சிறப்புப் பேட்டி



இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் வாணி கணபதியாத்தான் பிறக்கணும்!

வாணி கணபதி

கதவுகள் அறியாத ரகசியங்கள் ஏதுமில்லை. ராஜ ரகசியத்தில் இருந்து ஆத்ம ரகசியம் வரை அத்தனை ரகசியங்களும் அவற்றுக்கு அத்துப்படி. நன்மைகள், தீமைகள், அழிவுகள், மாற்றங்கள்...  அவை மட்டுமே நேரடி சாட்சி. யாருமில்லை என நினைக்கும் இடங்களிலும் அவை இருக்கின்றன. மனிதர்கள், சக மனிதர்களை விட கதவுகளையே நம்புகிறார்கள். மேன்மைக்கும் தாழ்வுக்கும் அடையாளமாக அவை இருக்கின்றன. கதவுகள் உயிர்பெற்று, தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டால்..?

கதவை சமஸ்கிருதத்தில் த்வாரம் என்பார்கள். அதையே தலைப்பாக வைத்து வாணி கணபதி சென்னையில் ஒரு நாட்டிய நிகழ்வை நடத்தினார். அவரும் சத்யநாராயண ராஜூவும் சேர்ந்தாடிய அந்த நடனம், இன்பமயமான அனுபவம்!

வாணி கணபதிக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவின் முன்னணி பரதநாட்டிய நங்கை. பிற நடனக் கலப்புகள் ஊடுருவாத தூய கலைவடிவத்தைக் கட்டிக் காப்பாற்றுபவர். ஒப்பனைக் கலைஞர், இன்டீரியர் டிசைனர். மேக்கப் கலைஞர்... அழகியலும் அர்ப்பணிப்பும் நிறைந்த நடன ஆசிரியை... இன்னுமொரு அடையாளம், நடிகர் கமலஹாசனின் (முதல்) முன்னாள் மனைவி.

வாணி, இப்போது த்வார’த்தின் வழியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். பிப்ரவரி மாதம் சென்னை நாரதகான சபாவில் அரங்கேறியது த்வாரம். வாணியின் நெருங்கிய தோழிகளான சுஹாசினியும், பூர்ணிமா பாக்யராஜும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யாவும், நடிகர் அசோக்கும் த்வாரங்களை வகைப்படுத்தி முன்னுரை வாசிக்க, வாணியும் சத்யாவும் காட்சிகளாக்கினர். மேடையின் அமைப்பே ஈர்த்தது. விதவிதமான ஐந்து கதவுகள்... ஒவ்வொரு கதவும் ஒவ்வொரு ரகசியத்தைப் பேசியது. ராஜ த்வாரம் எனப்பட்ட அரண்மனையின் கதவு பாஞ்சாலி சபதத்தைப் பற்றிப் பேசியது.

சகுனியாகவும், துரியோதனனாகவும், தர்மனாகவும், பாஞ்சாலியாகவும் வாணியே உருமாறினார். வேதனை, ஆவேசம், நயவஞ்சகம், இயலாமை என அனைத்து உணர்வுகளையும் அவரின் முகம் மாறிமாறி பிரதிபலித்தது. வீரத்துவாரம், சத்யாவின் களம். மைசூர் சாம்ராஜ்யத்தின் ரணதீர கண்டீரவாவை இசையாலும் நடனத்தாலும் கண்முன் நிறுத்தி னார். கிரக த்வாரத்தில், தளும்பத் தளும்ப நிறைந்திருந்தது வெகுளித்தனமான காதல். தெய்வத் துவாரத்தில் ஆண்டாள் உயிர்த்தெழுந்தாள். ஆத்ம த்வாரத்தில் பஜகோவிந்தமும் சிவாஷ்டகமும் நிலையாமையும் காமம், குரோதம், வன்மமற்ற இறை ஒடுங்கலும் தொனித்தன. தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு என சகல மொழிகளிலும் ஸ்ரீவத்சவாவின் கணீர் குரலும் இசை ஒருங்கிணைப்பும் காட்சிக்குள் ஐக்கியப்படுத்தின.

