கின்னஸ் சாதனை!



உலகின் அதிக வயதான யூடியூப் கேமர் என்ற பட்டத்தைத் தட்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டார் ஹமாகோ மோரி. 51 வயதிலிருந்து, அதாவது 1981-ம் வருடத்திலிருந்து வீடியோ கேம்ஸை விளையாடி வரும் ஹமாகோ ஜப்பானில் பிறந்தவர்.
ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் போகப் போக யாராலும் ஜெயிக்க முடியாத ஒரு ஆளாக வீடியோ கேம்ஸில் மாறிவிட்டார். இப்போதும் கூட நள்ளிரவு 2 மணி வரை விளையாடுகிறார். வீடியோ கேம்ஸ் விளையாடுவதை வீடியோ கிளிப்களாக மாற்றி ஒரு யூடியூப் சேனலையும் ஆரம்பித்துவிட்டார்.

அந்தச் சேனலுக்கு 2,50,000 சந்தாதாரர்கள். ஒவ்வொரு வீடியோவும் லைக்குகளை அள்ளுகின்றன. முக்கியமாக இந்த நிமிடத்தில் என்ன வீடியோ கேம் வெளியாகியிருக்கிறது என்பதில் கூட அப்டேட்டாக இருக்கிறார் ஹமாகோ. ‘டான்ட்லெஸ் வீடியோ கேமை விளையாடும் பாட்டி’ என்ற தலைப்பில் வெளியான வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. 90 வயதான ஹமாகோவை ‘கேமர் கிராண்ட்மா’ என்று அன்புடன் ரசிகர்கள் அழைக்கின்றனர்.