பிரச்னை இல்லைன்னா வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காது!



ரேஹானே (ஃபேஷன் டிசைனர்)

இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பிரபல ஃபேஷன் டிசைனர்களில் முக்கியமானவர் ரேஹானே. தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தைப் பிடித்திருப்பவர் என்றுகூட சொல்லலாம். உடை வடிவமைப்பு என்பதே அதிகம் பிரபலமாகாத காலத்தில் இந்தத் துறைக்குள் அடியெடுத்து வைத்தவர். தன் சொந்தக் காலில், தனி நபராகவே ஃபேஷன் டிசைனிங் தொழிலை இன்றுவரை நடத்தி வருபவர். இன்றைக்கு இவர் பெயரைச் சொன்னாலே உலகெங்கும் தெரிகிற அளவுக்கு  புகழின் உச்சியில் இருப்பவர். பிறந்தது ஓர் ஊர், வளர்ந்தது வெவ்வேறு நாடுகளில் என்றாலும், சென்னையின் மேல் அவருக்கு இருக்கும் பிடிப்பும் ஈடுபாடும் பேச்சில் அப்பட்டமாகத் தெரிகிறது.

எப்படி இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது? ஃபேஷன் டிசைனிங் அப்படி என்ன ஸ்பெஷல்? கேள்விகளை அடுக்கினால், ஆங்கில மும் தமிழும் கலந்த மொழியில் நிதானமாகவும் தெளிவாகவும் பதில் சொல்கிறார் ரேஹானே... ‘‘ஃபேஷன் டிசைனிங் மேல எனக்கு Passionனு கூட சொல்ல முடியாது. அதைவிட 100 மடங்கு அதிகம். அதுதான் என் வாழ்க்கை, எல்லாம்! அதுதான் என் தர்மா, கர்மா. சம்பாதிக்கவோ, புகழுக்காகவோ   நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலை. இந்த உணர்ச்சியை எப்படி விவரிக்கறதுன்னு கூட எனக்குத் தெரியலை. 12 வயசுலருந்தே ஃபேஷன் டிசைனிங் மேல அப்படி ஒரு அதீத ஆர்வம்.

இப்போ 18 வயசு பையன்கிட்ட போய் ‘எதிர்காலத்துல என்ன செய்யப் போறே’ன்னு கேளுங்க. நிறைய பேருக்கு பதில் சொல்லத் தெரியாது. 12 வயசுலயே நான் அழகான உடைகளை டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டேன். சின்ன வயசுலயே பெயின்டிங் பண்றது, கவிதை எழுதறது, கதை எழுதறது, பாடறதுன்னு ஒரு கலை மனோபாவம் எனக்குள்ள இருந்துச்சு. இப்போ கூட என்னால டான்ஸ் ஆடவோ, பாடவோ முடியும். ரெண்டு ரிஹர்சல் பார்த்துட்டேன்னா செஞ்சுடுவேன்.

அப்போ பெங்களூருல இருந்தேன். என் அப்பா இந்திய தூதராக பல நாடுகள்ல பணிபுரிந்தவர். லீவுக்கு அப்பா இருந்த ஈரானுக்கு போனேன். அங்கே போர்ச் சூழல். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலம். வீட்ல ரொம்ப போரடிக்கும். ஆனா, வெளியே போக முடியாது. அப்பப்போ குண்டு விழுற சத்தமெல்லாம் கேட்கும். அப்போதான் என்னோட முதல் டிரெஸ் ஸ்கெட்ச் கலெக்ஷனை உருவாக்கினேன்.

