  சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ‘‘Azadi - Stop Violence Against Women’ (பெண்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து விடுதலை) என்ற வாசகத்துடன் பயணித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய அங்கம். இது குறித்து ஷைனி நம்மிடம் கூறியதாவது,  ‘‘இதுவரை மேற்கொண்ட பயணங்களுக்குப் பின் எவ்வித குறிக்கோளும் இருந்ததில்லை. குடும்பத்தை விட்டு நெடுந்தூரம் சென்றதும் இல்லை. 

இதுவே என் முதல் பயணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பயணத்தின் முதல் நாளே மதுரையிலிருந்து திருநெல்வேலி வரை பயணிக்கும்போது கேரள எல்லைக்கு அருகில் ஒரு சிறு விபத்துக்குள்ளானேன்.  அதில் சற்று சோர்வடைந்தாலும், என்னை சுற்றியுள்ளவர்கள் அன்பு எனக்கு பக்கபலமாக இருந்து என் பயணத்தை மேலும் தொடர உறுதுணையாக இருந்தது. பயணத்தின்போது எவ்வித தேவை ஏற்பட்டாலும் உதவி செய்வதாக என்பீல்டு ரீஜினல் மேனேஜர் பினோ ஜோப் உறுதியளித்திருந்தார். 

அதைத் தொடர்ந்து விபத்திற்குப் பிறகு நான் இருந்த இடத்தில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்து இரண்டு சேவையாட்களை அனுப்பிவைத்து பைக்கை சரிசெய்து கொடுத்தனர். அதற்கான செலவு முப்பதாயிரமாக இருந்தது. ஆனால் என்னிடம் அவர்கள் வாங்கவில்லை. அங்கிருந்து இரண்டு ரைடர்ஸுடனான பயணத்தைத் தொடர்ந்தேன். கண்ணூரில் இருந்து நஷ் மற்றும் கோழிக்கோடில்  இருந்து அனூப். ஆனால் இருவரும் லேவில் பிரிந்து சென்றனர்.

தீவிர ஆர்வலர் மற்றும் புல்லட் ரசிகரான என் கணவர் ராஜ்குமார், சண்டிகரில் என்னோடு இணைந்து கொண்டு லே  வரை என்னுடன் பயணித்தார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. மேலும் நான் மும்பையை கடக்கும்போது என் நண்பர்கள் குறுக்கு நாடு பயணத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கும் விதமாக பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சத்திரபதி சிவாஜி டெர்மினஸில் ஒரு மாலை நேரத்தில் அழுத்தமான வரிகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இந்த செய்தி விரைவாக பரவியது. விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியின் ஆதரவை உறுதிப்படுத்தினார்கள் என் நண்பர்கள். அந்தப் பணி ஓர் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து பெண்கள் ரைடர்ஸ் கிளப்பின் உறுப்பினரான எனக்கு மற்ற பெண் ரைடர்ஸ் கொடுத்த ஆதரவுதான் என் பயணம் தடையின்றி செல்ல உதவியிருக்கிறது. பயணத்தின்போது யாரென்றே தெரிந்துகொள்ளக்கூட விரும்பாமல் பலரும் தங்குவதற்கு இடம் அளித்து பாதுகாத்தனர்.

மேலும், திருவனந்தபுரத்தில் ஒரு பெண்கள் அமைப்பின் மூலம் மாநில சுற்றுலாத் துறையிலிருந்து ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றிருக்கிறேன். நான் மீண்டும் கேரளாவிற்கு திரும்பும்போது என் நினைவில் பளிச்சென்று இருந்தது இமாச்சலப் பிரதேசத்தின் காஜியார் மட்டுமே. அதை சொர்க்க பூமி என்றுதான் சொல்ல வேண்டும். என் மனதைக் கவர்ந்த மற்றொரு இடம் என்றால் அது வாகா எல்லைதான். அந்த எல்லையில் பெண்கள் பலர் தங்கள் கைகளில் இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்று கொண்டிருந்தனர்.

