புவனேஸ்வரி மாமி



இந்த மாசம், அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்குதுங்க. இப்பவே இப்படி வெயில் கொளுத்துது, இதிலே அது வேறயான்னு கவலையோட கேட்கறீங்க, புரியுது. என்ன பண்றது, அதுதான் இயற்கை! சரி, இந்த மாச விசேஷங்களைப் பார்க்கலாமா?



அட்சய த்ரிதியை - மே 9

‘அட்சய’ன்னா ‘மேலும் மேலும் வளர்க’ன்னு அர்த்தம். பகவான் கிருஷ்ணனோட ஆசீர்வாதம் இது. அதாவது, குசேலர் மூலமாக உலகுக்கு அவர் உணர்த்த விரும்பியதெல்லாம் இதுதான்: ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.’ செலவுகளை சுருக்கிக்கொள்வது எப்படி சேமிப்பைக் கூட்டுமோ, தேவைகளை சுருக்கிக் கொள்வது எப்படி வசதிகளைப் பெருக்குமோ, அதுபோல துர்சிந்தனைகளை குறைத்துக் கொண்டால் நாடெங்கும் பகை விலகும், மனிதாபிமானம் செழிக்கும், வளம் கொழிக்கும். சரிதானா? இந்த நன்னாளில் நகைக்கடையில் கூட்டம் போடாம, சமுதாயத்ல நலிந்த வருக்கு என்ன உதவி பண்ணலாம்னு யோசிப்போம். நம்ம மனசு பரந்ததானா, பல நன்மைகள் தாமே வரும்.

ஸ்ரீசங்கர ஜெயந்தி - மே 11

கேரள மண்ணில், காலடி கிராமத்தில் சிவ குரு -ஆர்யாம்பா தம்பதிக்கு, சித்திரை மாதம் அமாவசைக்குப் பிறகான பஞ்சமி திதியன்னிக்கு சங்கரர் அவதரிச்சார். ‘ஆதிசங்கரர் ஜெயந்தியைக் கொண்டாடினால், கிருஷ்ண ஜெயந்தி, சிவராத்திரி முதலிய எல்லா வழிபாட்டுப் பலன்களும் சித்திக்கும்’னு காஞ்சி மாமுனிவர் சொல்லியிருக்காருங்க. பிறந்து எட்டு ஆண்டுகள் மட்டுமே தன் காலடி கிராமத்தில் வசித்து, பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஆதிசங்கரரோட காலடிகள் படாத இடமே பாரத பூமியில் இல்லைன்னு சொல்லலாம்.

இத்தனைக்கும் உலக வாழ்வே 32 ஆண்டுகள் தான் சங்கரருக்கு! ஒரு சமயம் அன்னை ஆர்யாம்பா உடல்நலக் குறைவால ஆற்றுக்குப் போய் நீராட முடியலே. ஆனா, சங்கரரோட வேண்டுகோளுக்கு இணங்கி, ஆறு தடம் மாறி, ஆர்யாம்பா வீட்டுப் புழக்கடையிலேயே ஓடியதுன்னா பால்யத்திலேயே எத்தகைய ஆன்மிக ஆற்றலை இவர் பெற்றிருந்தார்ங்கறது புரியும்!

ராமானுஜ ஜெயந்தி - மே 10

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர்ல, ஆசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு தவப்புதல்வனாக அவதரித்தவர் ராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் பல முறை முயன்று வைணவ தாரக மந்திரத்தையும் அதன் பொருளையும் தெரிஞ்சுண்டார். அதை, கோபுர உச்சியில் நின்னுகிட்டு எல்லா மக்களுக்கும் விளக்கிச் சொன்னார். அந்தணரல்லாதவருக்கு இப்படி உபதேசம் பண்ணினா தனக்கு நரகம்தான் கிட்டும், மோட்சம் கிட்டாதுங்கற குருவின் ஆணையை மீறினார். ’நான் ஒருத்தன் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்ல, இங்கே
இருக்கற நூற்றுக்கணக்கானோர் மோட்சம் போனால் அதுவே எனக்குப் பேரின்பம்’னு தன்னிலை விளக்கம் கொடுத்தவர் இந்தப் புரட்சித் துறவி.

அதுமட்டுமா, தாழ்த்தப்பட்டோரை, திருக்குலத்தோர்னு அழைத்து அவங்களையும் ஆலயத்துக்குள்ள அனுமதிச்சார். இதெல்லாம் எப்ப நடந்தது? சுமாரா 1000 வருஷங்களுக்கு முன்னால! வைணவத்துக்கும் மனித குலத்துக்கும் அரிய தொண்டுகள் புரிந்த இந்தப் பெரியவர் 120 வருஷம் வாழ்ந்தப்புறம் ஸ்ரீமன் நாராயணன் தான் உறையும் வைகுண்டத்துக்கு இவரை அழைத்துக் கொண்டார். இந்தப் பெரியவருக்கு இந்த வருஷம் 1000மாவது ஆண்டு கொண்டாடப்படுதுங்க! ஆமாம், 1817ம் வருஷம் அவதரிச்சவர் இவர்!