இரண்டரை மணிநேரம் அசைக்க முடியா வண்ணம் அத்தனை விழிகளும் மேடை நோக்கியே இருந்தது அற்புதம். உற்சாகம் ததும்பிய ஒரு சூழலில் வாணியிடம் பேசினோம். தோழமையும் நம்பிக்கையுமாக உளம் திறந்து பேசினார். “நான் எப்பவும் படைப்புகள் மூலம் கருத்துச் சொல்லணும்னு நினைக்கிறதில்லை. முழுக்க என்டர்டெயின்மென்ட். மரபைச் சிதைத்திடாம கொஞ்சம் நவீனப்படுத்த முயற்சி செய்வேன். த்வாரமும் அப்படித்தான்... ஹைதராபாத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். அதிகாலை எழுந்தப்போ என் எதிரே கதவுகள் இருந்தன.

இந்தக் கதவுகள் எத்தனை ரகசியங்களை மறைச்சு வச்சிருக்கும்னு விளையாட்டா தோணிச்சு. அட, இதை வைத்தே நிறைய சப்ஜெக்ட்ஸ் செய்யலாமேன்னு யோசிச்சேன். அப்புறம் மற்ற வேலைகள்ல பிஸியாகிட்டேன். பரபரப்பெல்லாம் ஓஞ்சு இதை டெவலப் பண்ண ஆரம்பிக்கலாமேன்னு நினைக்கும் போது அம்மா இறந்துட்டாங்க. அம்மாவோட இழப்பு சாதாரணமில்லை. தோழி மாதிரி... எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிப்பேன். நான் நடனத்துக்கு வந்ததே அவங்களால தான். என் நடனம் எல்லாத்துக்கும் அவங்கதான் பாடுவாங்க. நிறைய கரெக்ஷன் சொல்வாங்க. அவங்க இறந்த பிறகு இந்த கான்செப்ட் மேல இருந்த ஆர்வம் போயிடுச்சு.
 
அண்மையில என் தோழி உஷாதான் நல்லா வரும் வாணி... டிரை பண்ணும்மான்னு தூண்டினா. உடனே சத்யநாராயண ராஜூவைச் சந்திச்சேன். அவரும் ஆர்வமா முன்வந்தார்.  விவாதிச்சு முழுமையான வடிவத்துக்குக் கொண்டு வந்தோம். ஸ்பான்சரும் கிடைச்சாங்க. போன ஜூன்ல பெங்களூர்ல பிரிமீயர் ஷோ பண்ணினோம். மும்பையில சண்முகானந்தா ஃபெஸ்டிவல், ஹைதராபாத் தியேட்டர் ஃபெஸ்டிவல்ல பண்ணியிருக்கோம். இப்போ சென்னையில... அடுத்து தெலுங்கானா காக்கத்தியா ஃபெஸ்டிவல்ல செய்றோம்...மெல்ல, மெல்ல சொந்த வாழ்க்கை நோக்கி நகர்கிறது உரையாடல்.
 
“சென்னையிலதான் பிறந்தேன். அப்பாவுக்கு பார்மாசூட்டிக்கல் கம்பெனியில வேலை. அடிக்கடி பணிமாறுதல் வரும். நான் பிறந்தப்போ அப்பாவுக்கு நாக்பூர்ல வேலை. அதுக்கப்புறம் கொல்கத்தா... எங்களையும் அங்கே அழைச்சுக்கிட்டார். 1961 வரை அங்கே இருந்தோம். 4 வயசுல நடனம் கத்துக்கத் தொடங்கினேன். 7 வயசுல அரங்கேற்றம். ராஜலட்சுமி டீச்சர்கிட்ட அம்மா பரதம் கத்துக்கிட்டிருந்தாங்க. அவங்க கிளாஸுக்குப் போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டுப் போய் ஜூனியர் கிளாஸ்ல விடுவாங்க. அப்படித்தான் எனக்கு பரதம் அறிமுகம். அம்மா நிறைய மேடைகள்ல ஆடியிருக்காங்க. இரண்டாவது தங்கை மீரா பிறந்த பிறகு நானும் மீராவும் சேர்ந்து ஆடணும்னு விரும்பினாங்க.

