அச்சம் தவிர்!



முகங்கள்

தாரா காந்தி

பிரெஞ்சு அரசாங்கம் ஆண்டுதோறும் கலை, கலாசாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறவர்களை கெளரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்ஜிக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது! ஏப்ரல் 20 அன்று பிரெஞ்சு தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தூதுவரான ஃபிரான்காய்ஸ் ரிச்சியர் ‘Order of Arts and Letters’ என்னும் விருதை வழங்கிப் பாராட்டினார்.



விருதினைப் பெற்றுக்கொண்ட பட்டாசார்ஜி, ‘எனது பாட்டனார் காந்தியிடமிருந்து அச்சமின்மையை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அவரது அச்சமற்ற குணம் அன்பாலும் இரக்கத்தாலும் விளைந்தது. எப்போதுமே திறந்தே இருக்கும் அவரது அறைக்குச் செல்ல முன் அனுமதி தேவையில்லை. தன் கருத்துகளை எடுத்துரைப்பதில் யாருக்கும் அச்சப்படாத அவரது அசாத்திய துணிச்சல், இன்று ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது’ என்று நினைவுகளைப் பகிர்ந்தார்.

‘தன் தாத்தாவின் மரபை உறுதியாகப் பின்பற்றி, சமாதானம், ஐக்கியம், பண்பாடு, கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் தாரா காந்தி ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பணிகளைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது’ என பிரெஞ்சு தூதரக அறிக்கை குறிப்பிடுகிறது. கிராமப்புற ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட கஸ்துர்பாய் நினைவு அறக்கட்டளையை கடந்த 28 ஆண்டுகளாக தாரா காந்தி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

18 ஆண்டுகளாக கங்கை பாதுகாப்பு இயக்கத்திலும் ஈடுபட்டு வரும் தாரா காந்தி, நதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளிலும் தீவிரமாக பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸ்யா, ரகு ராய் போன்றோர் இதற்கு முன் இந்த கௌரவத்தைப் பெற்ற இந்தியர்கள்!

18 ஆண்டுகளாக கங்கை பாதுகாப்பு இயக்கத்திலும் ஈடுபட்டு வரும் தாரா காந்தி, நதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளிலும் தீவிரமாக  பங்கெடுத்து வருகிறார்.

- உஷா