நரசிம்ம ஜெயந்தி - மே 20

ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். அவன் எப்பவும் பகவான் நாராயணனையே துதிப்பதைக் காண சகிக்காத தந்தை, அவனை பல துன்பங்களுக்கு ஆளாக்கி, கடைசில, ‘உன் நாராயணன் இந்தத் தூணில் இருப்பானா?’ன்னு கேட்டு அதை உதைக்க, நரசிம்மம் என்ற விநோத உருவம் கொண்டு பகவான் வெளிப்பட்டு அவனை தண்டிச்சார். தான் நாராயணன் மடியில் கிடத்தப்பட்டு அவருடைய் கூர்நகங்களால் கிழிபட்டு, குடல் உருவப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாகும் ‘சுகத்’துக்கு ஆளாகத்தான், ஹிரண்யகசிபு அப்படி நாராயண நிந்தனை செய்தான்னும் சிலர் நயமாகச் சொல்வாங்க. இந்த நாள்ல பானகம் நிவேதனம் செய்து நரசிம்மரை வழிபடறது வழக்கமுங்க. வெயில் பாதிப்பால சக்தியெல்லாம் ஆவியாகிப்போக, அதை சமன் செய்ய வெல்லம், சுக்கு, எலுமிச்சைச்சாறு சேர்த்த பானகத்தை எல்லாருக்கும் பிரசாதமாகத் தர்றதை கவனிங்க.

வைகாசி விசாகம் - மே 21

அசுர சக்திகளை வேரறுக்க வந்த வேலவன் அவதரிச்ச நாள். எல்லா முருகன் கோயில்லயும் உற்சாகமா கொண்டாடுவாங்க. இந்த நாள்ல பக்தர்கள் காவடி எடுக்கறதும், விரதம் மேற்கொள்றதும், முருகன் கோயில்களுக்குப் பாதயாத்திரை போறதுமாக பக்தியை வெளிப்படுத்துவாங்க. குமரனைக் கும்பிட்டா, குறைகளைக் களைந்து, நிறைகளை வளர்த்து வாழமுடியுமுங்க. வைணவத்தின் தூண்களில் ஒருவரான நம்மாழ்வார் மற்றும் புத்தர் அவதாரம் பண்ணினதும் இந்த நாள்லதான்!


காஞ்சி மஹா பெரியவர் ஜெயந்தி மே 22

உண்மையான ஒரு துறவிக்குச் சரியான உதாரணமாகத் திகழ்ந்தவர் காஞ்சி மஹா பெரியவர்னு போற்றப்படற ஸ்ரீசந்திரசேகரேந்திர சங்கராச்சார்ய சுவாமிகள். எளிமை, எப்பவும் இன்முகம், அசாத்தியமான நினைவாற்றல், ஆன்மிகம் மட்டுமல்லாம, உலகளாவிய விஷயம் எல்லாத்திலேயும் அற்புத ஞானம், மனம் களைத்தவங்களையும் களிப்படையச் செய்யும் கனிவான பார்வை, யாருக்கேனும் உபதேசம் செய்யறதுன்னா, தான் அப்படி செய்யறதுக்குத் தகுதியானவன்தானா என்று சுய பரிசோதனை செய்துக்கற பெருந்தன்மை எல்லாம் கொண்ட, பற்றற்றான் பற்றினைப் பற்றியப் பெருந்தகை அவர். இந்தப் பெரியவர் இப்ப நம்மகூட இல்லேன்னாலும், அவர் பேசினது, அவரோட அபூர்வ புகைப்படங்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டுகிறதை அவரடி பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் அனுபவிச்சுகிட்டு வர்றாங்க.


அக்னி நட்சத்திர காலம் - மே 2 முதல் 28 வரை

இந்த வெயில் காலத்ல டூவீலர்ல போகிற சுடிதார் பெண்கள் தலையைத் துப்பட்டாவால மூடிகிட்டு அனல் தகிக்கற சாலைகள்ல பறந்து போறதைப் பார்க்கலாம். இது இயற்கையோட வருடாந்திர நடைமுறைதான். ‘போன சம்மரை விட இந்த வாட்டி வெயில் டூமச்’ என்று போன வருடத்தைவிட ஒரு வயது கூடிவிட்ட இயலாமையில நாம கருத்து சொல்வோம். ஆனா பாருங்க, இயற்கை அவ்வளவு கொடுமையானது இல்லே. இதமாக முதல் வாரம் ஆரம்பிக்கும், மிகக் கடுமையாக நடுவாரம் தகிக்கும், மீண்டும் இதமாக மூன்றாம் வாரம் அடங்கும்னு சூரியனோட அக்னி நட்சத்திரத் தன்மையைக் கணிச்சிருக்காங்க. ஆனா, காற்று, நீர், ஆகாயம் மற்றும் சுற்றுப்புறம் எல்லாத்தையும் மாசடைய வெச்சு, இயற்கையை அவமதிச்சு, கோடை வெம்மையை ஒரு மாசத்துக்கு முன்னாலேயே ஆரம்பிக்கறதும், ஒரு மாதம் பின்னால முடிக்கறதுமாக நாமே அவஸ்தையும் படுகிறோம்கறதுதான் உண்மை!

பலராம ஜெயந்தி - மே 9

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதார காலத்ல அவருக்கு அண்ணனாக, பலராமராக அவதரிச்சிருக்கார். ‘நம்பி மூத்தபிரான்’னு அழைக்கப்படற இந்த பலராமர் எப்படிப்பட்டவர்? கோபக்காரர். ஒருமுறை தான் நீராட தன்னருகே யமுனை நதிவரலேங்கறதுக்காக தன்னோட ஆயுதமான கலப்பை நுனியால் அதனை இழுத்து திசை மாற்றியவர்! இதுவும் ஊர் நன்மைக்காகத்தான்! விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கலேங்கறதுக்காக, விவசாயக் கருவியான கலப்பையால இப்படி நதியை திசை திருப்பியதாகவும் கொள்ளலாம். இறை அவதாரம் எல்லாமே மக்கள் நன்மைக்காகத்தானே! இப்போ காவிரியை அப்படி திசைத் திருப்ப ஒரு பலராமர் இல்லையேன்னு ஏக்கமாகத்தான் இருக்கு, இல்லையா?