ஒரு கட்டத்துக்கு மேல, தன் கனவுகளையும் ஆசைகளையும் ஒதுக்கி வச்சுட்டு எங்க மேல கவனம் செலுத்தத் தொடங்கிட்டாங்க. அம்மா ரொம்ப சாஃப்ட். ஆனா, டான்ஸுனு வந்துட்டா ராட்சசியா மாறிடுவாங்க. அவங்க சொல்றதை செஞ்சே ஆகணும். அப்பாவுக்கு என்னை டாக்டராக்கணும்னு ஆசை. எனக்கோ நடனம்தான் உயிரா இருந்துச்சு. அப்பாவோட கனவை நினைவாக்கணுங்கிற எண்ணமும் இருந்துச்சு. கல்லூரியில சயின்ஸ்தான் எடுத்தேன். ஒரு கட்டத்துல படிப்பும் டான்ஸும் ஒண்ணுக்கொண்ணு இடைமறிச்சுது. என் தடுமாற்றத்தைப் புரிஞ்சுக்கிட்ட அப்பா, உனக்கு எதுல விருப்பமோ அதுல முழு ஈடுபாட்டோட இறங்கு... மத்தவங்களை திருப்திப்படுத்த உன் கனவை அழிச்சுக்காதேன்னு சொன்னார். ரெண்டு வருஷமா படிச்ச படிப்பை நிறுத்திட்டு பி.ஏ.ல சேந்தேன். முழுக்க முழுக்க டான்ஸ்!

அப்பாவுக்கு மும்பைக்கு மாறுதலாச்சு. அங்கே ராஜராஜேஸ்வரி கலா மந்திர்... கோவிந்தராஜ் பிள்ளை, மகாலிங்கம் பிள்ளைக்கிட்ட கத்துக்கிட்டிருந்தோம்.  வீட்டில் இருந்து கலாமந்திர் ரொம்ப தூரம். தினமும் அவ்வளவு தூரம் அலையுறதைப் பாத்த மகாலிங்கம் பிள்ளை, நீங்க குடியிருக்கிற பகுதியிலேயே என் தம்பி கல்யாணசுந்தரம் சொல்லிக்கொடுக்கிறாரு... அங்கேயே கத்துக்கலாம்னு சொன்னார். அப்படித்தான் கல்யாணசுந்தரம் குரு அறிமுகம் கிடைச்சுச்சு. அவர் தான் என் நடனத்தை முழுமைப்படுத்தினார். இன்னைக்கும் எனக்கு அவரோட ஆசீர்வாதம் இருக்கு. எல்லாத்திலயும் ஒரு ஒழுங்கு... அங்கசுத்தம்,  அரமண்டி, அபிநயம் எல்லாத்துக்கும் முக்கியத்துவம் தருவார். நிறைய புதுமைகள் செய்வார். ஏராளமான நாட்டிய நாடகங்கள் செஞ்சிருக்கார்.

நடனத்துக்கு மட்டுமில்லாம என் வாழ்க்கைக்கும் அவர் குருவா இருந்திருக்கார். பொறுமையை கத்துக் கொடுத்தது அவர்தான். அவரும் அவரோட மனைவி மைதிலியும் எனக்கு இன்னொரு அப்பா, அம்மா மாதிரி... சந்தோஷம், கஷ்டம் எல்லாத்தையும் அவங்ககிட்ட பகிர்ந்துப்பேன். இப்பவும் அந்த உறவும் உரிமையும் தொடருது. ரொம்ப மனசுடைஞ்சு நின்ன தருணங்கள்ல என்னை மீட்டு இயல்பாக்கினதும் என் மாஸ்டர்தான்...- நெகிழ்வாகச் சொல்கிறார் வாணி.

திருமண வாழ்க்கை, முறிவு, பற்றி பேசுகிறார். வார்த்தையில் வன்மம் இல்லை. வருத்தம் இல்லை. அனைத்தையும் கடந்த பக்குவம் தெரிகிறது. “மண வாழ்க்கையில இருந்து விலகினப்போ, ரொம்பக் கஷ்டப்பட்டீங்களான்னு இன்னைக்கும் சில பேர் கேப்பாங்க. அது கஷ்டமான நேரம்தான். ஆனா, இறைவன் என்னை எளிதாக அதுல இருந்து மீட்டுட்டார்.

