பாலூட்டுவதற்குக் கூட சட்டமா?



கீதா இளங்கோவன்

சமீபத்தில் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாண இரு அவைகளும் ஒரு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளன. இதன் மூலம் ‘பெண்கள் பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்’ என்ற  உரிமையை தாய்மார்களுக்கு சட்டப்படி ‘வழங்கி’  உள்ளதாம் அந்த அரசு? இதைக் கேட்டு அழுவதா... சிரிப்பதா என்று புரியவில்லை. வெர்ஜினியாவில் மட்டுமல்ல... தெற்கு டகோடா (South Dakota), இடஹோ (Idaho) ஆகிய மாகாணங்களிலும் கூட, பெண்கள் பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது வெர்ஜினியா அனுமதி அளித்துள்ளது. மீதி மாகாணங்களில் இன்னமும் அனுமதி இல்லை.

இந்த மசோதாவை முன்னெடுத்த செனட்டர் வெக்கஸ்டனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அதே நேரத்தில், ‘பொது இடத்தில் எமது குழந்தைகள் பசியால் அழும் போது, பாலூட்டுவதற்குக் கூட சட்டம் தேவையாயிருக்கிறதே’ என பெண்களின் ஆதங்க குரல்களும் உரத்து ஒலிக்கின்றன. இதற்குப் பின்னணியில் இருப்பது, ‘பொது இடத்தில் ஒரு பெண் தாய்ப்பால் கொடுப்பது நாகரி கமானதல்ல’, ‘அவள் உடலைக் காட்டுவது ஒழுக்கக்கேடு’ என்ற பிற்போக்குத்தனமான மனநிலை அன்றி வேறென்ன? என்னய்யா நடக்குது இங்கே? பெண்ணைப் பற்றி, அவள் உடலைப் பற்றி, ‘போலியான ஒழுக்க விதிகள்’ பற்றி எல்லா நாட்டு ஆட்சியாளர்களுக்கும் உடனே பாடம் எடுத்தாகணும்.

‘பொது இடத்தில் எமது குழந்தைகள் பசியால் அழும் போது, பாலூட்டுவதற்குக் கூட சட்டம் தேவையாயிருக்கிறதே...’

பெண்கள் முன்னேறிவிட்டார்களா?

இவ்வுலகில் உள்ள ஒரு நாட்டில் கூட ஆணுக்கு இணையாக பெண்ணுக்கும் சமமான  பொருளாதார, கல்வி, அரசியல் வாய்ப்புகளோ, அடிப்படை மருத்துவ வசதிகளோ தரப்படவில்லை. இந்த கசப்பான உண்மையை சொல்லியிருப்பது உலகப் பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum). பாலின இடைவெளியை (Gender Gap) வெற்றிகரமாக ஒழித்த ஒரு  நாடு கூட இல்லை என்று தனது அறிக்கையில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறது.

142 நாடுகளில் ஆண்-பெண்ணுக்கிடையே  காட்டப்படும் பாகுபாட்டை ஆய்வு செய்த இந்த அமைப்பு, ‘உலக பாலின இடைவெளி அறிக்கை’யை (Global Gender Gap Report) கடந்த ஆண்டு  இறுதியில் தயாரித்தது. இதில் 10 நாடுகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. அதில் முதலிடம் ஏமனுக்கு. மற்றவை: பாகிஸ்தான், சாட் (Chad), சிரியா, மாலி (Mali), ஈரான், கோட் டி’ இவாய்ர் (Cote d’Ivoire), லெபனான், ஜோர்டான், மொராக்கோ. பெண்களின் முன்னேற்றப் பாதையில் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை இந்த அறிக்கையின் தரவுகள் அழுத்தமாக உரைக்கின்றன.

பல நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்படுகிறது. சாட் நாட்டில் பள்ளி செல்லும் வயதில் இருக்கும் பெண் குழந்தைகளில் 55% மட்டுமே ஆரம்ப பள்ளிக்குச் செல்கின்றனர். (ஆண் குழந்தைகளோ 71%). கோட் டி’இவாய்ர் (Cote d’Ivoire), பாகிஸ்தான், ஏமன் நாடுகளிலும் பெண் கல்வி நிலைமை மோசம்தான். மாலி (Mali) நாட்டில் 25 சதவிகிதப் பெண்களுக்கும், சாட்டில் 28 சதவிகிதத்தினருக்கும் மட்டும்தான் எழுதப் படிக்கத் தெரியும்.

அரசியலைப் பொறுத்த வரை, மிக மோசமான பாலின இடைவெளி நிலவும் 10 நாடுகளில், அமைச்சரகப் பதவிகளில் 80% ஆண்களே இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண்களின் பங்கேற்பு 20% மட்டுமே. சிரியாவில் 76 சதவிகித ஆண்கள் தொழிலாளர்களாக இருக்க, வீட்டுக்கு வெளியே தொழிலாளர்களாகப் பணிபுரியும் பெண்கள் 14%தான். ஈரானிலும் லெபனானிலும் ஆண்கள் ஆண்டுக்கு 26 ஆயிரம் டாலர் சம்பாதிக்க, பெண்களின் வருமானமோ 5,000 - 7,106 டாலர் மட்டுமே.

இந்தப் புள்ளிவிவரங்கள், ‘எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்... இன்னும் என்னதான் வேண்டும் அவர்களுக்கு’ என்று கூக்குரலிடும் தோழர்கள், தோழிகளின் அன்பான கவனத்துக்கு!