ஆ ஆ ஆவி



தமாசு பிசாசு

நம் அனைவருக்கும் ‘இறப்புக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை’ பற்றி ஓர் இடைவிடாத ஆர்வமும் தேடலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இரவு வெகு நேரம்  கண் விழித்துப் பார்க்கும் பேய்ப் படம், ஆவி ஆத்மா சம்பந்தமான சீரியல்களின் சாலிட் டி.ஆர்.பி. ரேட்டிங், நடுக்காட்டில் ஒற்றைப்பனை மரத்தில் பேய் என்ற (கட்டுக்) கதை, இத்யாதி இத்யாதி. இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறு கேசுகளுக்கு நானும் விதிவிலக்கு அல்ல.



நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம்... விடுமுறையில், சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அங்கு நான் கண்ட ஒரு வித்தியாசமான பொருள் என்னை வெகுவாக ஈர்த்தது. அது என்ன என்று அங்கு இருக்கும் தாத்தாவிடம் கேட்டேன். அவர் சொன்ன விஷயம் என்னை மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. ஆம்... அது ஒரு போர்டு. சாதாரண போர்டு அல்ல. அதன் பெயர் ஒய்ஜா போர்டு(Ouija  board).

விஷயம் யாதெனில், ‘இந்த போர்டின் மூலம் நீ இறந்தவருடன் பேசலாம்’ என்றார் தாத்தா. நானெல்லாம் சும்மாவே அறுந்த வால். இதில் இப்படி எல்லாம் லட்டு மாதிரி  ஒரு விஷயம் கிடைத்தால், விடுவோமா... ஆர்வம் கட்டுக்கடங்காமல் கன்னாபின்னா என்று பொங்கியது. உடனே என்ன ஏது என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்த விஷயத்தில் என் அண்ணனும் என்னுடன் கூட்டுக் களவாணி!

சதுரமாக, கருப்பு நிறச் சட்டத்தில், வெள்ளைப் பின்னணியில், A முதல் Z வரை ஆங்கில எழுத்துகளும், 0-9 எண்களும், Yes  மற்றும் No போன்ற வார்த்தைகளும் அந்த போர்டில் அமைக்கப்பட்டு இருந்தது. ‘இதில் எப்படிண்ணே பல்பு எரியும்’ என்று செந்தில் கேட்பது போல, ‘இதில் எப்படி ஆவி பேசும்’ என்று தாத்தாவை துளைத்து எடுத்தேன்.

யாராவது குழந்தையை அழைத்து, போர்டு முன் உட்கார வைத்து, நம் இறந்து போன முன்னோரை நினைத்து வணங்கினால், அவரின் ஆவி அங்கு வரும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அந்தக் குழந்தையின் வாயிலாக பதில் கிடைக்கும். எப்படி எனில், குழந்தையின் சுட்டு விரல் போர்டில் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து செல்லும். அந்த எழுத்துகளை ஒன்றிணைத்துப் படித்துப் பார்த்தால், நமக்குத் தேவையான பதில் கிடைக்கும் (ஏன் குழந்தை என்றால், குழந்தைகளுக்கு ஆவிகள் எளிதாக வசப்படுமாம். நான் என்ன நினைத்தேன் என்றால், குழந்தைகளுக்குத்தான் நம் வண்டவாளம் எதுவும் தெரியாது!).



இதைச் சொன்னால், ஆவியுடன் பேசும் அபாரமான வாய்ப்பை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்பதால், பேசாமல் கடமையில் ஒன்றினேன். ஆவியாருடனான கேள்வி நேரத்தில், ‘நான் பத்தாவதில் பாஸ் செய்வேனா’, ‘என்ன வேலை கிடைக்கும்’ என்றெல்லாம் போட்ட சூர  மொக்கையில், ஆவி கடுப்பாகி ஒன்றும் சரியாக சொல்லாமல் போய் விட்டது. அத்துடன் விட்டேனா... அந்த தாத்தாவிடம் கெஞ்சி கதறி, ‘அந்த போர்டை கொஞ்ச நாள் வெச்சிருந்து விட்டு தருகிறேன்’ என்று, ஒரு மஞ்சப்பையில் சுற்றி வாங்கி  வந்து விட்டேன். யாராவது அக்கம்பக்கம் குழந்தைய மிட்டாய்  வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி போர்டு படிக்க வைக்கலாம்  என்று மாஸ்டர் ப்ளான் போட்டேன்.