நடனம் ஒரு பெருமிதமான இடத்துக்கு என்னைக் கொண்டு போயிடுச்சு. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை மகிழ்ச்சியாவே வாழ்ந்துக்கிட்டிருக்கோம். நானும் கமலும் ஒரு ரெக்கார்டிங் தியேட்டர்லதான் முதன் முதல்ல சந்திச்சோம். குரு கல்யாண சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில உள்ளவங்க சினிமா வினியோகஸ்தரா இருந்தாங்க. அவங்களுக்கு ஏ.பி.நாகராஜன் சார் குடும்ப நண்பர். அவரோட படத்தை இவங்கதான் டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்க. ஒருமுறை நான் மும்பையில டான்ஸ் ஆடினப்போ ஏ.பி.நாகராஜன் சார் பாத்திருக்கார். அதைப் பாத்துட்டு வாணி என் படத்துல நடிப்பாளான்னு மாஸ்டர்கிட்ட கேட்டிருக்கார். மாஸ்டர் என்கிட்ட, சினிமாவில நடிக்க விரும்புறியான்னு கேட்டார். சினிமா பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நான் என்ன செய்யணுங்கிறதை நீங்களே சொல்லுங்க மாஸ்டர்?ன்னு சொல்லிட்டேன்.

அந்தப் படம் ‘மேல்நாட்டு மருமகள்’. அப்போதான் கமலை முதன்முதல்ல மீட் பண்ணினேன். முதல்நாள், ஒரு பாட்டு ரெக்கார்டிங் பண்ணினாங்க. அங்கேயே நீ தொடர்ச்சியா சினிமாவில இருக்க விரும்புறியா’ன்னு கேட்டார் கமல். எனக்கு பதில் சொல்லத் தெரியலே. உன்னைத் திருமணம் பண்ணிக்க விரும்புறேன்னு சொன்னார். அதிர்ச்சியா இருந்துச்சு. உடனடியா பதில் சொல்லலே. அம்மாகிட்ட சொன்னேன். எல்லாரோட சம்மதத்தோடவும் திருமணம் முடிஞ்சது. 2 வருட மண வாழ்க்கை... அதன்பிறகு ஒதுங்க வேண்டிய சூழல்...

எல்லாருக்கும் அவங்க நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையிறதில்லை. சில பேருக்கு அப்படி அமையலாம். நான் இப்போதைய வாழ்க்கையில திருப்தியா இருக்கேன். திருமண வாழ்க்கையில இருந்து ஒதுங்கி வந்த நேரத்தில பலபேர், இவளோட வாழ்க்கை என்னாகப் போகுதோன்னு பயந்தாங்க. என் வாழ்க்கை எப்படி போகும்னு எனக்கும் தெரியலே. எந்தத் திட்டமிடலும் இல்லை. இப்போ நினைச்சுப் பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கு. என்னை அந்தத் துயரத்துல இருந்து முழுமையா மீட்டது நடனம்தான். இறைவன் எனக்குன்னு தீர்மானிச்சு வச்சது அது.

அப்பா, அம்மா முடிவெடுக்கிற உரிமையை எங்களுக்குக் கொடுத்தாங்க. ஏதாவது பாதிப்பு வந்ததுன்னா நாங்க துணையா நிப்போம். சந்தோஷம் வந்தாலும் உங்கக்கூட இருப்போம்னு சொல்வாங்க. மண வாழ்க்கை குழப்பத்துல இருந்த நேரத்துல, ‘விட்டுட்டு வந்திடு’ன்னோ, ‘இல்லை... நீ வாழ்ந்து தான் ஆகணும்’னோ என் பெற்றோர் சொன்னதே கிடையாது. என் முடிவை ஏத்துக்கிட்டாங்க. தைரியமா முடிவெடு, நாங்க இருக்கோம்னு நம்பிக்கை கொடுத்தாங்க.

இந்த மனநிலையில இருந்து என்னை மீட்டு நடனத்துக்குள்ள திருப்பினவர் மாஸ்டர் கல்யாண சுந்தரம்தான். ரொம்ப குழப்பமான மனநிலை... எல்லாப் பக்கமிருந்தும் விசாரிப்புகள், ஆறுதல்கள்... எதிர்காலம் பத்தி எந்த முடிவும் எடுக்க முடியலே...அப்போ, மத்திய அரசுல இருந்து நேஷனல் இன்டக்ரேஷன் த்ரூ டான்ஸ்ன்னு ஒரு புராஜெக்ட் அறிவிச்சாங்க.

