வாய்ப்பு வாசல்



வீட்டிலேயே வேலைவாயபபு ஏறபடுததித தருகிறார்!

அமெரிக்கவாழ் தமிழச்சி... 30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிப்பதாகச் சொன்னாலும், அவரது அழகுத் தமிழில் கொஞ்சமும் மாற்றமில்லை. அமெரிக்க நாகரிகத்தில் தாய்மண்ணின் வாசனையை மறந்தே போகிறவர்களுக்கு மத்தியில் இந்துவுக்கோ, இந்தியப் பெண்களின் வாழ்க்கை குறித்த கவலையும் அக்கறையும் அதிக மிருப்பது ஆச்சரியம் தருகிறது!

அமெரிக்காவில் இருந்தபடியே இந்தியப் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கிற இந்துவின் வித்தியாச முயற்சி புதுமையாக இருக்கிறது. இவரது Local Biz Network நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள சிறு தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில் ‘கூகுள் பார்ட்ன’ராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘அமெரிக்கன் பிசினஸ் விமன்ஸ் அசோசியேஷனி’ன் தலைவியாகவும், ‘சிலிகான் வேலி ஃபண்ட் ரெய்சிங்’கின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

‘‘சென்னையில பிறந்து வளர்ந்தேன். ஸ்டெல்லா மேரீஸ்ல படிப்பை முடிச்சதும், 19 வயசுல கல்யாணமாகி, அமெரிக்கா போயிட்டேன். அங்கே போய் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். ஐ.பி.எம். மற்றும் NASA Ames ரிசர்ச் சென்டர்ல சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை பார்த்திருக்கேன். அப்பதான் ஒய்2கே பிரச்னை ஆரம்பிச்ச நேரம். நாங்க அங்கே பண்ணிட்டிருந்த வேலைகளை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பினாங்க. எங்களுக்கு வேலை இல்லை. லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்து, தெருவுல இறங்கி கொடி பிடிச்சு போராட்டத்துல குதிக்கிற அளவுக்குப் பிரச்னை தீவிரமாச்சு. தற்காலிகமா நிலைமையை சமாளிக்க குட்டிக்குட்டி வேலைகளைப் பண்ணிட்டிருந்தேன்.

யதேச்சையா நான் சந்திச்ச என்னோட அமெரிக்க நண்பர்கள் ரெண்டு பேர் எனக்கு ஒரு ஐடியா கொடுத்தாங்க. ‘இந்தியரா இருந்துக்கிட்டு நீங்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க... உங்க நாட்டுக்குப் போய் ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க’னு சொன்னாங்க. நான் பிசினஸ் குடும்பப் பின்னணியிலேருந்து வரலை. நான் எங்கேருந்து பிசினஸ் பண்றதுனு யோசிச்சப்ப, அந்த நண்பர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வச்சாங்க. எந்த ஐடியாவும் இல்லாமத்தான் வந்தேன். என்னோட பக்கத்து வீட்டுக்காரர் சாஃப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருந்தார். அவர்கூட பேசி, நானும் சில வேலைகளைப் பண்ணிட்டிருந்தேன்.

மறுபடிஅமெரிக்காவுக்கே போய், அங்கிருந்து அந்த நண்பருக்கு சில வேலைகளை அனுப்பிக்கிட்டிருந்தேன். அதுவும் கொஞ்ச நாளைக்கு மேல சரியா வரலை. மறுபடி இந்தியா வந்தேன். சென்னையில ஒரு ஸ்கூல்ல வேலை பார்க்கிற என் தங்கையோட பேசினேன். அவங்க மேற்பார்வையில ஒரு ஆபீஸ் ஆரம்பிச்சேன். அமெரிக்காவுல உள்ளவங்களுக்கு வெப்சைட்டும் இமெயில் அக்கவுன்ட்டும் ஆரம்பிச்சுக் கொடுக்கிற அந்த வேலைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த பிசினஸ் மெல்ல மெல்ல வளர்ந்தது.

அடுத்தகட்டமா சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கும் விளம்பரம் தேவைப்படறவங்களுக்கும் இன்டர்நெட் மார்க்கெட்டிங்கை பிரபலப்படுத்த ஆரம்பிச்சேன். உதாரணத்துக்கு ஒரு பல் டாக்டர்னே எடுத்துப்போமே... அவரைப் பத்தி அந்த ஏரியாவுல உள்ளவங்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கும். அவர் எந்தெந்த விஷயங்கள்ல ஸ்பெஷலிஸ்ட்...

அவரோட மத்த திறமைகள் என்னங்கிறதை மக்களுக்குத் தெரியப்படுத்தணும்னா விளம்பரம் அவசியம். இந்த மாதிரியான விஷயங்களுக்காக டெல்லியிலேருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள இல்லத்தரசிகளை வேலைக்கு எடுத்தோம். சென்னையில ஒரு டீம் இயங்குது.  பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, வீட்ல சும்மா இருக்கிற நேரத்துல இல்லத்தரசிகள் இந்த வேலையைச் செய்யலாம்.