வேற வேற நாடுகள்ல பல பள்ளிகள்ல படிச்சேன். அந்த எக்ஸ்பீரியன்ஸ் நல்லா இருந்தது. எல்லாமே பிரமாதமான ஸ்கூல்ஸ். ஊர் ஊரா போய்கிட்டு இருந்ததால யார் மேலயும் எந்த இடத்து மேலயும் பிடிப்பு வரலை. ஸ்கூல் லைஃப் எனக்கு ரொம்ப வலி நிறைஞ்சதாத்தான் இருந்தது. படிப்புல இன்டரஸ்ட் இல்லை... போர் அடிச்சது. விளையாட்டுலயும் எனக்கு ஆர்வம் அதிகம். ஹாக்கி, அத்லெட்ஸ்ல எல்லாம் நிறைய பதக்கங்களும் பரிசுகளும் வாங்கினேன். பாடங்களுக்கு வெளியே எல்லாத்துலயும் நம்பர் 1... படிப்புல மட்டும் இல்லை!

பள்ளிப் படிப்புக்கு அப்புறம் இத்தாலியில் ரோம் நகரில் இருக்கும் ‘ஐரோப்பியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் காலிகரிஸ்’ல ஃபேஷன் படிச்சேன். யார் வேணும்னாலும் ஃபேஷனை கத்துக் கொடுக்கலாம். ஆனா, கத்துக்கறவங்களுக்கு உள்ளுக்குள்ள அதுக்கான அதீத ஆர்வமும் தூண்டுதலும் இருக்கணும். ஃபேஷன்கிறது டெக்னாலஜி கிடையாது. அதை சொல்லிக் குடுக்க முடியாது. சட்டம், மருத்துவம் போன்றவற்றை கத்துக் கொடுக்கலாம். கவிதை, கதை எழுதுவதைக் கத்துக் கொடுக்க முடியாதே... அது மாதிரிதான் ஃபேஷனும். காலேஜ்ல விதவிதமா துணிகளை வெட்டுறது, தைப்பது போன்ற அடிப்படைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. இந்த அடிப்படை தெரிஞ்சாதான் ஒரு டிரெஸ் தைக்க 5 மீட்டர் துணி செலவாகுமா, ஒன்றரை மீட்டர் போதுமாங்கறதெல்லாம் தெரியும். இந்த மாதிரி தொழில்நுட்பமெல்லாம் தெரிஞ்சுக்கலாம். இதெல்லாம் 90 சதவிகிதம்னா, அதுக்கான திறமையோடு கூடிய ஆர்வம் 10 சதவிகிதமாவது இருக்கணும்.  ஃபேஷன் படிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல, டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணினேன்.

சென்னைக்கு லீவுல வந்தப்போ எனக்கு 21 வயசு. இங்கே யாவர் தாலாவை மீட் பண்ணினேன். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போச்சு. அப்பாகிட்ட சொன்னேன். ‘பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ’ன்னார். ரெண்டு குடும்பங்களும் சம்மதிச்சாங்க... கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திடீர் கல்யாணம்தான்!

ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கை, இன்னொரு பக்கம் என் தொழில். ஃபேஷன் டிசைனிங்கை சொந்தமா பண்றது அவ்வளவு ஈஸி இல்லை. மெதுவா, ஒவ்வொரு அடியா எடுத்து வச்சுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். நான் ஒரு டிசைனரா வர்றதுக்கு முன்னாடி, ‘மிஸ் இந்தியா ஃபெமினா பீஜன்ட்’ல பங்கெடுத்துக்கிட்டேன். அப்போ என்கிட்ட ஒரு டெய்லர் கூட இல்லை. வீட்ல வச்சு, ஒரு தையல் மெஷினை வாடகைக்கு வாங்கி நானே தைச்சேன். இந்திய அளவுல நடந்த அந்தப் போட்டியில எனக்கு ‘பெஸ்ட் டிசைனர்’ அவார்ட் கிடைச்சது. மொத்தம் 60 போட்டியாளர்கள். அதுக்கப்புறம் மனசுக்குள்ள ஒரு தைரியம் வந்துச்சு. பிசினஸ் பண்ண முடியும்கிற நம்பிக்கை வந்துச்சு.

