காலந்தோறும் பொன்!



தக தக தங்கம்

ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம்

அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது தங்கம். அதன் மதிப்பைப் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசுகிறோம்.  இப்படிப் பேசுகிற அளவுக்கு தங்கத்துக்கு உண்மையிலேயே மதிப்பும் மரியாதையும் அந்தக் காலத்தில் இருந்திருக்குமா? இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. தங்கம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது, புழங்கப்பட்டு வந்தது என்பதற்கான சான்றுகள் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எல்லா மதங்களிலும் உள்ளன!



கிறிஸ்தவ மதத்தில் தங்கம் என்பது அரசனுக்குரிய, ஆட்சிமை பொருந்திய ஒரு அடையாளம். ஏசு கிறிஸ்து இந்த உலகில் அவதரித்த போது, கிழக்கில் இருந்து மூன்று தேவதூதர்கள் பரிசுப் பொருட்களுடன் அவரைப் பார்க்க வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளதை நாம் அறிவோம். அவர்கள் மூவரும் மூன்று பொருட்களை குழந்தைக்குப் பரிசாகக் கொடுக்க எடுத்து வந்தனர்.

அதில் முதல் பொருள் தங்கம். இரண்டாவது வாசனைப் பொருள். மூன்றாவது ஒருவர் இறந்த பின் அடக்கம் செய்யும்போது பூசப்படுகிற ஒரு எண்ணெய். அரசாட்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட தங்கம், ஏசு கிறிஸ்துவும் அரசாள ஏற்றவர் என்பதை அறிவிக்கும் விதமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதை இது உணர்த்துகிறது.

அடுத்து கொடுக்கப்பட்ட வாசனைப் பொருள், Frankincense என சொல்லப்படுகிற ஒரு எசென்ஸ். அடுத்தது Myrrh. இது இறந்தவர் உடலைப் பதப்படுத்தப் பயன்படும் ஒரு எண்ணெய். அதை Symbol of death எனலாம். அதாவது, ‘உடல் மட்டுமே அழியக்கூடியது... ஆன்மா அழிவில்லாதது’ என உணர்த்துகிற ஒரு எண்ணெய். அதன் பிறகு இந்தப் பொருட்களை உபயோகித்ததற்கான எந்தத் தகவல்களும் இல்லை என்றாலும், தங்கத்தை ஜோசப்பும் மேரியும் தங்கள் பயணங்களுக்கு உபயோகித்ததாகத் தகவல்கள் உண்டு.

அந்தத் தங்கம் இரண்டு திருடர்களால் களவாடப்பட்டதாகவும் அந்தத் திருடர்கள் ஏசுவுக்கு பக்கத்திலேயே அறையப்பட்டதாகவும் பல கதைகள் உண்டு. தங்கம் மூலப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது முதல் தூய்மையாக்கப்பட்டு தங்கக் கட்டிகளாகவும் நாணயங்களாகவும் ஆபரணங்களாகவும் செய்யப்பட்டு அணிந்தது, தங்கக்கட்டிகள் தானமாக அளிக்கப்பட்டது வரை மிகத்தெளிவாக ரிக் வேதத்தில் ஆணித்தரமாக சதபத பிராமணா என்றும் கடக சம்ஹிதா போன்ற சமஸ்கிருத நூல்களிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.



ரிக் வேதத்தில் ஹிரண்ய என்கிற பகுதியில் அதிக அளவில் விளக்கப்பட்டுள்ளன. ஹிரண்ய என்றால் தங்க ஆபரணங்கள் என பொருளாக்கப்பட்டுள்ளது ரிக் வேதத்தில். A Golden sathamana  என்றால் 100 குண்டுமணி அளவு தங்க எடை என அர்த்தம். தங்க எடை, தங்கப் பணம், தங்க நாணயங்கள் இவற்றைப் பற்றிரிக் வேதத்தில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. கி.பி. 3வது  நூற்றாண்டில் சிலைகள் எப்படி இருந்தன என்கிற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போது, நம் இந்திய சிற்பங்களில் ஒவ்வொரு ஆண், பெண் சிற்பங்களிலும் நகைகள் அணிவிக்கப்பட்டே காட்சியளிப்பதாகத் தெரிகிறது.

