நியூஸ் பிட்ஸ்



இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட  டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர். எழுதியதை அழித்து மறுபடியும் மறுபடியும் எழுதலாம் என்பதால் நோட் புக் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. விலை ரூ. 500-லிருந்து ஆரம்பிக்கிறது.உலகின் மூன்றாவது சிறிய நாடு நௌரு. பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்தக் குட்டித்தீவின் பரப்பளவு வெறும் 21 சதுர கிலோ மீட்டர். இங்கே சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இனிமையான தீவு என்றும் நௌருவை அழைக்கின்றனர். பாஸ்பேட்டால் நிறைந்திருக்கும் இந்தத் தீவு பணக்கார நாடாகவும் மிளிர்கிறது. இங்கிருக்கும் பாஸ்பேட் உலகம் முழுவதும் விநியோகிக்கப் படுகிறது. அத்துடன் இராணுவம் இல்லாத பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலும் நௌரு இடம்பிடித்துள்ளது.டிசம்பர் 17, 2021-இல் ‘அவதார் 2’ ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார் இயக்குனர் ஜேம்ஸ் கேம ரோன்.

இதற்காக படப்படிப்பு வேலைகள் துரிதமாக நடந்துவந்தன. கொரோனா காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த வாரம் படப்பிடிப்பைத் தொடர்வதற்காக நியூசிலாந்திற்குச் சென்றுள்ளார் ஜேம்ஸ் கேமரோன். அங்கே லாக்டவுன் முடிந்து இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குத் திரும்பினாலும் 14 நாட்கள் குவாரண்டைனில் அவர் இருக்க வேண்டும். அதனால் படப்பிடிப்பு இரண்டு வாரம் கழித்து ஆரம்பிக்கிறது. இருந்தாலும் சொன்ன தேதியில் ‘அவதார் 2’ ரிலீஸாகும் என்று உறுதியளித்துள்ளார் ஜேம்ஸ் கேமரோன்.

இங்கிலாந்தில் ஐநூறு வருடங் களுக்கு மேலாக நாணயங்களைத் தயாரித்து வரும் அரசு நிறுவனம் ‘த ராயல் மின்ட்’. சமீபத்தில் இந்நிறுவனம் முதல் முறையாக டைனோசரின் உருவப்படம் மற்றும் எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளது. அந்த எலும்புக்கூடுகள் எங்கே எப்போது கண்டுபிடிக்கப் பட்டது என்ற விவரமும் நாணயத்தில் அச்சாகியிருக்கும். நாணயங்களைச் சேகரிப்பவர்களுக்கு பெரிய பொக்கிஷமாக இருக்கப்போகிறது இந்த டைனோசர் நாணயங்கள்.

ஜப்பானில் செயற்கை கையுடன் செயல்படும் முதல் செவிலியர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நீச்சல் விராங்கனை என
பன்முகங்களைக் கொண்டவர் மனாமி இடோ. இப்போது வயலினிஸ்ட்டாகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு கார் விபத்தில் தனது வலது கையை இழந்துவிட்ட மனாமி செயற்கை கையால் வயலின் வாசிக்கும் வீடியோ பதிவு ஆயிரக்கணக்கானவர்களுக்கு உந்துதலை அளித்துள்ளது.