என்ன எடை அழகே!



இனி  எல்லாம் நலமே!

குங்குமம் தோழியும் ‘தி பாடி ஃபோகஸ்’ உரிமையாளரும், டயட்டீஷியனு மான அம்பிகா சேகரும் இணைந்து நடத்திய ‘என்ன எடை அழகே’ எடைக் குறைப்பு நிகழ்ச்சியின் சீசன் 1 பிரமாண்ட வெற்றி பெற்றதை அறிவீர்கள். முதல் சீசனில் தேர்வான 6 தோழிகளில் இறுதிக்கட்டம் வரை தொடர்ந்து முதல் 3 இடங்களைப் பிடித்த தாராபுரத்தைச் சேர்ந்த தோட்டக்கலை அலுவலர் சந்திரகவிதா, சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெயந்தி மற்றும் பல் மருத்துவர் பிரதீபா மூவரும் இலக்கை அடைந்ததுடன், இன்றுவரை அதே எடையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘என்ன எடை அழகே’வின் சீசன் 2 பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டு குவிந்த தோழிகளின் கடிதங்கள் மலைக்க வைத்தன. மொத்தம் 13,416 விண்ணப்பங்கள். கத்தாரில் இருந்துகூட ஒரு தோழி விண்ணப்பித்திருந்தார். எடைக்குறைப்புக்கான நியாயமான காரணம், தோழிகளின் உடல்நலப் பின்னணி, எடைக் குறைப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க முடிகிற அவர்களது வசதி போன்ற பலதின் அடிப்படையில் 8 பேரைத் தேர்ந்தெடுத்தோம். தேர்வு பெறாத தோழிகள் மனம் தளர வேண்டாம். அடுத்த முறை அவர்களது முயற்சியை தொடரலாம்.

சீசன் 2வில் தேர்வான 8 வாசகிகளைப் பற்றிய சிறிய அறிமுகம்...

எடை மட்டுமல்ல... வைராக்கியமும் அதிகம்!

• என்.சாந்தி, காஞ்சிபுரம் (வயது 38)

‘‘ஃபார்மசிஸ்ட்டாக வேலை செய்யறேன். கல்யாணமான டைம்ல 60 கிலோ இருந்தேன். முதல் 2 வருஷம் குழந்தை இல்லை. அதிக எடைதான் காரணம்னு சொன்னாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு டயட் இருந்து 5 கிலோ குறைச்சேன். அப்புறம்தான் கன்சீவ் ஆனேன்.  ரெண்டாவது பிரசவத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எடை அதிக மாச்சு. அது ஒரு கட்டத்துல 95 கிலோவுல வந்து நின்னப்ப எனக்கு ஹார்ட் அட்டாக்கே வர்ற மாதிரி இருந்தது. அப்புறம் கர்ப்பப்பையில ஃபைப்ராய்டு இருக்கிறதா சொல்லி எடுத்தாங்க. ஒரு ஹார்மோன் குறைபாடுனு சொல்லி அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. ஜிம்முக்கு போனேன். எனக்கு ஏற்கனவே வீசிங் பிரச்னை இருக்கிறதால என்னால எக்சர்சைஸ் பண்ண முடியலை. யோகாவும் ட்ரை பண்ணினேன்.