ஆயிரம் விளக்கு பகுதியில ஒரு ஃப்ரெண்டோட கடையிலதான் என் பிசினஸை ஆரம்பிச்சேன். கடை பேஸ்மென்ட்ல இருந்தது. என் ஃப்ரெண்ட் ஒரு லாண்டரி வச்சிருந்தாங்க... பாதி நாள்தான் எனக்கு இடம் கிடைக்கும். இருந்தாலும் எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அது என்னமோ ஃப்ரெண்டுக்கு என்னை பிடிக்கலை. ‘ப்ளீஸ்... இங்கே இருந்து போயிடுங்க’ன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு அவங்களுக்கு தைரியம் இல்லை. வாஷிங் மெஷின்ல ஒரு பைப் இருக்கும். அதை ஒரு நாள் திறந்து விட்டிருக்காங்க. ரூம் முழுக்க தண்ணி பரவிடுச்சு. நான் வச்சிருந்த துணி யெல்லாம் தரையில இருந்ததால எல்லாமே பாழாப் போயிடுச்சு. ‘இதை கொஞ்சம் முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கக் கூடாதா’ன்னு கேட்டேன். ‘நாங்க என்ன செய்ய முடியும்’னு ஒரே வார்த்தையில அவங்க முடிச்சுக்கிட்டாங்க.

அதுக்கு அப்புறம் அங்கே இருக்க முடியாம, வீட்டுக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தேன். அதுக்கப்புறம் கில்க்ரிஸ்ட் ரோடு, ஹாரிங்டன் ரோடு, சிவகங்கா அவென்யூன்னு மாறிக்கிட்டே இருந்தேன். நான் வச்சிருந்தது சாம்பிளிங் யூனிட்தான். அதுக்கே அவ்வளவு கஷ்டம். ஒரு யூனிட்னா சொந்தமா இடம் இருந்தாதான் நல்லது. நான் போனது எல்லாமே லீஸுக்கு... அது ரொம்ப தொந்தரவு பிடிச்சது.

11 மாசத்துக்கு ஒரு தடவை புதுப்பிக்கணும். முன்னாடி கொடுத்ததைவிட அதிகமா பணம் கேப்பாங்க. வேற இடம் பார்க்க வேண்டியிருக்கும். பெரிய தொகையை இதுல இன்வெஸ்ட் பண்ண முடியாது. அப்படியெல்லாம் கொடுத்தா மிச்சம்னு ஒண்ணுமே இருக்காது. இப்போ இருக்கும் நிலைக்கு நான் எப்படி வந்தேன்னு எனக்குத்தான் தெரியும். நியூஸ் பேப்பர், பத்திரிகை, மீடியான்னு அடிக்கடி என்னைப் பத்தி செய்திகள், கட்டுரை எல்லாம் வருது... ‘பெரிய ஆளு’ன்னு ஈசியா நினைச்சுடுவாங்க. ஒவ்வொரு கட்டத்துலயும் கஷ்டம்... தினமும் ஒரு பிரச்னை. ஆனா, அதுதானே வாழ்க்கை? பிரச்னை இல்லைன்னா வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காதே!

என் கணவர் என்னை ‘பிசினஸ் பண்ணாதே’னு சொல்லலை. அதுவே பெரிய என்கரேஜ்மென்ட்தான்... இல்லையா? நான் ஒரு பிசினஸ் பண்றேன்... நிறைய பேருக்கு சம்பளம் கொடுக்கறேன். இது நல்ல விஷயம்தானே! ஆண்கள், ‘பொம்பளை... உனக்கு என்ன தெரியும்’னு நினைக்கக் கூடாது... மனோபாவத்தை கொஞ்சம் மாத்திக்க ஆரம்பிக்கணும். ஆண், பெண் - ரெண்டு பேரும் சமம்தான். எல்லாருக்கும் ஒரே மாதிரி ரத்தம், எலும்பு, சதைதான். என்னைப் பொறுத்த வரை ஆத்மா மட்டும்தான் வேற வேற. ஆத்மாவுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. ஆண்கள், பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது. அப்போதான், பெண்களால எவ்வளவு தூரம் போக முடியும்னு அவங்களுக்குத் தெரியும். ஒரு பெண் முன்னேறினா குடும்பமே முன்னேறும்!