போர்டு வந்த 2 நாளிலேயே, ‘என்ன ஏது’ என்று என் அம்மாவுக்கு விவரம் தெரிந்து, ‘வீடான வீட்டில் இதெல்லாமா வைத்துக் கொள்வார்கள்? பைத்தியமா நீ...’ என்று என் முதுகில் டின் கட்டி, அந்த போர்டை தாத்தா வீட்டுக்கே அனுப்பி வைத்து விட்டார். என் ஆவி இன்டர்வியூ இப்படி அரைகுறையாக நின்று விட்டது!

உண்மையில் பேய் பிசாசு சமாசாரங்கள் உண்டா? இது விண்டவர் கண்டிலர் கதைதான். இந்த ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு, உலகம் முழுவதிலும் பொதுவாக நம்பப்படும் பேய் பிசாசு சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போமா? ஸ்டார்ட் தமாசு! 

* பேய்களும் ஆவிகளும் பகலை விட இரவில் அதிகம் சுறுசுறுப்பாக இருக்குமாம். ஏனெனில், அப்போது மின் மற்றும் மின்னணுக் கருவிகளின் தாக்கம் மற்றும் அலைவரிசை குறைவாக இருப்பதால், அவற்றின் செயல்பாட்டுக்கு இடைஞ்சல் இருக்கிறதாம் (நோ டிஸ்டர்பன்ஸ் ப்ளீஸ்!).
* பெரும்பாலான ஆவிகளுக்கு தான் இறந்து விட்டோம் என்பதே தெரியாதாம். கனவு காண்பது போல ஒரு குழப்பமான நிலையிலேயே இருக்குமாம் (என்னடா இது ஆவிக்கு வந்த சோதனை?).
* பேய்களுக்கு தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் இருக்குமாம் (Attention seekers). அதனால் மனிதர்களை ஈர்க்கும் வகையில் ஏதேனும் செய்தபடி இருக்குமாம். திடீரென நீங்கள் தனியே இருக்கும் அறையில் ஏதேனும் புது வகை பெர்ஃப்யூம்  வாசனை வந்தாலோ, மேக  மூட்டம் போல மசமசவெனத் தெரிந்தாலோ, உங்களுக்குத் துணைக்கு புதிதாக ஒரு ஆவியார் வந்திருக்கிறார் எனக் கொள்க!
* ஆவிகளுக்கு மனிதர்களின் மனதை அறியும் ஆற்றல் மற்றும் நம் எதிர்காலத்தை உணரும் வல்லமையும் உண்டாம். நமக்கு நடக்கப் போகும் மிக முக்கிய  நிகழ்வுகளை, கனவின் மூலம் நமக்கு உணர்த்த முயற்சிக்குமாம். அடுத்த முறை ஏதேனும் முக்கிய கனவு கண்டால்,  அதன் காரணம் இதுவே என்று அறிக (நோட் த பாயின்ட்!).
* மிருகங்களிலேயே, பூனைக்கு மிகச்சரியாக பேய்களை பார்க்கும் மற்றும் உணரும் திறமை (?!) உண்டாம். அடுத்த முறை உங்கள் பூனை ஏதேனும் ஒரே திக்கில் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் கியாரன்டியாக பயப்படத் தொடங்கலாம் (நல்ல எச்சரிக்கை!). இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், என் பக்கத்து அறையில் ஏதோ கொலுசு சத்தம் எல்லாம் கேட்கிறது போன்ற பிரமை வேறு. அநேகமா இந்நேரம் சில பல ஆவிகள்  எனக்கு முகப் புத்தகத்தில் நட்பு அழைப்பு விட்டிருக்கும் என நினைக்கிறேன்!

- வித்யா குருமூர்த்தி