முன்னோடி கலை ஆசிரியர்களைத் தேர்வுசெஞ்சு, அவங்களோட மரபை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிற இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துற திட்டம். குச்சிப்புடி ஆசான் வேம்பட்டி சின்னசத்யம், பரதநாட்டிய குரு கல்யாணசுந்தரம், கதக் குரு பிர்ஜி மகராஜ், ஒடிஸி குரு கேலுச்சரண் மகோபாத்ரா நாலு பேரையும் ரெப்ரசென்ட் பண்ணியிருந்தாங்க.

எல்லாரும் அவங்கவங்க சிஷ்யர்களை அறிமுகம் செய்யணும். கல்யாணசுந்தரம் மாஸ்டர், ஒரு முக்கியமான நிகழ்ச்சி... நீதான் ஆடப்போறே... தயாராகிடுன்னு சொன்னார். நீங்க என்ன சொல்றீங்களோ, செய்றேன் மாஸ்டர்னு சொல்லிட்டேன். ஹைதராபாத்ல 4 நாள் ரிகர்சல்... ஒரே பங்களாவில எல்லாக் கலைஞர்களும் ஒண்ணு கூடி இருந்தாங்க. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புது வாழ்க்கையைத் தொடங்கிட்டேன். மனசுல தைரியம் வந்திடுச்சு. அதுக்குப்பிறகு திரும்பி பார்க்கவேயில்லை.

டான்ஸ்தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். எப்பவும் நான் தனிமையை உணர்ந்ததேயில்லை. சுஹாசினி, சாருஹாசன் அண்ணா, மன்னி... எல்லாரும் இன்னைக்கும் என்னை அவங்க குடும்பத்துப் பெண்ணாத்தான் நினைக்கிறாங்க. சென்னையில எந்த நிகழ்ச்சின்னாலும் அண்ணா, மன்னி காலைத் தொட்டு வணங்காம நான் மேடையேறினதே இல்லை. முதன்முதல்ல என்னை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போன கமல், சுஹாசினியைத்தான் அறிமுகப்படுத்தி வச்சார். அப்போதிலிருந்து அவ என் மனசுக்கு நெருக்கமான தோழி... என்னை விட வயசுல ரொம்ப சின்னவ. ஆனா, அவளோட அறிவும் திறமையும் பக்குவமும் ரொம்பவே முதிர்ச்சி... அவளோட தங்கைகள் நந்தினி, பாஷினியும் நெருக்கமாத்தான் இருக்காங்க. எனக்கு எதுவுமே விட்டுப்போகலே...- கனிவாக சிரிக்கிறார் வாணி.

வாணியை இன்டீரியர் டிசைனராக ஒப்பந்தம் செய்ய வரிசையில் நிற்கின்றன நிறுவனங்கள். தவிர, ஒப்பனைக் கலைஞராக, காஸ்ட்யூம் டிசைனராக பல அரிதாரங்கள். கமலுக்கே ஒப்பனையும் காஸ்ட்யூமும் செய்திருக்கிறார். அது பற்றியும் பேசுகிறார் வாணி. “மேக்கப் பரதநாட்டியத்தோட அங்கம்தானே... சின்ன வயசுல இருந்தே அதுல ஆர்வமுண்டு. எனக்கு அப்போ 15 வயசு இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்காக எனக்கும் மீராவுக்கும் ஒருத்தர் மேக்கப் போட்டார். கண் இமைக்கு மேல அப்படியே வெந்திடுச்சு. அப்போதிலிருந்து இனிமே மேக்கப் மேன் கூப்பிடுறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நானே மேக்கப் பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வந்து எனக்கும் போட்டுக்கிட்டு தங்கைக்கும் போட்டுவிட ஆரம்பிச்சேன். கமலுக்கு மேக்கப் போட்டது தனிக் கதை!