மேலும் தேசபக்திப் பாடல்கள்  பாடப்பட்டன. அந்தப் பாடல்களுக்கு பெண்கள் மட்டுமே நடனமாட அனுமதி வழங்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் அப்போது பயணத்தை உற்சாகமாக்கின. பள்ளி, கல்லூரி காலங்களில் நான் ஒரு தடகள வீராங்கனை. மேலும் கேரளா வின் பெண்கள் கிரிக்கெட் அணி சார்பாக விளையாடி இருக்கிறேன். 2003ல் ஏற்பட்ட பயணங்களின் மீதான தாகம்தான் என்னை ஒரு பைக்கராக மாற்றியது. வார இறுதி நாட்களில் தொலைதூர கிராமங்களில் வசிக்கின்ற குழந்தைகளை சந்திக்கச் செல்வேன். 

என் நோக்கம் முழுவதும் பயணம் செய்வதாகவே இருந்தது. ஆரம்பத்தில், சைக்கிளில் பயணித்தேன், பின்னர் இருசக்கர வாகனம், பின்னர் ஒரு பழைய புல்லட். 2003ல் தில்லியில் காவல்துறையில் பணிபுரிந்து பின் சில மாதங்களிலேயே அப்பணியிலிருந்து விலகினேன். எனக்கான வாழ்க்கை அதுவல்ல என்ற தீர்மானம்தான் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது. பலர் என்னை கேலி செய்தார்கள், மோசமான  விஷயங்களைச் சொல்லியும் செய்தும் என் நம்பிக்கையை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போனார்கள்.

தற்போது டாண்ட்லெஸ்  ராயல் எக்ஸ்ப்ளோரர்ஸ் என்றழைக்கப்படும் கேரளாவிலுள்ள அனைத்து மகளிர் புல்லட் ரைடர்ஸ் கிளப்பின்  நிறுவனராக வளர்ந்திருக்கிறேன். மேலும் சாஸ்தமங்கலத்தில் உள்ள எங்களது  வீட்டில் நானும் என் கணவரும் பெண்களுக்கு புல்லட் சவாரி செய்ய பயிற்சி  அளித்து வருகிறோம்''.

தொடர்ந்து ஷைனி கூறுகையில்... ‘‘எல்லோருக்கும் ஒரு தவறான புரிதல் இருக்கும்.  அதுதான் நம்பிக்கையின்மை. அது அவரவர் வாழ்க்கையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களால் உருவான ஒன்றாக இருப்பது தான் உண்மை. சில கதைகளை படித்திருப்போம். அதில் ஒரு வில்லன் கதாபாத்திரம் கூட இல்லாமல் ஆரம்பம் முதல் கதை முடிவு வரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அதில் முழுக்க முழுக்க அன்பு, காதல், ஆர்ப்பரிப்பு போன்றவை மட்டுமே கதைக்கருவாக இருந்து படிக்கும் நம்மையும் அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரமாக வாழச் செய்துவிடும். 

அந்தக் கதையை நாம் எப்போது நினைவு கூர்ந்தாலும் நமக்கு பசுமையான நெகிழ்ச்சிகளை மட்டுமே அள்ளித் தரும்.  அது போன்றதுதான் பயணங்கள்.  பயணத்தின்போது பல மாநிலங்கள் கடந்து, பல மொழிகளைக் கேட்டு, பல்சுவை உணவுகளை ருசித்து, சாதி, மதம், இனம், மொழி கடந்து பல மக்களை சந்தித்தேன்.  நான் முன்பு சொன்னது போல இந்த 42 நாட்களில் எல்லோரும் எனக்கு நல்லவர்களாகவே தெரிந்தார்கள். 

மொழி தெரியாமல் என் தேவை அறிந்து எனக்கு உதவி செய்தவர்கள் எல்லோரும் எனக்கு புதிதாகத் தெரிகிறார்கள். நான் புதிதாக பிறந்தது போலவும், புது உலகில் வாழ்வதாகவும் தோன்றுகிறது. இப்போது எனக்கு புது நம்பிக்கை பிறந்திருக்கிறது. மனிதர்கள் மீது ஆழமான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. என்னை பொறுத்தவரை இயற்கை எப்போதுமே ஒரு மாயாஜாலம்தான். எப்பேர்பட்ட சூழலிலும் எவர் ஒருவரால் தன்னை மறந்து இயற்கையை ரசிக்க முடிகிறதோ அவரால் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திட முடியும். மனிதர்கள் இல்லா உலகிலும் வாழ்ந்திடலாம் இயற்கையோடு” என்கிறார்.

- பி.கமலா தவநிதி