இளம் அறிவியலாளர்பனிரெண்டு  வயதான இளம் அறிவியலாளர் நௌமன் டேனிஸ் வான்வெளியில் உள்ள தட்பவெப்பநிலையைக் கண்டறியும் இயந் திரத்தையும், ஆழ் துளைக்கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கும் கருவியையும் கண்டுபிடுத்துள்ளார். தன் வயதுக்கு உரிய துள்ளலோடு பேசினார்: ‘‘கண்ணதாசன் நகரில் இருக்கும் டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன்.

எனக்கு மற்ற புத்தகங்களை விட அறிவியல் புத்தகம் ரொம்பப் பிடிக்கும். அதிக மதிப்பெண்ணும் அறிவியல் பாடத்தில் தான் வாங்குவேன். என்னுடைய கனவு விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகணும்ங்கிறது என் அறிவியல் முயற்சிக்கு என்ன தேவைன்னு அம்மா சொல்லுவாங்க.
அதை என் அப்பா வாங்கிக் கொடுப்பாரு. வீட்டில் இருக்கும் போது யூடியூப்பில் நிறைய சயின்ஸ் வீடியோக்கள் பார்ப்பேன். என் தாத்தா ஹபிப் கான் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுப் பார். அதனால்தான் நான் கண்டு பிடித்து இருக்கும் கருவிக்கு என் தாத்தா பெயரை வைச்சி
ருக்கேன்.

விண்வெளியில் இருக்கும் சீதோஷ்ணம் மற்றும் தட்ப வெப்பத்தைக் கண்டறியும் கலாம் ஷாட்டின் அளவு 4/4.3 8செ.மீ. பதினைந்து நிமிடம் வரைதான் இதன் செயல்பாடு இருக்கும். இதை பிரேக் பண்ண வேண்டும் என்கிற முயற்சியில் நான் கண்டுபிடித்திருக்கும் கருவிதான் ‘மினி இன்னர் மைக்ரோ ஆர்பிட் கியூப்ஷாட்’. இதன் அளவு 3.5/3.5 4செ.மீ. உலகிலே மிகச் சிறிய ஷாட் இது. இதன் எடை ஐம்பது கிராம்தான்.

300 எம்.பி.எச் பேட்டரியில் தயாரித்திருப்பதால் மூறைரை மணி நேரம் வரை இதன் செயல் திறன் இருக்கும். ஜி.பி.எஸ் மேக்னா மீட்டர், டைனோ மீட்டர் மற்றும் மினி கம்ப்யூட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி குறிப்பிட்ட தூரம் சென்றதும் கியூபில் உள்ள ஹீலியம் வாயு இதனை தானாக பூமியில் இறக்கிவிடும். தரைப்பகுதியில் இறக்க ஹீலியம் வாயு அடங்கிய பலூன் போன்ற பாராசூட்டும் அமைந்திருக்கும்.
இந்த இயந்திரம் வான்வெளியின் சீதோஷ்ண தட்பவெப்ப நிலையைக் கண்டறிவதை ஜி.பி.எஸ் மினி கேமரா மூலம் கீழே இருந்து அறியும் வகையில் வைஃபை செயல்படும்.

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சென்னையில் நடத்திய ‘யங் சயின்டிஸ்ட் 2கே’ விருதுக்காக பரிந்துரை செய்தார்கள். ஆனால், என் கருவியை அதில் பங்கு பெற வைக்க முடியவில்லை. 2019 டிசம்பர் 9 ஆம் தேதி அவர்கள் நடத்திய தேர்வுக்கு என்னால் போக முடியவில்லை. இந்தக் கருவியை நான் முழுமையாக வடிவமைக்கவில்லை.

இந்தக் கருவிக்கான ஒரு பாகம் அப்போது கிடைக்காமல் இருந்ததே காரணம். பிறகு இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை இஸ்ரோவுக்கு ஃபைல்களாக அனுப்பினேன். அதனைப் பெற்றுக்கொண்ட பிறகு எனக்கு நன்றிக் கடிதம் அனுப்பினார்கள். இனி வரும் மாதங்களில் இதனைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்வோம் எனக் கூறியிருக்கிறார்கள்.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்பதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். என் பள்ளியில் தாளாளரிடம் செய்து காட்டி அனைவரிடமும் பாராட்டு கிடைத்தது. இந்தக் கருவிக்குத்தான் ‘ஹபிப் மினிஷாட்’ என்று பெயர் வைத்துள்ளேன். என் அப்பா, அம்மா, என் அண்ணன் ஆஃரன் டாமின் எல்லோரும் என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

என் பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர்கள் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். நான் நிறைய தகவல்களை இணையதளத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன். என் கண்டுபிடிப்புக்குத் தேவையான பொருளைக் கேட்கும் போதெல்லாம் என் அப்பாவும் அம்மாவும் வாங்கிக் கொடுப்பார்கள். நான் பள்ளிக்கூடம் முடிப்பதற்குள் இளம் அறிவியலாளர் என்கிற பெயர் வாங்க வேண்டும்...’’ என்றார் இந்த இளம் விஞ்ஞானி.

தீக்சா தனம்