கமல் மேக்கப்புக்கு ரொம்பவே மெனக்கெடுவார். ‘கைதியின் டைரின்னு நினைக்கிறேன். சரோஜ்மோடின்னு ஒரு மேக்கப்மேன்... ரொம்ப ஃபேமஸ். சஞ்சீவ்குமார், திலீப்குமார் மாதிரி நடிகர்களுக்கெல்லாம் மேக்கப் போடுறவர். ஒருநாள் பேசிக்கிட்டிருக்கும்போது, அமெரிக்காவுல மைக் வெஸ்ட்மோர், டாம் பர்மன்னு ரெண்டு பெரிய மேக்கப்மேன்கள் இருக்காங்க. அவங்ககிட்ட நம்ம ஆட்கள் யாரையாவது அனுப்பி போய் மேக்கப் கத்துக்கிட்டு வரச் சொல்லலாம்னு சொன்னார் சரோஜ்மோடி. ஏன் யாரையாவது அனுப்பணும்... நீயே போயேன்னு சொன்னார் கமல்... உடனே கிளம்பிட்டேன்.

3 மாசம் லாஸ் ஏஞ்சல்ஸ்ல தங்கிக் கத்துக்கிட்டேன். கமலோட மேக்கப்மேன் சுந்தரமூர்த்தியோட சேர்ந்து, கமலுக்கு மேக்கப் போட்டேன். கல்யாணம் ஆன நேரத்துல இருந்தே கமலுக்கு நான்தான் காஸ்ட்யூம் பண்ணிக்கிட்டிருந்தேன். இன்னைக்கு மாதிரி அன்னைக்கு காஸ்ட்யூம் டிசைனருக்கு வாய்ப்புகள் இல்லை... என்று சிரிக்கிற வாணி கமலின் சினிமா ஈடுபாடு, அர்ப்பணிப்பு பற்றி வியப்போடு பேசுகிறார்.

“கமல் அளவுக்கு சினிமா மேல ஈடுபாடுள்ள மனிதரை நான் சந்தித்ததில்லை. உணவு, உறக்கம், மூச்சு எல்லாமே அவருக்கு சினிமாதான். எந்தக் காலத்திலும் அவருக்கு ஆர்வம் குறைந்ததில்லை. குறையப்போறதும் இல்லை. நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு. குளோபல் சினிமாவை அப்டேட் செஞ்சுக்கிறதுல அவருக்கு இணை யாருமில்லை.

அதற்கான மெனக்கெடல்களை அருகில் இருந்து பாத்திருக்கேன். இந்த அளவுக்கு டெடிகேஷன் இருக்கிறதால தான் இன்னைக்கும் அவர் முக்கியமா இருக்கார். எவ்வளவோ யங்ஸ்டர்ஸ் வர்றாங்க... போறாங்க... ஆனாலும், கமலோட இடம் மாறவேயில்லை. நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு... என்கிற வாணி, ஸ்ருதி, அக்ஷராவின் சினிமா பற்றியும் அக்கறையாக பேசுகிறார்.

“ஸ்ருதி, அக்ஷரா பத்தி பத்திரிகைகள்ல படிக்கிறேன். அவங்களச் சுத்தி எல்லாமே சினிமா தான். அவங்களுக்கு சினிமாதான் இயற்கை. ஸ்ருதி பெரிய டேலன்ட். சினிமாவிலும் நடிக்கறாங்க. அழகா பாடுறாங்க. ஒரு நிகழ்ச்சியில அவங்க பாடுனதை நான் கேட்டிருக்கேன். அப்போ எனக்கு அது ஸ்ருதின்னு தெரியாது. அக்ஷரா இப்போதான் வர்றாங்க. பொதுவா, டான்ஸ், சாங்ஸ், கிளாமர்னு இல்லாம அதைத் தாண்டியும் முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு முக்கியத்துவம் தரணும். அப்போதான் சினிமாவில நிலைச்சு நிற்க முடியும்... என்கிறார் வாணி.

பெங்களூரில் சஞ்சரி என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தும் வாணி, டான்ஸர் என்ற பொறுப்பைத் தாண்டி ஆசிரியை என்னும் பொறுப்பு தன்னைச் செதுக்குகிறது என்கிறார். “சஞ்சரி... பெங்களூர்ல 15 வருடத்துக்கு முன் ஆரம்பிச்ச நடனப் பள்ளி. ஆசிரியரா இருக்கிறது வேறுவிதமான அனுபவம். நான் எப்பவும் என்னை ஆசிரியரா வருவேன்னு நினைக்கலே. கடைசி வரையும் டான்ஸரா இருக்கணும்னு தான் விரும்புனேன். என்னோட டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு கல்யாணசுந்தரம் மாஸ்டர் அடிக்கடி பெங்களூர் வந்து போறதுண்டு. ஒருமுறை நிறைய பேர் வந்து மாஸ்டர் எப்போ பெங்களூர்ல ஸ்கூல் ஆரம்பிக்கப்போறீங்கன்னு கேட்டாங்க.