என்னோடது சாம்பிளிங் யூனிட். பெரிய ஆர்டர்கள் வந்ததுன்னா, ஒரு ஃப்ரெண்டோட யூனிட்ல செஞ்சு எக்ஸ்போர்ட் பண்ணுவேன். ரெகுலரா சின்னச் சின்ன ஆர்டர்கள்தான் வரும். ஒரு சாம்பிள் சவூதியில பிடிச்சுப் போச்சுன்னா அங்கே நிறைய ஆர்டர்கள் வரும். ஃபேஷன் டெக்னாலஜியில இப்போ பெண்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு... எதிர்காலமும் இருக்கு. எக்ஸ்போர்ட் கம்பெனிகள், மெர்க்கண்டைஸ், பொட்டிக் - இங்கெல்லாம் வேலை கிடைக்கும். அரசு நிறுவனங்கள்லயும் வேலை கிடைக்கும். மீடியாவில் கூட வேலை பார்க்கலாம். கணிசமான, நல்ல சம்பளமும் கிடைக்கும். தனியா ஒரு டிசைனரா பிசினஸ் பண்றதுதான் கொஞ்சம் கஷ்டம்!

மூணு பெண்கள் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை அழைக்க வந்தாங்க. பேசிக்கிட்டு இருக்கும் போது, ‘சென்னைல ஏன் இவ்வளவு குறைவா டிசைனர்ஸ் இருக்காங்க’ன்னு கேட்டாங்க. ஏன்னா, இங்கே ஆதரவு ரொம்ப கம்மி. உள்ளூர் திறமைசாலியை யாரும் அங்கீகரிக்கறதில்லை. ‘ஃபேஷன் டிசைனுக்காக பெங்களூரு போறேன், டெல்லி போறேன், மும்பை போறேன்’கறாங்க. சென்னையில இருக்கறவங்களை திரும்பிக்கூட பார்க்கறதில்லை. ஒரு கல்யாணம்... 6 டிரெஸ் தேவைப்படுதா, அதுல 2 டிரெஸ்ஸை உள்ளூர்ல இருக்கறவங்ககிட்ட வாங்கலாமே? சென்னையிலயே எத்தனையோ திறமைசாலிங்க இருக்காங்க. வேலை நல்லா இல்லை, மெட்டீரியல் சரியில்லைன்னா விட்டுடலாம். ஏனோ போறதேயில்லை. குறைந்தபட்சம் என்னை மாதிரி டிசைனர்ஸ் வச்சிருக்கற ஷாப்புக்குள்ள போய், ரேக்குல என்ன இருக்குன்னாவது பார்க்கலாமே?

எனக்கு ஒரு வருத்தம் இருக்கு. ஃபேஷனுக்குன்னு ஒரு இண்டஸ்ட்ரி இங்கே தேவை. என்னை மாதிரி ஒரே ஒரு ஆள் இருந்தா அது இண்டஸ்ட்ரி இல்லை. ஃபேஷன் டிசைனர்ஸ் மட்டுமில்லை... ஓவியர்கள், பியூட்டி பார்லர் நடத்தறவங்க, ஜுவல்லரி டிசைனர்ஸ்னு உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்புக் குடுக்கணும். நான் ஃபேஷன் ஷோஸுக்கு பண்றேன். சினிமா ஃப்ரெண்ட்ஸுக்கு பண்றேன். ஆனா, சினிமாவுக்கு பண்றதில்லை. டைரக்டரோ, புரொடியூஸரோ... அதே மனோபாவம்... ‘மும்பைலருந்து மனீஷ் மல்ஹோத்ராவை கூட்டிட்டு வா’ன்னு சொல்லுவாங்க. உள்ளூர்ல இருக்கற நான் கண்ணுக்குப் பட மாட்டேன். சென்னையில ஃபேஷன் இண்டஸ்ட்ரியை வளர்த்தாக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்!’’

ஃபேஷன்கிறது டெக்னாலஜி கிடையாது. அதை சொல்லிக் குடுக்க முடியாது. சட்டம், மருத்துவம் போன்றவற்றை கத்துக் கொடுக்கலாம். கவிதை, கதை
எழுதுவதைக் கத்துக் கொடுக்க முடியாதே... அது மாதிரிதான் ஃபேஷனும்!

ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டுமா? வழிகாட்டுகிறார் கல்வியாளர் மூர்த்தி செல்வகுமரன்...

‘‘இந்தியாவில் 45 வயதுக்குட்பட்டவர்கள் 81 சதவிகிதம் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஃபேஷன் மேல் ஈடுபாடு இருக்கிறது. 2020ல் இந்திய பொருளாதாரம் ஃபேஷன் டெக்னாலஜி சார்ந்துதான் அமையும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஃபேஷன் டெக்னாலஜியில 6 மாத, 1 வருட சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. 2 வருட டிப்ளமோ படிப்பும் இருக்கின்றன. இவற்றை ஏராளமான தனியார் இன்ஸ்டிடியூஷன்களில் படிக்கலாம்.

சில கல்லூரிகளில் 3 வருட பி.எஸ்சி. படிப்பு, 4 வருட பி.டெக். படிப்புகளும் இருக்கின்றன. சான்றிதழ் படிப்புகளில் சேர 10ம் வகுப்பு தேறியிருந்தாலே போதுமானது. 3 வருட பி.எஸ்சி. படிப்புக்கு பிளஸ் டூவில் ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபேஷன் டெக்னாலஜியை பொறுத்த வரை பி.டெக். படிப்பது நல்லது.

பி.டெக்.கில் சேர, இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NIFT (National Institute of Fashion Technology) நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் என்.ஐ.எஃப்.டி.க்கு 15 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வோர் ஆண்டும் 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கலாம். சென்னை தரமணியில் என்.ஐ.எஃப்.டி. உள்ளது. இங்கு படிக்க ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். 

பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை சில தனியார் கல்லூரிகளும் வழங்குகின்றன. ஏஞ்சல் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருப்பூர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை, பி.எஸ்.ஜி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை, சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதல்படி, பி.டெக். படிக்க தனியார் கல்லூரிகளில் வருடத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இப்படிப்பில் சேருபவர்களுக்கு எதையும் புதிதாக உருவாக்கும் ஆர்வம், படைப்பாற்றல், கற்பனைத்திறன், ஓவிய ஈடுபாடு ஆகியவை இருக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களான ‘நேஷனல் ஹேண்ட்லூம் டெவலப்மென்ட் கார்பரேஷன்’, ‘சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா’, ‘ஹேண்டிகிராஃப்ட் அண்ட் ஹேண்ட்லூம் எக்ஸ்போர்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா’, ‘நேஷனல் டெக்ஸ்டைல் கார்பரேஷன்’ போன்றவற்றில் வேலை கிடைக்கும். ட்ரெண்ட் ஃபோர்கேஸ்டர், புராடக்ட் டெவலப்பர், டெக்ஸ்டைல் டிசைனர், கலரிஸ்ட், மெர்க்கண்டைசர், கிரியேட்டிவ் டிசைனர், டெக்னிக்கல் டிசைனர், பேட்டர்ன் டிசைனர், விஷுவல் மெர்க்கண்டைசர் என்று விதவிதமான   வேலை வாய்ப்புகள் உள்ளன.

இப்போது, ஐ.டி. துறையிலும் ஃபேஷன்  டெக்னால ஜிக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. ‘குளோபல் சோர்ஸிங் அண்ட் பையிங்’, ‘பிசினஸ் ப்ராசஸ் அவுட் சோர்ஸிங்’, ‘நாலெட்ஜ் மேனேஜ்மென்ட்’, ‘ஃபேஷன் ஜர்னலிசம்’, ‘ஃபேஷன் கம்யூனிகேஷன்’, ‘இன்டெலக்சுவல் ப்ராப்பர்டி ரைட்ஸ்’ என்று என்னென்னவோ சொல்கிறார்கள். எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு அதிகமாகிக் கொண்டே போகும் துறை இது!’’ 

- பாலு சத்யா