எதுலயும் பலன் இல்லை. ‘உங்களை சுத்திப் பார்க்கவே ஒரு நாள் ஆகும் போலருக்கே’ங்கிற அளவுக்கு கிண்டல்களை சந்திச்சேன். அப்பதான் குங்குமம் தோழியில ‘என்ன எடை அழகே’ தொடரைப் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. குறிப்பா அதுல முதல் இடம் பிடிச்ச சந்திரகவிதா என்னை ரொம்ப இன்ஸ்பையர் பண்ணினாங்க. எனக்கு எப்பவுமே வைராக்கியம் அதிகம். பிளஸ் டூ முடிச்சு 10 வருஷம் கழிச்சு டி.பார்ம் முடிச்சிட்டு, ஃபார்மசிஸ்ட் ஆனவள் நான். அதே வைராக்கியத்தை எடையைக் குறைக்கிற விஷயத்துலயும் காட்டணும்னு நினைக்கிறேன். ஒரே ஒரு விஷயம் என்னன்னா, என்னை மோட்டிவேட் பண்ண ஒருத்தர் வேணும். அந்த வகையில டயட்டீஷியன் அம்பிகா சேகர் மேடம் ஹெல்ப் பண்ணுவாங்கன்ற நம்பிக்கையில இங்க வந்திருக்கேன். இந்த முறை என் முயற்சியில நிச்சயம் ஜெயிப்பேன்...’’

தாராள மனசு மட்டுமல்ல... தன்னம்பிக்கையும் வேண்டும்!

• சபிதா ராம்கோபால், அன்னனூர், சென்னை - 62 (வயது 47)

‘‘ஸ்கூல் டீச்சரா இருக்கேன். ரொம்ப வருஷங்களா 60 கிலோவா இருந்தேன். அப்புறம் 62 ஆச்சு. அப்படியே மெல்ல மெல்ல 75.5 கிலோவுக்கு வந்தேன். நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகளையும், திரவ உணவுகளையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வாக்கிங் போனேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறதால, சில முக்கியமான மீட்டிங்ஸுக்கு போக வேண்டியிருக்கும். நாலஞ்சு பேரா சேர்ந்து போகிறபோது, என்னதான் நான் சொல்ற கருத்து அழுத்தமா இருந்தாலும், அதை எதிராளிகள் கண்டுக்க மாட்டாங்க. நான் அவமானப்படுத்தப்படறதா ஃபீல் பண்ணுவேன். ஒல்லியா, அளவான உடலமைப்பு உள்ளவங்கக்கிட்ட நல்லா பேசுவாங்க. எனக்கு 7 வருஷங்களுக்கு முன்னாடி கர்ப்பப்பையை நீக்கிட்டாங்க.

இந்த வயசுலயும் நான் ரொம்ப சுறுசுறுப்பாதான் இருக்கேன். காலையில 4 மணிக்கு எழுந்திருச்சா, ராத்திரி 10:30 மணி வரை ஓயாம வேலை பார்த்திட்டிருப்பேன். ஆனா, நாளுக்கு நாள் அதிகரிக்கிற என்னோட எடை, என் தன்னம்பிக்கையை சிதைச்சிடுமோனு பயமா இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி கேன்சர் நோயாளிகளுக்காக என்னோட முடியை தானமா கொடுக்க கட் பண்ணிக்கிட்டேன்.

அதைப் பார்த்த என்னோட ஃப்ரெண்ட், ‘உன்னோட குண்டு உடம்புக்கு இது தேவையா’னு கிண்டல் பண்ணினாங்க. ‘ஒரு நல்ல காரியத்தை செய்தாகூட மத்தவங்க கிண்டல் பண்ற அளவுக்கு என் உடம்பு இருக்கே’னு அழுதேன். குங்குமம் தோழி நடத்தின ‘என்ன எடை அழகே’வோட சீசன் 1ல நான் அப்ளை பண்ணினேன். தேர்வாகலை. அந்த வாய்ப்பு ரெண்டாவது முறை கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். என்னோட ஹேண்ட்பேக்ல எப்போதும் குங்குமம் தோழி வச்சிருப்பேன். ஆத்மார்த்தமான, அக்கறையான ஒரு ஃப்ரெண்ட் எப்போதும் என்கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்!’’

‘‘மூத்த பையனுக்கு 28 வயசு. அவன் ஸ்பாஸ்டிக் சைல்ட். வீல்சேர்லதான் வாழ்க்கை. அவனைப் பார்த்துக்க நான் எப்போதும் சுறுசுறுப்பா இருந்தாகணும்...’’