மேனேஜர்ஸ் ஆன்லைன்ல இருப்பாங்க. பெண்களும் ஆன்லைனுக்கு வரணும். ஜி சாட் அல்லது யாஹு மெசென்ஜர் மூலமா வரலாம். ஆன்லைன்ல உள்ள மேனேஜர், பெண்களுக்கு அசைன்மென்ட் தருவார். ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த பல் டாக்டரையே உதாரணமா சொல்லலாம். அவரைப் பத்தின தகவல்களை இன்டர்நெட்ல ரிசர்ச் பண்ணி, தன் தரப்புலேருந்து ஒரு கட்டுரை தயார் பண்ணித் தரணும். அதை மேனேஜர் அப்ரூவ் பண்ணி, சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி மறுபடி அப்ரூவல் வாங்குவார்.

அதன் பிறகு எங்க கம்பெனி சார்பா, ஒவ்வொரு கிளையன்ட்டுக்கும் நாங்க பிரத்யேகமா ஆரம்பிச்சுக் கொடுக்கிற சோஷியல் மார்க்கெட்டிங் பக்கத்துல அந்தக் கட்டுரையை, அதைத் தயார் பண்ணின பெண்களே போஸ்ட் பண்ணுவாங்க. ஒரே நபரைப் பத்தி தினமும் ரிசர்ச் பண்ணினா அலுத்துப் போயிடும்னு ஒவ்வொரு நாளும் வேற வேற ஆட்களுக்கான வேலையை அந்தப் பெண்கள் செய்யலாம். இது மூலமா மாசத்துக்கு குறைஞ்சது 15ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

புரோகிராமிங் மாதிரியான விஷயங்கள் தெரிஞ்ச பெண்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்துக்கான வாய்ப்பு இருக்கு...’’ - வித்தியாச முயற்சியை விவரிக்கிற இந்து, இந்து வேலையைச் செய்ய பட்டப் படிப்பு அவசியமில்லை என்கிறார். ‘‘இப்போதைக்கு இந்தியாவுல 50 பேர் எங்களுக்கு இந்த வேலையைச் செய்து கொடுக்கிறாங்க. அவங்கள்ல பலரும் கான்வென்ட்ல படிச்சவங்க. டிகிரி வாங்கினவங்களும் நிறைய பேர் இருக்காங்க. கல்யாணம், குழந்தைனு பொறுப்புகள் கூடி, வேலைக்குப் போக முடியாத நிலைமையில உள்ளவங்க இதை விரும்பிச் செய்யறாங்க.

இந்த வேலைக்கான முக்கியத் தகுதி ஆங்கிலம். பேசத் தெரியலைனாலும், தப்பில்லாம, கிரியேட்டிவா ஆங்கிலம் எழுதத் தெரிஞ்சா போதும். இப்போதைக்கு எங்களோட வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தவங்கன்றதால ஆங்கிலத்துலதான் வேலை தேவைப்படுது. கூடிய சீக்கிரம் இந்த வேலையை இந்தியாவுக்குள்ளயும் விரிவாக்கிற திட்டம் இருக்கு. அப்போ இன்னும் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும்னு நம்பறேன்...’’ என்கிற இந்துவுக்கு இந்தியப் பெண்களின் சார்பு வாழ்க்கை குறித்து பெருங்கவலை இருக்கிறது.

‘‘கல்யாண வாழ்க்கைங்கிறது ரோஜாக்கள் நிரம்பிய படுக்கை மாதிரி ரொம்ப சுகமானதுனு நினைச்சுக்கிட்டிருக்காங்க இன்றைய இளம் பெண்கள். உள்ளே போனா அவங்களோட கற்பனை பொய்யாகி, பயமுறுத்துது. யதார்த்தம் வேற மாதிரி இருக்கிறதை அவங்களால ஏத்துக்க முடியறதில்லை. படிச்ச பெண்களும் சரி, படிக்காதவங்களும் சரி, நிதி நிர்வாகம்கிறது ஆண்களோட பொறுப்புனு நினைச்சுக்கிறாங்க. வேலைக்குப் போறவங்களும் இதுல அடக்கம். சம்பாதிக்கிற பெண்கள்லயே பலருக்கு தனக்குனு தனி பேங்க் அக்கவுன்ட் இருக்கிறதில்லை.

கணவரோட சேர்த்து ஜாயின்ட் அக்கவுன்ட் வச்சிருக்காங்க. அது தப்பு... அவங்களுக்குனு ஒரு தனி பேங்க் அக்கவுன்ட் அவசியம். பொருளாதார சுதந்திரம் இருந்தாலே குடும்பங்கள்ல உண்டாகிற பல சண்டைகளைத் தவிர்க்கலாம். சொந்தக்கால்கள்ல நிற்கற தைரியம் பெண்களுக்கு வரணும். அந்த தைரியம் மட்டும்தான் கடைசி வரை அவங்களுக்குக் கூட வரும்...’’ - அவசிய அட்வைஸ் கொடுக்கிற இந்து, ஆங்கிலம் அறிந்த வேலை தேடும் பெண்களுக்கு வழி காட்டத் தயாராக இருக்கிறார்.

‘‘சொந்தக்கால்கள்ல நிற்கற தைரியம் பெண்களுக்கு வரணும். அந்த தைரியம் மட்டும்தான் கடைசி வரை அவங்களுக்குக் கூட வரும்...’’

தொடர்புக்கு www.localbiznetwork.com