கிரேக்க சிற்பங்களில் நகைகளே இல்லை. வேறு உலக சிற்பங்களிலும் கிடையாது. எகிப்திய சிற்பங்களில் இந்திய சிற்பங்களோடு பொருந்திப் போகிற மாதிரியான ஆபரணங்கள் இருந்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து எகிப்துக்கு நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு அணியப்பட்டனவா என்றும் கேள்விகள் உள்ளன. வேதங்களில் தஸஹிரண்ய பிண்டத்தை (அதாவது, 10 தங்கக்கட்டிகளை) ஒரு அரசர், ஒரு மதகுருவுக்குக் கொடுத்ததாகத் தகவல் இருக்கிறது. அப்போதே தங்கக்கட்டிகள் தானமாக அளிக்கப்பட்டதை இது குறிக்கிறது.

ஹிரண்ய கசிபு என்றால் பொன்னாடை போர்த்தியவன் என்று அர்த்தம். கல்விக் கடவுளான சரஸ்வதியைக் கூட ஹிரண்யவர்த்தினி - அதாவது, அதிக ஆபரணங்கள் அணிபவள் என்றே சொல்வதுண்டு. சந்திரகுப்த மவுரியர் காலத்தில் மகத நாட்டின் தலைநகரமான பாடலிபுத்திரத்தை, (இப்போது பாட்னா) ஆண்ட மன்னர் ஞானானந்தா மிகவும் பணவெறி பிடித்த மோசமான மன்னனாகவே விளங்கினான். அவன் மரம், கல், தோல் போன்றவற்றுக்கும் அதிக வரி விதித்தான். சாதாரணமாக அப்போது மரம், கல், தோல் போன்றவற்றுக்கெல்லாம் வரி இல்லை. ஆனாலும், அவனால் முடிந்த வரை எல்லா பொருட்களுக்கும் வரி விதித்தான்.

இத்தனை மோசமான கொள்கை உடைய அந்த மன்னன், ஒரு விஷயத்தில் மட்டும் மிகச் சிறந்து விளங்கினான். அதாவது, நன்கு கற்றறிந்தவர்களைப் பார்த்தால் அவர்களை  மதித்து ஊக்கப்படுத்தும் அதிசய குணம் பெற்றவனாக இருந்தான். அப்போது பாடலிபுத்திரத்தில் நிறைய கல்விக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டன. இந்த மன்னன் ஒரு குழுவை அமைத்து கல்வியாளர்களை கவுரவிக்கும் திட்டத்தை தவறாமல் பின்பற்றினான்.

உலகப் பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் முன்னோடியாக விளங்கும் அர்த்தசாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர் தக்‌ஷசீலாவில் படித்து முடித்து அங்கிருக்கும் அனைவராலும் புகழப்படும் கல்வியாளராக விளங்கினார். இதைக் கேள்விப்பட்ட மன்னன், சாணக்கியரை அழைத்து கவுரவிக்க விரும்பினார். சாணக்கியரோ எளிமையான தோற்றம் உடையவர். அப்போது அந்த குழு அவருக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொற்காசுகளை அளிக்க முன்வந்தது.



ஒவ்வொரு கமிட்டி உறுப்பினரும் 1 லட்சம் மதிப்புள்ள பொற்காசுகளை தாமாக அளிக்க உரிமை பெற்றிருந்தார்கள். மன்னர் சாணக்கியரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் கூப்பிட்டு அனுப்பியபோது, அவரது எளிமையான தோற்றத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் தன்மானத்தை சிதைக்கும் வகையிலும் நடத்தப்பட்டதால், அந்த 10 லட்சம் பொற்காசுகளையும் நிராகரித்தார் சாணக்கியர். பொன் என்றால் எல்லோரும் இறங்கிவிடுவர் என்பார்கள். அப்படியல்ல... இப்போது யாரேனும் 10 லட்சம் பொற்காசுகள் தருவதாகச் சொன்னால் அதைப் பெறுபவரின் மனநிலை எப்படி இருக்கும்? சாணக்கியரோ அதை துச்சமாக மதித்து சந்திரகுப்த மவுரியருடன் இணைந்தார்.

வேத காலங்களிலேயே தங்கம் உபயோகப்படுத்தப்பட்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன.  இந்திரன் தங்கத்திலான கை சங்கிலியை அணிந்திருந்ததாகவும் மாருதி அதிகமான தங்க ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும் அஷ்வின் தங்க இருக்கை போடப்பட்ட ரதத்தை ஓட்ட அழைக்கப்பட்டதாகவும் நிறைய தகவல்கள் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. வேத காலத்தில் இந்தியாவில் மட்டுமே தங்கம் பரிசளிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஐரோப்பாவில் மிக மிகக் குறைந்த அளவுக்கு அல்லது அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எந்த நகையோ, தங்கக் காசோ பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான சான்று இல்லை.

