அமெரிக்காவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சீன ஆப்!



முப்பத்தி ஏழு  வருடங்களுக்கு முன் சீனாவில் உள்ள  லாங்க்யான் நகரத்தில் பிறந்தார் ஷாங்யிமிங். 2001-ம் வருடம் நன்கை பல்கலைக்

கழகத்தில் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸை முக்கிய பாடமாக எடுத்துப் படித்தார்.
ஆனால், எதிர்காலம் சாஃப்ட்வேர் துறையின் கைப்பிடியில் இருப்பதாக உணர்ந்த அவர், மைக் ரோ எலெக்ட்ரானிக்ஸைக் கைவிட்டுவிட்டு சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் படிப்புக்குத் தாவினார். ஒரு எஞ்சினியர் ஆனாலே போதும் என்று நினைத்த ஷாங், 2006-ம் வருடம் டிராவல் இணையதளமான ‘குக்ஸனி’ல் வேலைக்குச் சேர்ந்தார்.

குக்ஸனில் பணிக்குச் சேர்ந்த முதல் எஞ்சினியர் மற்றும் ஐந்தாம் பணியாளர் இவர் தான். தனது முழுத்திறமையையும் காட்டி ஒரு வருடத்திலேயே அந்நிறுவனத்தின் டெக்னிக்கல் இயக்குனராக பதவிக்கு உயர்ந்தார். 2008-இல் குக்ஸனில் இருந்து விலகி ‘மைக்ரோசாஃப்டி’ல் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அங்கே திருப்திகரமாக இல்லை.

தவிர, கார்ப்பரேட் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஷாங்கால் வேலை செய்ய முடியவில்லை. கை நிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்டின் வேலையையும் துறந்தார். மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட சொந்தமாக ஒன்றை ஆரம்பிக்கலாமே என்று 99fang.com-ஐ ஆரம்பித்த போது ஷாங்கின் வயது 26. ரியல் எஸ்டேட் சார்ந்த பிசினஸ் இணையதளம் இது. எஞ்சினியராக இருப் பதைவிட தொழில் அதிபராக இருப்பது பல மடங்கு கடினமானது என்பதை இந்த இணையதளம் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. எதையும் உலகளவில் சிந்தித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என ஷாங் நம்பினார். ஆனால், ஷாங்கை நம்பி முதலீடு செய்ய யாருமில்லை.

2011-ம் வருடம் மக்கள் கைகளில் பரவலாக ஸ்மார்ட்போன் தவழ ஆரம்பித்தது. கம்ப்யூட்டர் பயனாளிகளில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனுக்கு மாற ஆரம்பித்தனர். ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் ஆப் வழியாக தகவல் களைத் தெரிந்துகொள்வதில் சீனர்கள் திணறுவதைக் கவனித் தார் ஷாங். இது அவரை சீனாவின் இணைய ஜாம்பவனாக மாற்றியது. 99fang.com ஐ  இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு 2012-இல் ‘பைட்டான்ஸ்’ என்ற டெக் சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார்.

 சீன மக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் ஒரு நியூஸ் ஆப்பை தயார் செய்ய வேண்டும் என்பது ஷாங்கின் இலக்கு. இதற்கு கொஞ்சம் செலவு பிடிக்கும். ஷாங்கை நம்பி பணம் போட இப்போதும்  ஆளில்லை. இறுதியில் ஒரு நிறுவனம் ஷாங்கிற்கு உதவ முன்வந்தது. நிதி கிடைத்த உற்சாகத்தில் ஆகஸ்ட் 2012-இல் ‘Toutiao’ என்ற நியூஸ் ஆப்பை அறிமுகம் செய்தார் ஷாங்.

இரண்டு வருடத்தில் தினமும் 1.3 கோடிப்பேர் பயன் படுத்தும் ஆப்பாக இது வளர்ந்தது. இந்த வளர்ச்சியைக் கண்ட பல நிறுவனங்கள் ஷாங்கின் நிறுவனமான ‘பைட்டான்ஸி’ல் முதலீடு செய்ய முன்வந்தன. இனி ஷாங் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல உலக அளவில் மக்களைச் சென்றடையும் ஒரு பிளாட்பார்மை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சமூக வலைத் தளங்களில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் கொடி பறக்க வேண்டும் என்பது அவரது கனவு. 2016-இல் உதயமானது டிக்டாக். இதன் எளிமையான பயன்பாடு காரணமாக அறிமுகமான சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி யடைந்தது.மியூசிக் கலியைக் கைப் பற்றி டிக்டாக்குடன் இணைக்க இன்று எங்கேயோ போய்விட்டது டிக்டாக். கடந்த பத்து வருடங்களில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் வரிசையில் ஏழாம் இடத்தைப் பிடித்ததோடு ஷாங்கின் நிகர சொத்து மதிப்பை 16.2 பில்லியன் டாலருக்கு உயர்த்திவிட்டது.

த.சக்திவேல்