என்னால அவ்வளவு தூரமெல்லாம் வந்து போக முடியாதும்மா... வேணும்னா என் ஸ்டூடன்டை ஆரம்பிக்கச் சொல்றேன்னு சொன்னார். எனக்குப் பதற்றமாயிடுச்சு... மாஸ்டர் எனக்கு டீச்சிங்ல எல்லாம் ஆர்வமில்லைன்னு சொன்னேன். ஆனா, அம்மா ஆசைப்பட்டாங்க. உன் கேரியருக்கு டீச்சிங் ரொம்பவே உதவியா இருக்கும். அதன் மூலமா நீயும் நிறைய கத்துக்கலாம், ஒப்புக்கோன்னு சொன்னாங்க. அப்படித்தான் ஆரம்பிச்சேன்... டீச்சரா நான் ரொம்ப ஸ்டிரிக்ட். குறைஞ்சது ஏழுல இருந்து பத்து வருஷம் கத்துக்காம நான் அரங்கேற்றம் செய்யிறதில்லை. ரொம்பவே கம்மியான ஸ்டூடன்ட்ஸ்தான் வச்சிருக்கேன். அவங்களை நான் கண்ணாடி மாதிரிதான் பார்ப்பேன். அவங்க செய்றதைப் பாத்து நானும் புதிய முயற்சிகளைச் செய்றேன். நல்ல ஆசிரியரோட தகுதியே கத்துக்கிறதுதானே?- சிரிக்கிறார் வாணி.

வாணி சமூக அமைப்புகளிலும் பொறுப்பு வகிக்கிறார். பி பேக் என்கிற பெங்களூர் பொலிடிக்கல் ஆக்ஷன் கமிட்டியில் கலை, கலாசாரப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருக்கிறார். களப்பணிகளிலும் பங்கேற்கிறார். பொதுமக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்களுக்குக் கொண்டு  சேர்ப்பதும் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவதும் ‘பி பேக்’ அமைப்பின் பணி... இது மக்களுக்கும் அரசுக்குமான பாலம்... குழந்தைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர், குப்பை என்று எல்லா பொதுப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும். ஆய்வு செய்யும்... தீர்வும் தேடும் அமைப்பு இது. இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரியமான பரதநாட்டியத்தின் உச்ச நட்சத்திர கலைஞராக இருக்கிறபோதும் வாணியிடம் துளியளவும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குறையவில்லை. மேடையேறும் முன் வார்ம்-அப் செய்வதில் இருந்து திறமையுள்ள கலைஞர்களுக்கு மரியாதை அளிப்பது வரை எல்லாவிதத்திலும் தனித்துவம் மிக்கவராக இருக்கிறார்.

“நான் இந்த வாழ்க்கையை ரொம்பவே ரசிக்கிறேன். இன்னும் மேம்பட்ட டான்ஸரா இருக்கணும். நடனம் இல்லாம என்னால இருக்க முடியாது. நடனம் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. என்னைத் துயரத்தில் இருந்து மீட்டது இந்த நடனம்தான். இன்றைக்குச் செல்வம் கொடுத்து, புகழ் கொடுத்து, மன அமைதியைக் கொடுத்து வாழ்விக்கிறதும் நடனம்தான். இன்னொரு ஜென்மம் எடுத்தேன்னா, நிச்சயமா வாணி கணபதியாத்தான் பிறக்கணும்!- நெகிழ்வாகச் சொல்லிச் சிரிக்கிறார் வாணி கணபதி!

இப்போ நினைச்சுப் பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கு. என்னை அந்தத் துயரத்துல இருந்து முழுமையா மீட்டது நடனம்தான்...

கமல் அளவுக்கு சினிமா மேல ஈடுபாடுள்ள மனிதரை நான் சந்தித்ததில்லை. உணவு, உறக்கம், மூச்சு எல்லாமே அவருக்கு சினிமா தான். எவ்வளவோ யங்ஸ்டர்ஸ் வர்றாங்க... போறாங்க... ஆனாலும், கமலோட இடம் மாறவேயில்லை. நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு...

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்