என் சமையலறையில்!



டிப்ஸ்...டிப்ஸ்...

* பச்சை கலர் ஆப்பிள் இரண்டை பொடியாக நறுக்கி, உப்பு - 2 ஸ்பூன், மஞ்சள் பொடி - 1 ஸ்பூன், மிளகாய் பொடி - 1 சிறு கரண்டி போட்டு ஒன்றாகக் குலுக்கவும். கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, சிறு ஸ்பூன் பெருங்காயம் போட்டு பொரித்து ஆப்பிளில் கலந்து பாருங்கள். சுவையான மாங்காய் ஊறுகாய் போலவே ஆப்பிள் பிக்கிள்!
* இட்லி மீந்துபோய்விட்டதா? நன்றாக உதிர்த்து தேவையான அளவு கடலை மாவு, பெருங்காயம், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நீர் விட்டு பிசைந்து, கடாயில் எண்ணெய்விட்டு பொரித்து எடுக்க சுவையான இட்லி பக்கோடா ரெடி!



* அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம்  செய்யும்போது, பீட்ரூட், கேரட், புதினா போன்றவற்றை தனித்தனியாக அரைத்து  சேர்த்தால், பல வண்ணங்களில் வடாம் கிடைக்கும்.
* மிளகாய் தூள் போடாமல் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவையும் நிறமும் சூப்பர்!
- ஆர்.அஜிதா, கம்பம்.

* வெயில் காலத்தில் உண்டாகும் வயிற்றுப் போக்குக்கு, கஞ்சித் தண்ணீரில் வெந்தயம் கலந்து பருகினால் குணமாகும்.
* தோல் சீவி துண்டுகளாக்கிய முலாம்பழத்துடன் பொடி செய்த வெல்லம், கொஞ்சம் எலுமிச்சைச்சாறு விட்டு மிக்ஸியில் சுற்றி எடுத்து, தேவைப்பட்டால் ஐஸ் க்யூப் போட்டு எடுத்தால், திடீர் விருந்தினர் வருகைக்கு உடனடியாக செய்யக்கூடிய  ஸ்மூத்தி ரெடி!
- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9.

* சர்க்கரைப் பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க, கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான டெஸர்ட்டை சுவைக்கலாம்.
- மு.சுகாரா, தொண்டி.
 
* வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு ஜூஸாக்கி, அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, பிறகு ஆற விடுங்கள். ஆறிய ஜூஸில் மோரும், கொஞ்சம் உப்பும் கலந்து குடித்தால், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
- ஹெச்.அஹமது தஸ்மிலா, கீழக்கரை.

* நவதானியங்கள் தலா 100 கிராம் எடுத்து ஊற வைக்கவும். பின் நீரை வடித்துவிட்டு முளைகட்ட வைத்து, உப்பு, காரம் சேர்த்து அரைத்தெடுங்கள். இந்தக் கலவையை பிளாஸ்டிக் ஷீட்டில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி உலர வையுங்கள். புதுமையான குழம்பு வடாம் தயார்.
- ஏ.ஹம்சத் தவ்ஹா, கீழக்கரை.
   
* வெண்டைக்காய் குழம்பு வைக்கும்போது மசால், புளிக்கரைசல் நன்கு கொதித்த பின், வதக்கிய வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டால் வழவழப்பு இல்லாமல், மிகச் சுவையாக இருக்கும்.
* பெரு நெல்லிக்காய் ஊறுகாய் போட காய்களை நன்கு வேக வைத்து தாளிக்கும்போது மிளகுத்தூள் சேர்த்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
- ப.சூரியபிரபா முரளி, சேலம்-1.

* நூல்கோல், செளசௌ, உருளை, முள்ளங்கி, வெள்ளரி, குடைமிளகாய் - இவற்றில் ஏதாவது ஒன்றைத் துருவி, உப்பு + மிளகாய்பொடி தூவிக் கலக்கவும். பின்னர், தோசைக்கல்லில் மாவை ஊற்றி துருவிய காயைத் தூவி, சிறிது எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு எடுத்தால், தொட்டுக் கொள்ள எதுவுமே வேண்டாம். சத்தான தோசை, வித்தியாச சுவையுடன் மகிழ வைக்கும்!
* முளை கட்டிய பச்சைப் பயறு அரைத்து, கோதுமை மாவுடன் சேர்த்து, சப்பாத்தி செய்தால் சத்தான சுவையான சிற்றுண்டி!
* வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்துப் பொடி செய்து, கொதிக்கும் சாம்பாரில் போட்டால் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
- ம.நிவேதா, சிக்கல்.

* ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முன் அந்தக் கலவையுடன் திரவ நிலையில் குளுகோஸ் சிறிது சேர்த்தால், ஐஸ்க்ரீம் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

* தோசை மாவு புளித்துவிட்டதா? பாலில் சிறிது சர்க்கரை போட்டு கலக்கிச் சேர்த்து வார்த்தால், ஹோட்டல் தோசை போல முறுகலாக வரும்.
* கலந்த சாதம் கிளறியதும் நெய்யில் முருங்கை இலைகளை பொரித்துச் சேர்த்தால் சுவை அதிகமாவதுடன், இரும்புச் சத்தும் கிடைக்கும்.
- என்.கோமதி, நெல்லை-7.

* வடாம், வற்றல், அப்பளம் ஆகியவற்றை சுத்தமான வெள்ளைத் துணியில் மூட்டைப் போல கட்டி வைப்பதே நல்லது. காற்றோட்டம் காரணமாகப் பூஞ்சைக் காளான் வராது!
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

* தோசைக்கல்லில் ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துவிட்டு, பிறகு மாவை ஊற்றி வார்த்தால், தோசைக் கல்லுடன் ஒட்டிக் கொள்ளாமல் சுலபமாக எடுக்க முடிவதோடு, கமகமவென வாசனையாகவும் இருக்கும்.
- வத்சலா சதாசிவம், சென்னை-64. 
   
* பீட்ரூட்டை சுத்தம் செய்துவிட்டு சமையலுக்குப் பயன்படுத்திய பின், அதன் தோலையும், மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல், சீரகம் இவற்றையும் வதக்கி, அரைத்து கூட்டு செய்தால் பூரி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
- ஆர்.பத்மப்ரியா, சேலம்-2.
 
* உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் கறி செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் டேஸ்ட்டாக இருக்கும்.
- பி.கவிதா, சிதம்பரம்.

* கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் நான்கைந்து மோர் மிளகாய் வற்றல்களையும் வறுத்துப் போட்டுக் கடைந்தால் சூப்பராக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* கோடை நாட்களில் கிச்சனில் நின்று கொண்டு சமைப்பது மிகவும் கஷ்டம். தாகம் ஏற்படும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காது. 2 லிட்டர் தண்ணீரில் 1 டம்ளர் மோர் சேர்த்து, அதில் சிறிது பெருங்காயப் பொடி, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்து காக்கி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி குடித்து வந்தால் தாகமும் அடங்கும். வியர்வையில் உடம்பும் களைத்துப் போகாது. புத்துணர்ச்சி ஏற்படும். அலுப்பு போயே போச்சு!
- கே.ராணி, உள்ளகரம்.

* அடைக்கு அரைக்கும்போது காய்ந்த மிளகாய் போட்டு அரைத்து, பின்பு ஒரு பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டால் நல்ல வாசனையாக இருக்கும்!
- லட்சுமி மணிவண்ணன், பனைமேடு.

* பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்துவிட்டால் அரிசி தனித்தனியாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.