ஒலிம்பிக் பதக்க கனவில் தயாராகும் இந்திய வீராங்கனைகள்!



கொரோனா வைரஸ் தாக்கு தலினால் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற ரெடி. அவர்கள் யார் என பார்ப்போம்.

மனுபாகர் :

10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கு கொள்கிறார். மூனிச்சில் 0.1 பாயின்ட் வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்தவர் இவர். அந்த
தகுதியை வைத்தே, வரவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு கொள்ள துண்டு விரித்துவிட்டார். அது மட்டுமல்ல, ‘‘இந்த முறை விடமாட்டேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்...’’ என்கிறார் மனுபாகர்.

வினேஷ் போகத் :

நாடறிந்த மல்யுத்த வீரர் இவர்.  ஒலிம்பிக்கின் தகுதிப் போட்டியில் முதலாவதாக இடம் பெற்றவர். உலக சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு நடந்தபோது அதில் 53 கிலோ ஃப்ரீஸ்டைலில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில், கால் முட்டி காயத்தால் கோட்டை விட்டார். இந்த முறை பதக்கத்துடன்தான் திரும்புவேன் என சூளுரைக்கிறார்.

தீபிகா குமாரி :

வில்வித்தை வீராங்கனை இவர். ஆசிய கண்ட தகுதிப்போட்டியில் ரீகர்வ் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றவர், பாங்காக்கில் நடந்த இந்தப் போட்டியில் வென்றதின் மூலம், வரும் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துவிட்டார். ஒரு கட்டத்தில் ஆர்ச்சரி பிரிவில் இந்தியா பங்கேற்குமா? என நிலைமை இருந்தது. காரணம் இந்திய ஆர்ச்சரி அசோசியேஷனுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டதால், தீபிகா குமாரி பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாவ்னா ஜாட்:

20 கிலோமீட்டர் நடை ரேஸ் போட்டியில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றுவிட்டார் பாவ்னா. தேசிய நடை ரேஸ் போட்டியில் கலந்துகொண்ட பாவ்னா ஜாட் 1: 29.54 என்ற கணக்கில் முதலில் வந்தார். இது ஒலிம்பிக் சாதனையான 1: 31-ஐ விட குறைவு! இதனால் இந்தியாவுக்கு தங்கம் பெறும் நபர்களில் பாவ்னா ஜாட்டும் ஒருவராக இருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி:  
கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஒலிம்பிக் கில் பங்கு பெற இடம் கிடைத்துவிட்டது. இந்தியாவுக்கு பெண்கள் ஹாக்கி மூலம் பதக்கம் கிடைக்குமா என இந்திய கேப்டன் ராணி ராம்பாலிடம் கேட்டால் அந்த நேரத்தில் நமது ஆட்டம், உடல் தகுதி ஆகியவற்றைப் பொறுத்தது அது என்கிறார்! 2016 ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராஜிராதா