லேடீஸ் ஷர்ட் பேன்ட்



நீங்கதான் முதலாளியம்மா

ஆண்களின் உடைகளாக இருந்த பேன்ட்டும் ஷர்ட்டும் இன்று பெண்களின் அடையாளமாகவே மாறிவிட்டது. பெண்களுக்கான மற்ற எல்லா உடைகளையும், விரும்பியபடி தைத்துக் கொடுக்க தெருவுக்கு நான்கு தையல்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், பேன்ட்-ஷர்ட் என வரும்போது, ரெடிமேட்தான் பலரது சாய்ஸாகவும் இருக்கிறது. பேன்ட், ஷர்ட் தைக்க கொடுக்கும் பணத்தில் இன்னொரு செட் உடையே வாங்கி விடலாம் என்பது இன்னொரு காரணம்.

இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்கிறார் சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த காதம்பரி... பெண்களுக்கான பேன்ட்-ஷர்ட் தைப்பதில் நிபுணி! ``ஃபேஷன் டிசைனிங்ல டிப்ளமா முடிச்சிருக்கேன். பெண்களுக்கான எல்லா டிரெஸ்சும் தைப்பேன். எம்பிராய்டரிங், ஆரி ஒர்க் எல்லாம்கூட தெரியும். லேடீஸ் டிரெஸ் தைக்க நிறைய பேர் இருக்காங்க... என்னை தனிச்சுக் காட்டிக்கணும்னா வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு யோசிச்சேன்.



என்னோட கஸ்டமர்ஸ்ல நிறைய பொண்ணுங்க பேன்ட், ஷர்ட் தைப்பீங்களானு கேட்டிருக்காங்க. அதுலயே நாம ஏன் ஸ்பெஷலைஸ் பண்ணக்கூடாதுனு தோணினது. அப்பலேருந்தே எங்க ஏரியாவுல நான் பேன்ட்-ஷர்ட் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன்...’’ - பெருமையாகச் சொல்கிற காதம்பரி, பெண்களுக்கான சட்டைகளில் பீட்டர்பன் காலர், பைண்டிங் காலர், சைனீஸ் காலர், ஒன் பீஸ் காலர், டபுள் பீஸ் காலர் என  விதம் விதமாகத் தைக்கிறார்.

``பெண்களோட உடல்வாகுக்கு ரெடிமேட் பேன்ட், ஷர்ட் பொருத்தமா இருக்காது. சரியான ஃபிட்டிங் உள்ள உடைங்கிறது ஒருத்தருக்கு தன்னம்பிக்கையை அதிகமாக்கிற விஷயம். ரொம்பவும் டைட்டாகவோ, ரொம்பவும் லூசாகவோ உள்ள உடைகள் அந்த தன்னம்பிக்கையைக் குறைக்கும். என்னோட ஸ்டிச்சிங் மூலமா ஒருத்தரோட ஆளுமையையும் தன்னம்பிக்கையையும் அதிகமாக்கணும்னு நினைப்பேன்...’’ என்கிறவர் தையல் மெஷின் உள்பட 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸை தொடங்க நம்பிக்கை அளிக்கிறார்.

``பெரும்பாலும் பெண்கள் பேன்ட்-ஷர்ட் தைக்கிறதுல ஆர்வம் காட்டற  தில்லை. ஆண்களுக்கு தச்சுக் கொடுக்கலைனாலும் பெண்களுக்கு தச்சுக் கொடுத்தாலே பெரிய லாபம் சம்பாதிக்கலாம். பேன்ட்-ஷர்ட் தைக்கிறது ஈஸியும்கூட. இப்பல்லாம் நிறைய பள்ளிக்கூடங்கள்ல பொம்பிளைப் பசங்களுக்கு பேன்ட்-ஷர்ட்தான் யூனிஃபார்மா வைக்கிறாங்க.

ஸ்கூல் திறக்கற சீசன்ல நிறைய ஆர்டர் பிடிக்கலாம். பழகிட்டாங்கன்னா ஒரு நாளைக்கு 4 செட் வரைக்கும் தைக்கலாம். ஒரு செட்டுக்கு 500 ரூபாய் வரைக்கும் பணம் வாங்கலாம். 50 சதவிகிதத்துக்கும் மேல லாபம் பார்க்க முடியும்’’ என்கிற காதம்பரியிடம் ஒரே நாள் பயிற்சியில் 3 வகையான ஷர்ட் தைக்கக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 1000 ரூபாய்.

சரியான ஃபிட்டிங் உள்ள உடைங்கிறது  ஒருத்தருக்கு தன்னம்பிக்கையை அதிகமாக்கிற விஷயம். ரொம்பவும் டைட்டாகவோ, ரொம்பவும் லூசாகவோ உள்ள உடைகள் அந்த தன்னம்பிக்கையை குறைக்கும்.

- ஆர்.வைதேகி
படம்: ஆர்.கோபால்