கிறிஸ்தவ மதத்தில் தங்கத்தைப் பற்றிய அதிக தகவல்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிங் சாலமன் 200 பெரிய ஷீல்டுகள் அமைத்ததாகவும் ஒவ்வொரு ஷீல்டிலும் நன்றாக அடிக்கப்பட்ட தங்கம் 600 ஷெல்கெல் (ஒரு ஷெல்கெல் என்பது 11 கிராம் மதிப்புள்ளது) அதாவது, ஒவ்வொரு ஷீல்டிலும் சுமார் 6.6 கிலோ தங்கம் அடிக்கப்பட்டதாகவும் அது போல 200 ஷீல்டுகள் செய்யப்பட்டதாகவும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்களுடைய வீட்டின் தரைகளிலும் கீழ்தளங்களிலும் உள் வெளி அறைகளிலும் தங்கம் அருமையாக பதிக்கப்பட்டதாகவும் தங்கக்கிரீடம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் (ஹோலிடுத லார்ட் என்று எழுதப்பட்டது) மெழுகு வர்த்தி ஸ்டாண்ட் அதிக அளவில் தங்கத்திலேயே செய்யப்பட்டதாகவும் பைபிளிலேயே சான்றுகள் உள்ளன. வேதகாலம், புராண, இதிகாச காலங்களில் இருந்து தங்கம் மக்களிடையே அதிகளவில் புழங்கியது... அதுவும் அதிக பயமின்றியும் எந்த அரசியல் தலையீடு இன்றியும் புழங்கியிருக்கிறது. அதற்கான காரணம் அப்போதைய பண்டமாற்று முறை. இந்த முறையில் தங்கத்தை அதிகமாகக் கொடுத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட எந்தப்பொருளையும் எளிதில் வாங்கினார்கள்.

ஆனால், இப்போது தங்கம் எளிதில் மாற்றக் கூடியதாக இல்லை. வாங்கிய கடையில் கொடுத்தாலே பணத்தைத் திரும்பப் பெறுவது சிரமமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 1 கிராம் தங்கத்தைக் கொடுத்து அரிசி, பருப்போ, எலக்ட்ரானிக் பொருளோ வாங்குவது என்பது இன்று கேலிக்குரிய விஷயம். தங்கம் பொதுவாக தேவைப்பட்ட அளவு விற்பதற்கும் அதிக ஆபரணங்களாக போட்டு அனுபவிப்பதற்கும் அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் சேமிப்பாக வைத்திருக்கவும் மட்டுமே பயன்படுகிறது. அரசின் கடுமையான சட்டதிட்டங்களின் காரணமாக தங்கத்தின் பணமாக்கும் தன்மை குறைந்து கொண்டு வருகிறது.

ஹிரண்யகசிபு என்றால் பொன்னாடை போர்த்தியவன் என்று அர்த்தம். கல்விக் கடவுளான சரஸ்வதியைக் கூட ஹிரண்ய வர்த்தினி - அதாவது, அதிக ஆபரணங்கள் அணிபவள் என்றே சொல்வதும் உண்டு.

பொன் என்றால் எல்லோரும் இறங்கிவிடுவர் என்பார்கள். அப்படியல்ல... மன்னர் ஞானானந்தா, சாணக்கியரைப் பற்றி அறிந்து, அவரைக் கூப்பிட்டு அனுப்பியபோது, அவரது எளிமையான தோற்றத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் தன்மானத்தை சிதைக்கும் வகையிலும்  நடத்தப்பட்டதால், அந்த 10 லட்சம் பொற்காசுகளையும் நிராகரித்தார் சாணக்கியர்.

அதிக பயமின்றியும் எந்த அரசியல் தலையீடு இன்றியும் புழங்கியிருக்கிறது தங்கம். அதற்கான காரணம் அப்போதைய பண்டமாற்று முறை. இந்த முறையில் தங்கத்தை அதிகமாகக் கொடுத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட எந்தப் பொருளையும் எளிதில் வாங்கினார்கள்.

(தங்கத் தகவல்கள் தருவோம்!)
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி